Saturday 2 December 2017

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

3 டிசம்பர் 2017 திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

I. எசாயா 63:16-17, 64:1-3,8 / II. 1 கொரிந்தியர் 1:3-9  / III. மாற்கு 13:33-37

விழித்திரு

குகைக்குள்யே…

அருள்பணி லூர்துராஜ் பாளை மறைமாவட்டம்

இரண்டாம் உலகப் பெரும்போர் முடிந்த நேரம் ஜெர்மனி நாட்டு அதிபர் கொன்ராடு அடனாவர் வானொலி, தொலைக்காட்சி வழியாக மக்களுக்கு உரையாற்றுகிறார் "அழிவு சிதைவு இடிபாடுகளுக்கு இடையே நின்று கொண்டிருக்கிறோம். நாம் விழித்தெழும் நேரம் வந்து விட்டது. வீறுகொண்டு கரம் கோர்ப்போம் புதிய ஜெர்மனியைக் கட்டி எழுப்பக் கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விடக்கூடாது.
மக்கள் கூர்ந்து கேட்டனர். விழித்து எழுந்தனர். விளைவு? வளமான, செழிப்பான புதிய ஜெர்மனி.
திருவருகைக் காலத்தைத் தொடங்கும் போதே திருவழிபாட்டு முழக்கம் - விழிப்பாயிருங்கள் என்பதுதான் காரணம்? 'உறக்கத்தினின்று விழிதெழும் நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததைவிட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது" (ரோமை,131)
போரினால் உண்டான பாதிப்பால் அச்சமும் அதிர்ச்சியும் கொண்ட ஜெர்மனி நாட்டு மக்களின் உள்ளத்தில் எத்தகைய உணர்வுகள் கிளர்ந்தெழுந்தனவோ அதே தாக்கத்துக்கு ஆளான இஸ்ரயேல் மக்களின் மன உணர்வுகளின் சித்தரிப்பே முதல் வாசகம்
- பபிலோனிய அடிமைத்தனத்துக்குப்பின் தாயகம் திரும்பிய நிலையில் அழிந்துபட்ட எருசலேமை, சிதைந்துவிட்ட திருக்கோவிலைச் கண்டு சிந்தையில் அமைதியிழந்து செல்வச் செழிப்பிழந்து இறைவழிபாட்டின் வளமை இழந்து வார்த்தைக்குள் அடங்காத வருத்தத்தை சோகத்தை ஏக்கத்தை வெளிப்படுத்தும் மன்றாட்டான புலம்பல்.
- இந்த இழிநிலைக்கெல்லாம் தங்கள் பாவ வாழ்வே, இறைவனை விட்டு அகன்ற அவலமே காரணம் என்ற தன்னிலை உணர்வு "நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப்போகின்றோம். எங்கள் தீச்செயல்கள் காற்றைப்போல் எங்களை அடித்துச் சென்றன" (எசாயா 64:6)
- இந்தத் தன்னுணர்வுக்கிடையிலும் உடைந்து போன இதயத்தின் அடித்தளத்தில் நம்பிக்கை வேரற்றுப் போகவில்லை. "ஆண்டவரே உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்ததேன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எங்கள் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியதேன்?” (எசாயா 53:7) என்று தங்கள் தவறுகளுக்கெல்லாம் கடவுளுக்குமே பங்கு உண்டு என்பது போலப் புலம்பி "நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்" (எசா64:8) சீரழிந்த தன் வேலைப் பாடுகளைச் சீர்செய்ய இறைவனே இறங்கிவர உரிமையோடும் எதிர்பார்ப்போடும் கூடிய அழைப்பு
- களிமண் தானாகக் குடமாக முடியுமா? வனைந்திடக்குயவன் அங்கே வரவேண்டாமா? கற்பாறை தானாகச் சிலையாக முடியுமா? செதுக்கிடச் சிற்பி அங்கே வரவேண்டாமா? பாவியான மனிதன் தன் சொந்த முயற்சியால் மட்டும் படைத்தவனைச் சென்றடைய முடியுமா? "நீர் வானத்தைப் பிளந்து (கிழித்து என்பது பழைய மொழிபெயர்ப்பு) இறங்கி வரமாட்டீரோ?” (எசா.64:1) இந்த இதய எழுச்சி, ஏக்கக்கதறல் இறைவன் எனக்குத் தேவை அதுவும் உடனடித் தேவை என்ற அவசர எதிர்பார்ப்புக் கலந்த தவிப்பு: திருப்பாடல் 144:5இல் கூட இதே துடிப்பின் வெளிப்பாடு: "ஆண்டவரே உம் வான்வெளியை வளைத்து இறங்கி வாரும் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தடையை அவரால் மட்டுமே தகர்க்க முடியும். நம்மால் இயலாது நம்மால் முடிந்ததெல்லாம் ஓசோன் படலத்தில் ஒட்டைகளைப் போட்டதுதான்!
ஆண்டவர் வருவார். "இந்த இயேசு உங்களிடமிருந்து விண்னேற்றமடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்' (தி.ப1:11) அதற்காக வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்பதா?
'விழிப்பாய் இருங்கள் ஏனெனில் வீட்டுத்தலைவர். எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது (மாற்கு 13:35)
சென்னையில் ஓர் அரசு அலுவலர் தன் ஸ்கூட்டரை வெளியே நிறுத்திவிட்டு மதிய உணவை முடித்து வெளியே வந்தவருக்கு ஒரே அதிர்ச்சி. ஸ்கூட்டரைக் காணோம். அங்குமிங்கும் தேடி அலைமோதிய அவர் சிறிது தொலைவில் ஸ்கூட்டரைப் பார்க்கிறார். மகிழ்ச்சியோடு அருகில் செல்கிறார். ஸ்கூட்டரில் ஒரு கடிதமும் 2 சினிமா டிக்கெட்டுகளும் இருந்தன. "ஐயா, எங்களை மன்னியுங்கள். ஒர் அவசர வேலைக்காக வண்டியை எடுத்துச் சென்றோம். சொல்லாமல் எடுத்துச் சென்ற குற்றத்துக்காக ரிசர்வ் செய்யப்பட்ட இந்த டிக்கெட்டுகளை வைத்துள்ளோம். உங்கள் மனைவியோடு இன்று மாலையில் படம் பார்த்து மகிழுங்கள்” என்பது கடித வாசகம், இரட்டிப்பான மகிழ்ச்சி உற்சாகத்தோடு திரையரங்கு சென்று திரும்பிய போது வீடே கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. விழிப்புணர்வைக் குலைக்க, கவனத்தைச் சிதறடிக்க, சாத்தான் எப்படியெல்லாம் திட்டமிடுகிறான். செயல்படுகிறான்.
விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்
குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்.
"சுதந்திரம் இருளில் வாங்கினோம். இன்னும் விடியவில்லை என்று யார் சொன்னது? விடிந்துவிட்டது. இன்னும் நாம்தாம் விழித்தெழவில்லை நாளை என்பது விடியலில் அல்ல, விழித்தலில் உள்ளது.


என் நினைவெல்லாம் இறைஇயேசுவே!

மகிழ்ச்சியுட்டும் மறையுரைகள்

குடந்தை ஆயர் அந்தோணிராஜ்

நம்பிக்கைக்குரிய (இரண்டாம் வாசகம்)கடவுள் நம்மைத் தேடிவரப் போகின்றார். அவரைக்குறித்து எசாயாமுதல் வாசகத்தில், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை நாங்கள்களிமண்,நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே (எசா64:8) என்கின்றார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் கூறுவது போல, முற்காலத்தில் பலவகைகளில் இறைவாக்கினர் வழியாக நமது மூதாதையருடன் பேசிய கடவுள், நமது காலத்தில் தனது மகன் வழியாகப் பேசப்போகின்றார்.
கடவுள் நம்மைசந்திக்கவரும்போது நாம் விழிப்பாயிருக்கவேண்டும் என்று இயேசு நமக்கு இன்றைய நற்செய்தியின் வழியாக அறிவுறுத்துகின்றார்.
விழித்திருத்தல் என்றால் என்ன? என்பதை சுட்டிக்காட்ட இதோ ஒரு நிகழ்வு
இளைஞன் ஒருவன் ஒரு ஞாளியிடம் சென்று. நான் வாழ்க்கையில் வெற்றி அடைய என்ன செய்ய வேண்டும்? என்றான். ஞானியோ, நீ இருபத்திநான்கு மணிநேரமும் விழிப்பாயிருஎன்றார்.
சற்று புரியும்படிசொல்லுங்களேன் என்றான் இளைஞன். சரி, என்று சொல்லி குளம் ஒன்றிற்கு அந்த இளைஞனை அந்த ஞானி அழைத்துச் சென்றார். தண்ணிரில் இருவரும் இறங்கினார்கள்.
திடீரென அந்த இளைஞனின் தலையைதண்ணிருக்குள் அமுக்கினார் அந்த ஞானி. இளைஞனோதிணறிக்கொண்டு வெளியே வரமுயற்சித்தான். உடனே அவனுக்கு அந்த ஞானி விடுதலை அளிக்கவில்லை! சற்றுநேரம் கழித்து அந்த இளைஞனின் தலைக்குச் சுதந்தரம் அளித்தார். அந்த இளைஞனின் தலை தண்ணிரைவிட்டு வெளியே வந்ததும் ஞானி, நீ தண்ணிருக்குள் இருந்தபோது உன் நினைவெல்லாம் எங்கே இருந்தது? என்றார். அவனோ,
தண்ணிரைவிட்டு வெளியே வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தது என்றான். வேறு எதைப்பற்றியாவது நினைத்தாயா? என்றார் ஞானி இளைஞனோ, இல்லை என்றான்.
அப்போதுஞானி, உன் எண்ணமெல்லாம் நீளதைவிரும்புகின்றாயோ அதன்பக்கம் மட்டுமே திரும்பியிருந்தால், எங்கும் எப்போதும் எதிலும் உன் அறிவு தூங்காமல் விழித்திருந்தால் நீ வெற்றி அடைவாய் என்றார்.
நமது மனம் ஒரு வெற்றுக்காகிதம் போன்றது! அதில் தூக்கம் என்று எழுதினால் நாம் தூங்கிவிடுவோம். விழிப்பு என்று எழுதினால் விழித்திருப்போம், வெற்றி பெறுவோம்.
இந்தத் திருவருகைக்காலத்திலேநாம் எப்போதும்இறைஇயேசுவின் வருகையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்க வேண்டும்! அந்த விழிப்புணர்வு நம்மை எல்லாவித தீய எண்ணங்களிலிருந்தும் தீய செயல்களிலிருந்தும் தீய சக்திகளிடமிருந்தும் விடுவித்து, கடவுளை நாம் முறையாக வரவேற்க, நம்மையே நாம் தயாரித்துக்கொள்ள நமக்குப் பெரிதும் உதவும்.
நமது அன்றாட ஆன்மிக வாழ்க்கையில் சற்று கண்ணயர்ந்தாலும் போதும் அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு சோதிப்பவன், சாத்தான் தீய எண்ணங்கள் என்னும் விதைகளை நமது மனமென்னும் நிலத்தில் விதைத்துவிடுவான்.
கதையில் வந்த இளைஞன் முழுமூச்சோடு தண்ணிரைவிட்டு வெளியே வர ஏங்கியதுபோல நாமும் இயேசு ஆண்டவரைச்சந்திக்க எங்கும், எதிலும், எப்பொழுதும், என்நினைவெல்லாம் இயேசுவே என வாழமுன்வருவோம். மேலும் அறிவோம் :
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் (குறள் : 605).
பொருள் : விரைந்து செய்யவேண்டிய செயலை மெதுவாகக் காலம் நீட்டித்துச் செய்வது, செய்யக் கருதிய செயலை மறப்பது, சோம்பிக் கிடப்பது, தூங்கித் தொலைவது ஆகிய நான்கும் அழிந்து போகும் இயல்புடையார் விரும்பி அணியும் அணிகலன்கள் ஆகும்!

 


எல்லா வகையிலும் செல்வராக!

அருட்பணி இயேசு கருணாநிதி


இன்று திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு. இன்று திருவழிபாட்டு ஆண்டின் முதல் நாள். வாசகப் புத்தகம், கட்டளை செபம், திருப்பலி புத்தகம் என அனைத்தும் புதிதாகத் தொடங்கும். திருவருகைக்காலத்தை திருஅவை மூன்று நிலைகளில் புரிந்துகொள்கிறது: ஒன்று, காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்ட கடவுள் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு மனித வரலாற்றில் நுழைந்த மனுவுருவாதலை, முதல் வருகையை, மறுகொண்டாட்டம் செய்யும் கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டத்திற்கான தயாரிப்பு காலம். இரண்டு, 'நீங்கள் காண மேலேறிச் சென்ற இயேசு மீண்டும் வருவார்' (திப 1:11) என்ற வானதூதரின் வார்த்தைகள் நிறைவேறும் என்று நம்பி இயேசுவின் இரண்டாம் வருகைக்குத் தயாரிக்கும் காலம். மூன்று, அன்றாடம் சின்னஞ்சிறு நிகழ்வுகளிலும், சின்னஞ்சிறு நபர்களிலும் வரும் இயேசுவின் மூன்றாம் வருகையை உணர்ந்தவர்களாய் எல்லாரும் எல்லாமும் - நம்பிக்கை, அமைதி, மகிழ்ச்சி, அன்பு - பெற்றுக்கொள்ள நம்மைத் தூண்டும் காலம்.
கிறிஸ்துவின் பிறப்பை ஒவ்வொரு நற்செய்தியாளரும் ஒவ்வொரு முறையில் பதிவு செய்கிறார்கள்: 'இதோ கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்'  (காண். மத் 1:22-23) என்று மத்தேயு நற்செய்தியாளரும்,
'இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றி தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்' (காண். லூக் 2:11-12) என்று லூக்கா நற்செய்தியாளரும்,
'வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே குடிகொண்டார்' (காண். யோவா 1:14) என்று யோவான் நற்செய்தியாளரும் பதிவு செய்கின்றனர்.
ஆனால் பவுலோ, 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருஞ்செயல்களை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்' (காண். 2 கொரி 8:9) எனப் பதிவு செய்கின்றார்.  'செல்வராயிருக்கும் கடவுள் ஏழ்மையானார்' என்பதை 'கடவுள்தன்மையில் இருந்த அவர் மனிதத்தன்மை ஏற்றார்' என்றும், 'நாம் கடவுள்தன்மையை அடையுமாறு அவ்வாறு செய்தார்' என்றும் புரிந்துகொள்ளலாம்.
ஆக, கிறிஸ்து பிறப்பின் மையம் இதுதான்: 'செல்வம் ஏழையானது.' எதற்காக? 'அனைவரையும் செல்வராக்க!'  செல்வம் என்பது வெறும் பணம் அல்லது பொருளா? இல்லை. நல்ல வாழ்க்கை முறை, நல்ல உடல்நலம், நம்மைச் சுற்றியிருக்கும் உறவுகள், நாம் இரசிக்கும் இயற்கை, நம் மனித பலவீனம் என அனைத்தும் நம் செல்வங்களே. அல்லது, எப்போது நம் நிறைவு கொண்டவர்களாக உணர்கிறோமோ அப்பொழுதெல்லாம் நாம் செல்வர்களாயிருக்கிறோம்.
ஆக, திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறாகிய இன்று, 'செல்வராவது என்றால் என்ன?' என்று சிந்திப்போம். இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1 கொரி 1:3-9) கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் முன்னுரையை வாசிக்கக் கேட்கின்றோம். 'கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று. எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள் ... எதிலும் குறையே இல்லை' என்று கொரிந்து நகர மக்களை வாழ்த்துகின்றார் பவுல்.  கிறிஸ்துவோடு  இணைந்திருத்தல் நம்மைச் செல்வாராக்குகிறது என்பது பவுல் தரும் பாடம். இதுவே திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு தரும் பாடமும் கூட.  கிறிஸ்துவோடு இணைந்திருத்தல் என்பதை நாம் எப்படி புரிந்து கொள்வது?  இன்றைய மூன்றாம் மற்றும் முதல் வாசகங்கள் பயன்படுத்தும் மூன்று உருவகங்கள் வழியாக இதைப் புரிந்துகொள்ளலாம். அவை எவை?
அ. பொறுப்புணர்வோடு இருக்கும் பணியாளர்
ஆ. விழிப்போடு இருக்கும் வாயில் காவலர்
இ. தன்னையே குயவன் கையில் ஒப்படைக்கும் களிமண்
ஆக, 'பொறுப்புணர்வு,' 'விழிப்பு,' 'தற்கையளிப்பு' என்னும் மூன்று குணங்கள் இருந்தால், அல்லது இவற்றைக் கொண்டிருக்கும் 'பணியாளர், வாயில் காவலர், களிமண்' போல இருந்தால் நாமும் கிறிஸ்துவோடு இணைந்திருக்கவும், அதன் வழியாக செல்வராகவும் முடியும். இன்றைய நற்செய்தி வாசகத்திலிருந்து (காண். மாற் 13:33-37) தொடங்குவோம்.
நெடும் பயணம் செல்ல இருக்கும் ஒருவரின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை, அங்கே இருக்கும் பரபரப்பைப் பற்றிப் பேசுகின்றார் இயேசு. பயணம் பற்றிய இன்றைய நம் புரிதலுக்கும், அன்றைய புரிதலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. நெடும்பயணம் மேற்கொள்ள வேண்டும் - அல்லது கலிஃபோர்னியா செல்ல வேண்டும் - என வைத்துக்கொள்வோம். நாம் என்ன செய்வோம்? விமானம் வழியாக செல்கின்றோம். இந்த விமானம் எத்தனை மணிக்குப் புறப்படும், எத்தனை மணிக்கு தரையிறக்கும் என்பது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்த விமானம் எந்த இடத்தில் பயணம் செய்துகொண்டிருக்கிறது என்பதையும் நாம் அறிந்துகொள்ள முடியும். நம் வருகையை அங்கிருக்கும் நம் உறவினர்களுக்கு அல்லது நண்பர்களுக்கு அலைபேசி வழியாகச் சொல்லிவிட முடியும். குறுந்தகவல் அனுப்பவும், மின்னஞ்சல் செய்யவும் முடியும். ஆக, இன்று நாம் மேற்கொள்ளும் எல்லாப் பயணங்களும் எப்படி தொடங்கும், எப்படி முடியும் என்பதை ஓரளவு நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
ஆனால், இயேசுவின் காலத்தில் அப்படி அன்று. பாலஸ்தீனம் ஒரு பாலைவனம். நெடும்பயணம் செல்ல முதலில் நிறைய பணம் வேண்டும். ஒட்டகம் வேண்டும். வேலைக்காரர்கள், உணவு, மருந்து, தண்ணீர் என அனைத்தையும் பத்திரப்படுத்த வேண்டும். பயணித்தில் பாதுகாப்பிற்கு வாள் வாங்க வேண்டும். இரவில் தங்க கூடாரத்துணி, நெருப்பு என நிறைய தயாரிப்புக்களை செய்ய வேண்டும். இவ்வளவு தயாரிப்புக்களோடு சென்றாலும் திரும்பி வருவோம் என்ற உறுதி கிடையாது. மேலும் அந்த திரும்பி வருதலும் எப்போது என்றும் சொல்லிவிட முடியாது. 'போன நிலாவுக்கு போனவர் இந்த நிலாவுக்கும் வரல' என்று அகநானூற்றில் 'நிலாவை' வைத்து கணக்குப் பார்த்ததுபோல உறவினர்கள் கணக்குப் போட்டுக் காத்துக்கொண்டிருப்பர். மேலும் திரும்பி வருதல் பல நேரங்களில் உறுதி இல்லை என்பதால் வழக்கமாக நெடும்பயணம் செல்ல இருப்பவர் தன்னிடம் இருக்கும் ஆடுகள், மாடுகள்,  கோழிகள், புறாக்கள், தானியங்கள், காசுகள் அனைத்தையும் தன் பணியாளர்களுக்குப் பிரித்துக்கொடுத்துவிட்டுச் செல்வார். இதற்கான சான்றை நாம் 'தாலந்து எடுத்துக்காட்டிலும்' பார்க்கிறோம். இப்படியாக தங்கள் தலைவரின் சொத்துக்களைக் பகிர்ந்து பெற்றுக்கொண்ட பணியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும், எப்படி இருக்க வேண்டும் என்பதை நற்செய்தி வாசகத்தின் இறுதிப் பகுதி சொல்கிறது.
தம் பணியாளர் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய பணிக்குப் பொறுப்பாக்குகின்றார் தலைவர். ஆக, இங்கே பணி உயர்வு நடக்கிறது. அதாவது, இவ்வளவு நாள் வீடு கூட்டிக் கொண்டிருந்தவர் இனி வீட்டின் சுத்தத்திற்கு பொறுப்பாளர் ஆகிறார். இவ்வளவு நாள் மாட்டுக்கு தீவனம் போட்டுக்கொண்டிருந்தவர் மாட்டுக்குப் பொறுப்பாளர் ஆகிறார். இவ்வளவு நாள் உணவு சமைத்தவர் உணவு சமைக்கும் பணிக்கு பொறுப்பாளர் ஆகின்றார். இவ்வளவு நாள் வீட்டிற்குக் காவல் செய்தவர் வீட்டுக்கே பொறுப்பாளர் ஆகின்றார். ஆக, பணியாளர் நிலையிலிருந்து ஒருவர் 'பொறுப்பாளர்' நிலைக்கு உயர்த்தப்படுகின்றார் என்றால் அவர் இன்னும் அதிக 'பொறுப்புணர்வை' பெற வேண்டும். இவ்வளவு நாள்கள் அடுத்தவர் சொல்லியே செய்துகொண்டிருந்த அவர் இன்று முதல் தானே செயல்பட வேண்டும். முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும். அந்த முடிவுகளால் வரும் விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டும். எந்நேரமும் விழிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் தான் பெற்றிருக்கின்ற சொத்து தன் தலைவருடையது. தன் சொத்தைக் காப்பதை விட விழித்திருந்து காக்க வேண்டும்.
நள்ளிரவில் வருவாரா? - அப்படி என்றால் விளக்குகள் ஏற்றி இருக்க வேண்டும்.
சேவல் கூவும் வேளையில் வருவாரா? - அப்படி என்றால் வீட்டு நாய்கள் கட்டப்பட வேண்டும்.
காலை வேளையில் வருவாரா? - அப்படி என்றால் பணியாளர் ஊர் சுற்றாமல் வீட்டில் இருக்க வேண்டும்.
ஆக, எந்த நிலையிலும் தயார்நிலை இருக்க வேண்டும்.  'பொறுப்புணர்வு,' மற்றும் 'விழிப்பு' இருக்கும்போது நாம் தயார்நிலையில் இருக்கின்றோம். இரண்டுமே அவசியம். வெள்ளம் வருவதை எதிர்கொள்வது எப்படி என்று கற்றுவிட்டு, அதற்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டு, நாம் தூங்க ஆரம்பித்தால் அதனால் என்ன பயன்? அல்லது விழித்து மட்டும் இருத்துக்கொண்டு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் இருந்தால் அதனால் என்ன பயன்? ஆக, 'பொறுப்புணர்வு,' மற்றும் 'விழிப்பு' இரண்டும் சேர்ந்தே செல்ல வேண்டும்.
1. முதல் பாடம்: பொறுப்புணர்வு - 'நிகழ்வு ஒன்றை அல்லது நமக்கு நடக்கும் நிகழ்வு ஒன்றை எதிர்கொண்டு அதற்கேற்ற, நேரத்திற்குத் தகுந்த எதிர்வினை ஆற்றுவதே பொறுப்புணர்வு.' நாளை நான் தேர்வு எழுத வேண்டும் என்பது நிகழ்வு என வைத்துக்கொள்வோம். இந்த தேர்வை எதிர் கொள்ள தகுந்த முறையில் படிப்பது பொறுப்புணர்வு.
2. இரண்டாம் பாடம்: விழிப்பு - விழிப்பு என்பதை தூக்கமின்மை என்று நாம் புரிந்துகொள்ளலாமா? இல்லை. இன்றைய நம் வாழ்க்கை முறை நம்மை பரபரப்பாகவே வைத்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் பரபரப்பு? பரபரப்பான செய்திகள், பரபரப்பான விற்பனை, பரபரப்பான பயணம், பரபரப்பான வேலை, பரபரப்பான உரையாடல்கள், பரபரப்பான கொண்டாட்டங்கள். விளைவு, இரவில் தூக்கம் இன்மை. இன்று நம்மை வாட்டும் பெரிய நோய் 'தூக்கமின்மை.' தூக்கத்திற்கு மருந்து சாப்பிடுவது எல்லாராலும் ஏற்றுக்கொண்ட ஒன்று என்றாகிவிட்டது. தூக்கமின்மையின் பொருள் பரபரப்பு. குழந்தைகளும், வயதானவர்களும் எளிதில் தூங்கிவிடுகிறார்கள். எப்படி? 'வாழ்வின் வேகம் குறைந்தால் தூக்கம் தானாக வந்துவிடும்'. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் பரபரப்பு இல்லை. ஆக, விழிப்பு என்பது தூக்கமின்மையோ அல்லது பரபரப்போ அன்று. மாறாக, 'காத்திருத்தல்' அல்லது 'எதிர்நோக்கி இருத்தல்'. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு, 'வீட்டு வாயில்காவலர்.' இன்றைய வாயில்காவலர்கள் சிசிடிவி கேமராவை ஆன் செய்துவிட்டு அல்லது கதவுகளில் சென்சார் மற்றும் ஆன்ட்டி-தெஃப்ட் அலார்ம் பொருத்துவிட்டு தூங்கிவிடுகிறார்கள். இயேசுவின் சமகாலத்து பாலஸ்தீனத்தில் அப்படி அல்ல. வீட்டின் முன் அல்லது தோட்டத்தின் நடுவில் ஒரு கோபுரம் இருக்கும். அந்தக் கோபுரத்தின் மேல் ஏறி நின்றுகொள்ள வேண்டும் காவலர். கையில் ஒரு பெரிய குச்சியும், காலுக்கடியில் நிறைய கற்களும் வைத்துக்கொள்ள வேண்டும். ஆபத்து தூரத்தில் வரும்போது கற்களைக் கொண்டு எறிய வேண்டும். அருகில் வந்தால் கீழே குதித்து குச்சியோடு எதிர்கொள்ள வேண்டும். பராக்கிற்கும், கவனச்சிதறல் களுக்கும் இடம் கொடுக்கக்கூடாது. இவ்வாறாக, செய்ய வேண்டிய வேலையை சரியாகச் செய்வது விழிப்பு நிலை. இங்கே நாம் மற்றொன்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். 'பதறிய காரியம் சிதறிப் போகும்' என்பது முதுமொழி. பதற்றம் மற்றும் பரபரப்பு குறையும்போது நாம் செய்யும் வேலையை நம்மால் நிறைவாகவும், படைப்பாற்றலோடும் செய்ய முடியும்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசாயா 63:16-17, 64:1,3-8) மூன்றாவது உருவகத்தைப் பார்க்கின்றோம். 'ஆண்டவரே, நாங்க அப்படி ஆயிட்டோம், இப்படி ஆயிட்டோம். நீர் எங்களைக் கண்டுகொள்ளவில்லை. அப்படி! இப்படி!' என்று புலம்பும் எசாயா, இறுதியாக, 'ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை. நாள் களிமண். நீர் எங்கள் குயவன். நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகள்' என்று சரணாகதி ஆகின்றார். 'குயவன் கையில் இருக்கும் களிமண்' - இதற்கு வாய் இல்லை. தன் விருப்பு வெறுப்பை இது பதிவு செய்ய முடியாது. குயவன் தன்மேல் எவ்வளவு தண்ணீர் ஊற்றுவான், எவ்வளவு இறுக்கமாக பிசைவான், எந்தச் சக்கரத்தில் வைத்து நம்மை எவ்வளவு வேகத்தில் சுற்றுவான், எந்த வெயிலில் காய வைப்பான், எந்த நெருப்பில் சுடுவான், எந்த வர்ணம் பூசுவான் என எதையும் தீர்மானிக்க முடியாது களிமண். ஆனால், இது தன்னையே தன் தலைவன் கையில் ஒப்படைத்துவிட்டால் அழகிய மண்பாண்டமாக மாற முடியும். இதுதான்,
3. மூன்றாவது பாடம்: தற்கையளிப்பு. 'அவரின் கையில் நாம் குயவர்கள்' என்று அவரின் திட்டதிற்கு அப்படியே சரணாகதி ஆவது. கிறிஸ்து பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகளில் நாம் சந்திக்கும் மரியாள், யோசேப்பு, சக்கரியா, எலிசபெத்து, இடையர்கள், மூன்று ஞானியர், சிமியோன், அன்னா என அனைவருமே தற்கையளிப்பு செய்தவர்கள். தங்கள் திட்டங்களை எல்லாம் இறைத்திட்டங்களுக்காக மாற்றிக்கொண்டவர்கள்.
இறுதியாக, 'எல்லா வகையிலும் செல்வராக' என்பதே முதல் ஞாயிற்றின் நம் இலக்காக இருக்கட்டும். இதை அடைவதற்கான 'பொறுப்புணர்வு,' 'விழிப்பு,' 'தற்கையளிப்பு' ஆகிய பண்புகளை, 'பணியாளர்,' 'வாயில்காவலர்,' 'களிமண்' என்னும் உருவகங்கள் நமக்குக் கற்றுத் தரட்டும். எல்லா வகையிலும் செல்வராகும் நாம், நம் வாழ்வின் நிறைகளை அறியவும், நிறைகளை மட்டுமே மற்றவரில் காணவும், மற்றவரின் குறைகளை நம் செல்வத்தால் நிரப்பவும் துணிந்தால் கிறிஸ்து நம்மில் என்றும் வருகின்றார். திருவருகைக்கால வாழ்த்துக்களும், செபங்களும்!



No comments:

Post a Comment