Saturday 17 February 2018

தவக்காலம் முதல் ஞாயிறு

தவக்காலம் முதல் ஞாயிறு

தொநூ 9:8-15;1 பேது 3:18-22; மாற் 1:12-15

மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்
குடந்தை ஆயர் அந்தோணிசாமி

பாவம் என்றால் என்ன ? இயேசு சோதிக்கப்பட்டதாக புனித மாற்கு இன்றைய நற்செய்தியிலே கூறுகின்றார். ஆம். சாத்தான் இயேசுவைச் சோதித்தான். புனித மத்தேயு எழுதிய நற்செய்தியின்படி இயேசுவை மூன்றுமுறை சாத்தான் சோதித்தான். முதல் சோதனை வெளிப்புலன்களுக்கு, குறிப்பாக வாய்க்கு எதிரான சோதனை (மத் 4:3). இரண்டாவது சோதனை உள்புலன்களுக்கு, குறிப்பாக அறிவுக்கு எதிரான சோதனை (மத் 4:6). மூன்றாவது சோதனை இறைநம்பிக்கைக்கு எதிரான சோதனை (மத் 4:9).

| “அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது" என்று புனித லூக்கா கூறுகின்றார் (லூக் 4:13). அலகை ஏற்ற காலத்திற்காகக் காத்திருந்தது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் காத்திருந்தது. இயேசு பாடுபடப்போவதற்கு முன்னால் சிலுவையைச் சுமக்கப்போவதற்கு முன்னால் அவரை அலகை சோதித்தது. இயேசு, தான் துன்பப்பட வேண்டும் என்பதைத் தமது சீடர்களிடம் கூறியிருந்தார் (லூக் 9:22, 17:25, 24:26, 24:46). இயேசு துன்பப்படக்கூடாது, கொலை செய்யப்படக்கூடாது என்று புனித பேதுரு கூறியபோது, இயேசு அவரைப் பார்த்து, "என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கின்றாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகின்றாய்" (மத் 16:23) என்றார். ஆனால் அவரோ லூக் 22:42-இல், "தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும் ..." என்று கூறுகின்றார். ஆம். சாத்தான் இயேசுவை நான்கு முறை சோதித்தான்.


சாத்தான் யார்?


பாவத்தின் மறு உருவம்தான் சாத்தான். சாத்தான் எங்கு இருக்கின்றானோ, அங்கே பாவமிருக்கும்; எங்கே பாவமிருக்கின்றதோ அங்கே சாத்தான் இருப்பான்.


பாவம் என்றால் என்ன? இறையாட்சிக்கு எதிராகச் செயல்படுவதே பாவம். சாத்தானின் வேலை, இறையாட்சிக்கு எதிராகச் செயல்பட நம்மைத் தூண்டுவதாகும். இறையாட்சி என்றால் என்ன? இறையாட்சி என்பது நாம் உண்பதையும், குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவியார் அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய இறையாட்சி மனப்பான்மையோடு கிறிஸ்துவுக்குப் பணிபுரிவோர் கடவுளுக்கு உகந்தோராயும், மக்களின் மதிப்புக்கு உரியோராயும் இருப்பர் என்று புனித பவுலடிகளார் கூறுகின்றார் (உரோ 14:17-18).


இன்றும் நாம் சாத்தானால் சோதிக்கப்படுகின்றோம்.
பாவச் சோதனைகளிலிருந்து விடுதலை பெற வழி ஏதும் உண்டோ? உண்டு என்கின்றார் இயேசு.


இதோ இயேசு நம்மோடு பேசுகின்றார் : நோவா காலத்துத் தண்ணீர் (முதல் வாசகம்) மக்களை அழித்தது. நான் தரும் தண்ணீரோ உங்களை வாழ வைக்கும் (இரண்டாம் வாசகம், யோவா 7:37-39). தூய ஆவியாரே நான் தரும் தண்ணீர். அவரால் உங்களை அருள்பொழிவு செய்துகொள்ளுங்கள்; அவரில் திருமுழுக்குப் பெற்றுக்கொள்ளுங்கள்.


நான் முதல் மூன்று சோதனைகளையும் வென்றது எப்படி? தூய ஆவியாரால் நான் பாலைநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டேன் (மாற் 1:12). அவர் எப்போதும் என்னோடு இருந்தார். அவரை எதிர்க்கும் சக்தி இந்த உலகத்தில் எந்த சாத்தானுக்கும் கிடையாது. நான்காவது சோதனையை விண்ணகத் தந்தை மீது நான் வைத்திருந்த அளவிடமுடியாத அன்பால் (கலா 5:22-23) வென்றேன். என் வழியில் நடங்கள். உங்களை எந்தத் தீய சக்தியும் தீண்டாது; எந்தப் பாவமும் நெருங்காது.


இயேசுவின் இந்த வார்த்தைகளின்படி நடந்தால் “பேய்களின் விருந்து மண்டபமாய் உன் மனசு மாறியதெப்படி? மூளையில் எப்போது
முள் முளைத்தது உனக்கு?” என்று இறைவனோ, இறையடிகளார்களோ நம்மைக் கேட்கமாட்டார்கள். மாறாக இறைவனும், இறையடியார்களும் நம்மைப்பார்த்து, "நீ செல்லும் பாதை சரியான பாதை ... சிகரங்களில் வசிக்க சிங்காரமாய் நடந்துசெல்” என்பார்கள்.


மேலும் அறிவோம் :
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது ( குறள் : 865).


பொருள் : செயலுக்குரிய நல்ல வழியினை நாடாமலும் வெற்றிக்குரிய செயலைச் செய்யாமலும் தன்மீது வரும் பழிக்கு நாணாமலும் பண்பாடு இல்லாமலும் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்!



குன்று நோக்கி..அருள்திரு இ.லூர்துராஜ்
இந்தச் சோதனை எதற்கு?


 நடுக்கடலில் ஒரு பயணிகள் கப்பல். பயணிகளில் ஒருவர் துறவி - சாது. பெரும்பாலோனோர் இளைஞர் பட்டாளம். சாதுவைக் கேலி செய்து கிண்டல் அடித்தது அக்கூட்டம். சிலர் தங்கள் காலணிகளைக் கூட கழற்றி சாது மீது வீசி விளையாடினர். ஆனால் சாதுவோ அமைதியாய் இருந்தார். புன்னகை பூத்திருந்தார்.

திடீரென ஓர் அசரீரி கேட்டது. "சாதுவே, நீ விரும்பினால் இந்தக் கப்பலை மூழ்கடிக்கிறேன். உன்னை அவமானப்படுத்தியவர்களை இந்த ஆழ்கடலில் அமிழ்த்தி சாகடிக்கிறேன்” இதைக் கேட்ட கப்பலில் இருந்த அத்தனை பேரும் கதிகலங்கி சாதுவின் காலில் சரணாகதி அடைந்தனர். சாதுவானவர் வான் நோக்கிக் கைகளை உயர்த்தி, "என் அன்பான கடவுளே, நீர் ஏன் சாத்தானின் மொழியில் பேசுகிறீர்? கப்பலைக் கவிழ்த்து என்ன பயன்? முடிந்தால் இவர்களின் மனத்தை மாற்றும்”. வானிலிருந்து கடவுள் பதிலளித்தார்: “என் அன்பு மகனே, உன்னில் நான் மகிழ்கிறேன். முன்பு ஒலித்தது என் குரல் அன்று! உண்மையிலேயே அது சாத்தானின் குரல் தான்! எவன் ஒருவன் சாத்தானின் குரலை இனம் கண்டுகொள்ள முடிகிறதோ, அவனே என்னுடைய குரலையும் புரிந்து கொள்ள முடியும்”.

கடவுளின் குரலையும் அலகையின் குரலைஸயம் தரம் பிரித்துக் காட்டும் கண்ணாடியே தவக்காலம்.

பேய் பேயாக வருவதில்லை. எடுத்த எடுப்பில் தீயவற்றில் வீழ்த்த தோன்றும் விதங்களிலும் சொல்லும் வார்த்தைகளிலும் உருமாறி, முகமூடி அணிந்துதான் வருகிறான். அந்தநேரத்தில் நம் அறிவு என்ன சொல்கிறது?
ஒவ்வொரு கணமும் நமது செயல், சொல், சிந்தனை அனைத்திற்குப் பின்னும் நம் உள்ளத்திலிருந்து எழும் ஒரு குரல் இருக்கும். இதனை உடல் ரீதியாக, அறிவியல் ரீதியாக மூளை கட்டளை இடுகிறது, உடலின் உறுப்புகள் இயங்குகின்றன என்பார்கள். இதை அப்படியே ஏற்றுக் கொள்வதனால் தன் வீட்டைத் தானே இடிக்கிறது போல் (தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப் போகும், லூக்.11:17) நமது உடலையும், மூளை உட்பட அனைத்து உறுப்புகளையும் நாசப்படுத்திக் கொள்ளும் ஒரு கட்டளையை நமது மூளை கொடுக்கக் கூடுமோ?

ஆன்மீகத்துக்கு முன்னே அறிவியல் கேள்விக்குறியாகிறது!
சிலர் குடிபோதைக்கு அடிமையாகிறார்கள். மற்றும் சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வேறு சிலரோ தங்களது தீய செயலால் பிறரையும் கெடுத்துத் தாங்களும் அழிந்து போகிறார்கள். ஆகவே நம் செயல்கள் அனைத்தும் வெறும் மூளையின் கட்டளைகள் 11ன்று அல்லாது அதற்கும் மேற்பட்ட ஏதோ ஒன்று செயல் ஊக்கியாக இருப்பதை உணர முடிகிறது. பலரை வாழ வைக்கும் செயல்களைச் சிலர் செய்வதைக் காண்கிறோம். தாங்கள் நல்வழியில் நடப்பதோடு பிறரையும் நல்வழிப்படுத்துவதைக் காண்கிறோம். காரணம்? நம் உள்ளத்திலிருந்து இருவிதமான குரல்கள் எழும்புகின்றன. ஒன்று நற்செயல்களைச் செய்ய வைத்து நம்மை வாழவைக்கும் இறைவனின் குரல்! மற்றொன்று திசெயல்கள் மூலம் பிறரையும் நம்மையும் அழிவுக்கு இட்டுச் செல்லும் இலகையின் குரல்!
எனவேதான் “இதோ பார், வாழ்வையும் நன்மையையும் சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன் (இ.ச.30;15)... அவரது குரலுக்குச் செவிகொடு" என்கிறார் மோசே வழியாக இறைவன்!
மத்தேயுவோ லூக்காவோ போல இயேசுவின் சோதனைகளைப் பட்டியலிடாமல், இயேசு சோதிக்கப்பட்டார் என்று பொதுவாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் மத்தேயுவோ லூக்காவோ குறிப்பிடாத ஒன்றை மார்க் மட்டும் குறிப்பிடுகிறார். "பாலை நிலத்தில் இயேசு காட்டு விலங்குகளிடையே இருந்தார்” (மார்க்.1:13)

நாம் எதிர்த்துப் போராட வேண்டிய தீய சக்திகளான காட்டு விலங்குகள் நமக்கு வெளியே மட்டுமன்றி நமக்குள்ளேயும் இருக்கின்றன.
உயிரினங்களைப் படைத்த இறைவன் அவை ஒவ்வொன்றுக்கும் ஆயுள் காலத்தை 30 ஆண்டுகளாக நிருணயித்தார். அதில் திருப்தி அடையாத கழுதை, நாய், குரங்கு, மனிதன் மட்டும் திருப்தியின்றி முறையிட்டன.
கழுதை கடவுளிடம் "தினம் தினம் பொதிசுமக்கிற எனக்கு 30 ஆண்டுகள் என்பது வேதனையானது" என்றது. சரி என்று 18 ஆகக் குறைத்தார். "குரைத்துக் குரைத்து தொண்டை காய 30 வயதா?” என்ற நாய்க்கு ஆயுளை 12 ஆக்கினார். பிறகு குரங்கு "மரத்துல தொங்கித் தொங்கி ஆடுற என் பொழைப்புக்கு 30 தேவையா?” என்று கேட்க அதை
 10 என்றாக்கினார்.
இறுதியாக வந்த மனிதன் “அனைத்தையும் அனுபவிக்க எனக்கு 30 ஆண்டுகள் எப்படிப் போதும்? அதனால் கழுதையில் ஒதுக்கிய 12, நாயில குறைத்த 18, குரங்கில் குறைத்த 20 எல்லாத்தையும் எனக்குச் சேர்த்துக் கொடுத்தா நல்லா இருக்கும்” என்று கெஞ்ச “சரி அப்படியே ஆகட்டும்” என்றாராம் கடவுள்.
அதனால்தான் மனிதன் 30 ஆண்டு ஓரளவு மகிழ்ச்சியாக இருந்துவிட்டு அடுத்த 12 ஆண்டு கழுதை மாதிரி குடும்பப் பாரத்தை சுமக்கிறான். அடுத்த 18 ஆண்டு நாய் மாதிரி சொத்துச் சேர்க்கவோ, சேர்த்ததைக் காக்கவோ அலையோ அலையின்னு அலைகிறான். பிறகு 20 ஆண்டு வயதாகி வீட்டில் மரியாதை போய் யார் என்ன சொன்னாலும் குரங்காட்டம் ஆடித் தவிக்கிறான்.

நமக்குள்ளே மிருகக்குணம் நிறையவே இருக்கு. கடித்து குதறாத அளவுக்கு காட்டு விலங்குகளாக எதிர்த்து நிற்கும் தீய சக்திகளுக்கு முன்னே நிராயுதபாணியாக நிற்பதா? அந்தப் போராட்டச் சோதனைக் களத்தில் ஏந்த வேண்டிய ஆயுதங்கள் என்ன? எபேசியருக்கு எழுதிய திருமடலில் (6:11-17) தூய பவுல் இடைக்கச்சையாக உண்மை, மார்புக் கவசமாக நீதி, நற்செய்தி அறிவிப்பின் ஆயத்த நிலையாக மிதியடி, தலைச்சீராக மீட்பு, போர் வாளாக இறைவார்த்தை என்று பட்டியலிடுவார். இவற்றில் முதல் நான்கும் தற்காப்புக்கானவைகள். எதிரியை வீழ்த்தக் கூடிய போர் வாளாக இருப்பது இறைவார்த்தை ஒன்றே!

மனம் மாறும், மாற்றும் கடவுள் 

அருள்பணி ஏசு கருணாநிதி


'மனம்தான் எல்லாம்' என்று புத்தமதம், 'உங்கள் மனத்தை விழித்திருந்து காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அங்கிருந்துதான் உங்கள் எண்ணங்கள் ஊற்றெடுக்கின்றன' என்று கிறிஸ்தவமும் சொல்கிறது. 'மனமாற்றம்' என்பது நாம் அதிகம் கேட்டு அர்த்தம் இழந்த சில வார்த்தைகளில் ஒன்று.

இன்று காலை 8:30 மணிக்கு நாகமலை செல்வதற்காக ஓலா டேக்ஸி பதிவு செய்கிறேன் என வைத்துக்கொள்வோம். பதிவு செய்துவிட்டு முகம் கழுவ வேகமாக செல்கிறேன். கழுவிக்கொண்டிருக்கும்போதே, 'நாளை போகலாம்!' என மனம் சொல்கிறது. வேகமாக ஓடி வந்து ஈரக்கைகளுடன் ஃபோனில் பின் கோடு இட்டு, ஓலா ஆப்பைத் திறந்து 'கேன்சஸ் ரைட்' என கொடுக்கிறேன். உடனடியாக அது ஐந்து காரணங்களைப் பட்டியலிடுகிறது. அதில் இரண்டாவது காரணமாக 'ஐ சேன்ஜ்ட் மை மைன்ட் - நான் எனது மனதை மாற்றிக்கொண்டேன்' என்ற சொல்கிறது. அதற்கு நேர் புள்ளி வைத்து 'சப்மிட்' கொடுத்துவிட்டு முகம் துடைக்க டவல் தேடுகிறேன். 8:30க்கு நாகமாலை செல்ல வேண்டும் என நினைத்த மனம் 8:32க்கு மாறிவிடுகிறது. இது ஒரு வகையான மனமாற்றம்.

என் நண்பர் என்னிடம் கடன் வாங்குகிறார். ஐம்பதாயிரம் வாங்குகின்றார். 'எப்போது கொடுப்பார்?' என நான் காத்துக்கொண்டிருக்க, 'உன்னிடம் வாங்கிய பணத்தை அன்றே கொடுத்துவிட்டேன்' என்கிறார். பணமா? நட்பா? என்ற கேள்வியில், 'இனிமேல் இவருக்கு பணம் கொடுக்கக்கூடாது' என்றும், 'இனிமேல் இவரிடம் நட்பு பாராட்டக்கூடாது' என்றும் முடிவு செய்கிறேன். இவரின் அம்மாவுக்கு ஒருநாள் உடல்நலம் சரியில்லாமல் போய்விடுகிறது. அவசரமாக பணம் தேவைப்படுகிறது. அவர் கேட்காமலேயே நான் போய் பண உதவி செய்து, 'உன்னிடம் பணம் இருக்கும் போது கொடு' என்று சொல்லிவிட்டுவருகின்றேன். இது இன்னொரு வகையான மனமாற்றம்.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் முதல் வாசகத்தில், 'இனி உலகை அழிக்கமாட்டேன்' என கடவுள் மனம் மாறுகிறார். நற்செய்தி வாசகத்தில் 'மனம் மாறுங்கள்' என்று இயேசு அழைப்பு விடுக்கின்றார். மேற்காணும் இரண்டு மனம் மாற்றங்கள்போல்தான் இந்த மனம் மாற்றமா? அல்லது இதன் பொருள் வேறா?

மனம் மாறுதல் என்பது ஒரு பெரிய போராட்டத்தின் கனியாக இருப்பதை முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் குறிப்பிடுகின்றன. 'மனம் மாற்றம்' என்பது விவிலியத்தைப் பொறுத்தமட்டில் மனத்தை இறைவனை நோக்கி மாற்றுவது. அதாவது, சாலையில் செய்யும் பயணம்போல. இலக்கினை உறுதியாக வைத்துக்கொண்டு அதை நோக்கி பயணம் செய்வது.

இந்தப் புரிதலை இன்றைய வாசகங்களுக்கான விளக்கத்தின் பின்புலத்தில் பார்ப்போம்:

முதல் வாசகம்: தொடக்கநூல் 9:8-15

பெருவெள்ளத்திற்குப் பின் நோவோவுடன் கடவுள் பேசும் வார்த்தைகளே இன்றைய முதல் வாசகம். வாசகத்தின் மையப் பொருள் உடன்படிக்கை. உடன்படிக்கை என்ற சொல்லாடல் ஒரு அசீரியக் கலாச்சாரத் தாக்கம். ஒரு நாட்டை அல்லது ஊரை வெற்றிகொள்கின்ற அரசன் அந்த ஊர் மக்களோடு செய்து கொள்ளும் உறவு நிலைக்குப் பெயர்தான் உடன்படிக்கை. உடன்படிக்கையில் இருவர் இருப்பர்: ஒன்று செய்பவர், மற்றொன்று செய்யப்படுபவர். இதில் உடன்படிக்கை செய்பவர் எப்போதும் தலைமை நிலையிலும், செய்யப்படுபவர் பணியாளர் நிலையிலும் இருப்பர். மேலும், உடன்படிக்கை செய்யும் தலைவர், உடன்படிக்கை செய்யப்படும் தனக்குக் கீழிருப்பவருக்கு பாதுகாப்பை வாக்குறுதியாகத் தருகின்றார். அதே போல கீழிருப்பவர் மேலிருப்பவர் சொல்வதையெல்லாம் கேட்டு நடப்பதாக வாக்குறுதி தருகின்றார். இந்த இருவரும் தங்கள் உடன்படிக்கையின் நினைவாக கல்தூண், மரம் போன்றவற்றை அடையாளமாக ஏற்படுத்திக் கொள்வர். இந்தப் பின்புலத்தோடு இன்றைய முதல்வாசகத்தைப் பார்த்தால் அர்த்தம் தெளிவாகிறது: (அ) பெருவெள்ளத்திலிருந்து நோவாவின் குடும்பத்தைக் காப்பற்றியதன் வழியாக நோவாவை வெற்றி கொள்கின்றார் இறைவன் (9:8). (ஆ) உடன்படிக்கை செய்பவர் - கடவுள். செய்யப்படுபவர் - நோவா, அவரது சந்ததியினர் மற்றும் எல்லாரோடும் (9:9-10). (இ) உடன்படிக்கையின் மையப்பொருள் - இனி உயிர்கள் மீண்டும் அழிக்கப்படாது, மண்ணுலகில் அழிக்கும் வெள்ளப்பெருக்கு மீண்டும் வராது (9:11) (ஈ) உடன்படிக்கையின் அடையாளம் - வானவில் (9:12). 9:13-15ல் கடவுள் தான் 8-12ல் சொன்னதையே திரும்பவும் சொல்கின்றார். கடவுளின் இந்த செயல்பாடு 'உன்னுடனோ என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்' (6:18) என்று அவர் முன் சொன்ன வார்த்தைகளின் நிறைவாக இருக்கின்றது.

வானவில் - இது ஒரு இயற்கை நிகழ்வு. மழைபொழிந்த ஈரக் காற்றுவெளியில் சூரியனின் கதிர்கள் படுவதால் ஏற்படும் ஒளிப்பிறழ்வே வானவில். இந்த இயற்கை நிகழ்வை எடுத்து அதற்கு ஆன்மீகப்பொருள் தருகின்றார் ஆசிரியர். இயற்கையின் நிகழ்வுகள் கடவுளின் செயல்பாடுகளாகச் சித்தரிக்கப்படுவதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன (காண். எரே 31:35-36, 33:19-26). 'வில'; கடவுளைச் சுட்டிக்காட்டும் அடையாளமாக விப 12:13லும் உள்ளது. பழைய ஏற்பாட்டு காலத்தில் வானவில் கடவுளின் ஆயுதமாகவும் கருதப்பட்டது (திபா 7:12-13, 18:14, 144:6, புலம்பல் 2:4, 3:12, எபி 3:9-11). உடைந்த வில் சமாதானத்தின் அடையாளமாகவும் இருக்கிறது (திபா 46:9). ஆக, இனி மனுக்குலத்திற்காக கடவுள் தாமே போரிடுவார் எனவும், இதனால் கடவுளின் வல்லமையை அவரது சொந்த மக்கள் உணர்ந்து கொள்வார்கள் எனவும், இனி மனுக்குலம்; கடவுளின் கைகளில் அமைதியாக ஓய்வெடுக்கலாம் எனவும் குறித்துக்காட்டுகிறது இந்த உருவகம்.

நினைவுகூர்வது - 'நான் இந்த வானவில்லைப் பார்க்கும் போதெல்லாம் நினைவுகூர்வேன்!' என்கிறார் கடவுள். அப்படியென்றால் அதைப் பார்க்காதபோது கடவுள் மனுக்குலத்தை மறந்துவிடுவாரா? இல்லை. இந்த வானவில் கடவுள் நம்மை நினைவுகூர்வதை நமக்குக் காட்டும் ஒரு அடையாளம். ஆக, யார் கண்ணுக்கும் எளிதாய்த் தெரிகின்ற ஒரு அடையாளம் என்பதால் இது கடவுள் நம்மை நினைவுகூர்கிறார் என்பதை நமக்கு நினைவூட்டுவதாகவும் இருக்கிறது.

நான் அழிப்பதில்லை - கடவுள் தரும் வாக்குறுதி இதுதான். 'கொல்பவரும் நானே, உயிரளிப்பவரும் நானே! காயப்படுத்துபவரும் நானே! குணமாக்குபவரும் நானே!' (இச 32:39) என்று சொல்லும் இறைவன் தன்னை வாழ்வின் காரணியாக மட்டும் இங்கே காட்டுகின்றார்.

ஆக, கடவுள் நமக்கு வாழ்வின் காரணியாக இருக்கிறார் என்றால், அந்த உடன்படிக்கையின் பங்கேற்பாளராக இருக்கும் நாம் சாவின் காரணிகளுக்குத் துணைபோகலாமா?

இரண்டாம் வாசகம்: 1 பேதுரு 3:18-22

இந்த இரண்டாம் வாசகத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் அதன் முன்னும், பின்னும் உள்ள வசனங்களையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். 'நீதியின் பொருட்டுத் துன்புறுதல்' (3:8-22) என்ற தலைப்பில் தன் திருஅவைக்கு எழுதும் பேதுரு நம் துன்புறுதலைப் பற்றி எழுதிவிட்டு, நம் துன்பங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இயேசு அடைந்த துன்பங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என இயேசுவை மாதிரியாக வைப்பதோடு மட்டுமல்லாமல், இயேசுவை வானதூதர்க்கும் மேலாக உயர்த்திக் காட்டுகின்றார். ஒருபக்கம் துன்புறுதல் பற்றிப் பேசும் பேதுரு திடீரென நோவாவின் தண்ணீரைப் பற்றிப் பேசும் போது கிறிஸ்தவர்களின் திருமுழுக்கிற்கு (3:21) முடிச்சுப் போடுவது நம் புரிதலை இன்னும் கடினமாக்குகிறது.

இந்த வாசகத்தில் உள்ள இரண்டு கருத்தியல் பிரச்சனைகளை மட்டும் பார்ப்போம்:

அ. இயேசு காவலில் இருந்த ஆவிகளிடம் போய் நற்செய்தியை அறிவித்தார் (3:19). இயேசு ஆவிகளுக்குப் போதித்ததாக எழுதுகிறார் பேதுரு. இந்த ஆவிகள் யார்? இவர்கள் நோவாவிற்கு முன் வாழ்ந்தவர்களாக இருக்கலாம், அல்லது நோவாவின் காலத்தில் வாழ்ந்த தீயவர்களாக இருக்கலாம் அல்லது தொநூ 6:2-4ல் சொல்லப்படும் தெய்வப்புதல்வர்கள் அல்லது அரக்கர்களாக இருக்கலாம். இப்படி இயேசு போதித்தார் என்று சொல்வது இயேசு இவர்களுக்கும் முற்காலத்தில் இருந்தார் என்று இயேசுவின் இருப்பை படைப்பின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்கிறது. இந்த ஆவிகளிடம் அவர் என்ன போதித்திருப்பார்? இன்று நாம் நம் சக மனிதர்களுக்குப் போதிப்பதே பெரும்பாடாக இருக்க, ஆவிகளிடம் போதிப்பது எவ்வளவு கடினமாக இருக்கும்? ஆனால், இயேசு பாலைநிலத்தில் ஆவியால் சோதிக்கப்பட்ட நிகழ்வை அருகில் வைத்துப் பார்த்தால் அலகையோடு இயேசு பேசும் சொற்கள் கடவுள் பற்றிய போதனையாகவே இருக்கிறது.

ஆ. நோவா காலத்துப் பெருவெள்ளம் மற்றும் திருமுழுக்குத் தண்ணீர். நோவாவின் குடும்பம் தண்ணீரிலிருந்து காப்பாற்றப்படுகிறது. திருமுழுக்குப் பெறும் கிறிஸ்தவர் தண்ணீரின் வழியாக மீட்பைப் பெறுகின்றார். ஆக, தண்ணீரிலிருந்து, தண்ணீர் வழியாக என்று நாம் பிரித்துப் பார்க்க வேண்டும்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 1:12-15

மாற்கு 1:12-15 என்னும் இறைவாக்குப் பகுதியை 12-13, 14-15 என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். 12-13ல் இயேசு சோதிக்கப்படுகின்றார் (காண் மத் 4:1-11, லூக் 4:1-13). 14-15ல் கலிலேயாவில் இயேசு தன் பணியைத் தொடங்குகின்றார் (காண் மத் 4:12-17. லூக் 4:14-15).

முதல் பிரிவிலிருந்து தொடங்குவோம் (12-13):

இயேசு சோதிக்கப்படும் நிகழ்வு ஒத்தமைவு நற்செய்திகள் என்று சொல்லப்படும் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா நற்செய்திகளில் மட்டும் தான் உள்ளன. இயேசுவின் வாழ்வில் இது உண்மையாகவே நடந்ததென்றால் அவருடைய அன்புச் சீடர் யோவான் மட்டும் ஏன் இந்த நிகழ்வு குறித்து மௌனம் காக்கின்றார். இது ஒரு வரலாற்று நிகழ்வா? அல்லது இறையியல் நிகழ்வா? இது ஒரு இறையியல் நிகழ்வே.

இது இறையியல் நிகழ்வு என்பதற்கு காரணங்கள் இரண்டு:

அ. விவிலிய இலக்கியத்தில் கடவுளால் தேர்ந்தெடுக்கும் நபர் 'சோதிக்கப்படுதல்' என்பது ஒரு எழுத்தியல் நடை - காண். ஆபிரகாம் (தொநூ 22), சிம்சோன் (நீத 13-16). இவர்களைப் போலவே கடவுளின் மகனாகிய இயேசுவும் சோதிக்கப்பட வேண்டும்!

ஆ. பழைய இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குச் செல்லும் வழியில் 40 ஆண்டுகள் கடவுளால் பாலைவனத்தில் சோதிக்கப்படுகின்றனர். புதிய இஸ்ரயேலின் தலைமகனாய் இருக்கும் இயேசுவும் 40 நாட்கள் பாலைவனத்தில் சோதிக்கப்படுகின்றார்.

12-13 என்ற இறைவாக்குகளை இன்னும் இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

அ. பாலைநிலத்தில் இயேசு நாற்பது நாள் இருந்தார். அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்.

ஆ. அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.

பாலை நிலம் - காட்டு விலங்கு, சாத்தான் - வானதூதர் என்று சோதிக்கப்படுதலை இரட்டைப்படையில் எழுதுவது மாற்கு நற்செய்தியாளரின் எழுத்துக் கலை.

அ. பாலைநிலம் உடனடியாக நமக்கு பழைய ஏற்பாட்டு இஸ்ராயேல் மக்களை நினைவுபடுத்துகின்றது.

ஆ. காட்டு விலங்குகளிடையே இருக்கும் இயேசு பழைய ஆதாமை நமக்கு நினைவுபடுத்துகின்றார் (காண் தொநூ 2:19). ஆதாம் இறந்தபின் அவனது உடலை வானதூதர்கள் எடுத்துச் சென்றதாக யூத ரபிகள் போதிப்பது வழக்கம். ஆக, காட்டு விலங்குகள் மற்றும் வானதூதர்கள் பழைய ஆதாமைச் சுற்றி இருந்தது போல, புதிய ஏற்பாட்டு ஆதாமாகிய இயேசுவைச் சுற்றியும் இருக்கின்றனர். மேலும் பாலைநிலங்கள் மெசியாவின் வருகையினால் உயிரினங்கள் அமைதியாகக் கூடிவாழும் இடமாக மாறும் எசாயாவின் இறைவாக்கும் இங்கே நிறைவுபெறுகிறது (காண் எசா 11:6-9, 32:14-20, 65:25).

மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் இயேசுவிற்கும், சாத்தானுக்கும் இடையே நடக்கும் போரட்டத்தை வர்ணிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் மாற்கு அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றார். ஏனெனில் மாற்கு நற்செய்தியாளரைப் பொறுத்தவரையில் இயேசுவின் பணித்தொடக்கத்திலேயே சாத்தான் அமைதியாக்கப்படுகின்றான் (காண் 1:21-27).

இரண்டாம் பிரிவு (14-15):

இதிலும் இரட்டைத்தன்மையைக் காணலாம்:

அ. காலம் நிறைவேறி விட்டது. இறையரசு நெருங்கி வந்துவிட்டது.

ஆ. மனம் மாறுங்கள். நற்செய்தியை நம்புங்கள்.

இவற்றில் 'அ' வெறும் கருத்து வாக்கியமாகவும், 'ஆ' கட்டளை வாக்கியமாகவும் இருக்கிறது.

'காலம்' என்பதற்கு 'க்ரோனோஸ்' மற்றும் 'கைரோஸ்' என்னும் இரண்டு கிரேக்க வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. 'க்ரோனோஸ்' என்றால் வரலாற்று நேரம் - எகா. பிப்ரவரி 17 மாலை 5:50 மணி. 'கைரோஸ்' என்பது மீட்பு நேரம் - அதாவது கடவுள் வரலாற்றில் செயலாற்றும் நேரம். இங்கே இயேசு குறிப்பிடும் காலம் இரண்டாம் வகை.

இறையரசு - இறையரசு என்றால் என்ன? பழைய ஏற்பாட்டில் கடவுள் தாமே மக்கள் மேல் அரசாள்வார் என்பது ஆழமான நம்பிக்கையாக இருந்தது (காண் 1 குறி 28:5, 2 குறி 13:8, சாஞா 10:10, 2 சாமு 7:12-26, திபா 132:11). இந்த இறையரசு ஒரு அரசியல் நிகழ்வோ, இடம்சார்ந்த ஆட்சியோ அல்ல. இது ஒரு ஆன்மீக அனுபவம். 'நான் கடவுளின் மகள் அல்லது மகன்' என்று உணரும் ஒவ்வொருவருக்குள்ளும் தொடங்கும் ஒரு உள்ளொளிப் பயணம். இந்தப் பயணத்தின் நிறைவில் நமக்கு அருகில் இருப்பவர் எந்த நிறத்தை, மொழியை, மதத்தை, நாட்டை, இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் நம் சகோதரன், சகோதரியாகத் தெரிய ஆரம்பிக்கின்றார். பரந்த மனப்பான்மை, சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் என்னும் மதிப்பீடுகளில் இறையரசின் பிம்பங்கள் தெரியும்.

மனம் மாறுங்கள் - 'மெட்டாநோயா' எனப்படும் கிரேக்கச் சொல்லுக்கு ஆங்கிலத்தின் 'யு' டர்ன் எடுத்தல் என்பது பொருள். கடவுளை விட்டு நம் முகம் திரும்பியிருந்தால், அவரை நோக்கி மீண்டும் திரும்புதல் மனம் மாறுவது.

நற்செய்தியை நம்புங்கள் - இந்த நற்செய்தி வெறும் வார்த்தை அல்ல. மாறாக, இயேசுவே (காண். மாற்கு 1:1).

வார்த்தையிலிருந்து வாழ்க்கைக்கு:

அ. பழைய ஏற்பாட்டில் நோவாவோடு உடன்படிக்கை செய்வதன் வழியாக தன் உடனிருப்பை காலங்காலமாக மனுக்குலத்திற்கு வாக்களிக்கும் இறைவன் புதிய ஏற்பாட்டு இயேசுவில் அதை முழுமையாக்குகின்றார். கடவுளின் காணக்கூடிய முகமாக வரும் இயேசு வாழ்வில் நம்மைப்போல பாலைநிலங்களைக் கடந்து சென்றாலும் நம்மோடு ஒன்றிணைந்து நிற்கின்றார்.

ஆ. வானதூதரும், சாத்தானும் நம் வாழ்வின் இரு பக்கங்கள். 'கடவுள் பாதி - மிருகம் பாதி' என்று நாம் நமக்குள் பிளவுபட்டு நிற்கின்றோம். மற்றொரு பக்கம் இன்பமும், துன்பமும் நம் வாழ்வில் மாறி மாறி வந்தாலும் நம் மனம் அவற்றை எப்படி எடுத்துக்கொள்கின்றது. இன்பத்தால் ஏமாற்றப்படவும் வேண்டாம், துன்பத்தால் கலக்கமடையவும் வேண்டாம்.

இ. நாம் பெற்ற திருமுழுக்கு கிறிஸ்தவர் என்ற அடையாளத்தை மட்டும் நமக்குத் தருவதில்லை. மாறாக, மனம் மாறும் கடமையையும் நம்மேல் சுமத்துகிறது. மனமாற்றம் பெற்ற நாம் ஆவிகளுக்குப் போதிக்கும் அளவிற்குப் போகவில்லையென்றாலும், அன்றாடம் நாம் சந்திக்கும் சக உயிர்களுக்கு நம் புன்சிரிப்பையும், இனிமையான வார்த்தையையும் போதனையாக முன்வைக்கலாமே!

இறுதியாக, மனம் மாறும் கடவுள், மனம் மாற்றத்திற்கு நம்மை அழைக்கின்றார். இன்று என் மனம் எதை நோக்கி இருக்கிறது என்பதைப் பொறுத்தே என் வாழ்க்கை பயணம் இருக்கிறது. நோக்கம் சரியாக இல்லாதபோது, பாதையைவிட பாதையின் ஓரத்திலிருக்கும் பூக்கள்தாம் கவர்ச்சியாக இருக்கும். பூக்கள் இல்லாத பாலைவனங்களும், நம் வாழ்வின் காய்ந்த பொழுதுகளும்கூட மனமாற்றத்தின் ஊற்றாக இருக்க முடியும்.




No comments:

Post a Comment