Saturday 9 December 2017

திருவருகை ஞாயிறு -2 - ஆண்டு-2

திருவருகை ஞாயிறு -2 - ஆண்டு-2

எசா 40:1-5, 9-11; 2 பேது 3 - 8-14; மாற் 1:1-8



இறைவன் கூக்குரலிடுகிறார்

அருள்பணி லூர்துராஜ் பாளை மறைமாவட்டம்

கோவை நகர். கௌலி ப்ரவுன் சாலை. ஹவுசிங் யூனிட் காம்பவுண்ட்சுவர் அந்த வழியாகச் செல்லும் அனைவரும் நின்று படித்து இரசிக்கும் வண்ணம் சுவர் எழுத்துக்கள் கிண்டலடிப்பது போல கிறிஸ்தவ சமய ஒரு பிரிவினருக்கும் பெரியார் கட்சித் தொண்டர் களுக்கும் இடையே நடைபெற்ற சுவர் எழுத்துப்போட்டி.

"இயேசு சீக்கிரம் வருகிறார்' - அல்லேலூயா இயக்கத்தினர்
அதுவரை மக்கள் என்ன செய்வது"-திராவிடக் கழகத்தினர்
"அதுவரை பாவம் செய்தலை விட்டுமனந்திரும்பி நட'- அ.இ.
'இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்" – தி.க.
"நீ மனந்திரும்பட்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்"- அ.இ.

சுவையான, சிந்திக்கத் தூண்டும் சுவர் எழுத்துப் போராட்டம் "ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலம் தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால் அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக உங்களுக்காகப் பொறுமையோடிருக்கிறார். யாரும் அழிந்து போகாமல் எல்லாரும் மனம் மாற வேண்டுமென விரும்புகிறார்" (2 பேதுரு 39) மனிதன் மனந்திரும்பட்டும் என்று கடவுள் காத்துக் கொண்டிருப்பவர் மட்டுமல்ல. கூக்குரல் இடுபவரும் கூட. "பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகின்றது. ஆண்டவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்" (எசா 40:3)
பாலைவனத்தில் ஒரு கூக்குரல் - இது திருமுழுக்கு யோவானின் குரல் என்று நாம் நினைக்கிறோம். உண்மை அதுவல்ல. கூக்குரல் இடுவது இறைவனே. பாலை நிலம் என்பது நமது வாழ்க்கையே! அமைதியாகத் தாழ்ந்த குரலில் பேகம் இறைவன் அவ்வப்போது கூக்குரலிடுகிறார், நம்மை உசுப்புவதற்காக சுனாமியாகச் சுழன்றடித்த பேரிடர் இறைவனின் கூக்குரல் இல்லையா? இயற்கைக்கு ஊறுவிளைவிக்காதே என்பதுதானே அதன் முழக்கம் சுட்டெரிக்கும் வெயிலும் வெப்பமும் கூட இறைவனின் கூக்குரல் அன்றோ சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாதே என்பதுதானே அதன் விளக்கம்.
இயற்கையின் சீற்றமாக மட்டுமல்ல, இறைவாக்கினரின் எச்சரிக்கையாகவும் இறைவன் கூக்குரலிடுகிறார் என்பதுதான் இன்றைய திருவழிபாட்டுச் செய்தி
தூங்குபவனை எழுப்பிவிடலாம். தூங்குவது போல் பாசாங்கு செய்பவனை என்ன செய்தும் எழுப்ப முடியாது. இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக இறைவன் எழுப்பும்கூக்குரல் தூங்குகிறஅல்லது தூங்குவது போல் நடிக்கிற நம்மை உலுக்கட்டும் "மனம் மாறி உங்கள் குற்றங்கள் அனைத்தையும் விட்டு விலகுங்கள். எனக்கு எதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும் புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள். மனம் மாறுங்கள் வாழ்வு பெறுங்கள்" (எசேக்.18:30-32)
மனந்திரும்பத்தேவையில்லை என்று தான் இன்றைய மனிதனும் நினைக்கிறான். இயேசுவைப் பொறுத்தவரை அவரைக் கொன்றவர்கள், மனந்திரும்ப மறுத்தவர்கள் ஒழுக்கக்கேடு உள்ளவர்கள் அல்ல. தங்களையே நேர்மையாளர்களாக நினைத்த பரிசேயர்களே!
'பாவமே இல்லை என்று சொல்வது தான் இன்றைய உலகின் மிகப்பெரிய பாவம்' என்றார் திருத்தந்தை 6ஆம் பவுல். அழுக்கோடிருக்கும் குழந்தை, அம்மா குளிக்கக் கூட்டிப்போகும் போது அடம்பிடிப்பதைப்போல தன் மன அழுக்குகளைப் பற்றி உணர்வற்று இருக்கிறோம்.
தன்னிலை உணர்தல், தன் தவறுகளை ஏற்றுக் கொள்ளுதல் இதுவே மனந்திரும்புதலின் அச்சாணி, தவறு என்பது முதுகுபோல, தன் தவற்றை எவரும்பார்ப்பதில்லை. அதனால்தான் அடுத்தவன் கண்ணில் உள்ள துரும்பைப் பார்க்கிறோம். நம் கண்ணில் உள்ள விட்டத்தை நம்மால் பார்க்க முடிவதில்லை.
உடல் அழுக்கைச் சுட்டிக்காட்டப் பலர் வருவர். மனஅழுக்கை அவரவர் உணர்ந்தால்தான் உண்டு. அப்படியே உணர்ந்தாலும் அதிலிருந்து விடுபட நாம் கையாளும் வழிகள் பெரிதும் பலவீனமானவை.
ஒரு முக்கிய தலைவர் தன் செயலரோடு வெளிநாட்டுக்கு விமானம் ஏறினார். ஒரே துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது? புரியவில்லை. விமானத்தை விட்டு இறங்கி விடுதியில் தங்கியபோது அதே துர்நாற்றம். பிறகுதான் தெரிந்தது அதற்குக் காரணம் தன் செயலரின் காலுறை (Socks) என்று. உடனே கத்தினார். உன் சாக்ஸை மாற்று என்று. உடனே செயலர் மாற்றிக் கொண்டாராம் வலது காலில் இருந்த காலுறையை எடுத்து இடது காலிலும் இடது காலில் இருந்ததை எடுத்து வலது காலிலுமாக.
இப்படித் தான் இருக்கின்றன நமது மனமாற்றங்கள் எல்லாம். சில சமயங்களில் DDT பாவசங்கீர்த்தனங்களில் திருப்தி காண்கிறோம். குளம் ஒன்றில் நாற்றக் குமிழிகள் கொப்புளித்தன. நாற்றம் தாங்காது மக்கள் முறையிட அரசு அதிகாரிகள் வந்தனர். DDT மருந்து அடித்தனர். நாற்றம் குறைந்தது. போய் விட்டனர். பின்னும் குமிழிகள். மறுபடி நாற்றம். மறுபடி அதே மருந்தடிப்பு தற்காலிக நிவாரணம். மீண்டும் நாற்றம். ஒருவன் சொன்னான்: "நீர்க்குமிழிகள் எழுந்தால் குளத்தின் ஆழத்தில் ஏதோ அழுகிக் கிடக்கிறது என்று பொருள்' மூச்சைப் பிடித்து ஆழத்தில் இறங்கி அழுகிய பிணத்தை எடுத்து எறிந்தார்கள். பிறகு குமிழி இல்லை. நாற்றம் இல்லை. நீரும் தெளிந்தது.
"இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிசாய்த்தால் எத்துணை நலம்! அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்’ (தி.பா.95:7,8)


மகிழ்வுட்டும் மறையுரை

குடந்தை அந்தோணிசாமி

ஆண்டவரின் ஆசியைப் பெறுவோம்

பிறக்கப்போகும் ஆண்டவர் எப்படிப்பட்டவர் என்பதை இறைவாக்கினர் எசாயா தெளிவாக முதல் வாசகத்தில் சுட்டிக்காட்டுகின்றார்: ஆயனைப்போல் தம் மந்தைகளை அவர் மேய்ப்பார்; ஆட்டுக் குட்டிகளைத் நம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்: ளையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார் (எசா 40:11). அவர் மிகுந்த பொறுமையைக் கையாள்வார்; யாரும் அழிந்து போகாமல் எல்லாரும் நாம் மாறவேண்டும் என்று விரும்புவார் (2 பேது 3:9).
திருமுழுக்கு யோவான் எப்படிப்பட்டவர் என்று நமக்குத் தெரியும். வர் மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் வரும் தோன்றியதில்லை (மத் 1:1) என்று இயேசுவால் புகழப்பட்டவர். அப்படிப்பட்டவர் தன்னைவிட இயேசு வலிமை மிக்கவர் எனச் சுட்டிக்காட்டுகிறார்.(மாற்கு l:7).
ஆக, ஒரு நல்ல ஆயனை, நாம் நலமுடன் வாழவேண்டும் என்று விரும்புகின்றவரை, வலிமைமிக்கவரை நாம் நம் நடுவே சில வாரங்களில் வரவேற்கப்போகின்றோம். வரவிருக்கும் ஆண்டவரை நாம் தகுதியுடன் வரவேற்க என்ன செய்ய வேண்டும்? என்பதை இன்றைய நற்செய்தி கட்டிக்காட்டுகின்றது.
திருமுழுக்கு யோவான் நம்மைப் பார்த்து: மனம் மாறுங்கள் என்கின்றார்: இயேசுவிடமிருந்து தூய ஆவியாரின் வரங்களையும் (கொரி 12:8-10), கனிகளையும் (கலா 5:22-23) பெற்று நாம் வளமுடன் வாழ நமது மனமாற்றத்தை ஒரு நிபந்தனையாக நம்முன் வைக்கின்றார்.
மனம் என்பது ஒரு காசுபோன்றது. அதற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒன்று ஆசை, மற்றொன்று அறிவு. அறிவே ஆசைக்கு அடித்தளம். ஆசையே அனைத்திற்கும் காரணம்! மனமாற்றம் அடைய விரும்புகின்றவர்கள் காணாமற்போன மகன் போல அறிவுத் தெளிவை (லூக் 15:17) ஆராய்ந்துபார்க்க வேண்டும் மதிப்பீட்டுப் பட்டியல் சரியாக இருக்கின்றதா? என்பதை உய்த்துணர வேண்டும்!
இதோ தன் அறிவைத் தெளிவாக வைத்திருந்த ஒரு மனிதனின் கதை இக்கதை நம் மதிப்பீட்டுப் பட்டியலை சரிபார்க்க நமக்கு உதவும்.
டெட்ரூஜென் (Tetsugen) என்ற ஒரு ஜப்பானியர் தியானத்தில் (Zen) மிகுந்த ஈடுபாடு உடையவர். அப்பொழுது சீன மொழியில் மட்டுமிருந்த புத்தரது ஆத்திரங்களை ஜப்பானிய மொழியில் அவர் வெளியிடத் தீர்மானித்தார். மரப்பலகையில் அந்தச் சூத்திரங்களைச் செதுக்கி ஏழாயிரம் பிரதிகளை வெளியிடத் தீர்மானித்தார். நன்கொடை வசூலித்தார். பத்து வருடங்கள் உருண்டோடின திடீரென யூஜி ஆற்றில் வெள்ளம் வந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சேர்த்த பணத்தை ஏழை மக்களின் பட்டினியைப் போக்கச் செலவழித்தார். மீண்டும் பணம் சேர்த்தார். திடீரென மக்களைத் தொற்றுநோய் பற்றியது. நன்கொடையை நோயுற்றோர்க்குக் கொடுத்தார். மீண்டும் நன்கொடை வசூலித்து இருபது வருடங்கள் கழித்து மூன்று பிரதிகள் எடுத்தார். அதில் ஒரு பிரதி இன்றும் ஒபாக்கூ (Obaku) மடாலயத்தில் உள்ளது.
இந்த ஜப்பானியர் மனித வாழ்க்கையைவிட மேலானது எதுவும் இல்லை என்பதை உலக மக்களுக்குச் சுட்டிக்காட்டுகின்றார். மனிதர்கள் வாழவேண்டும் என்பதற்காக நல்லாயனாக உதித்து பாவிகளாகிய நமக்காக உயிரைக் கொடுத்த உத்தமரைச் சந்திக்க, நாம் அவரைப் போலவே மக்களின் வாழ்க்கைக்கு நமது மதிப்பீட்டுப் பட்டியலிலே முதலிடம் கொடுப்போம்.
மனம் எனும் விளக்கினிலே மனமாற்றம் எனும் எண்ணெயூற்றி,
மனித நேயம் எனும் திரியிட்டு
வாழ்வு எனும் ஒளிதந்து, இருள்போக்கி –
பாவ இருள்போக்கி பெறுவோம்.
ஆண்டவரின் ஆசியைப் பெறுவோம்!
மேலும் அறிவோம் :
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு (குறள் : 352).
பொருள்: அறியாமை ஆகிய மயக்கம் களைந்து மெய்யறிவு பெற்றவர்க்கு மாசற்ற உண்மை தோன்றும்: அறியாமை இருள் விலகுவதால் இன்பப் பேறு வாய்க்கும்!




மனமாற்றும்..

அருள்பணி முனைவர் ம.அருள்



திருவருகைக் காலம் மனமாற்றத்தின் காலம். இதில் நான்கு கூறுகள் உண்டு. 1. மனம் வருந்துதல் 2. மனமாற்றம் 3. இறைவனின் வருகைக்காகக் காத்திருத்தல். 4. அதற்காக தயாரித்தல். இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு இன்று விடுக்கும் சவால் மனமாற்றம்தான். பாபிலோனிய அடிமைத் தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் புறப்பட்ட காலம். ஏனெனில் மக்களின் இதயங்களை நெறிப்படுத்தி, இறைவனின் கருணையை எடுத்துரைத்து, உள்ளம் கலங்க வேண்டாம் என்று நம்பிக்கையூட்டுகிறது முதல் வாசகம் (எசாயா:40:9-11). இதற்காக ஆண்டவன் வழியை ஆயத்தமாக்குங்கள் பள்ளத்தாக்குகள் நிரப்பப்பட்டுக் குன்றுகள் தாழ்த்தப்படட்டும் கரடு முரடானவை சமதளமாக்கப்படட்டும் என்று இந்த மனித உள்ளத்தில், அறை கூவல் விடுக்கிறார் இறைவாக்கினர் (எசாயா:40:3-4). இன்றைய நற்செய்தி அறிவிப்பது போல, பாலைவனத்திற்கு வந்து பாவ மன்னிப்பு பெறுங்கள், மனம் மாறி திருமுழுக்குப் பெறுங்கள் என்று அழைப்பு விடுக்கிறார் திருமுழுக்கு யோவான் (மாற்கு:1:4).
பழைய ஏற்பாட்டிலே இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளிவந்த போது, அவர்கள் பலவற்றை விடவேண்டியிருந்தது. தாங்கள் வழக்கமாக உண்ட மீன், வெங்காயம், கொம்மட்டிக்காய், கீரை, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை விட வேண்டியிருந்தது (எண்:11:4-5). பாலை நிலத்திற்கு வருவது என்பது, நாம் வழக்கமாகச் சார்ந்திருக்கும் பாவநிலையை விட்டுவிட்டு கடவுள் முன் வருவதைக் குறிக்கிறது. ஆகவே பாலை நிலம் போதல் என்பது மனம் திரும்புதலின் முதல் படியாகும்.
நாம், பிறந்த குழந்தையாக இருந்தபோது திருமுழுக்குப் பெற்றுவிட்டோம். இந்த திருவருகைக் காலத்தில் ஒரு திருமுழுக்கு நம்மில் நடைபெற வேண்டும். அதாவது நாம் நம்மையே சரிக்கட்டி, அல்லது ஏமாற்றி ஒளித்து வைத்திருக்கும் தீய பழக்கங்கள், செயல்கள், மற்றும் ஒளித்து வைத்திருக்கும் இடங்களை விட்டு வெளியேற வேண்டும். நம்மில் இருக்கும் பாவம் என்ற பள்ளதாக்குகள் அகற்றப்பட்டு, சரிசெய்யப்பட வேண்டும். நம்மிடம் மலை போல் குவியும் கோபம், விரோதம், பகைமை, பொய்மை, பொறாமை, திருட்டு, காமம், களவு, வஞ்சகம், தீச்செயல்கள் தீக்கிரையாக்கப்பட வேண்டும். இறைவன் படைத்த சாதகப் பறவையானது குளம், குட்டைகளில் தேங்கிக் கிடக்கும் நீரையோ, கழிவு நீரையோ பருகாது. கார் காலத்தில் பெய்யும் மழை நீரை வாய் திறந்து பருகி உயிர் வாழ்கிறது. நாமும் சாதகப் பறவையாக மாற இந்த திருவருகைக் காலம் அழைப்பு விடுக்கிறது. யாரும் அழிந்து போகாமல், எல்லோரும் மனம் மாறவேண்டும் என கடவுள் காத்திருக்கிறார் (2பேதுரு:3:9) என்று புனித பேதுரு இன்றைய இரண்டாம் வாசகத்தில் குறிப்பிடுகிறார்.
அன்பார்ந்தவர்களே! அவன் அப்படி, இவள் இப்படி என்றெல்லாம் மற்றவரை குறை கூறி தீர்ப்பிட்டு அவர்கள் மனம் மாற வேண்டும் என நினைக்கிறோம். மாறாக 80 வயதான ஒருவர், முதலில், இந்த உலகை மாற்றுவேன் என சபதமிட்டு, தோல்வி கண்டார். பின் ஊரையும் என் குடும்பத்தையும் மாற்றுவேன் என கூறி அதிலும் தோல்வியைக் கண்டார். இறுதியாக இறைவா! என்னை மாற்றிட எனக்கு வரம் தாரும் என வேண்டி சிந்திக்கத் தொடங்கினார். ஆம்! இந்த திருவருகைக் காலம் நாம் நம்மில் உள் நோக்கிய ஒரு பயணம் செய்ய அழைப்பு விடுக்கிறது. இது தான் அகப்பார்வை. நாம் நல்லவர்களாக பிறர் முன் காட்டிய போலித் தனமான வெளித்தோற்றத்தைக் களைந்துவிட்டு, சக்கேயுவைப் போல, மரியமதலேனாளைப் போல, கண்ணீர் சிந்தி மனம் மாறிய பேதுருவைப் போல மனமாறுவோமா? கண்ணகியின் காற் சிலம்புக்கு முன் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், நானே கள்வன், நானே குற்றம் செய்தவன் என சுய பரிசோதனை செய்தது போல நாமும் செய்வோமா?



நற்செய்தியின் தொடக்கம் நம்பிக்கை  

அருள்பணி ஏசு கருணாநிதி - மதுரை

'அஞ்சாதீர்கள். இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்!'  
வயல்வெளியில் தங்கி தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களுக்கு இயேசுவின் பிறப்பு மகிழ்ச்சியூட்டும் 'நற்செய்தி' என அறிவிக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் 'நோ நியூஸ் இஸ் குட் நியூஸ்' என்ற பழமொழி உண்டு. அதாவது, ஒன்றைப் பற்றி செய்தி வராமல் இருக்கிற வரைக்கும் அது நல்ல செய்தி. அல்லது செய்தி என்று ஏதாவது ஒன்றைப் பற்றி ஏதாவது வந்தால் அங்கே ஏதோ எதிர்மறையானது இருக்கிறது என்று அர்த்தம்.   இன்றைய முதல் (காண். எசாயா 40:1-5, 9-11) மற்றும் நற்செய்தி வாசகங்களின் (காண். மாற்கு 1:1-8) மையமாக இருக்கும் ஒற்றைச் சொல் 'நற்செய்தி.' 'நற்செய்தி' என்றால் 'நல்ல செய்தி' என்று புரிந்து கொள்வது மிகவும் குறுகிய புரிதலாக இருக்கும். 'நற்செய்தி' என்ற வார்த்தைக்கான விளக்கத்தை நம் மேனாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள், 'நாசரேத்தூர் இயேசு' நூல் முதல் பாகத்தில் பின்வருமாறு பதிவு செய்கிறார்:  
'நற்செய்தியாளர்கள் இயேசுவின் போதனையை 'யுவாங்கெலியோன்' என்ற கிரேக்க பதத்தால் குறிப்பிடுகின்றனர். இந்த பதத்தின் பொருள் என்ன? இதை நாம் 'நற்செய்தி' என்று மொழி பெயர்க்கிறோம். 'நற்செய்தி' என்ற வார்த்தை கவர்ச்சிகரமாக இருக்கிறது. ஆனால், 'யுவாங்கெலியோன்' என்ற வார்த்தையின் முழுப்பொருளை இது பிரதிபலிப்பதில்லை. தங்களையே தலைவர்களாகவும், மீட்பர்களாகவும், இரட்சகர்களாகவும் கருதிக்கொண்ட உரோமை பேரரசர்களின் வார்த்தை இது. பேரரசரால் விடுக்கப்பட்ட எல்லா செய்தியும் - நல்லது, கெட்டது, மகிழ்ச்சி தரக்கூடியது, துன்பம் தரக்கூடியது - இலத்தீன் மொழியில் 'எவாங்கெலியும்' என்று சொல்லப்பட்டது. இதன் பொருள் என்னவென்றால், பேரரசனிடமிருந்து வரும் எச்சொல்லும் உலகை மாற்றக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளது. இந்த வார்த்தையை நற்செய்தியாளர்கள் எடுத்து தங்களின் எழுத்துக்களுக்குப் பெயராகச் சூட்டக் காரணம் என்னவென்றால், உரோமைப் பேரரசர்களின் வார்த்தைகள் பல நேரங்களில் நல்லதற்கான மாற்றத்தைக் கொண்டுவரவில்லை. அவர்கள் சொன்னார்கள். செய்யவில்லை. ஆனால், தனது சொந்த அதிகாரத்தால் பேசும் இயேசுவின் வார்த்தை ஒரே நேரத்தில் சொல்லாகவும், செயலாகவும் வெளிப்படுகிறது.'  
இவ்வாறாக, எந்த வார்த்தை ஒரே நேரத்தில் சொல்லாகவும், செயலாகவும் வெளிப்படுகிறதோ அந்த வார்த்தையே 'நற்செய்தி.' இன்று சில வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில்கூட இந்நிறுவனங்களின் தயாரிப்புக்களை மற்றவர்களுக்குப் பரவாலக்கம் செய்பவரை 'எவான்ஞ்செலிஸ்ட்' ('நற்செய்தியாளர்') என்று அழைக்கின்றனர். ஆனால் இவர்களின் நற்செய்தி சொல்லாகவும், செயலாகவும் இருக்கிறதா என்பது ஐயத்திற்குரியது.  
'கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்' என்று தன் நற்செய்தி நூலுக்கு முகவுரை தருகின்றார் இரண்டாம் நற்செய்தியாளர் மாற்கு.   நற்செய்தியின் தொடக்கம் என்று எழுதிவிட்டு உடனடியாக வாசகரை பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்கின்றார் மாற்கு நற்செய்தியாளர்:  
நற்செய்தி தொடங்கும் இடம்: பாலைவனம் 
நற்செய்தியைத் தொடங்குபவர்: திருழுழுக்கு யோவான் 
நற்செய்தியின் கூறு: 'வலிமைமிக்க ஒருவர் ... தூய ஆவியால் திருமுழுக்கு'  
ஆக, நற்செய்தி என்பது யாரும் எதிர்பாராத இடத்தில், யாரும் எதிர்பாராத நபரால், யாரும் எதிர்பாராத விதமாக தொடங்குகிறது. இதுதான் கிறிஸ்து பிறப்பின் எதார்த்தமும் கூட: யாரும் எதிர்பாராத இடத்தில், யாரும் எதிர்பாராத நபர் வழியாக, யாரும் எதிர்பாராத விதமாக நடந்தேறுகிறது.  
திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றில் நாம் ஏற்றும் திரி 'நம்பிக்கை' என்ற மதிப்பீட்டைக் குறிக்கிறது. நற்செய்தியின் தொடக்கமாக இருப்பது நம்பிக்கை.  
எப்படி?  
இன்றைய முதல் வாசகத்தின் பின்புலம் பாபிலோனிய அடிமைத்தனம். யூதா நாடு நெபுகத்னேசர் மன்னன் காலத்தில் அடிமைப்படுத்தப்பட்டு எருசலேம் மக்கள் அனைவரும் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்படுகின்றனர். 'எல்லாம் முடிந்துவிட்டது. இனி ஒன்றுமில்லை. அரசன் இல்லை. மண் இல்லை. நாடு இல்லை. ஆலயம் இல்லை. திருச்சட்டம் இல்லை' என புலம்பியவர்களைப் பார்த்து, 'ஆறுதல் கூறுங்கள் ... என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள்' என்கிறார் ஆண்டவராகிய கடவுள். மேலும், ஆண்டவரின் மாட்சி வெளிப்படுவதற்கான வேலைகளையும் முடுக்கிவிடுகின்றார் இறைவாக்கினர்.  
'பாலை நிலம்,' 'பாழ்நிலம்,' 'பள்ளத்தாக்கு,' 'மலை-குன்று,' 'கோணலானது,' 'கரடுமுரடானவை' என ஆறுவகை சீரமைப்புக்களைப் பதிவு செய்கின்றார் இறைவாக்கினர் எசாயா. இந்த ஆறு இடங்களும் உருவாகக் காரணம் எருசலேமைச் சூழ்ந்திருந்த போர்மேகம். எங்கும் போர் நடந்து கொண்டிருந்ததால் 'பாலை நிலத்தில்' பாதை மறைந்து போய் கிடந்தது. மேய்ச்சல் நிலம் பாழ்நிலம் ஆனது. போர்களில் ஒளிந்து கொள்வதற்கா பள்ளங்கள் தோண்டப்பட்டதால் ஆங்காங்கே செயற்கை பள்ளத்தாக்குகள் இருந்தன. மலை மற்றும் குன்றுகள் மக்கள் ஒளிந்து கொண்டு தாக்கும், போரிலிருந்து தப்பிக்கும் அரண்களாக செயல்பட்டன. வேகமாக செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் நிறைய கோணல் மாணல் சாலைகள் உருவாகின. எங்கும் நிலையான அமைதி இல்லாததால் சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டுங் குழியுமாய் கரடு முரடாய் இருந்தன. மேலும், தொடர்ந்துவரும் 'ஆயன்-ஆடு' உருவகங்கள் பின்புலத்தில் பார்த்தால் இந்த ஆறுமே ஆடுகள் மேய்வதற்கு எதிராக உள்ள இடங்கள். மேற்காணும் இடங்களில் அல்லது இடங்களால் ஆடுகள் காணாமல்போகும், வழிதவறும், காயங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் நிறைய உண்டு.   இந்த இடத்தில் 'சீயோனே, நற்செய்தி தருபவளே,' 'எருசலேமே, நற்செய்தி உரைப்பவளே' என எருசலேமை இளநங்கையாக உருவகம் செய்து 'நற்செய்தியை' பறைசாற்றுகிறார் இறைவாக்கினர். இந்த நற்செய்தியைத் தரும் அரசன் யார் என்றும், அவர் என்ன செய்வார் என்றும் தொடர்ந்து அவரே சொல்கின்றார்:   'ஆயனைப் போல தம் தந்தையை அவர் மேய்ப்பார். 
ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்.  அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார். 
சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.'   'இனி தங்களுக்கு ஒன்றுமே இல்லை. எல்லாம் அழிந்துவிட்டது' என்று எண்ணியவர்களின் வாழ்க்கையில், 'இன்னும் நிறைய இருக்கிறது' என்று வாழ்க்கையின் கதவுகளைத் திறந்துவிடுகின்றார் கடவுள்.
ஆக, நற்செய்தியின் தொடக்கமாக நம்பிக்கை இருக்கிறது.   இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 பேதுரு 3:8-14) ஆண்டவரின் இரண்டாம் வருகை பற்றிப் பதிவு செய்கின்ற பேதுரு அந்த நாளில் 'புதிய விண்ணகம் மற்றும் புதிய மண்ணகம் மலரும்' என்றும், இந்த நாளுக்கான தயாரிப்பாக மக்கள் 'மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய் விளங்கவும் வேண்டும்' என்கிறார்.   இன்றைய நற்செய்தி வாசகத்தை முதல் வாசகத்தின் தொடர்ச்சியாக வரைகின்றார் மாற்கு. மலாக்கி இறைவாக்கினர் மற்றும் எசாயா இறைவாக்கினரின் உருவகங்களை எடுத்து திருமுழுக்கு யோவானுக்குப் பொருத்துகின்றார்: 'தூதன்,' 'குரல்,' 'வழி,' 'பாதை.'   ஆக, நற்செய்தியின் தொடக்கமாக இருப்பது ஆயத்தம் அல்லது தயாரிப்பு. அந்த தயாரிப்பு பாலைநிலங்களில் நடந்தேறுகிறது. அந்த தயாரிப்பை செய்பவர் திருமுழுக்கு யோவான். அவரிடம் சென்றவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு திருமுழுக்கு பெற்றுவந்தனர். இந்த நிகழ்வு முழுக்க முழுக்க பாலைவனத்தில் நடந்தேறியது என்பதைக் குறிக்கவே நற்செய்தியாளர், 'ஒட்டக முடி ஆடை,' 'தோல் கச்சை,' வெட்டுக்கிளி,' 'காட்டுத்தேன்' போன்ற அடையாளங்களையும் பயன்படுத்துகின்றார். மேலும், தனக்குப்பின் வருபவரின் பண்புகளையும் பட்டியலிடுகின்றார் மாற்கு.   நம்பிக்கை கொண்ட ஒருவரே ஆயத்தம் அல்லது தயாரிப்பு செய்ய முடியும்.   இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கும் தரும் பாடங்கள் எவை?  
1. நம் கண்களையும் தாண்டிய நிகழ்வு ஒன்று உண்டு  நம்பிக்கைக்குப் பல நேரங்களில் தடையாக இருப்பது நம் கண்கள். நாம் காண்பது மட்டுமே உண்மை என்று நினைத்துக்கொண்டு, நம் எண்ணங்களுக்கு நம் பார்வை அல்லது காட்சியால் குறுகலான ஃப்ரேம் ஒன்றை நாம் ஏற்படுத்திவிடுகிறோம். ஆனால், கண்களின் காட்சிகளையும் கடந்த நிகழ்வுகள் நம் வாழ்வில் உண்டு. பாபிலோனிய அடிமைத்தனத்தில் சிக்குண்ட இஸ்ரயேல் மக்கள் கஷ்டப்பட்டதும் இந்தப் பார்வைக் குறைபாடால்தான். அவர்களின் பார்வையை அகலமாக்குகின்றார் கடவுள்.  இயேசுவின் வருகை அல்லது பிறப்பு செய்த மிகப்பெரிய காரியம் இதுதான். நம் கண்களைத் திறந்துவிட்டது. கடவுளை அப்பா என்றழைக்கவும், ஒருவர் மற்றவரை சகோதரர், சகோதரி என்று ஏற்று அன்பு செய்யவும் நம்மைத் தூண்டியது. இயேசுவின் இறையரசு போதனையே மக்களை தங்கள் எண்ணங்களை விரிவடையச் செய்யும் போதனைதான். இத்திருவருகைக்காலத்தில் இந்த எண்ணத்தை நம் மனத்தில் பதிய வைப்போம். நாம் காணும் அனைத்தையும் தாண்டிய வாழ்க்கை அல்லது எதார்த்தம் அல்லது நிகழ்வு உண்டு.  
2. நற்செய்தி  நற்செய்தி என்பது 'சொல்லும், செயலும் இணைந்திருக்கும் நிலை' என்று மேலே கண்டோம். இந்த வரையறையின்படி பார்த்தால் கடவுளின் செய்தி மட்டுமே இன்று நற்செய்தியாக இருக்கிறது. நம் சமூக, அரசியல், பொருளாதார, தகவல் தொழில்நுட்ப வாழ்வில் நாம் பேசும், பரிமாறும் பல வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாகவே நின்றுவிடுகின்றன. அவைகள் செயல்களாக மாற்றம் பெறத் தவறிவிடுகின்றன. இன்று நான் உரைப்பது நிறைவேறாமல் போவதற்கு தடையாக இருப்பது எது? எனக்கு நானே கொடுக்கும் சின்ன சின்ன வாக்குறுதிகள்கூட பல நேரங்களில் நற்செய்தியாக மாறுவதில்லை. இதற்குக் காரணம் என்ன? என்னுடைய சோம்பலா? அல்லது பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று மேலோட்டமான போக்கா? 
 3. கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்து  இயேசு யார் என்பதை இரண்டு அடைமொழிகளால் சொல்லிவிடுகின்றார் மாற்கு: 'கடவுளின் மகன்,' 'கிறிஸ்து.' இந்த இரண்டு வார்த்தைகளை தன் நற்செய்தி நூலில் விரிவாக்கம் செய்து எழுதுகின்றார் மாற்கு. இன்று நாம் தயாரிக்கும் கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்களின் பலூன், நட்சத்திரம், விளக்குகள், குடில்கள், பாடும் கேரல்கள் நடுவில் என் இயேசு யார்? என்று என்னால் வரையறுக்க முடியுமா? எனக்கும் அவருக்கும் உள்ள உறவை நான் எந்த வார்த்தைகளைக் கொண்டு வரையறை செய்வேன்? அவர் என்னுள் ஏற்படுத்தும் மாற்றம் என்ன?  திருமுழுக்கு யோவான் இயேசுவை 'தன்னைவிட வலிமைமிக்கவர்' என்றும், 'தூய ஆவியால் திருமுழுக்கு கொடுப்பவர்' என்றும் வரையறுக்கின்றார். என் வரையறை என்ன? 
 4. சிறுநுகர் வாழ்வு  இன்று வாழ்வியல் மேலாண்மையில் அதிகம் பேசப்படும் வார்த்தை 'மினிமலிஸ்ட் லிவ்விங்'. அதாவது குறைவானவற்றைக் கொண்டு நிறைவாக வாழ்வது. திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை முறை நமக்குச் சவாலாக இருக்கின்றது: 'ஒட்டக முடி ஆடை, தோல் கச்சை, வெட்டுக்கிளி, காட்டுத்தேன்'. இந்த நான்கையும் நாம் பயன்படுத்த வேண்டும் என்பது பொருள் அல்ல. மாறாக, தன்னை அறிந்த ஒரு வாழ்வு. தன்னை அறிந்த ஒருவர், தன்னிலே கட்டின்மை அல்லது விடுதலை பெற்ற ஒருவர் தன் அடையாளங்களைத் தன் ஆடையோடும், தன் உணவோடும் இணைத்துக்கொள்வதில்லை. 'உணவைவிட உடலும், உடையைவிட உயிரும்' என்று இயேசு சொல்வதன் பொருள் இதுவே. அதாவது, வாழ்வில் எல்லாமே இரண்டு கோடுகள். ஒரு கோட்டைவிட மற்ற கோடு சிறியதாக வேண்டுமென்றால் ஒரு கோட்டை நீட்டிவிட வேண்டும். தனக்கு தன் தயாரிப்பு பணி என்ற கோடு பெரியதாக இருந்ததால் திருமுழுக்கு யோவான் தன் உடை மற்றும் உணவு என்ற கோட்டைக் குறுக்கிக் கொண்டார்.
 இந்த கிறிஸ்து பிறப்புக் காலம் என் வாழ்வில் சிறுநுகர் பண்பை வளர்த்தால் நலம். தன் மகனுக்காக மாட மாளிகை கட்டவில்லை கடவுள். மாறாக, ஏற்கனவே இருக்கின்ற மாட்டுத் தொழுவம் ஒன்றை அப்படியே எடுத்துப் பயன்படுத்திக்கொண்டார். இதுதான் சிறுநுகர் வாழ்வு. இன்று நாம் பயன்படுத்தும் சிறிய குண்டூசியிலிருந்து மேலே அனுப்பும் விண்கலம் வரை நாம் இந்தப் பூமியைச் சுரண்டிச் செய்தவைதாம். சுரண்டிக்கொண்டே, வாங்கிக்கொண்டே, குவித்துக்கொண்டே இருப்பதைக் கொஞ்சம் நிறுத்தி இன்னும் கொஞ்சம் இரசிக்கவும், வாழவும் அழைப்பு விடுக்கின்றார் திருமுழுக்கு யோவான்.  
5. மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்  உரோமையின் பேதுரு பசிலிக்காவின் 'பியத்தா' (வியாகுல மாதா) சிலையை வடிக்கின்ற மைக்கேலாஞ்சலோ அன்னை மரியாளின் முகத்தை அழகான இளமையான முகமாக வடிக்கின்றார். இதற்கான காரணம் கேட்டபோது 'மாசில்லாத இடத்தில் நோயும், முதுமையும், இறப்பும் இல்லை. அங்கே வளமையும், இளமையும், அழகுமே இருக்கும்' என பதில் தருகிறார்.  பாலைவனம், பாழ்நிலம், பள்ளத்தாக்கு, மலை-குன்று, கோணலானவை இவை அனைத்தும் நம் உறவு நிலைகளின் உருவகங்களாகக்கூட இருக்கலாம். இவற்றை சரி செய்யவும் இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது. 
 இறுதியாக,   நம்பிக்கை என்று நாம் இன்று ஏற்றும் மெழுகுதிரி நற்செய்தியின் தொடக்கமாகட்டும் நம் வாழ்வில். அந்த திரியின் ஒளியில் நாமும் ஒளிர்வோம் நற்செய்தியாக!





No comments:

Post a Comment