Monday, 20 August 2018

ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்


யோசுவா 24:1-2, 15-18
எபேசியர். 5:21-32
யோவான். 6:60-69



நற்கருணை

அன்பார்ந்த சகோதரனே! சகோதரியே! ஆண்டவர் இயேசு படிப்படியாகத் தம் சீடர்களைத் தயாரித்து ஒரு மாபெரும் உண்மையை, உண்மை மசோதாவாக அறிவிக்கப் போகிறார். மக்களவையில் ஆளும் கட்சியினர் ஒரு மசோதாவைக் கொண்டு வரும்போது அதை எதிர்கட்சியினர் எதிர்த்து வெளிநடப்பு செய்வதை நாம் அன்றாடம் வாசிக்கிறோம், T.V-யில் பார்க்கிறோம். அதேபோல் மசோதாவை அறிவித்து, அறிமுகம் செய்தபோது யூத மக்கள் எதிர்த்தார்கள். இது மித மிஞ்சிய பேச்சு என்று முணுமுணுத்து வெளி நடப்புச் செய்தார்கள். இயேசுவை விட்டுப் பிரிந்த சீடர்கள் அவரிடம் மீண்டும் வரவில்லை (யோவா. 6:66)

அருமையான சகோதரனே! சகோதரியே! தீர்மானம் எடுப்பது என்பது வாழ்க்கையில் இன்றியமையாதது. வாழ்க்கைக்கு வடிவம் கொடுக்கிறது. வாழ்க்கையையே அமைத்துக் கொடுக்கிறது. ஆனால் சமூகத்தில் பலர் தீர்மானம், அல்லது முடிவு எடுக்கத் தடுமாறுகிறார்கள். தெளிவின்றி வாழ்வை இழந்து வாடுகிறார்கள். ஆனால் தீர்மானம் எடுக்கும்போது நிறைவான, மகிழ்வான, உயரிய , உண்மைக்கு இட்டுச் செல்வதில் தீர்மானம் எடுக்க வேண்டும்.

இயேசுவைப் பாருங்கள்!
தன் சீடருள் பலர் தம்மை விட்டுப் பிரிந்து செல்வதைக் கண்டு இயேசு சிறிதும் தயங்கவில்லை . தன் முடிவையும் மாற்றிக் கொள்ளவில்லை. மாறாகத் தன் பன்னிரு சீடர்களைப் பார்த்து நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? (யோவா. 6:67) என்று கேட்கிறார் இயேசு. ஏனெனில் உண்மை ஒருபோதும் மறையாது. உண்மை உறங்குவதில்லை. இயேசு இந்த நற்கருணை மசோதாவைக் கொண்டு வந்தபோது பெரும்பான்மையோரின் வாக்கெடுப்புக்கு விடவில்லை. எதிர்ப்புக்கு மத்தியிலும் நிறைவேற்றினார்.

சீடர்கள் தீர்மானம் எடுப்பதில் முதலில் தயக்கம் காட்டினாலும், பேதுரு சீடர்கள் சார்பாக முடிவு எடுக்கிறார். ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம். வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன (யோவா. 6:68) என்று நம்பிக்கையின் தீர்மானத்தை வெளிப்படுத்துகிறார்.
ஆனால் கூடியிருந்த கூட்டம் எடுத்த தீர்மானம் வாழ்வை இழக்கும் தீர்மானமாக, உண்மையை மறுக்கும் தீர்மானமாக, தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் தீர்மானமாக அமைகிறது.

இன்றைய முதல் வாசகமும் மூன்றாம் வாசகமும் நமது வாழ்வில் சரியான தீர்மானங்கள் எடுக்க அழைப்பு விடுக்கின்றன.
கடந்த 2000 ஆண்டுகளாக எத்தனையோ பேர் நற்கருணை மறைபொருளை எதிர்த்து வந்தாலும், அதைத் திரித்துக் கூறினாலும், இன்றும் நற்கருணை மறைபொருளானது மங்காது, மறையாது, குன்றாது, குறையாது திருச்சபையின் வாழ்வு முழுவதற்கும் ஊற்றாக, சிகரமாக உள்ளது. யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். இறுதி உணவின் போது அவனுக்குள் அலகை நுழைந்தது. நற்கருணையில் பங்கேற்காமல் அவனை இருளில் அழைத்துச் சென்றது அலகை.

யூதாஸ் நமக்கெல்லாம் எச்சரிக்கை!
இன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் சிலர் நற்கருணையை விட்டு விலகி பிரிவினை சபைக்கு ஓடுகிறார்கள். ஒரு பெண்ணைப் பார்த்து நீங்கள் எங்கள் சபைக்கு வாருங்கள். உங்கள் தீரா நோயை எடுத்துவிடுவோம் என்று பிரிந்த சபையினர் அழைத்தனர். நற்கருணை ஆண்டவர் என்னைக் குணப்படுத்துவார். வேறு எந்தச் சபைக்கும் நான் போகத் தயாராக இல்லை என்று உறுதிபடக் கூறினார் அந்தப் பெண். சுண்டல் கொடுக்கின்ற கோவில்களுக்கெல்லாம் ஓடும் சிறுபிள்ளைபோல, புற்றீசல் போல் பெருகி வரும் பிரிவினைச் சபைக்கு ஓடும் நிலையை நாம் கைவிட வேண்டும். ஓடியவர்களை நாம் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நாம் வாழ்வு பெறுவோம்.

மலைகள் நிலை பெயரலாம். குன்றுகள் அசையலாம். என் அன்போ என்றுமே மாறாது. உன் மீது முடிவில்லா அன்பு கொண்டுள்ளேன் (எசா. 54:10). உன்னோடு முடிவில்லா உடன்படிக்கை செய்வேன் (எசா. 55:3-4).








இறைவார்த்தை வழியில்

 ஒரு பங்குப் பணியாளர் ஞாயிறு மறையுரையின் போது, ஒரு மருந்து பாட்டிலெ மக்களுக்குக் காட்டி, இது என்ன? என்று கேட்டார். அதற்கு பங்கு மக்கள், மருந்துப் பாட்டில் என்றார்கள். இதன் மீது என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பது தெரிகின்றதா? என்றார். மக்களோ, தெரியவில்லை, நீங்களே படித்துச் சொல்லுங்கள் என்றனர். பங்கு பணியாளர் படித்தார். காலையில் ஒரு ஸ்பூன், மதியம் ஒரு ஸ்பூன், இரவு ஒரு ஸ்பூன் சாப்பிடும்படி சொல்லப்பட்டிருக்கின்றது என்றார்.

இவ்வாறு சொல்லிவிட்டு மக்களைப் பார்த்து, இந்த மருந்துப் பாட்டிலை உங்கள் கையில் கொடுத்து, இதில் எழுதியுள்ளபடி குடியுங்கள் என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார். அதற்கு மக்கள், அதில் எழுதியுள்ளபடி செய்வோம் என்றார்கள்.

அப்போது பங்குப்பணியாளர் மக்களைப் பார்த்து, ஒரு டாக்டர் சொல்வதை நம்புகின்றீர்கள் ? கடவுள் சொல்வதை, இறைவார்த்தையை நம்ப ஏன் தயங்குகின்றீர்கள்? என்றார். அன்றிலிருந்து அந்தப் பங்கில் பெரும் ஆன்மிக மாற்றங்கள் துளிர்விடத் துவங்கின.

நமக்கு வாழ்வளிக்கும் ஆற்றல் இறைவார்த்தைக்கு உண்டு (நற்செய்தி). கடவுளின் வார்த்தை நேர்மையானது (திபா 33:4). கடவுளின் வார்த்தைக்குக் குணமளிக்கும் ஆற்றல் உள்ளது (திபா 107:20). கடவுளின் வார்த்தை நமது காலடிக்கு விளக்கு (திபா 119:105). கடவுளின் வார்த்தை வல்லமை மிக்கது (எசா 55:10-11). கடவுளின் வார்த்தை என்றும் அழியாதது (மத் 24:35). கடவுளின் வார்த்தை நம்மை தூய்மைப்படுத்துகின்றது (இரண்டாம் வாசகம்).

நம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் இறைவனிடமிருந்து பெற்றுத் தரும் சக்தி இறைவார்த்தைக்கு உண்டு! இதை மனத்தில் கொண்டு, நான் ஆண்டவரின் அடிமை ; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக் 1:38) என்ற அன்னை மரியாவின் முன்மாதிரியைப்
பின்பற்றி, இறைவார்த்தையை நம்பி அதை நம் வாழ்வின் மையமாக்கி வளமுடன் வாழ்வோம்.

மேலும் அறிவோம் :


கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் (குறள் : 643)

.
பொருள் : சொல்லாற்றல் என்று சான்றோரால் பாராட்டப்படுவது கேட்ட வரைக் கவரத்தக்கதாகவும் கேளாதவரைக் கேட்க விரும்பச் செய்வதாகவும் விளங்குவதாகும்!




மக்களவையில் ஆளும் கட்சியினர் ஒரு மசோதாவைக் கொண்டுவரும்போது அதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் வெளி நடப்புச் செய்கின்றனர். அவ்வாறே கிறிஸ்து நற்கருணை மசோதாவை, நம்பிக்கைக் கோட்பாட்டை யூதர்களுக்கு அறிமுகம் செய்தபோது, அதை எதிர்த்து மக்கள், "இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா?" (யோவா 6:60) என்று கூறிவிட்டு வெளிநடப்புச் செய்தனர். அவ்வாறு இயேசுவை விட்டுப் பிரிந்த சீடர்கள் அவரிடம் மீண்டும் திரும்பி வரவில்லை (யோவா 6:66).
தம் சீடருள் பலர் தம்மை விட்டுப் பிரிந்து செல்வதைக் கண்ட இயேசு சிறிதும் கலங்கவில்லை . மாறாக, தம்முடன் இருந்த பன்னிருவரிடம், "நீங்களும் போய்விட நினைக்கிறார்களா?* (யோவா 6:67) என்றுதான் கேட்டார்,

உண்மை ஒருபோதும் பின்வாங்காது; சுடச்சுட ஒளிரும் பொன்னைப் போன்று எதிர்க்க எதிர்க்க மிளிரும் தன்மை உடையதுதான் உண்மை, "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே: இச்செகத் துள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று எத்தகையச் சவாலையும் எதிர்த்து நிமிர்ந்து நிற்பதுதான் உண்மை.

வழியும் வாழ்வும், உண்மையும் உயிருமான கிறிஸ்து நற்கருணை மசோதாவை பெரும்பான்மையோரின் வாக்கெடுப்பிற்கு விடவில்லை. மாறாக, பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதை நிறைவேற்றினார், கடந்த 2000 ஆண்டளவாக எத்தனையோ பேர் நற்கருணை மறைபொருளை எதிர்த்து வந்தாலும், அதைப்பற்றித் திரித்துக் கூறினாலும், இன்றும் நற்கருணை மறைபொருளானது மங்காது மறையாது. குன்றாது குறையாது, திருச்சபை வாழ்வு முழுவதற்கும் ஊற்றாகவும் சிகரமாகவும் உள்ளது.

நற்கருணை மறை உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மனித அறிவு கை கொடுக்காது, அதற்குத் தேவையானது வானகத் தந்தையின் அருள், எனவேதான் இன்றைய நற்செய்தியில் இயேசு, "என் தந்தை அருன் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது"(யோவா 6:65) என்று கூறி, தமது நீண்ட உரைக்கு முத்திரை வைக்கிறார்.

இயேசு கிறிஸ்து 'ஆமென் என்ற பெயர் கொண்டவர்; நம்பிக்கைக்குரிய உண்மையான சாட்சியானவர் {திவெ 3:14}; ஒரே நேரத்தில் அவர் 'ஆம்' என்றும் 'இல்லை ' என்றும் பேசாமல், 'ஆம்' என்று உண்மையையே பேசுபவர் (2 கொரி 1:19). அவர் நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் (எபி 13:8). உண்மையும் நம்பிக்கையும் உடைய அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதும் உண்மையும் நம்பிக்கையும் பற்றுறுதியுமாகும்.

கடவுளிடம் நாம் எவ்வாறு பற்றுறுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு இன்றைய முதல் வாசகத்தில் யோசுவாவும், நற்செய்தியில் பேதுருவும் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகத் திகழ்கின்றனர்.

இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளுக்கு ஊழியம் புரிந்தாலும் பிற இனத்தெய்வங்களையும் வழிபட்டு, இருமனத்தோராய் திகழ்ந்தனர். இந்நிலையில் யோசுவா அம்மக்களிடம், "நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்" (யோசு 24:15) என்று திட்டவட்டமாகக் கூறினார். அவ்வாறே, எல்லாரும் இயேசுவை விட்டுச் சென்ற கட்டத்திலும் பேதுரு இயேசுவிடம், "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" (யோவா 6:67) என்று திண்ணமாக அறிக்கையிடுகிறார். ஒருவருக்குக் கேடுகாலம் வருவதும் ஒருவிதத்தில் நல்லது; ஏனெனில் அப்போதுதான் அவருடைய உண்மையான நண்பர்கள் யார் என்பதை இனம் காண முடியும் என்கிறார் வள்ளுவர்,
கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைரை
நீட்டி அளப்பதோர் கோல் (குறள் 796)

குளத்தில் தண்ணீர் இருக்கும்போதுதான் அதில் கொக்கும் மீனும் இருக்கும். தண்ணீர் வற்றி வறண்டு விட்டால் பறவைகள் வேறிடத்திற்குப் பறந்து போய்விடும். மாறாக, அக்குளத்திலுள்ள செடிகொடிகன் அக்குளத்திலேயே இருந்து அதிலேயே மாண்டுவிடும். இன்பத்தில் நட்புரிமை கொண்டாடி துன்பத்தில் காலை வாரிவிடுபவர்கள் நண்பர்கள் அல்ல, நயவஞ்சகர்கன்.
ஓர் உண்மைக் காதலன் தன் காதலியிடம், 'நீ மாலையானால் நான் அதில் மலேராவேன். நீ பாலையானால் நான் அதில் மணலாவேன்" என்கிறான். இன்றைய இரண்டாம் வாசகத்தில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள உறவு கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையேயுள்ள பிரிக்க முடியாத உறவு என்பதை விளக்குகிறார் புனித பவுல். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் வெட்டிப் பிரித்தாலும் விட்டுப் பிரியாமல் இருப்பவர்களே உண்மையான தம்பதியர். அவ்வாறே இயேசுவுக்கும் அவருடைய அன்பின் அருள் அடையாளமாகிய நற்கருணைக்கும் நாம் என்றும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான், அவனுக்கு இயேசுவின் மீதோ நற்கருணை மீதோ உண்மையான பற்றுறுதி இல்லை. நற்கருனை பற்றி இயேசு கொடுத்த விளக்கத்தின் இறுதியில் அவர் யூதாசை "அலகை" என்று அழைத்தார் (யோவா 6:70). இயேசுவின் இறுதி உணவின்போது அவனுக்குள் அலகை நுழைந்தது. நற்கருணையில் பங்கேற்காமல் அலகை அவனை இருளில் அழைத்துச் சென்றது (யோவா 13:27-30).

யூதாசு நமக்கெல்லாம் ஓர் எச்சரிக்கை இன்றும் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களில் சிலர் நற்கருணையை விட்டு விலகிப் பிரிவினை சபைகளுக்குச் செல்கின்றனர், அவர்கள் மீண்டும் நற்கருணையிடம் திரும்பி வருவது அரிது.

ஒரு பெண்மணியிடம் பிரிவினை சபையினர், "நீங்கள் எங்கள் சபைக்கு வாருங்கள். உங்களின் தீராத நோயை எடுத்துவிடுகிறோம்" என்று அழைத்தனர். அப்பெண்மணியோ, "நற்கருணை ஆண்டவர் என்னைக் குணப்படுத்தாவிட்டால், வேறு எந்த சபைக்கும் போக நான் தயாராக இல்லை " என்று உறுதிபடக் கூறினார், சுண்டல் கொடுக்கிற கோவில்களுக்கெல்லாம் ஒடும் சிறு பிள்ளைகளைப்போல், இங்கும் அங்குமாகப் புற்றீசல்போல் பலுகிவரும் பிரிவினை சபைகளுக்கு ஓடும் இழிநிலையைக் கைவிட வேண்டும். அல்கையின் வஞ்சக வலையில் வீழ்ந்து நம் ஆன்மாவை இழக்கக் கூடாது.

எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்களுக்கு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்து, தம்மை அவர்களுக்கு அடையாளம் காட்டிய உயிர்த்த ஆண்டவர். அவர்கள் கண்கள் திறந்தவுடன் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார், ஏன்? இனிமேல் இயேசுவின் இரண்டாம் வருகைவரை, அவரை நாம் அப்பம் பிடுவதில், அதாவது நற்கருணைக் கொண்டாட்டத்தில் காண வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாகும். இயேசுவின் விருப்பத்தை ஏற்காதவர்கள் இயேசுவின் சீடர்கள் அல்ல. அவர்கள் யாரோ? யான் அறியேன் பராபரமே!





இப்போது முடிவு செய்யுங்கள்!

காலையில் எழுந்து குளித்துவிட்டு துணி அலமாரியின் முன் நின்று கொண்டு, 'இன்று எந்த ஆடை அணிவது?' என்று நாம் தலையைச் சொறிகிறோம். எல்லா ஆடைகளையும் வேகமாக அலசிப் பார்த்துவிட்டு, நேற்று அணிந்து இரவு கழற்றி அழுக்குக்கூடையில் போட்ட சட்டையை நோக்கியும் கண்களும் போகும். 'ச்சே, நேற்று போட்ட டிரசை இன்று போட்டிருக்கலாமோ!' என்ற எண்ணமும் தோன்றி மறையும். ஒருவழியாக, ஏதாவது ஒன்றை எடுத்துப் போடலாம் என்றால், ஒன்றும் மேட்ச் ஆகாமல் இருக்கும். சில நேரங்களில் நம் சாக்ஸூம், கைக்குட்டையும்தான் மேட்ச் ஆகிற மாதிரி நிலையில் ஆடை அணிய வேண்டியதிருக்கும். ஆடை அணிவதற்குத் தெரிவு செய்யவே இவ்வளவு நேரம் ஆகிறது என்றால், புதிய ஆடையை வாங்க எவ்வளவு நேரம் ஆகும்? ஏன் நாம் இவ்வளவு நேரம் எடுக்கிறோம்? அல்லது ஏன் நாம் ஆடையைத் தெரிவு செய்கிறோம்? கைக்கு வருவதை எடுத்து அணிந்துகொண்டு போய்விடலாமே? 'இந்த ஆடைதான் இன்று' என்ற முடிவு அன்றைய நாளின் நம் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், தன்மதிப்பையும் நிர்ணயிக்கிறது. ஆனால், என்னதான் அழகான ஆடை அணிந்து சென்றாலும், நாளின் இறுதியில், 'உவப்பன வெறுப்பாம், உடுத்தியது அழுக்காம்' என்று அந்த ஆடை அழுக்குக் கூடைக்குள்தான் போகும். ஒரு டிரஸ் அணிந்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு, பின் வீட்டை விட்டு வெளியே போகும்போது, 'இது நல்லா இல்ல. வேறு ஒன்று மாத்திக்குவோம்' என்று திரும்பவும் அலமாரியைத் திறந்த நாள்களும் நமக்கு இருந்திருக்கலாம். சில நேரங்களில், 'என்ன, இந்த டிரஸ்லயா வர்ற!' என்று யாராவது சொல்ல, அவர்களுக்காகவும் நாம் ஆடையை மாற்றியிருப்போம். இவ்வாறாக, 'நான் இன்று இந்த ஆடை அணியப் போகிறேன்' என்ற முடிவை எடுக்க, நான் நேரம் எடுக்கிறேன், மனம் குழம்புகிறேன், 'இதற்கு முன் இந்த ஆடை எப்போது அணிந்தேன், அன்று என்ன நடந்தது?' என ஆய்கிறேன், எடுக்கிறேன், அணிகிறேன், வெளியே வருகிறேன், சாப்பிடும்போதும் அது பற்றியே நினைக்கிறேன், மற்றவர்களின் கருத்தைக் கேட்கிறேன், மீண்டும் ஆடை மாற்றுகிறேன்.

நிற்க.

ஆடையைக் குறித்து நாம் எடுக்கும் முடிவு போல, நாம் அன்றாடம் முடிவுகளை எடுத்துக்கொண்டே இருக்கிறோம்: 'எந்த பேருந்தில் ஏறுவது?' 'அமர்வதா?' 'நிற்பதா?' 'எங்கு படிப்பது?' 'எந்த வேலை பார்ப்பது?' 'யாரை திருமணம் செய்வது?' 'குழந்தைகள் பெற்றுக்கொள்வதா, வேண்டாமா?' 'ஆம் என்றால், எத்தனை?' 'இல்லை என்றால், எப்போது?' 'அவர்களை எங்கே படிக்க வைப்பது?' 'எந்த மருத்துவரிடம் பல்லைக் காட்டுவது?' 'எந்த மெடிக்கலில் மருந்து வாங்குவது?' இப்படி நிறைய முடிவுகளை நாம் ஒருநாளில் எடுக்க வேண்டியிருக்கிறது. இந்த முடிவுகளை எடுக்க நம்மை உந்தித் தள்ளுவது நம் கட்டின்மை அல்லது சுதந்திரம். ஆனால், நாம் ஒரு முடிவை எடுக்கும்போது மற்ற முடிவுகளை நீக்கித்தான் ஆக வேண்டும். 'பேருந்தில் நிற்பதா? அமர்வதா?' என்று நான் எடுக்கும் முடிவில், 'அமர்வேன்' என்று முடிவு எடுத்தவுடன், 'நான் நிற்க முடியாது.' பாதி நிற்பதும், பாதி அமர்வதும் இயலாத நிலை. இவ்வாறாக, நான் எடுக்கும் ஒரு முடிவு மற்றதை என்னிடமிருந்து நீக்கிவிடுகிறது.

இம்மாதிரி சின்னச் சின்ன முடிவுகள் ஒருபக்கம். என் வாழ்வையே மாற்றிப்போடும் முடிவுகள் இன்னொரு பக்கம் இருக்கின்றன. 'திருமணம் செய்துகொள்வது,' 'வேலை பார்ப்பது,' 'சொத்து வாங்குவது' போன்ற முடிவுகள் நம் உறவு மற்றும் சமூக நிலையை மாற்றிப்போடவல்லவை. இவற்றை நாம் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று சொல்லிவிட முடியாது.

இப்படியாக, முடிவுகளின் விளைவு பெரிதாகப் பெரிதாக, அதை எடுப்பதற்கான வலியும், கலக்கமும் பெரிதாகிக்கொண்டே இருக்கின்றது. ஆகையால்தான் சில நேரங்களில் நாம் முடிவுகளைத் தள்ளிப் போடுகிறோம்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மை இருத்தியல் முடிவு எடுக்க அழைக்கிறது:

யோர்தான் நதிக்கரையில் நிற்கும் யோசுவா, அங்கே கூடியிருக்கும் மக்களைப் பார்த்து, 'நான் ஆண்டவர் பக்கம். நீங்கள் யார் பக்கம் என முடிவு செய்யுங்கள்' என அவர்களை அழைக்கிறார்.

திபேரியக் கடற்கரையில் நிற்கும் இயேசு, தன் சீடர்களில் பலர் தன்னைவிட்டுப் போய்விட, தன் திருத்தூதர்களிடம், 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? முடிவு செய்யுங்கள்' என அவர்களை அழைக்கிறார்.
இஸ்ரயேல் மக்கள் எடுக்கும் முடிவு கடவுளின் இயல்பை மாற்றுவதில்லை. திருத்தூதர்களின் முடிவு இயேசுவின் இயல்பை மாற்றுவதில்லை. ஆனால், இவர்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்தே இவர்களின் - இஸ்ரயேல் மக்கள், திருத்தூதர் - வாழ்வு அல்லது இயல்பு இருக்கும். ஆக, இது ஒரு முக்கியமான தருணம். 'இப்போ சரினு சொல்லிட்டு, அப்புறம் மாத்திக்கலாம்' என்ற ஆடை முடிவு அல்ல இது. ஒருவரின் இருத்தலைப் புரட்டிப்போடுகின்ற முடிவு.

இந்த முடிவு வாசகர்களாகிய நம்மிடம் அப்படியே திரும்புகிறது?

எப்படி?

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். யோசு 24:1-2,15-17,18) நம் சிந்தனையைத் தொடங்குவோம். யாவே இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு வாக்களித்த பாலும், தேனும் பொழியும் கானான் நாடு கைக்கெட்டிய தூரத்திற்கு வந்துவிட்டது. இப்போது மக்கள் அதில் நுழைவதற்கு முன் அவர்களை செக்கேமில் ஒன்றுகூட்டும் யோசுவா, இறைவனுக்கும், அவர்களுக்கும் இடையேயான உடன்படிக்கையைப் புதுப்பிக்கின்றார். யாவே இறைவன் அவர்களுக்கு செய்த அரும் பெரும் செயல்களை நினைவூட்டுகின்றார். உடன்படிக்கை மக்களுக்கு முன்வைக்கும் ஒரே கட்டளை என்னவென்றால், அவர்கள் மற்ற தெய்வங்களை விடுத்து யாவே இறைவனை மட்டும் பற்றிக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் இவர்களின் பதில் 'ஆம்' என இருந்தாலும், இந்த வார்த்தையில் அவர்கள் நிலைத்திருக்க முடியாமல் இறைவனின் கோபத்திற்கு ஆளாகிறார்கள் என்பது பிந்தைய வரலாறு.

'நீங்கள் உங்களிடையே இருக்கும் வேற்று தெய்வ வழிபாட்டை விட்டுவிடத்தயாரா?' என்று கேட்கும் யோசுவா, 'நானும், என் வீட்டாரும் ஆண்டவருக்கே பணிபுரிவோம்!' என மக்கள்முன் அறிக்கையிடுகின்றார். இங்கே 'பணிபுரிதல்' அல்லது 'ஊழியம் புரிதல்' (நவாத்) என்ற வார்த்தைக்கு 'வழிபடுவோம்' என்ற பொருளும் உண்டு. 'வேலை' அல்லது 'பணி' என்ற வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டதன் முக்கியத்துவம் என்னவென்றால், எகிப்தில் பாரவோனுக்கு இஸ்ராயேல் மக்கள் 'பணி' புரிந்தனர். பாரவோனே அவர்களின் கடவுளாக இருந்;தான். இனி அப்படியிருக்கப் போவதில்லை. இனி இறைவன்தான் இவர்களின் தலைவன். ஆக, பணி என்ற வார்த்தையின் வழியாக இறைவன் தலைவராக முன்வைக்கப்படுகின்றார்.

யோசுவாவும், இஸ்ரயேல் மக்களும் - இரண்டு பேருமே - 'நாங்கள் ஆண்டவருக்குப் பணிபுரிவோம்!' என்று சொன்னாலும், இரண்டு பேரின் நம்பிக்கை அளவும் வேறுபடுகிறது. எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் கடவுளைத் தன் தலைவராக ஏற்றுக்கொள்கிறார் யோசுவா. ஆனால், 'அவர் எங்களுக்கு விடுதலை தந்ததால், அவர் எங்கள் முன் அறிகுறிகள் நிகழ்த்தியதால், அவர் எங்களைப் பாதுகாத்ததால் நாங்கள் நம்புகிறோம்!' என்று நிபந்தனையோடு நம்புகின்றனர் மக்கள். ஆக, மக்களின் இந்த எதிர்பார்ப்பு பின் நாட்களில் நிகழாமல் போவதால் அவர்கள் எளிதாக வேறு அரசனையும், வேறு தெய்வங்களையும் பின்தொடரத் துணிகின்றனர்.

கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். இஸ்ரயேல் மக்கள் இப்போது பாலைநிலத்தில் இருக்கின்றனர். கொஞ்ச சுமை வைத்துக்கொண்டால் மட்டும்தான் இனிதாக பயணம் செய்ய முடியும். அதில் ஆடை, அணிகலன்கள், தண்ணீர் என்றே சுமை இருக்கும். இந்தச் சுமையிலும் இந்த 'குட்டி தெய்வங்களுக்கு' அல்லது 'வேற்று கடவுளர்களுக்கு' எப்படி இவர்களின் பொதிகளில் இடம் இருந்தது? தொல்லியில் ஆராய்ச்சியில் 'ஃபிகுரின்' என்று சொல்லப்படும் விரல் அளவு தெய்வ உருவங்கள் நிறையக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகள்தாம் 'டிராவல் ஃபார்மட் கடவுளர்களாக' இருந்திருக்க வேண்டும். இவைகளைப் பார்க்கும்போதெல்லாம் இவர்களுக்கு கடவுளின் பிரசன்னம் தங்களோடு இருப்பதாக இவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். இன்று இவர்கள் இந்த எல்லா குட்டி தெய்வங்களையும் தூக்க எறிய வேண்டும். கடவுள் என்பது வெளிப்புற அடையாளம் அல்ல, அவர் நம் உள்புறம் இருந்து நம் அனுபவமாக இருக்கிறார் என்ற ஒரு மாற்று சிந்தனை பெற வேண்டும். தங்கள் கைகளுக்குள் இருக்கும் குட்டித் தெய்வங்களை அவர்கள் தூக்கி ஆற்றில் எறிய வேண்டும். இனி அவர்கள் தேடினாலும்  அவற்றைக் கண்டுகொள்ள முடியாது.

இஸ்ரயேல் மக்கள் இறுதியாக, 'நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்' என்று முடிவு எடுக்கின்றனர்.

தொடர்ந்து, இன்றைய நற்செய்தி வாசகத்தில், கடந்த ஐந்து வாரங்களாக நாம் கேட்டுக்கொண்டு வரும் இயேசுவின் 'வாழ்வுதரும் போதனை' இன்றோடு நிறைவுபெறுகிறது. இயேசுவின் போதனை அனைத்து மக்கள், கொஞ்சம் யூதர்கள் எனத் தொடர்ந்து இன்று மிகவும் சில சீடர்கள் எனச் சுருங்கிவிட்டது. இது ஒரு இலக்கிய உத்தி. பெரிய இடத்தில் தொடங்கி, சிறிய அளவில் முடிப்பது. இந்த இடத்தில் யோவான் நற்செய்தியாளரின் நோக்கம் என்னவென்றால், இதை வாசிக்கும் இயேசுவின் சீடர் ஒவ்வொருவரும் இந்த இடத்தில் தன்னைத் தானே ஒரு கேள்வி கேட்க வேண்டும்: 'இயேசுவை நான் வாழ்வுதரும் உணவாக ஏற்றுக்கொள்கின்றேனா?'

இயேசுவின் போதனை கடினமாக இருப்பதாக முணுமுணுக்கும் சில சீடர்கள் அவரை விட்டுப் பிரிகின்றனர். 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' என்று தம் பன்னிருவரிடம் கேட்கின்றார் இயேசு. அவர்கள் பிரதிநிதியாக பேதுரு, 'நாங்கள் யாரிடம் போவோம்?' என்று கேள்வியையே பதிலாக முன்வைக்கின்றார்.

இயேசுவின் போதனையைக் கேட்டு முடித்த சீடர்கள், 'இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம். இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?' என்று கேட்கின்றனர்.'நீங்கள் நம்புவதற்கு இது தடையாக இருக்கிறதா?' என இயேசு கேள்வியைத் திருப்புகின்றார். எது தடையாக இருக்கிறதா? இயேசு சொன்னதா? அல்லது இயேசு சொன்ன விதமா? இயேசுவின் போதனையைக் கேட்ட சீடர்கள் முணுமுணுக்கக் காரணம் அது புதியதாக இருந்ததால்தான். 'எல்லாரும் மாதிரியே நீரும் சொல்லலாமே! ஏன் நீர் மட்டும் புதியதாகச் சொல்கிறீர்?' என்பதுதான் அவர்களின் மனதில் இருக்கும் கேள்வி. 'எல்லா தெய்வங்களையும் போல இவரும் இருக்கலாமே! ஏன் இவர் மட்டும் வேறு மாதிரி இருக்கிறார்' என்று முதல் வாசகத்தில் யாவே இறைவனை ஏற்றுக்கொள்ள மக்கள் தயங்குகின்றனர்.

'அன்றே பலர் அவரை விட்டு விலகினர்' என்று சோகமாகப் பதிவு செய்கிறார் யோவான். உடனே இயேசு தன் பன்னிருவரிடம், 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' எனக் கேட்கிறார். இயேசு கேட்கும் இந்தக் கேள்வியில் நிறைய வலியும், வேதனையும் ஒளிந்திருக்கிறது. இது அவரின் மனித உரு தந்த வலியால் வரும் கேள்வி. மனிதருக்கு மனிதரின் உடனிருப்பு தேவைப்படுகிறது. 'என்கூட இவர்கள் எல்லாம் இருப்பார்கள்' என நினைத்த இயேசு தன் பன்னிருவரும் தன்னைவிட்டுப் போய்விடுவார்களா என்று கேட்கின்றார். ஆனால், இந்த இடத்தில் யூதாசைப் பற்றிக் குறிப்பிடுவதால், இயேசுவின் இந்தக் கேள்வியில், 'நீங்களும் போய்விடுவீர்கள்' என்ற பதில் ஒளிந்திருக்கின்றது. ஒத்தமைவு நற்செய்திகளில் 'நீர் கடவுளின் மெசியா' என அறிக்கையிடும் பேதுரு, யோவான் நற்செய்தியில் 'நீர் கடவுளின் தூயவர்' அல்லது 'அர்ப்பணமானவர்' என அறிக்கையிடுகின்றார். இங்கே பேதுரு இயேசுவை 'வார்த்தையாக' ஏற்றுக்கொள்கின்றார். ஆக, இயேசுவின் மனுவுரு நிகழ்விலிருந்து, அவரின் ஏறிச்செல்லுதல் வரை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இயேசுவின் முன் சராணகதியாவதாகவும் சொல்கின்றார் பேதுரு.

இப்படியாக, பன்னிருவர் சார்பாக, பேதுரு முடிவெடுக்கின்றார்.

'கடவுளை' மட்டும் தேர்ந்துகொண்டால் நல்லதுதானே? அப்புறம் ஏன் நம் மனித மூளை 'கடவுளை' ஏற்றுக்கொள்ள அல்லது 'கடவுளே போதும்' என முடிவெடுக்க மறுக்கின்றது?

இந்தக் கேள்விக்கு தூய அகுஸ்தினாரின் 'ஒப்புகைகள்' மற்றும் இன்றைய வாசகங்களின் பின்புலத்தில் விடை காண்போம்.

1. மூளையின் விதிமுறை

நம் மூளை ஒரே நேரத்தில் இரண்டு விதிமுறைகளால் இயங்க வல்லது: ஒன்று, 'நல்லதைத் தேர்ந்துகொள், தீயதை விட்டுவிடு.' இரண்டு, 'இன்பமானதைத் தேர்ந்துகொள், துன்பமானதை விட்டுவிடு.' உதாரணத்திற்கு, தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என மூளை நினைக்கும்போது அது நல்லதைத் தேர்ந்துகொள்கிறது. ஆனால், அதற்குப் படிக்க வேண்டுமே? என்ற கேள்வி வந்தவுடன், 'துன்பமமான படிப்பை விட்டுவிடு', 'இன்பமான காப்பி அடித்தல், அல்லது பணம் கொடுத்து பாஸ் ஆகுதல்' என்பதைப் பிடி! என்று சொல்லிவிடுகிறது. 'கடவுளைப் பின்பற்றுவது நல்லதுதான்'. ஆனால், அப்படிச் செய்யும் போது நமக்கு வலிக்குமே. கடவுள் விரும்பியதை நான் செய்ய வேண்டும் என்றால், எனக்கு விருப்பமானதை நான் செய்வதை விடுக்க வேண்டும். 'நல்லதைச் செய். நலமோடு வாழ்வாய்' என்பது கடவுளின் வார்த்தை. ஆனால், நல்லதைச் செய்வது கடினமாக இருக்கிறதே. என் மனத்தை நான் எப்படி அதற்கு ஆள்படுத்துவேன்? நான் நல்லதைச் செய்யாததால் துன்பம்தான் வருகிறது என எனக்குத் தெரிந்தும், என்னால் அதைச் செய்ய முடியவில்லையே? 'நட' என்று என் மூளை சொன்னவுடன் என் உடல் அதற்கு கீழ்ப்படிகிறது. ஆனால், 'செய்யாதே' என்று என் மனம் சொல்வதை என் மூளை கேட்க மறுக்கிறதே. ஏனெனில், மூளை இயல்பாகவே துன்பத்தை வெறுக்கிறது.

2. உடனடி ரிசல்ட்

எனக்குப் பணத் தேவை இருக்கிறது என வைத்துக்கொள்வோம். மூன்று வழிகள்: ஒன்று, அதற்காக உழைப்பது. இரண்டு, கடவுளிடம் வேண்டி ஏதாவது ஒரு வழி காட்ட வேண்டும் என்று சொல்வது. மூன்று, எனக்கு அடுத்திருப்பவரிடம் திருடுவது. நான் மூன்றாவது வழியைத் தெரிந்துகொண்டால், எனக்கு அடுத்த நொடி பணம் கிடைத்துவிடுகிறது. நான் எதிர்பார்த்த ரிசல்டை நான் பெற்றுவிடுகிறேன். ஆனால், நான் உழைத்தால் ஓரிரு நாளில் பணம் கைக்குவந்துவிடுகிறது. ஆனால், கடவுளைப் பற்றிக்கொண்டால் - எனக்கு ஒன்றும் நடப்பதில்லை. ஆக, உடனடி ரிசல்ட் தராத எதையும் மூளை ஏற்பதில்லை. அகுஸ்தினாரும் தன் மனமாற்றத்திற்கு முன் இப்படித்தான் புலம்புகின்றார்: 'நான் ஒரு பெண்ணை நுகர்ந்தால் அந்த இன்பம் உடனடியாக என் உடலில் தெரிந்து விடுகிறது. மூளையும் அந்த இன்பத்தைப் பதிவு செய்கிறது. ஆனால், நான் கற்பு கொண்டு உம்மில் வாழ நினைத்தால் என் உடலுக்கு என்ன இன்பம்? என் மூளைக்கு என்ன இன்பம்.' ஆக, உடனடி ரிசல்ட் தராத எதையும் மூளை ஏற்பதில்லை. ஆகையால்தான் இயேசுவின் சீடர்கள் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். இயேசுவை ஏற்றுக்கொள்வதால் எந்த ஒரு உடனடி ரிசல்டும் கிடைப்பதில்லை. இஸ்ரயேல் மக்களுக்கு கண்களுக்குத் தெரியாத கடவுளைவிட, தங்களின் கையிடுக்கில் தெரிந்த குட்டிக்கடவுளர்கள் பாதுகாப்பைத் தந்தனர். அவர்களுக்கு கைகளில் ரிசல்ட் உடனே கிடைத்தது.

3. மறையுண்மை பெரிது

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (எபே 5:21-32) 'ஒளிபெற்றவர்களாய் வாழுங்கள்' என்று எபேசு நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்தும் தூய பவுல், தொடர்ந்து, கணவர்-மனைவியர் வாழ்க்கை நடத்தை பற்றி அறிவுறுத்துகின்றார். முதலில் மனைவியருக்கும் (5:22-24), பின் கணவருக்கும் (5:25-32) என இரண்டு படிகளாக அவரின் அறிவுரை இருக்கின்றது. கணவன்-மனைவி ஒன்றிப்பு பற்றிப் பேசும் பவுல், 'இருவரும் ஒரே உடலாயிருப்பர்' என்று முதல் ஏற்பாட்டு படைப்பு நிகழ்வை மேற்கோள் காட்டி, 'இந்த மறைபொருள் பெரிது!' என்கிறார். ஆக, இயேசுவும் திருச்சபையும் கணவன்-மனைவியாக இணைந்திருப்பது என்பது கண்களால் காண முடியாதது. காண்பது மட்டுமே உண்மை. காணாதவை பொய் அல்ல. கணவன் மனைவி உறவிலும் காணாத மறைபொருளே அவர்களை இணைக்கிறது. அதுபோல, ஒருவர் தான் எடுத்த முடிவினால் கடவுளைத் தேர்ந்துகொள்கிறார் என்றால் அது ஒரு மறைபொருள். அது கண்ணுக்குத் தெரியாது என்று சொல்வதால் அது பொய் என்று ஆகிவிடாது.

இவ்வாறாக, மேற்காணும் காரணிகள் நாம் கடவுளைத் தேர்ந்துகொள்ளும் முடிவிற்கு துணைநிற்கலாம், எதிர்க்கலாம், அல்லது முடிவிலிருந்து நம்மை வழிமாற்றலாம். ஆனால். முடிவைத் துணிந்து எடுக்க ஒருவர் ஊனியல்பிலிருந்து தூய ஆவிக்குக் கடந்து செல்ல வேண்டும்.

'வாழ்வு தருவது தூய ஆவியே. ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது' என்கிறார். ஆக, நம்மில் உள்ள உடல், மூளை, இவற்றைக் கடந்து மனம் அல்லது ஆவி என்ற ஒன்று உண்டு. முன்னவை ஒன்றுக்கும் உதவாதவை. முன்னவை ஒன்றோடொன்று முரண்படுபவை. ஆனால், மனம் அல்லது ஆவி முரண்படாதது. உடல், மூளை, மனம் என ஒவ்வொரு நிலையாகக் கடந்துசெல்பவரே கடவுளைத் தெரிந்துகொள்ளும் முடிவை எடுக்க முடியும். இந்தக் கடந்துசெல்லதலுக்கும் கடவுளின் துணை தேவை. ஆகையால்தான், 'தந்தை அருள்கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது' (யோவா 6:65) என்கிறார் இயேசு.


இறுதியாக,

நாம் காலையில் அணிந்து மாலையில் கழற்றி எறியும் ஆடை தொடங்கி, காலத்திற்கும் மாற்ற முடியாத கடவுளைப் பின்பற்றுதல்வரை நாம் முடிவுகள் எடுத்துக்கொண்டே இருக்கும் சுமையைத் தாங்கிக்கொண்டிருக்கிறோம். ஊனியல்பு மற்றும் அதன் இன்பத்தில் நாம் பிடிபட்டிருக்கும் வரை முடிவுகள் சுமையே. 'நான் இந்த முடிவை எடுத்து கஷ்டப்படுகிறேன். அவன் அந்த முடிவை எடுத்து நல்லா இருக்கிறானே' என்ற ஒப்பீடு நம் முடிவை மாற்றிவிட சோதனை தரும். முடிவிலிருந்து பின்வாங்க மூளை நிறையக் காரணங்களைத் தேடும். காரணங்கள் கிடைக்காதபோது நம் மனத்தோடு சண்டையிடும். அங்கே 'அவரின் அருள்கொடையை நாடுதல் நலம்.' ஏனெனில், அவராக அனுமதித்தாலன்றி நாம் எதையும் தெரிவுசெய்ய முடியுhது.

எனினும்,

இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது!









Tuesday, 14 August 2018

ஆண்டின் பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு

நீதி மொழிகள் 9:1-6
எபேசியர் 5:15 - 20
யோவான் 6:51-58


நிறைவாழ்வு
நிகழ்ச்சி
ஒரு ஞானி சாகாமைக்கு மருந்து கண்டுபிடித்தது. 
அருமையான சகோதரனே! சகோதரியே! சாகாமைக்கு மருந்து இல்லை. பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று வந்தே தீரும். இது இயற்கையின் நியதி. காலத்தின் கட்டாயம்! ஆனால் இயேசு கிறிஸ்து சாகாமைக்கு மூன்று வகையான மருந்துகளை வழங்குகிறார். இந்த மூன்றையும் நமதாக்கிக் கொண்டால் நாம் நிலை வாழ்வு பெறுவோம். சாவு நம்மைப் பாதிக்காது. 

1. சாகாமைக்கு இயேசு வழங்கும் முதல் மருந்து
அவரில் நம்பிக்கை கொள்வதாகும். இன்றைய நற்செய்தியிலே என்னை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளார் (யோவா. 6:47). மேலும் வாசரை உயிர்த்தெழச் செய்யும் முன் மார்த்தாவிடம் உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் (யோவா. 11:25-26).

2. சாகாமைக்கு இயேசு வழங்கும் இரண்டாவது மருந்து
அவருடைய வார்த்தையைக் கடைப்பிடித்தலாகும். 
என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாக மாட்டார் (யோவா. 8:51). நான் கூறிய வார்த்தைகள் ஆவியும் உயிரும் ஆகும் (யோவா. 6:63) என்கிறார்.
நாங்கள் யாரிடம் செல்வோம்? வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன (யோவா. 6:68).

3. சாகாமைக்கு இயேசு வழங்கும் மூன்றாவது மருந்து
அவருடைய திருவுடல் , திரு இரத்தமாகும். இன்றைய நற்செய்தியில் வாழ்வு தரும் உணவு நானே! இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் (யோவா. 6:51).

நாம் பாவிகளாக இருந்தும், கிறிஸ்து நமக்காகச் சிலுவையில் கைகளை விரித்துப் பாடுபட்டுப் பலியானார். அந்த கல்வாரிப் பலியைக் காலமெல்லாம் நினைவுகூருவதுதான் திருப்பலியாகும். தன் உடலை உலகை மீட்பதற்காக இயேசு கையளிக்கிறார். கிறிஸ்துவே கொலைக்களத்திற்கு இட்டுச் செல்லப்பட்டார் (எசா. 53:7-12). தன் ஒரே பலியினால் கிறிஸ்து நம்மைத் தூயவராக்கி, நிறைவுள்ளவராக்கினார் (எபி. 10:14). அந்த ஒப்பில்லா பலியை, அவர் பணித்தவாரே திருச்சபை நிறைவேற்றுகிறது. 

கொடுப்பதில் நான்கு வகையுண்டு:

  • தன்னில் மிகுதியானதைக் கொடுப்பது (லூக். 21:1-4) 
  • உள்ளத்திலிருந்து கொடுப்பது. சக்கேயு (லூக். 19:8) 
  • உள்ளதை எல்லாம் கொடுப்பது (ஏழை கைம்பெண்) மாற். 12:41-44
  • தன்னையே கொடுப்பது - இயேசு தன்னையே கொடுத்தார். தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு
  • யாரிடமும் இல்லை (யோவா. 15:13). 


நிகழ்ச்சி
ஐந்து பெண் குழந்தைகளுடன் வறுமைப் பிடியில் சிக்கித் தவித்த ஒரு ஏழைக் கைம்பெண், சாமி கர்த்தர்தான் எங்களைப் படைத்தார்! கண்ணீரைத்தான் எங்களுக்குக் கொடுத்தார். அந்தக் கண்ணீரையே அவருக்குக் காணிக்கையாக்குகிறோம் என்றாள். ஆம் கடவுளுக்கு ஏற்ற பலி நம் நொறுங்கிய நெஞ்சமே! (தி.பா 51:16-17)

பலாப்பழத்தில் பலாச் சுளையை எடுக்கக் கத்தி தேவைப்படுகிறது. வாழ்வைச் சுவைக்க புத்தியுடன் ஞானமும் தேவைப்படுகிறது. கிறிஸ்துவே கடவுளின் ஞானம்! (1 கொரி 1:24). அவர் அருள்வாக்கைக் கேட்டு அவரது திருவுடலை உண்டால் நமது அக இருள் அகற்றி ஞான ஒளி ஏற்றுவார்.
சில சமயம் முட்டாள்களாக நாம் வாழலாம். ஆனால் முட்டாள்களாக நாம் சாகக் கூடாது.




வாழ்வா? நிலை வாழ்வா?
வாழ்நாள் முழுவதும் நாம் அனைவரும் நிரந்தர மகிழ்ச்சியைத் தேடி அலைகின்றோம். வாழ நினைத்தால் வாழலாம்; வழியா இல்லை பூமியில்? ஆழக் கடலும் சோலையாகும், ஆசையிருந்தால் நீந்திவா; பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்; பார்த்து நடந்தால் பயணம் தொடரும்; கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்;
காட்சி கிடைத்தால் கவலை தீரும்;
கவலை தீர்ந்தால் வாழலாம்.
இவை கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள். இந்த வரிகளை வாழ்க்கையாக்க எவ்வளவோ முயற்சி எடுக்கின்றோம். ஆனால் பல சமயங்களிலே நாம் சூழ்நிலையின் கைதிகளாகி துயரக் கடலில் வீழ்ந்து விடுகின்றோம்.
இதோ வாழ்வைத் தேடும், நிலை வாழ்வைத் தேடும் நமக்குத் தேவையான ஆரோக்கியம் நிறைந்த நல்ல வழியை நற்கருணை ஆண்டவர் நமக்குக் காட்டுகின்றார். அவர் நம்மைப் பார்த்து: என் மகளே! என் மகனே! நீ திருப்பலியின் போது என் உடலை உண்டால் நீ தேடும் நிலைவாழ்வைப் பெறுவாய் (முதல் வாசகம்); தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு, ஆண்டவரின் திருவுளத்திற்கேற்ப நீ வாழ்வாய் (இரண்டாம் வாசகம்) என்கின்றார்.

இதோ வாழ்வுக்கும், நிலை வாழ்வுக்குமிடையே உள்ள வேறுபாடு.
           வாழ்வு                                                  நிலைவாழ்வு
1. முடிவுள்ளது                                             முடிவற்றது
2. மண்ணைச் சார்ந்தது                             விண்ணைச் சார்ந்தது
3. துன்பம் உண்டு                                          துன்பம் இல்லை
4. பாவமும், புண்ணியமும் கலந்தது   பாவமற்றது 
5. முடிவுள்ள இன்பத்தைத் தருவது     முடிவில்லா இன்பத்தைத் தருவது 
6. இன்பமும்,துன்பமும் மாறி வரும்   மாறாத இன்பத்தைத் தரும் 
7. பாசமும், பகையும் கலந்தது               பாசத்திற்கு மட்டுமே இடம் தருவது 
8. மரணத்திற்கு உட்பட்டது                     மரணத்திற்கு அப்பாற்பட்டது 
9. கடவுளைத் தேடும் காலம்                 கடவுளைக் கண்டடைந்த காலம் 
10. கடவுளை நம்பிக்கைக் கண்களால்  கடவுளை நேருக்கு நேர் பார்ப்பது

மேலும் அறிவோம் :

நெருநல் உளன்ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்(து) இவ் வுலகு (குறள் : 336). 

பொருள் : நேற்று இருந்தவன் இன்று இறந்தான் என்று சொல்லும் இரங்கத்தக்க நிலையினைப் பெருமையாகக் கொண்டுள்ளது இவ்வுலகம்!





குஜராத் மாநிலத்தில் பெரும் வெள்ளம் வந்தபோது, ஒரு மனைவி கால் ஊனமுற்ற தன் கணவருடன் தன் வீட்டின் முன்னால் இருந்த மரத்தின் கிளை ஒன்றில் உட்கார்ந்தார், அக்கிளை இரண்டு பேரையும் தாங்க முடியாமல் முறிந்துபோகும் நிலையில் இருந்ததைக் கண்ட அம்மனைவி, ஊனமுற்ற தன் கணவரைக் காப்பாற்றும்படி அவர் வெள்ளத்தில் குதித்து, தன் உயிரையே தியாகம் செய்தார், நல்ல கணவருக்காக ஒரு மனைவி தன் உயிரைக் கொடுப்பது அரிது. ஆனால் ஊனமுற்ற கணவருக்காக அந்த மனைவி தன் உயிரைத் தியாகம் செய்தது நம்மை வியப்படையச் செய்கிறது.

கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கையளித்ததைப் பற்றிக் கூறும் பவுல், "நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது;... ஆனால் நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்" (உரோ 5:7-8) என்று வியந்து எழுதுகிறார்.

ஆம், நாம் பாவிகளாய் இருந்தும் கிறிஸ்து நமக்காகச் சிலுவையில் கைகளை விரித்துப் பாடுபட்டுப் பலியானார். அவரின் கல்வாரிப் பலியைக் காலமெல்லாம் நினைவு கூருவதுதான் நற்கருணைத் திருப்பலியாகும். நற்கருணை ஒரு திரு உணவு மட்டுமன்று; அது உண்மையிலேயே ஒரு திருப்பலியுமாகும். இன்றைய நற்செய்தியில், "என் சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" (யோவா 8:51) என்கிறார் கிறிஸ்து. இவ்வா று நற்கருணை உணவும் பலியுமா கும் என்பதை அவர் உணர்த்துகிறார். தமது உடலை உலக மீட்பிற்காகக் கையளிக்கிறார். 

இறுதி இரவு உணவின்போது அவர் அப்பத்தை எடுத்து, "இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் என் உடல்" (லூக் 22:19) என்றும், அவ்வாறே திராட்சை இரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்து, "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் உடன்படிக்கை (லூக் 22:20) என்றும் கிறிஸ்து கூறினார். “கொடுத்தல்", " சிந்துதல்" என்ற சொற்கள் கிறிஸ்து தம்மையே பலியாகக் கொடுத்தார். தமது இரத்தத்தைச் சிந்தினார் என்பதை உணர்த்துகின்றன.

கிறிஸ்துவே கொலைக்களத்திற்கு இட்டுச் செல்லப்பட்ட (எசா 53:7-12). உலகின் பாவங்களைப் போக்கும் உண்மையான செம்மறி (யோவா 1:29). பாஸ்காச் செம்மறியின் எலும்புகள் முறிக்கப்படவில்லை (விப 12:48); அவ்வாறே கிறிஸ்துவின் எலும்பும் முறிக்கப்படவில்லை ) (யோவா 19:36). நமது பாஸ்காப் பலி நிறைவேறிவிட்டது. கிறிஸ்துவே அப்பாஸ்கா (1 கொரி 5:7). தமது ஒரே பலியினால் கிறிஸ்து நம்மைத் தூயவராக்கி, நிறைவுள்ளவராக்கினார் (எபி 10:14). அவரின் ஒப்புயர்வற்ற பலியை, அவர் பணித்தவாறே திருச்சபை நிறைவேற்றுகிறது,

பங்குத் தந்தை ஓர் இளைஞனிடம், "ஏம்பா, நீ பூசைக்கு வருவதில்லை ?" என்று கேட்டதற்கு அவன், "அது உங்கவேலை; உங்க வேலையை நான் ஏன் வந்து பார்க்கனும்? என் வேலையை நீங்க வந்து பார்க்கிறீர்களா?" என்று திருப்பிக் கேட்டான்.

திருப்பலி குருவின் பலி மட்டுமன்று; நம் அனைவரின் பலி: முழுத் திருச்சபையின் பலி. அதில் ஒவ்வொருவரும் முழுமையாக, ஈடுபாட்டுடன் பங்கேற்று. குருவுடன் இணைந்து தம்மையே காணிக்கையாக்க வேண்டும். கொடுப்பதிலே மூவகை உண்டு; உள்ளதிலிருந்து கொடுப்பது முதல்வகை. சக்கேயு தன்னிடமிருந்ததிலிருந்து பாதியைக் கொடுத்தார் (லூக் 13:8). உள்ளதையெல்லாம் கொடுப்பது இரண்டாம் வகை, ஏழைக் கைம்பெண் தன்னிடம் இருந்த அனைத்தையுமே உண்டியலில் போட்டுவிட்டார் (மாற் 12:41-44). தன்னையே கொடுப்பது மூன்றாம் வகை. இயேசு கிறிஸ்து தம்மையே நமக்காகக் கையளித்தார். 'தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை (யோவா 15:13) என்று அன்பிற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த கிறிஸ்து உலக மீட்பிற்காகத் தன் இன்னுயிரையே தாரை வார்த்துக் கொடுத்தார்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு(குறள் 72) 

எங்கும், எல்லாருக்கும், எல்லா வகையிலும் நாம் நம்மைப் பயனுள் ளவர்களாகச் செய்ய முடியும், இரத்தமின்றி உயிர் இழப்பவர்களுக்கு இரத்த தானம் செய்வது சிறந்தது. "இரத்தத்தைத் தானம் செய்வதால் நாம் சாக மாட்டோம். ஆனால் ஒருநாள் இரத்தமின்றி நாம் சாவோம்" என்பதை நெஞ்சில் நிறுத்துவோம். பிறருக்காக நாம் பயன்படாத நாள்கள் நாம் வாழாத நாள்கள்!

தன்னுடைய ஐந்து பெண்பிள்ளைகளுடன் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஓர் ஏழைக் கைம்பெண் என்னிடம், "சாமி! கர்த்தர்தான் எங்களைப் படைத்தார்; கண்ணீரைத்தான் எங்களுக்குக் கொடுத்தார், அக்கண்ணீரையே அக்கர்த்தருக்குக் காலனிககையாக்குகிறோம்" என்றார், அவருடைய கடவுள் நம்பிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது!

கடவுளுக்குக் கொடுக்க நம்மிடம் வேறு காணிக்கை இல்லை என்றாலும் நமது கண்ணீரையாவது அவருக்குக் காணிக்கை ஆக்கலாமே? "கடவுளுக்கு ஏற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே" (திபா 51:16-17). நம் வாழ்வில் நாம் பல விதங்களில் வெந்துபோய், நொந்துபோய் வேதளைத் தீயில் புழுவாகத் துடிக்கிறோம், வறுமை, நோய் நோக்காடு, உறவின் முறிவுகள், விரிசல்கள். பிசகுகள், வலிப்புகள், மனஇறுக்கங்கள், பாவங்கள், பலவீனங்கள் ஆகியவற்றைக் கடவுளுக்குக் காணிக்கையாக்குவோம்.

“எங்கள் இறைவனாகிய ஆண்டவரே! தாழ்மையான மனத்தோடும் நொறுங்கிய உள்ளத்தோடும் வாடுகின்ற எங்களை ஏற்றருளும்" (திருப்பலி செபம்), கண்ணீரிலும் கடவுளைக் காண 'கம்யூட்டர் 'அறிவு போதாது: அதற்குக் கடவுளின் ஞானம் தேவை. அந்த இறை ஞானத்தைச் சுவைத்து மகிழ, பேதமை நீங்கிப் பேரின்ப வாழ்வு வாழ நம்மை அழைக்கிறது முதல் வாசகம். இரண்டாம் வாசகத்திலும், ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்துடன் வாழ நம்மை அழைக்கிறார் புனித பவுல்.

பலாப்பழத்தில் பலாச் சுளையை எடுக்கக் கத்தி தேவைப்படுகிறது. வாழ்வைச் சுவைத்து வாழ புத்தியுடன் ஞானமும் தேவைப்படுகிறது. கிறிஸ்துவே கடவுளின் ஞானம் (1 கொரி 1:24). அவரைப் பின் சென்று, அவர் அருள்வாக்கைக் கேட்டு, அவருடைய திருவுடலை உண்டால் அவர் நமது அக இருளை அகற்றி ஞான ஒளி ஏற்றுவார்.

முட்டாள்களாக நாம் வாழலாம். ஆனால் முட்டாள்களாக நாம் சாகக்கூடாது. ஒரு முட்டாள், தான் முட்டாள் என்பதை உணரும்போது அவன் ஞானியாகிறான். ஒரு பாவி தான் பாவி என்பதை உணரும்போது அவன் நீதிமானாகிறான்!


வாங்கிவிட்டீர்களா?


இந்த ஆண்டு மே 15 முதல் ஆகஸ்ட் 15 வரை அமேசான் இந்தியா இணையதளத்தின் பேனர்களை நினைவுகூர்ந்தோம் என்றால், 'ஸ்கூல் இயர் ஸேல்,' 'ரம்ஸான் ஸேல்,' 'ப்ரன்ஷிப் டே ஸேல்,' 'இன்டிபென்டஸ் டே ஸே;' என நான்கு பேனர்களுக்குள் அதன் விற்பனையை அடக்கிவிடலாம். இதற்கிடையில், 'அமேஸான் ப்ரைம் ஸேல்' என்று ஒருநாள். இது அமேசான் இணையதளத்திற்கு மட்டுமல்ல. நாம் திறக்கின்ற செய்தித்தாள்கள், பார்க்கின்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும். எப்ப பார்த்தாலும் நம்மைச் சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கின்ற ஒரு குரல், 'வாங்கிவிட்டீர்களா?' என்பதுதான். 'மொபைல் வாங்கிவிட்டீர்களா?' 'டிவி,' 'வாஷிங் மெஷின்,' தொடங்கி, 'டூத் பேஸ்ட்,' 'சோப்பு' வரை 'வாங்கிவிட்டீர்களா?' எனக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த சப்தத்தோடு இணைந்து அவர்கள் அள்ளி எறியும் வாக்குறுதிகளும் நம் காதுகளில் வந்து விழும். 'அதிகமான பேட்டரி லைஃப்,' 'தெளிவான வண்ணத்திரை,' 'ஆறு நாள்களில் சிகப்பழகு,' 'மஞ்சள் கறைகள் நீங்கும்,' 'அதிகமான இணையதள வேகம்' என நிறைய வாக்குறுதிகள் வந்துவிழுகின்றன. நாம் வாங்கும் பொருள்கள் அவைகள் கொண்டுவரும் வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றுவதில்லை என்பது நமக்குத் தெரியும். பின் ஏன் நாம் வாங்குகிறோம்? பின் ஏன் நாம் புதிய பொருள்களை வாங்குகிறோம்? 'பொருள்கள் வாங்கும்போது நம்மை அறியாமலேயே ஒரு நிறைவு உணர்வு வருகின்றன' - இதுதான் மார்க்கெட்டிங் உளவியல். பஸ்ல போகும்போது பாருங்களேன். போத்தீஸ், சென்னை சில்க்ஸ் போன்ற துணிக்கடைகள் முன் பேருந்து நிற்கும்போதெல்லாம், அந்த நிறுத்தத்தில் கைப்பைகள், கட்டப்பைகள் என ஏறும் பயணிகளின் முகத்தைக் கவனியுங்கள். அவர்களின் முகத்தில் இனம்புரியாத ஒரு பெருமிதம் அல்லது நிறைவு உணர்வு இருக்கும். இந்தக் குறுகிய பெருமித உணர்வே நாம் பொருள்களை வாங்க வைக்கின்றன.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டிலும் இரண்டு விளம்பரங்களைப் பார்க்கின்றோம். இன்றைய முதல் வாசகத்தில் (காண். நீமொ 9:1-6), 'அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள் ... உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்' என விளம்பரம் செய்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'என்னை உண்போர் என்னால் வாழ்வர் ... இது மன்னா போல அல்ல ... வாருங்கள் ... உண்ணுங்கள் ... பருகுங்கள்' என விளம்பரம் செய்கின்றார் இயேசு. முதல் வாசகம் ஞானம் தயாரித்த உணவிற்கான விளம்பரம். நற்செய்தி வாசகம் இயேசுவே தன்னை உண்பதற்கு விடுக்கும் விளம்பரம். இரண்டு விளம்பரங்களுமே உணவிற்கானவைதாம். இரண்டு விளம்பரங்களையும் இணைத்தோம் என்றால், 'கடவுளின் ஞானமாய் விளங்கும் இயேசுவை நற்கருணை வடிவில், இறைவார்த்தை வடிவில் நாம் உட்கொள்கிறோம் என்றால் அவரோடு நாம் இணைந்திருக்கிறோம், வாழ்வு பெறுகிறோம். இந்த இரண்டும் நம் நல்ல நடத்தையில் (காண். இரண்டாம் வாசகம், எபே 5:15-20) வெளிப்படவேண்டும்!' ஆக, விளம்பரங்களும், விளம்பரங்களின் வாக்குறுதிகளும் இணைந்து செல்கின்றன இங்கே.

எப்படி?

இன்றைய முதல் வாசகத்திலிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம். இரண்டு பெண்களைப் பற்றியதுதான் இன்றைய முதல் வாசகம். ஒரு பெண் நேரிடையாகச் சித்தரிக்கப்படுகிறாள். மற்றொரு பெண் மறைவாக அமர்ந்திருக்கிறாள். யார் இந்தப் பெண்கள்? ஒரு பெண்ணின் பெயர் ஞானம். மற்றொரு பெண்ணின் பெயர் மதிகேடு. ஆண்கள் மற்றும் ஆணாதிக்கம் மேலோங்கி இருந்த காலத்தில் ஞானத்தை பெண் (1:20-33, 3:13-20, 7:4, 8:1-36) என வருணித்தது எப்படி? எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளில் ஒவ்வொரு பெயர்ச்சொல் மற்றும் பெயரெச்சத்திற்கும் பாலினம் உண்டு. ஞானத்தைக் குறிக்கம் ஹோக்மா என்ற எபிரேயச் சொல்லும், சோஃபியா என்ற கிரேக்கச் சொல்லும் பெண்பால். ஆகையால், ஞானம் பெண் என உருவகிக்கப்படுகின்றது. மேலும், மென்மையான மதிப்பீடுகளும் (அழகு, கொஞ்சல்), மென்மையான இயற்கை சூழல்களும் (நிலா, அந்திமாலை, இரவு) பெண்பாலிலேயே வருணிக்கப்பட்டன. ஆகையால், ஞானமும் பெண் என வருணிக்கப்படுகிறது. ஞானம் மற்றும் மதிகேடு என்ற இந்த இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டிருப்பதாக நீதிமொழிகள் நூல் சொல்கிறது (காண்க. 2:16-19. 5:3-14, 19, 20. 6:24-35. 7:1-27).

இன்றைய முதல் வாசகத்தைப் புரிந்து கொள்ளவேண்டுமென்றால் அதை இதற்கு முந்தைய மற்றும் பிந்தைய பகுதியோடு சேர்த்துப் பார்த்தல் வேண்டும். நீமொ 8 முழுவதும் ஞானத்திற்குப் புகழுரை பாடுகின்றார் ஆசிரியர். பாடிவிட்டு ஞானம் எப்படி மனிதர்களைத் தன்னிடம் அழைக்கிறது என்றும் (9:1-6), மதிகேடு எப்படி அழைக்கிறது என்றும் (9:13-18) எழுதுகின்றார்.

ஞானம் என்றால் என்ன? 'ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்' (9:10அ) என்றும், 'மெய்யுணர்வே ஞானம்' என்றும் (9:10ஆ) சொல்கிறது நீதிமொழிகள். எபிரேய விவிலியத்தில் ஞானம் என்பது கைவேலையில் சிறந்து விளங்குவது என்று சொல்லப்படுகிறது. அதாவது, ஒருவர் நல்ல சிந்தனையாளராக இருந்தால் அவரை அறிவாளி என்கிறோம். இதையே ஒருவர் மர வேலை, சிற்பவேலை போன்றவற்றில் சிறந்தவராக இருந்தால் அவரை ஞானி என்கிறது முதல் ஏற்பாடு. ஏனெனில் அறிவாளியில் மூளை மட்டுமே வேலை செய்கிறது. ஆனால் ஞானியிடத்தில் மூளையும், உடலும் இணைந்து வேலை செய்கிறது. இணைச்சட்ட நூல் 4ஆம் பிரிவு ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தலே ஞானம் என்று சொல்கிறது. மேலும், ஞானம் கடவுளின் ஆற்றல் அல்லது சக்தி என்றும், படைப்பின் தொடக்கத்திலேயே அது இருந்தது என்றும் நீமொ நூல் (காண்க. நீமொ 8) சொல்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தை இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) ஞானமும் அதன் செயல்களும், (ஆ) ஞானம் விடுக்கும் அழைப்பு

(அ) ஞானத்தின் செயல்கள் மூன்று: வீடு கட்டுகிறது, உணவு சமைக்கிறது, உணவை உண்பதற்கு எல்லாரையும் அழைக்கிறது. வழக்கமாக வீடு கட்டும் வேலை ஆண்களுக்குரியது. ஆனால் இங்கே ஒரு பெண் வீடு கட்டுகிறாள். எப்படி? ஏழு தூண்களைக் கொண்டு. ஏழு என்பது ஒரு செயலின் நிறைவை (தொநூ 2:2-3. லேவி 25:2-7) குறிப்பது. மேலும் சாலமோன் கட்டிய எருசலேம் ஆலயத்தில் ஏழு தூண்கள் இருந்தன (1 அர 7:17). ஆக, ஞானம் கட்டும் வீடு கடவுளின் கோவிலையும் குறிக்கலாம். மேலும் தூண்கள் ஒரு வீட்டின் பலத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. ஆக, ஞானம் கட்டும் வீடு பாதுகாப்பானது, பலமானது. இந்த வீடு கட்டும் வேலை முடிந்தவுடன் உணவு தயாரிக்கிறது ஞானம் - இறைச்சியும், தேனும் கலந்த உணவு. உணவு தயாரனவுடன் தன் தோழிகளை அனுப்பி மாந்தரை விருந்துக்கு அழைக்கின்றது. ஆனால் மதிகேடு வீட்டில் வாசற்படி மட்டுமே இருக்கிறது (9:13). மேலும் அதன் திருடிய தண்ணீரும், வஞ்சித்துப் பெற்ற உணவுமே. அது தன் வேலையாய்ச் செல்வேரின் கவனத்தை திசைதிருப்புகிறது.

(ஆ) ஞானத்தின் அழைப்பும் மூன்று: வாருங்கள், உண்டு பருகுங்கள், பேதைமையை விட்டுவிடுங்கள். இந்த அழைப்பை ஏற்பவர்கள் பெறவது வாழ்வு (9:6).

இன்றைய முதல் வாசகத்திற்கும், நற்செய்திக்கும் என்ன தொடர்பு?

அ. ஞானமும் இயேசுவும். தொடக்கத் திருச்சபையில் இயேசுவுக்கு வழங்கப்பட்ட ஒரு பெயர் 'கடவுளின் ஞானம்' என்பது: '...கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்' (1 கொரி 1:24), 'கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம்' (1 கொரி 1:30). மேலும் யோவான் தன் நற்செய்தியின் தொடக்கத்தில் பயன்படுத்தும் 'தொடக்கத்தில் வாக்கு இருந்தது' (யோவா 1:1) என்ற பகுதியில் 'வாக்கு' என்பது 'ஞானம்' என்றும், 'ஞானம்' என்பது இயேசு என்றும் பொருள்கொள்ளப்படுகிறது. ஆக, இன்றைய முதல் வாசகத்தில் ஞானம் விருந்துண்ண மக்களை அழைப்பது போல, இயேசுவும் நற்செய்தியில் தன் உடலை உணவாக உண்பதற்கும், தன் இரத்தத்தை பானமாக அருந்துவதற்கும் அழைக்கிறார். தன் விருந்தை உண்டால் மனிதர்கள் வாழ்வு பெறுவார்கள் என்றும், தன்னை உண்பவர் வாழ்வும், நிலைவாழ்வும் பெறுவர் என்கிறார் இயேசு. ஆக, ஞானத்தையும், இயேசுவையும் தேடுபவர்கள் வாழ்வைத் தேடுகிறார்கள்.

ஆ. மன்னாவும், மதிகேடும். இயேசு யோவான் 6ல் அடிக்கடி 'மன்னா உண்டவர்கள் மடிந்து போயினர்' என்கிறார். ஆக, கடவுள் தரும் உணவை முதல் ஏற்பாட்டில் மக்கள் உண்டாலும், அவர்கள் இறந்து போயினர். ஆக, அந்த உணவில் ஏதோ ஒரு குறை இருக்கிறது. அல்லது அதை உண்ட மக்களிடத்தில் ஏதோ ஒரு குறை இருக்கிறது. 'மதிகேடு' என்பதும் இப்படித்தான். 'கடவுளை நம்பாததே மதிகேடு' என்கிறது திபா 14:1. ஆக, கடவுள் தன் அருகில் இருக்கிறார் என்பதை மறுப்பதும், அவரின் பராமரிப்பை ஏற்றுக்கொள்ளாததும் கூட மதிகேடுதான். இந்த மதிகேடு வாழ்வைத் தருவதற்குப் பதிலாக நமக்கு இறப்பைத் தருகிறது.

ஞானம் தரும் விருந்து மற்றும் இயேசு தரும் உணவை உண்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற ப்ராக்டிக்கலான விளக்கத்தை இன்றைய இரண்டாம் வாசகம் தருகின்றது. 'ஒளி பெற்றவர்களாய் வாழுங்கள்' என்று தன் எபேசுநகர் திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுலடியார் இறைமக்களின் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார். 'உன் நடத்தை சரியில்லை' என்று நாம் மற்றவரிடம் சொல்லும்போதும், அல்லது மற்றவர்கள் என்னிடம் சொல்லும்போது அது குறிப்பது நம் அறநெறி வாழ்வையே. ஆனால், நடத்தை என்பது வெறும் அறநெறி சார்ந்தது மட்டுமன்று. அது, தன்மையம், பிறர்மையம், இறைமையம் என்ற மூன்று நிலைகளில் வெளிப்படுகிறது:

அ. தன்மையம். என் தனிப்பட்ட வாழ்வில் நடத்தை என்பது ஞானத்தோடு வாழ்வது. 'ஞானமற்றவர்களாய் வாழாமல், ஞானத்தோடு வாழுங்கள்' (5:15) என்று சொல்லும் பவுலடியார் தொடர்ந்து, 'அறிவிலிகளாய் இராமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்து கொள்ளுங்கள்' (5:17) என்கிறார். இந்த இரண்டு வாக்கியங்களையும் அருகருகே வைத்துப் பார்த்தால், 'ஆண்டவருடைய திருவுளம்' என்பதுதான் 'ஞானம்' என்று புரிந்து கொள்ளலாம். இதில் சிக்கல் என்னவென்றால் பல நேரங்களில் நாம் என்ன செய்ய நினைக்கிறோம் என்பதே நமக்குத் தெரிவதில்லை. இதில் 'கடவுளின் திருவுளத்தை' எங்கே போய் அறிந்து கொள்வது? சில நேரங்களில் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நாம் நடப்பது போலவே இருக்கும். ஆனால் வாழ்க்கை நிகழ்வுகள் நமக்கு மகிழ்ச்சி தராமல் இருக்கும். இந்தப் போராட்டத்தை எப்படி வெல்வது?

ஆ. பிறர்மையம். 'ரொம்ப குடிக்காதீங்க! ஏன்னா, அது தாறுமாறான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்' (5:18) என்கிறார் பவுல். இதுதான் அறநெறி சார்ந்த நடத்தை. அதாவது, நான் செய்யும் ஒரு செயல் எனக்கு அருகிலிருப்பவரை அல்லது என்னைச் சார்ந்திருப்பவரை பாதிக்கிறது. 'எனக்கு இன்பம் வேண்டும்' என்பதற்காக நான் இதையெல்லாம் செய்வேன் என்று 'இன்பத்தை உடனடியாக நிறைவேற்றிக்கொள்ள' நான் நினைக்கும்போதெல்லாம் என் நடத்தை சரியில்லாமலேயே இருக்கிறது. 'குடிவெறி' என்பது எபேசுநகரத்தில் இருந்த ஒரு பிரச்சினை. ஏன் நாம் தட்டிக்கொண்டிருக்கும் தொடுதிரைகள்கூட சில நேரங்களில் நம் 'குடிவெறி' என மாறிவிடலாம்.

இ. இறைமையம். 'உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள் இருக்கட்டும்!' - அதாவது, உங்கள் வாழ்வு முழுவதும் இறைப்பிரசன்னம் மட்டுமே நிறைந்திருக்கட்டும். 'காலத்தை நன்கு பயன்படுத்துங்கள்' (5:16) என்ற பவுல் சொல்லும்போது 'நேர மேலாண்மை' பற்றி எழுதவில்லை. மாறாக, மீட்பின் காலம் என்று சொல்லப்பட்ட உயிர்ப்புக்கும், இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலத்தை இறைவனை மையமாக வைத்து வாழுங்கள் என்கிறார். இதை நாம் இன்று நேர மேலாண்மை எனவும் எடுத்துக்கொள்ளலாம். இன்று என் நேரத்தைத் திருடும் காரணிகள் எவை? அல்லது நானாக வீணடிக்கும் தருணங்கள் எவை? மேலும், நான் செய்யும் வேலைகளில் இறைவனின் பிரசன்னம் என் வர்த்தைகள் வழியாக வெளிப்படுகிறதா? இறுதியாக, 'எல்லாவற்றிற்கும் எப்போதும் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்' (5:20).

இதை இன்றைய நற்செய்தியோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

இன்றைய நற்செய்தியில் இயேசு 'வாழ்வு' என்று ஒன்பது முறை குறிப்பிடுகிறார். 'வாழ்வு' என்பதை கொஞ்சம் ப்ராக்டிகலா 'நடத்தை' என்று எடுத்துக்கொண்டு, 'இயேசுவை நான் உண்டால் என் நடத்தை தூய பவுலடியார் சொல்வது போல இருக்கிறதா' என்று சுயஆய்வு செய்து பார்க்க இன்றைய இரண்டாம் வாசகம் உதவுகிறது.

யோவான் நற்செய்தியின் 6ஆம் அதிகாரம் முழுவதும் 'வாழ்வுதரும் உணவு' என்பதை மையமாக வைத்துதான் இருந்தாலும், ஒவ்வொரு உட்பிரிவிலும் முன்வைக்கப்படும் கருத்துக்கள் இன்னும் ஆழமானவையாக இருக்கின்றன. கடந்த வாரம் இயேசுவின் உரையாடல் யூதர்களோடு இருந்தது. யூதர்கள் இயேசுவின் மனிதப் பிறப்பை மேற்கோள் காட்டி அவரை ஏற்றுக்கொள்ள தயங்குகின்றனர்.

இன்றைய நற்செய்திப்பகுதி கடந்த வாரங்களில் வாசித்த இறைவாக்குப் பகுதிகளைவிட மாறுபட்டு இருக்கின்றன:

அ. உரையாடல் யூதர்களுக்கும், இயேசுவுக்கும் என்று இருந்தது இன்று 'மக்களுக்கும், இயேசுவுக்கும்' என மாறுகின்றது.

ஆ. இதுவரை 'உணவு' என்றே சொல்லிவந்த இயேசு, இன்று 'என் சதை உணவு' என்றும் 'என் இரத்தம் பானம்' என்றும் சொல்ல 'பானம்' என்ற புதிய காரணியை கொண்டு வருகின்றார்.

இ. மேலும், இதுவரை 'உண்ணுங்கள்!' என்று கட்டளை வினைச்சொல்லாக சொல்லிவந்த இயேசு, இன்றைய நற்செய்தியில் தன்னை உண்பவர் பெறும் பலன்களை வாக்குறுதிகளாக முன்வைக்கின்றார். இயேசு முன்வைக்கும் வாக்குறுதிகள் இரண்டு: அவர்கள் 'இணைந்திருப்பர்', 'வாழ்வு பெறுவர்'.

இயேசுவின் உணவு என்றால் என்ன?

அ. கடந்த வார நற்செய்தியை நாம் சிந்தித்தபோது அதில் நற்கருணையை இணைத்துப் பார்த்தோம். ஆனால், கடந்தவார நற்செய்தியைவிட இந்த வாரம்தான் நற்கருணைக்கான கூறுகள் அதிகம் காணப்படுகின்றன. இன்றைய நற்செய்தியில்தான் 'பானம் அல்லது இரத்தம்' இடம்பெறுகிறது. மேலும், இந்த உணவும், இரத்தமும் மக்கள் வாழ்வு பெறுவதற்காக இயேசுவால் கையளிக்கப்படுகிறது. ஆக, என்னை உண்ணுங்கள் என்று சொல்லும்போது, அது நற்கருணையைக் குறிக்கிறது என எடுத்துக்கொள்ளலாம்.

ஆ. வார்த்தையும் உணவே. 'மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றினாலும் உயிர்வாழ்கிறார்' என்று இயேசுவின் சோதனையின்போது மற்ற நற்செய்தியாளர்கள் வெளிப்படையாக எழுதுவது யோவானின் நற்செய்தியில் மறைந்து கிடக்கிறது. ஆக, இயேசுவின் வார்த்தையும் உணவுதான்.

உணவு என்பது இறைவாக்கையும், நற்கருணைiயும் குறிக்கிறது என்று சொல்லி இந்த நற்செய்தியை ரொம்ப எளிதாக்கிவிடுவும் எனக்குப் பயமாக இருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் வேறொன்றைக்கூட இயேசு சொல்லியிருக்கலாம். இன்னும் தேடுவோம்!

இப்போதைக்கு இறைவார்த்தையும், நற்கருணையும் இயேசு தரும் உணவு என்ற எடுத்துக்கொள்வோம்.

இந்த இரண்டும் அதை உண்பவருக்குத் தரும் வாக்குறுதிகளும் இரண்டு:

அ. அவர்கள் என்னோடு இணைந்திருப்பர் (6:56)
ஆ. அவர்கள் வாழ்வு பெறுவர் (6:57)


வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் சாட்களில் இருக்கும் பச்சைப் புள்ளி நமக்குச் சொல்லும் கருத்து என்ன? நாமும், நம் நண்பர் ஒருவரும் இணைந்திருக்கிறோம் என்பதுதான். நாம் சாலையில் நடந்து செல்லும்போது எரியும் பாதசாரிகளின் பச்சைவிளக்கு சொல்வதும் இதுதான்: 'இப்போது சாலையின் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் இணைக்கப்படுகிறது. நீ பாதுகாப்பாக நடந்து செல்லலாம்!'

இன்று நாம் நம்மையறிந்தோ, அறியாமலோ மற்றவரோடு இணைந்தே இருக்கிறோம்: இரத்த உறவு வழியாக, திருமண உறவு வழியாக, அருள்நிலை வாக்குறுதி வழியாக, மருத்துவமனையில், திரையரங்கில், பேருந்தில், சிற்றுண்டி சாலைகளில், உணவகங்களில், வழிபாடுகளில், பொதுக்கூட்டங்களில். இந்த இணைந்திருத்தல்கள் ஒரே வகையும் அல்ல. 'இணைந்திருத்தல்' என்னும் சொல்லாடலை யோவான் திராட்சைக்கொடி உருவகத்திலும் கையாளுகின்றார் (காண்க. 15:1-17). 'இணைந்திருத்தல்' என்பது தமிழ்ப்பதமாக இருந்தாலும், கிரேக்கத்தில் இது 'நிலைத்திருத்தல்' அல்லது 'குடியிருத்தல்' (மெனோ) என்றே இருக்கிறது. நாம் இணைந்திருத்தல் என்ற பதத்திலேயே சிந்திப்போம்.

இணைந்திருத்தல் என்று சொல்லும்போது நாம் இரண்டு கேள்விகளைக் கேட்க வேண்டும்: ஒன்று, யாரோடு? இரண்டு, எதற்காக? இந்த இரண்டிற்கும் பதில் சரியானதாக இருந்தால்தான் இணைந்திருத்தல் நிறைவு பெறும். உதாரணத்திற்கு, ஒரு மாணவன் ஆசிரியரோடு இணைந்திருக்கிறான். இந்த இணைந்திருத்தலில் கற்றல் என்ற நோக்கம் இருக்கிறது.

'அவரிடம் வாழ்வு இருந்தது. அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது!' (யோவான் 1:4) என நமக்கு வாழ்வாக வரும் இயேசு தன்னையே வாழ்வுதரும் வார்த்தையாக, தண்ணீராக, ஒளியாக, உணவாக வாக்களித்துக்கொண்டே இருக்கின்றார்.  எது குறைவாக இருக்கிறதோ அதுவே அதிகம் தேவையாக இருக்கிறது. ஆக, இயேசுவின் காலத்தில் இறப்பின் அல்லது இழப்பின் காரணிகள் மேலோங்கியிருந்திருக்க வேண்டும். ஆகையால்தான், அதற்கு மாற்றாக வாழ்வை முன்வைக்கிறார். இன்றைய நற்செய்தியின் எட்டு வசனங்களில் ஒன்பது முறை 'வாழ்வு' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இயேசுவில் முரண்பாடுகள் இருப்பதில்லை. அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரை உண்பதற்கு, அவரை உணர்வதற்கு அவரை அணுகிச்சென்றவர்கள் எல்லாரும் நலம் பெறுகின்றனர். அவர் யாரை அணுகிச்சென்றாலும் அங்கே நலமும், மீட்பும், வாழ்வும் பிறக்கின்றது.

இறுதியாக, 'ஞானமா, மதிகேடா?' 'இயேசுவா, மன்னாவா?' - எதைத் தேர்ந்துகொள்வது?இந்தத் தெரிவு நம் ஒவ்வொருவரின் விருப்பத்தைப் பொறுத்ததே. ஞானத்தை அடைவது ஒரு வாழ்க்கைப் பயணம். அது கட்டியிருக்கும் வீடு மலைமேல் இருக்கிறது. அதற்குப் படிகள் கிடையாது. நாமாக முயற்சித்து மேலே ஏற வேண்டும். யாரும் செல்லாத வழி அது. நாமாகத்தான் பாதையைக் கண்டுபிடிக்க வேண்டும். மன்னா கிடைக்கும் பாலைநிலத்திற்கான வழி அகலமானது. பல வழிகளில் பாலைநிலம் செல்லலாம். ஆனால், இயேசுவை அடையும் ஒரே வழி இடுக்கமான வழி. இன்று அகல விரித்து விளம்பரங்களைக் காணும் நாம் அவற்றிற்குக் கீழே சின்ன எழுத்துக்களில் வரும் நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் கண்டுகொள்வதில்லை. நிபந்தனைகள் இல்லாத அழைப்பு ஞானத்தின்-இயேசுவின் அழைப்பு. இவற்றை வாங்கும்போது ஏற்படும் நிறைவு நீடித்தது.

ஞானமும், இயேசுவும், 'என்னை வாங்கிவிட்டீர்களா?' எனக் கேட்கின்றனர். நம் பதில்?


 

Monday, 6 August 2018

ஆண்டின் பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு



ஆண்டின் பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்
1 அரச 19:4-8
எபே. 4:30-52
யோவா. 6:41-51



ஞாயிறு இறைவாக்கு - அருள் பணி முனைவர் ம.அருள்


நற்கருணை

ஒரு குகையிலே வாழ்ந்த ஒரு ஞானி சாகாமைக்கு மருந்து கண்டு பிடித்திருப்பதாகவும், அதைப் பெற விரும்புவோர் குறிப்பிட்ட ஓர் இடத்தில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து கூடும்படியும் விளம்பரம் செய்தார். கடல் அலையென ஏராளமான மக்கள் வந்து குவிந்தார்கள். ஞானியார் வந்தவுடன், மக்கள் பரபரப்போடு அவர் சொல்வதைக் கேட்க ஆவலோடு இருந்தார்கள். மக்கள் கூட்டத்தைப் பார்த்து நீங்கள் இறவாமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் பிறவாமல் இருந்திருக்க வேண்டும் என்றார். வந்தவர்கள் அனைவரும் வெட்கத்தால் தலைகுனிந்து வீடு திரும்பினார்கள்.

அருமையான சகோதரனே! சகோதரியே! சாகாமைக்கு மருந்து இல்லை. பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று வந்தே தீரும். இது இயற்கையின் நியதி. காலத்தின் கட்டாயம். ஆனால் இயேசு கிறிஸ்து சாகாமைக்கு மூன்று வகையான மருந்துகளை வழங்குகிறார். இந்த மூன்றையும் நமதாக்கிக் கொண்டால் நாம் நிலை வாழ்வு பெறுவோம். சாவு நம்மைப் பாதிக்காது.

சாகாமைக்கு இயேசு வழங்கும் முதல் மருந்து என்ன? அவரில் நம்பிக்கை கொள்வதாகும். இன்றைய நற்செய்தியிலே என்னை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர் (யோவா. 6:47). மேலும் வாசரை உயிர்த்தெழச் செய்யும் முன் மார்த்தாவிடம் சொன்னார் : உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் (யோவா. 11:25-26).

சாகாமைக்கு இயேசு வழங்கும் இரண்டாவது மருந்து 

அவருடைய வார்த்தையைக் கடைப்பிடித்தலாகும்.

என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் (யோவா. 8:51) என்று இயேசு கூறுகின்றார். நான் கூறிய வார்த்தைகள் ஆவியும் உயிரும் ஆகும் (யோவா. 6:63) என்கிறார். நாங்கள் யாரிடம் செல்வோம்? வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன. (யோவா. 6:68).

சாகாமைக்கு இயேசு வழங்கும் மூன்றாவது மருந்து


அவருடைய திருவுடலாகும். இன்றைய நற்செய்தியில் வாழ்வு தரும் உணவு நானே! இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் (யோவா. 6:51).

பகுதி - II

 
ஆண்டவருடைய அருள் வாக்கைக் கேட்டு அதைச் சுவைத்த பின்னரே ஆண்டவருடைய திருவுடலாகிய நற்கருணையை உட்கொள்வது முறையாகும். எனவேதான் ஒவ்வொரு திருப்பலியிலும் அருள்வாக்கு வழிபாடு முதல் பகுதியாகவும் - நற்கருணை வழிபாடு இரண்டாம் பகுதியாகவும் அமைந்துள்ளன. இந்த நற்கருணையானது இறைவனின் திருப்பிரசன்னம், ஒரு திருப்பலி, அதோடு ஒரு திருவுணவு என்ற மூன்று முக்கிய பரிமாணங்களை உள்ளடக்கியது.

இன்றைய முதல் வாசகத்தைப் பாருங்கள் (1 அரச 19:4-8)


 எலியா தீர்க்கதரிசி மனச்சோர்வினால் சாக விரும்புகிறார். இருப்பதைவிட இறப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்து உறங்கும் வேளையில் வானதூதர் இரண்டு முறை அவரைத் தட்டி எழுப்பி எழுந்து சாப்பிடு என்று கூறி அப்பமும் தண்ணீரும் கொடுக்கிறார். எலியா அந்த உணவினால் வலிமைப் பெற்று நாற்பது நாட்கள் நடந்து ஒரேபு என்ற கடவுளின் மலையை அடைகிறார். எலியாவுக்கு உணவு தேவைப்பட்டது போல் பயணம் செய்யும் திருச்சபையில் இருக்கும் நமக்கும் உணவு தேவைப்படுகிறது. நமது வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு ஏற்படும் இளைப்பு, களைப்பு, ஏக்கம், மனச் சோர்வை நீக்க ஆண்டவர் நமக்கு வழங்கும் பயண உணவு அவருடைய அருள்வாக்கும் அவரது திருவுடலுமாகும். இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க இயலாத வகையில் இணைந்துள்ளது.


உம் சொற்கள், என் நாவுக்கு எத்துணை இனிமையானவை. என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை (தி. பாடல் 119:103) என்று திருப்பாடல் ஆசிரியர் பாடுகிறார்.
ஆண்டவர் எவ்வளவு இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள் (தி. பா. 34:8) என்றும் பாடுகிறார் திருப்பாடல் ஆசிரியர்.

எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்களுக்கு உயிர்த்த ஆண்டவர் கொடுத்தது முதலில் அருள்வாக்கு, மறைநூலை விளக்கினார். அதன் பின்னரே அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தார். அவர்கள் இயேசுவைக் கண்டு கொண்டார்கள் (லூக். 24:25-31).

முடிவுரை:
இயேசுவை நாம் உண்டால் மட்டும் போதாது. நாம் இயேசுவாக மாற வேண்டும். என்னை உண்போர் என்னால் வாழ்வர் (யோவா. 6:57) என்ற வார்த்தை அந்த உண்மையை உணர்த்துகிறது. வாழ்வது நானல்ல. இயேசுவே என்னில் வாழ்கிறார் (கலாத். 2:20) என்று கூற வேண்டும். இயேசுவாக மாறுவது என்றால் மனக்கசப்பு, சீற்றம், சினம், கடுஞ்சொல் , தீயவை தவிர்த்து பிறர்பால் பரிவு காட்டி மன்னித்து வாழ அழைக்கப்படுகிறோம். இயேசு விரும்பிய இறையாட்சியை நாம் வாழும் இம்மண்ணில் இப்போதே மலரச் செய்ய நாம் இயேசுவாக மாற வேண்டும். இதற்குத் துணையாக இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு, அவர் தந்த அருள்வாக்கைக் கடைப்பிடித்து, அவரது திருவுடலை உண்டு, சாகா வரம் பெற்றவர்களாக நாம் வாழ்வோம்.





மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் - குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி


இதோ ஓர் அற்புத மருந்து ஆப்பிரிக்கா கண்டத்தில் வாழும் ஒருவகையான காட்டுப்பூனைகளுக்கும், காடுகளில் வாழும் நஞ்சு நிறைந்த பாம்புகளுக்குமிடையே அடிக்கடி சண்டை நடக்கும். எப்பொழுதெல்லாம் சண்டை நடக்கின்றதோ அப்பொழுதெல்லாம் காட்டுப்பூனைகள் வெற்றி பெறும்.

தன்னை பாம்பு கடித்துவிட்டால், பூனை உடனே ஓடிப்போய் ஒரு குறிப்பிட்ட புல்லின் மீது புரளும். அந்தப் புல் அந்தப் பூனையின் மீது பட்ட காயத்தின் வழியாக நஞ்சை உறிஞ்சி எடுத்துவிடும்; பூனை பிழைத்துக்கொள்ளும். போரிலே வெற்றிபெறும் வரை, காயப்படும்போதெல்லாம், பூனை புல்லைப் பயன்படுத்திக்கொள்ளும்.

பல நேரங்களில் நம்மையே நாம் காயப்படுத்திக்கொள்கின்றோம்; அல்லது மற்றவர்களால் காயப்படுத்தப்படுகின்றோம். இப்படி காயப்படும்போது அந்தக் காயங்களால் ஏற்படும் வலியிலிருந்து. பாதிப்புகளிலிருந்து விடுதலை அடைய ஓர் அருமையான வழி, இனி வாழ்பவன் நானல்ல ; கிறிஸ்துவே என்னில் வாழ்கின்றார் (கலா 2:20) என்று கூறிய புனித பவுலடிகளாரைப் போல நற்கருணை ஆண்டவரோடு ஐக்கியமாவதாகும்.

நற்கருணை ஆண்டவர் ஓர் அற்புத மருந்து, மூலிகை. அன்று பாலை நிலத்தில் கிடைத்த உணவு (முதல் வாசகம்) மக்களின் உடல் பசியை மட்டும்தான் தீர்த்தது. ஆனால் நம்மை எல்லா விதமான பாதிப்புகளிலிருந்தும் காக்கும் ஆற்றல் இயேசுவின் உடலுக்கு உண்டு (யோவா 2:1-11, மத் 9:27-31, லூக் 7:36-50, மாற் 1:21-28, யோவா 11:1-44). இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடிகளார் காட்டும் வழியில் நம்மை நடக்க வைக்கும் சக்தி நற்கருணைக்கு உண்டு.

மேலும் அறிவோம் :
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின் (குறள் : 217).

பொருள் : உலக நலம் பேணும் பெருந்தகையாளனிடம் செல்வம் திரளுமானால், அது பூ, இலை, தளிர், காய், கனி, வேர், பட்டை ஆகிய அனைத்து உறுப்புகளாலும் பிணி போக்கும் மருந்து மரத்துக்கு இணையானதாகும்.



மறையுரை மொட்டுக்கள்-அருள்பணி Y இருதயராஜ் 


பழங்காலத்தில் வாழ்ந்த ஒரு ஞானி, சாகாமைக்கு அவர் மருந்து கண்டுபிடித்திருப்பதாகவும், அதைப் பெற விரும்புவோர் குறிப்பிட்ட ஒரு வளாகத்தில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் வரும்படியும் விளம்பரம் செய்தார். கடல் அலையென பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து குவிந்தனர், ஞானியார் அவர்களைப் பார்த்து, நீங்கள் இறவாமல் இருக்க வேண்டு மென்றால், நீங்கள் பிறவாமல் இருந்திருக்க வேண்டும்" என்றார். வந்தவர்கள் அனைவரும் வெட்கத்தால் தலை குனிந்து விடு திரும்பினர்.

சாகாமைக்கு மருந்து இல்லை. பிறப்பு என்று ஒன்றிருந்தால் இறப்பு என்று ஒன்று இருந்தே தீரும். இது இயற்கையின் நியதி; காலத்தின் கட்டாயம். ஆனால் இயேசு கிறிஸ்து சாகாமைக்கு மூவகையான மருந்தை நமக்கு வழங்குகிறார். இம்மூன்றையும் இணைத்துச் சாப்பிட்டால் நாம் நிலை வாழ்வு பெறுவோம்; சாவு நம்மைப் பாதிக்காது.

சாகாமைக்கு இயேசு வழங்கும் முதல் மருத்து: அவரில் நம்பிக்கை கொள்வதாகும். இன்றைய நற்செய்தியில், என்னை நம்புவோம் நிலை) வாழ்வைக் கொண்டுள்ளனர்" (யோவா 6:47) எனகிறார். மேலும், இலாசரை உயிர்த்தெழச் செய்யுமுன் மாத்தாவிடம், *உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. . . என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்" (யோவா 11:25 28) என்று திட்டவட்டமாகக் கூறினார்.

சாகாமைக்கு இயேசு வழங்கும் இரண்டாவது மருந்து: அவருடைய வார்த்தையைக் கடைப்பிடித்தலாகும். "என் வார்த்தையைக் கடையிடிப்போர் என்றுமே சாக மாட்டார்கள" (யோவா 3:51).

சாகாமைக்கு இயேசு வழங்கும் மூன்றாவது மருந்து: அவருடைய திருவுடலாகும், இன்றைய நற்செய்தியில், வாழ்வு தரும் உணவு நானே ... உண்பவரை இறக்காமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே" (யோவா 6:48 - 50) என்று இயேசு சுட்டிக் காட்டுகிறார்,
நற்கருணையை உட்கொள்ளுமுன் கிறிஸ்துவை நம்பி, அவருடைய வார்த்தையைக் கடைப்பிடிக்க வேண்டும். கிறிஸ்துவை நம்பி, அவருடைய வார்த்தையைக் கடைப்பிடிப்பதின் உச்சக் கட்டமே நற்கருணையை உட்கொள்வதாகும். கிறிஸ்துவின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்காமல், அவருடைய திருவுடலுக்கு மட்டும் மதிப்புக் கொடுத்தால் போதுமா? என்று உண்மையையே பேசுபவர் (2 கொரி 1:19). அவர் நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் (எபி 13:8). உண்மையும் நம்பிக்கையும் உடைய அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதும் உண்மையும் நம்பிக்கையும் பற்றுறுதியுமாகும்.

கடவுளிடம் நாம் எவ்வாறு பற்றுறுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு இன்றைய முதல் வாசகத்தில் யோசுவாவும், நற்செய்தியில் பேதுருவும் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகத் திகழ்கின்றனர்.

இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளுக்கு ஊழியம் புரிந்தாலும் பிற இனத்தெய்வங்களையும் வழிபட்டு, இருமனத்தோராய் திகழ்ந்தனர். இந்நிலையில் யோசுவா அம்மக்களிடம், "நானும் கால் வீட்டாரும் ஆண்டவருக்கே கோழியம் புரிவோம்" (யோசு 24:15) என்று திட்டவட்டமாகக் கூறினார். அவ்வாறே, எல்லாரும் இயேசுவை விட்டுச் சென்ற கட்டத்திலும் பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" (யோவா 6:67) என்று திண்ணமாக அறிக்கையிடுகிறார். ஒருவருக்குக் கேடுகாலம் வருவதும் ஒருவிதத்தில் நல்லது; ஏனெனில் அப்போதுதான் அவருடைய உண்மையான நண்பர்கள் யார் என்பதை இனம் காண முடியும் என்கிறார் வள்ளுவர்,

கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைநரை
நீட்டி அளப்பதோர் கோல் (குறள் 796)

குளத்தில் தண்ணீர் இருக்கும்போதுதான் அதில் கொக்கும் மீனும் இருக்கும். தண்ணீர் வற்றி வறண்டு விட்டால் பறவைகள் வேறிடத்திற்குப் பறந்து போய்விடும். மாறாக, அக்குளத்திலுள்ள செடிகொடிகன் அக்குளத்திலேயே இருந்து அதிலேயே மாண்டுவிடும். இன்பத்தில் நட்புரிமை கொண்டாடி துன்பத்தில் காலை வாரிவிடுபவர்கள் நண்பர்கள் அல்ல. நயவஞ்சகர்கள்.

ஓர் உண்மைக் காதலன் தன் காதலியிடம், "நீ மாலையானால் நான் அதில் மலராவேன். நீ பாலையானால் நான் அதில் மணலா வேன்" என்கிறான். இன்றைய இரண்டாம் வாசகத்தில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள உறவு கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையேயுள்ள பிரிக்க முடி யாத உறவு என்பதை விளக்குகிறார் புனித பவுல். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் வெட்டிப் பிரித்தாலும் விட்டுப் பிரியாமல் இருப்பவர்களே உண்மையான தம்பதியர். அவ்வாறே இயேசுவுக்கும் அவருடைய அன்பின் அருள் அடையாளமாகிய நற்கருணைக்கும் நாம் என்றும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான், அவனுக்கு இயேசுவின் மீதோ நற்கருணை மீதோ உண்மையான பற்றுறுதி இல்லை. நற்கருணை பற்றி இயேசு கொடுத்த விளக்கத்தின் இறுதியில் அவர் யூதாசை "அலகை" என்று அழைத்தார் (யோவா 6:70). இயேசுவின் இறுதி உணவின்போது அவளுக்குள் அலகை நுழைந்தது: நற்கருணையில் பங்கேற்காமல் அலகை அவனை இருளில் அழைத்துச் சென்றது (யோவா 13:27-30).

யூதாசு நமக்கெல்லாம் ஓர் எச்சரிக்கை, இன்றும் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களில் சிலர் நற்கருணையை விட்டு விலகிப் பிரிவினை சபைகளுக்குச் செல்கின்றனர், அவர்கள் மீண்டும் நற்கருணையிடம் திரும்பி வருவது அரிது.

ஒரு பெண்மணியிடம் பிரிவினை சபையினர், "நீங்கள் எங்கள் சபைக்கு வாருங்கள். உங்களின் தீராத நோயை எடுத்துவிடுகிறோம்" என்று அழைத்தனர். அப்பெண்மணியோ, "நற்கருணை ஆண்டவர் என்னைக் குணப்படுத்தாவிட்டால், வேறு எந்த சபைக்கும் போக, நான் தயாராக இல்லை " என்று உறுதிபடக் கூறினார், சுண்டல் கொடுக்கிற கோவில்களுக்கெல்லாம் ஒடும் சிறு பிள்ளைகளைப்போல், இங்கும் அங்குமாகப் புற்றீசல்போல் பலுகிவரும் பிரிவினை சபைகளுக்கு ஒடும் இழிநிலையைக் கைவிட வேண்டும். அல்கையின் வஞ்சக வலையில் வீழ்ந்து நம் ஆன்மாவை இழக்கக் கூடாது.

எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்களுக்கு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்து, தம்மை அவர்களுக்கு அடையாளம் காட்டிய உயிர்த்த ஆண்டவர். அவர்கள் கண்கள் திறந்தவுடன் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார், ஏன்? இனிமேல் இயேசுவின் இரண்டாம் வருகைவரை, அவரை நாம் அப்பம் பிடுவதில், அதாவது நற்கருணைக் கொண்டாட்டத்தில் காண வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாகும். இயேசுவின் விருப்பத்தை ஏற்காதவர்கள் இயேசுவின் சீடர்கள் அல்ல. அவர்கள் யாரோ? யான் அறியேன் பராபரமே!




நமக்குத் தெரியாதா?
அருள்பணி ஏசு கருணாநிதி


'தெரியும்' என்ற தமிழ் வார்த்தை 'நம் கண்கள் பார்ப்பதையும்,' 'நம் மனம் அறிவதையும்' குறிக்கிறது. உளவியிலில் ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ளக் கற்பிக்கும் நுணுக்கத்தில் 'ஜோஹரி ஜன்னல்' (Johari Window) என்ற ஒன்றைப் பயன்படுத்துகிறார்கள். இந்த ஜன்னலில் நான்கு கட்டங்கள் இருக்கும்: (அ) எனக்குத் தெரியும், பிறருக்குத் தெரியும், (ஆ) எனக்குத் தெரியாது பிறருக்குத் தெரியும், (இ) எனக்குத் தெரியும் பிறருக்குத் தெரியாது, (ஈ) எனக்கும் தெரியாது பிறருக்கும் தெரியாது. எ.கா. 'நான் அணிந்திருக்கும் சட்டையின் நிறம் கறுப்பு' - இது எனக்கும் தெரியும், பிறருக்கும் தெரியும். 'என் சட்டையின் பின்பக்கம் கிழிந்திருக்கிறது' - இது எனக்குத் தெரியாது, பிறருக்குத் தெரியும். 'நான் இப்போது தனிமையாக உணர்கிறேன்' - இது எனக்குத் தெரியும், பிறருக்குத் தெரியாது. 'நாளை மழை வரும்' - இது எனக்குத் தெரியாது, பிறருக்கும் தெரியாது.

இந்த நான்கு கட்டங்களில் நம் வளர்ச்சியை நிர்ணயிக்கும் மற்றும் தடை செய்யும் கட்டம் 2வது கட்டம். எப்படி?

'என் சட்டையின் பின்பக்கம் கிழிந்திருப்பது' எனக்குத் தெரியாது. ஆனால் அது பிறருக்குத் தெரியும். நான் வகுப்பிற்குச் செல்கிறேன் என வைத்துக்கொள்வோம். கிழிந்த சட்டையோடு நான் மாணவர்முன் நின்றால் அது நான் என்னைப் பற்றி அக்கறையில்லாதவனாய் இருக்கிறேன் என்ற ஒரு உருவத்தை அவர்கள் மனத்தில் உருவாக்கும். அல்லது கிழிந்த சட்டை போட்டிருப்பதால் எனக்கே அது எதிர்மறையான உணர்வைத் தரும். நான் பாதிவழி போய்க்கொண்டிருக்கும்போது வழியில் வரும் ஒரு மாணவர், 'ஃபாதர் உங்க சட்டை பின்னால் கிழிந்திருக்கு' என சுட்டிக்காட்டும்போது, நான் உடனடியாக அறைக்குச் சென்று சட்டையை மாற்றிக்கொள்கிறேன். ஆக, அந்த மாணவர் சுட்டிக்காட்டியதால் நான் இங்கே வளர்கிறேன். ஆனால், அதே வேளையில், 'எனக்குத் தெரியவில்லை என்றாலும், 'எனக்குத் தெரியாதா?' நீ வேலையைப் பார்த்துக்கொண்டு போ' என்று சொல்லும்போது, அதுவே என் வளர்ச்சியைத் தடை செய்கிறது.

ஆக, எனக்குத் தெரியவேண்டுமென்றால் மற்றவர் எனக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

'தெரிதலும், கற்றுக்கொடுத்தலும்' என்ற இரண்டு வார்த்தைகள் நம் வாழ்நாள் வரை நம்மோடு வரக்கூடிய வார்த்தைகள். ஏனெனில் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும், பொழுதிலும் நாம் தெரிந்துகொள்கிறோம், கற்றுக்கொடுக்கப்படுகிறோம்.

'தெரிதல்' 'கற்றுக்கொடுத்தல்' என்ற இரண்டு வார்த்தைகளை மையமாக வைத்து இன்றைய வாசகங்கள் சுழல்கின்றன:

அ. 'நான் நல்லவன் அல்ல. நான் சாக வேண்டும்' என்று தன்னைத் தெரிந்து வைத்துள்ளார் எலியா. ஆனால் இறைவன், 'நீ எழுந்து சாப்பிடு. நீண்ட பயணம் செய்ய வேண்டும்' எனக் கற்றுக்கொடுக்கின்றார்.

ஆ. 'இயேசுவின் சிலுவை இறப்பு என்பது ஒரு சோகம், தோல்வி, அவமானம்' என இயேசுவைப் பற்றித் தெரிந்து வைத்துள்ளனர் எபேசுத் திருச்சபை மக்கள். ஆனால், 'அது நறுமணம் வீசும் பலியும் காணிக்கையும்' என கற்றுக்கொடுக்கின்றார் பவுல்.

இ. 'இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு என்பதும், இவருடைய தாய் மற்றும் தந்தை யார் என்று தெரியும்' என இயேசுவைத் தெரிந்து வைத்துள்ளனர் யூதர்கள். ஆனால், 'நான் வானிலிருந்து இறங்கி வந்த உணவு' எனக் கற்றுக்கொடுக்கின்றார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். 1 அர 19:4-8) நம் சிந்தனையைத் தொடங்குவோம்.

இஸ்ரயேலின் அரசன் ஆகாபு சமாரியாவில் இருந்துகொண்டு ஆட்சி செய்தபோது சீதோனிய நாட்டு ஈசபேலை மணக்கின்றார். மணமகளாக வருகின்ற ஈசபேல் தன்னோடு தன் பாகால் தெய்வத்தையும் சமாரியாவுக்குள் கொண்டு வருகின்றார். தன் மனைவியை திருப்திப்படுத்த நினைக்கும் ஆகாபு தன் இறைவனாம் யாவேயை மறந்துவிட்டு பாகாலுக்கு கோவிலும் பலிபீடமும் கட்டுகின்றான் (1 அர 17:32). பாகால் வழிபாட்டைக் கண்ணுற்ற யாவே வானங்களை அடைத்து மழைபொழியாமால் செய்துவிடுகிறார். கொடிய பஞ்சம் நிலவுகிறது. 'பஞ்சத்தைப் போக்கும் வழி என்ன?' என்று தன் இறைவாக்கினர் எலியாவைக் கேட்கின்றான் ஆகாபு. 'பாகால் தெய்வ வழிபாடும், பாகாலின் இறைவாக்கினர்களும் அழிக்கப்பட வேண்டும்!' என்கிறார் எலியா. சொன்னதோடு மட்டுமல்லாமல், கர்மேல் மலையில் (1 அர 18:20) அரசன் மற்றும் மக்கள் முன்னிலையில் பாகால் இறைவாக்கினருக்கு சவால் விட்டு, பாகால் பொய் என்றும், யாவே இறைவனே உண்மையானவர் என்றும் நிரூபிக்கின்றார். வானம் திறக்க, மழை கொட்டுகின்றது. பாகால் தெய்வத்தின் பீடமும், அதன் பொய்வாக்கினரும் அழிக்கப்பட்டதைக் கேள்வியுற்ற அரசி ஈசபேல் எலியாவைக் கொல்லத் தேடுகின்றார். எலியா இப்போது அவளிடமிருந்து தப்பி ஓடுகின்றார். அப்படித் தப்பி ஓடும் வழியில் நடக்கும் நிகழ்வே இன்றைய முதல் வாசகம்.

தன் உயிரை எடுத்துக்கொள்ளுமாறு எலியா இறைவனிடம் முறையிடுகின்றார் (19:4). வானதூதர் 'எழுந்து சாப்பிடு!' என உணவு தருகின்றார் (19:5). மீண்டும் படுத்துக் கொள்கிறார் எலியா (19:6). வானதூதர் மறுபடியும் சாப்பிட அழைக்கின்றார் (19:7). அப்பத்தினால் நிறைவுபெற்ற எலியா நீண்ட பயணம் மேற்கொள்கின்றார் (19:8). 'சாக வேண்டும்', 'தூங்க வேண்டும்', 'நடக்க வேண்டும்' என்று எலியாவின் வாழ்க்கை படுக்கையிலிருந்து நடத்தலுக்குக் கடந்து போகின்றது. வானதூதர் இரண்டு முறை உணவு தருகின்றார்: முதல் முறை அவரது உயிருக்கு, இரண்டாம் முறை அவரது உடலுக்கு.

இஸ்ரயேலின் மாபெரும் இறைவாக்கினராக எலியா இருந்தாலும், யாவே இறைவனின் உடனிருப்பை மக்களுக்கு அவர் வெளிப்படுத்தினாலும், யாவே இறைவனின் எதிரியான பாகாலின் ஆலயத்தை இடித்து, பொய்வாக்கினர்களைக் கொன்றாலும், வெறுமையும், தனிமையும், பயமும் அவரைப் பற்றிக்கொள்கின்றன. ஈசபேலின் வாள்தான் தன் கண்முன் தெரிகின்றது. உயிரைக் காத்துக்கொள்ளுமாறு தப்பி ஓடும் (19:3) எலியா அதை எடுத்துவிடுமாறு இறைவனிடம் இரண்டுமுறை வேண்டுகின்றார் (19:4). அதாவது, வாழ்வதற்கு இன்னும் வாய்ப்பில்லை என்றவுடன் மனம் எளிதாகத் தப்பித்துக்கொள்ள தேர்ந்தெடுக்கும் குறுகிய வழிதான் 'மறைசாட்சி மனப்பான்மை' (Martyr Complex). மேலும், தான் அளப்பரிய பணியைச் செய்து முடித்தாலும், 'நான் அவர்களைவிட நல்லவன் அல்ல' எனப் புலம்புகின்றார்.

எலியா தன்னைப் பற்றித் தெரிந்து வைத்திருந்ததோ இவ்விரண்டும்தான்: 'நான் சாக வேண்டும்,' 'நான் நல்லவன் இல்லை.'

ஆனால், இறைவனின் கற்றுத்தருதல் இங்கே வேறுவிதமாக இருக்கிறது. மூன்று அற்புதங்கள் இந்த நிகழ்வில் நடந்தேறுகின்றன. ஒன்று, பாலைவனத்தில் சூரைச் செடி இருக்கிறது. அந்த சூரைச்செடியின் நிழலில் ஒருவர் படுத்துறங்கும் அளவிற்கு நிழல்தரக்கூடியதாக இருக்கிறது. இரண்டு, தணல் மூட்டப்பட்டு அதில் அப்பம் சூடாகிக்கொண்டிருக்கிறது. மூன்று, குவளையில் தண்ணீர் இருக்கின்றது. பாலைநிலத்தில் மரங்கள் வளர்வதில்லை. ஏனெனில் பாலைநிலக் காற்றை மரங்களால் எதிர்த்து நிற்க முடிவதில்லை. ஆக, நம் காலுயரச் செடிகள்தான் அதிக அளவில் இருக்கும். காலுயரச் செடிகள் நிழல் தருவதுமில்லை. ஆனாலும், இறைவனின் பராமரிப்பால் நிழல்தரும் சூரைச்செடி கிடைக்கின்றது. மரம் அல்லது நிழல் என்பது நமக்கு மேல் இருக்கும் ஒருவகையான கூரை. யாரின் தலைமேல் கூரை இருக்கிறதோ அவர்தான் பாதுகாப்பானவர் என்கிறோம்.தலையின் மேல் கூரையாக மரத்தைத் தருவதன் மூலம் எலியாவின் பாதுகாப்பை உறுதி செய்கின்றார் இறைவன். இரண்டாவதாக, அப்பம். அப்பம் சுடுவது (அன்றைய நாளில்) மிக நீண்டகால வேலை. மாவு பிசைய வேண்டும். அது புளிக்க வேண்டும். நெருப்பு மூட்ட வேண்டும். பின் பக்குவமாக செய்ய வேண்டும். இந்த எந்த உழைப்பும் இல்லாமல் எலியாவின் பசி ஆற்றப்படுகிறது. மூன்று, குவளையில் தண்ணீர் குடிப்பவர்கள் வீட்டில் வசிப்பவர்கள் மட்டும்தான். பயணத்தில் அல்லது பாலைநிலத்தில் தோல்பைகள்தாம் தண்ணீர்கொள்ளப் பயன்படுத்தப்படும். ஆக, ஒரு வீட்டில் இருப்பது போல பாதுகாப்பையும், பசிதாகம் ஆற்றப்படும் பாக்கியத்தையும் பெறுகின்றார் எலியா.'சாக வேண்டும்' என மன்றாடிய எலியா 'படுத்துக் கொள்கிறார்'. தான் சொன்னதை செயலில் காட்டுகின்றார். அதாவது, ஒருவர் அதிகம் தூங்குகிறார் என்றால் அவரின் மனச்சோர்வு அல்லது மனச்சுமை அதிகம் என்பது அர்த்தம். தூக்கம் ஒரு தற்காலிக சுதந்திரம் தருகிறது. தூக்கத்தில் இந்த உலகம் நமக்கு இருட்டாகிவிடுகிறது. நம் எதிரிகள் எல்லாம் மறைந்துவிட்டதாக ஒரு மாயை பிறக்கிறது. 'நான் இனி எந்தச் செயலையும் செய்யப்போவதில்லை' என்பதைச் சொல்லாமல் மற்றவர்களுக்குச் சொல்வதும் தூக்கம்தான்.இப்படித் திரும்பப் படுத்துக்கொள்வது நம்மை எதார்த்தத்திலிருந்து தப்பிக்க உதவினாலும், இந்தத் தீர்வு தற்காலிகமானதுதான். நாம் எழுந்து இந்த உலகைச் சந்தித்தே ஆக வேண்டும். இவ்வாறாக, உணவு கொடுத்து நீண்ட பயணத்திற்கு எலியாவை அனுப்புகிறார் இறைவன்.

'என் வாழ்வு முடிந்துவிட்டது' எனத் தெரிந்துவைத்துள்ளார் எலியா. ஆனால், 'முடிவு அல்ல இது. இன்னும் நீ செல்லவேண்டிய பாதை இருக்கிறது' எனக் கற்றுக்கொடுத்து அனுப்பி வைக்கிறார் இறைவன்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 4:30-5:2), கிறிஸ்துவின் உடலில் துலங்கும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் மாதிரியாக தன் எபேசுத் திருச்சபைக்கு அளிக்கும் பவுலடியார், அவர்கள் அந்த மாதிரியில் தங்கள் வாழ்வை கட்டமைத்துக்கொள்ள வாழ்வியல் விதிமுறைகளைத் தருகின்றார். 'மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள்!' (4:31), 'ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டுங்கள். ஒருவரையொருவர் மன்னியுங்கள்' (4:32), 'நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப் போல் ஆகுங்கள்!' (5:1), என்று அறிவுரை சொல்கின்ற பவுல் இறுதியாக ஒரு அழகிய உருவகத்தைக் கையாளுகின்றார்.

தொடக்கக் கிறிஸ்தவர்கள் இயேசுவை நம்புவதற்குத் தடையாக இருந்தது அவருடைய சிலுவை மரணம். குற்றவாளிகளில் ஒருவராக, இரண்டு குற்றவாளிகளுக்கு நடுவே, கொடிய சிலுவை மரணத்தைத் தழுவிய இயேசுவை ஏற்றுக்கொள்ள அவர்களுக்குச் சிலுவை இடறலாக இருந்தது. இவ்வாறாக, அவர்களுக்குத் தெரிந்த இந்த உண்மை அவர்களுடைய நம்பிக்கைக்குத் தடையாக இருந்தது. இந்தத் தடையை நீக்க புதிய இறையியலைக் கற்றுக்கொடுக்கின்றார் பவுல்:

'கிறிஸ்து உங்களுக்காக தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாக கடவுளிடம் ஒப்படைத்து ...'

இயேசுவின் இறப்பு அவருக்கான இறப்பு அல்ல, மாறாக, அனைவருக்குமான இறப்பு. மேலும், தூசியும், துர்நாற்றமும், எலும்புக் கூடுகளும், கழுகளின் ஓலமும், இரத்தமும், வியர்வையும், அழுக்கும், புளித்த காடியும் இருந்த கல்வாரி மலை சிலுவைப் பலியை, ஏதோ ஒரு ஆலயத்தில், தூய்மையான இடத்தில் நடந்தேறிய 'நறுமணம் வீசும் பலியும் காணிக்கையும்' எனக் கற்றுத்தருகின்றார் பவுல். இவ்வாறாக, தெரிந்த ஒன்றிலிருந்து தெரியாத ஒன்றுக்கு அவர்களை அழைத்துச்சென்று, அந்த நிகழ்வையே வாழ்வியல் மற்றும் நம்பிக்கை பாடமாக ஆக்குகின்றார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 6:41-51) கடந்த வார வாசகத்தின் தொடர்ச்சியே. யூதர்களுக்கும், இயேசுவுக்கும் இடையே 'வாழ்வுதரும் உணவு' விவாதம் தொடர்கிறது. 'யூதர்கள்' என்பவர்கள் யூத மதத்தை அல்லது சமூகத்தைச் சார்ந்தவர்கள் எனச் சொன்னாலும், இங்கே 'யூதர்கள்' என்பதை 'இயேசுவுக்கு எதிரானவர்கள், அவரை ஏற்றுக்கொள்ள இடறல்படுபவர்கள்' என்ற அர்த்தத்தில்தான் பொருள் கொள்ள வேண்டும்.

'வாழ்வு (6:48), நிலைவாழ்வு (6:47), இறுதிநாளில் உயிர்ப்பு (6:44)' - இந்த மூன்று வார்த்தைகளும் இன்றைய நற்செய்தியில் வருகின்றன. வாழ்வு என்பது சாவிற்கு எதிர்ப்பதம் அல்ல. மாறாக, நிறைவாழ்வு. நிலைவாழ்வு அல்லது இறுதிநாளில் உயிர்ப்பு என்பது மறுவாழ்வைக் குறிப்பது போல தோன்றினாலும், அவை மறுவாழ்வைக் குறிப்பதில்லை. மறுவாழ்வு குறித்த சிந்தனை இன்னும் அதிகமாக வேரூன்றாத சூழலில்தான் யோவான் தன் நற்செய்தியை எழுதுகின்றார். மேலும், இயேசுவின் இரண்டாம் வருகை மிக சீக்கிரமாக இருக்கும் என அவர்கள் நம்பினார்கள். ஆக, இறுதிநாள் என்பது அந்த இரண்டாம் வருகையின் நாள் (ஒரு மாதம், இரண்டு மாதங்களுக்குள் நடைபெறும் என்றுதான் அவர்கள் நினைத்தனர்!). 'நிலைவாழ்வு' என்பதை 'நிறைவாழ்வு' (யோவா 10:10) எனவும் எடுத்துக்கொள்ள முடியாது.

யோவான் கிரேக்க சிந்தனை மற்றும் 'அறிவுவாதம்' (Gnosticism) கருத்தியலால்  அதிகம் கவரப்பட்டவர். அவர்காலத்தில் நிலவிய கிரேக்க சிந்தனைப்படி மனிதர் என்பவர் உடல் மற்றும் ஆன்மாவின் கலவை என்று கருதப்பட்டார். ஆக, உடல் அழியக் கூடியது. ஆன்மா அழியாததது. மனிதர்கள் உடலைச் சார்ந்தவற்றைத் தேடினால் அவர்கள் அழிவைத் தேடுகிறார்கள். ஆன்மா சார்ந்தவற்றைத் தேடினால் அழியாததைத் தேடுகிறார்கள். ஆகவேதான், செக்ஸ், குடி, போசனப்பிரியம் மற்றும் விபச்சாரம் என்று வாழ்ந்தவர்கள் தாழ்வானவர்களாகக் கருதப்பட்டனர். இதற்கு மாறாக, அறிவு, புகழ், வெற்றி, கணிதம், ஆராய்ச்சி, தத்துவம் என தேடியவர்கள் அழியாததைத் தேடியவர்களாகக் கருதப்பட்டனர். உடல்-ஆன்மா பிளவு யோவான் நற்செய்தியில் அதிகம் புலப்படுகிறது. இந்த உடல்-ஆன்மா பிளவை யோவான், 'உலகம்-கடவுள்', 'இரவு-பகல்', 'கீழ்-மேல்' என்ற சொல்லாடல்கள் வழியாகவும் வெளிப்படுத்துகின்றார். வாழ்வு பற்றி யோவான் எழுத மற்றொரு காரணம் அவருக்கு யூத விவிலியம் (அதாவது, நம் முதல் ஏற்பாடு) நன்றாகத் தெரிந்தது. யூதர்களின் தோரா நூலின் படி மனிதர்களுக்கு இறுதியாக கடவுள் மோசே வழியாகக் கொடுத்த கட்டளை வாழ்வைத் தேடுங்கள் என்பதுதான்: 'இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன். நீயும் உன் வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள்!' (காண் இச 30:15-20). மனிதர்கள் தேட வேண்டிய வாழ்வு இயேசுதான் என்று இயேசுவை யூத சட்ட மற்றும் இறைவாக்கு நூல்களின் நிறைவாக முன்வைக்கின்றார் யோவான்.

இங்கே, யோவான் நற்செய்தியில் வரும் 'எதிர்மறை நேர்கருத்து' (irony) என்னும் இலக்கியப் பண்பை புரிந்துகொள்வோம். இவ்வகை இலக்கியப் பண்பில் இரண்டு பேருக்கும் இடையில் உரையாடல் நடக்கும். அந்த உரையாடலில் ஒருவர் மேல் கோட்டிலும், மற்றவர் கீழ் கோட்டிலும் இருப்பார். இந்த உரையாடலை வாசிக்கும் நபர் இந்த மேல் கோட்டிற்கும், கீழ் கோட்டிற்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டு உரையாடலின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வார். இந்த இலக்கியப் பண்பு யோவான் நற்செய்தியில் பல இடங்களில் உள்ளன: 'ஒருவர் மீண்டும் பிறக்க வேண்டும்' என மேல் கோட்டில் பேசுவார் இயேசு. 'மீண்டும் எப்படி தாய் வயிற்றுக்குள் நுழைந்து பிறக்க முடியும்' என கீழ்கோட்டில் பேசுவார் நிக்கதேம் (3:1-8). 'அவர் வாழ்வு தரும் தண்ணீரை உனக்குக் கொடுப்பார்' என்பார் இயேசு. 'உம்மிடம் வாளி இல்லையே' என்பார் சமாரியப் பெண் (4:1-42). இந்த நிகழ்வுகளை வாசிக்கும் வாசகர், இந்த இரண்டு கோட்டு அர்த்தங்களையும் பார்த்து ஒரு நொடி புன்னகைப்பார். அந்தப் புன்னகையில் உரையாடலின் அர்த்தம் அவருக்கும் புரிந்துவிடும். இதுதான் இந்த இலக்கியப் பண்பின் சிறப்பு. இன்றைய நற்செய்தியிலும் இந்த இலக்கியப் பண்பு இருக்கிறது. 'விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே' என மேல் கோட்டில் இயேசு சொல்ல, 'இவர் அப்பா - அம்மா நமக்குத் தெரியுமே' எனக் கீழ் கோட்டில் யூதர்கள் சொல்கின்றனர். வாசிக்கும் நமக்குப் புரியும் இந்த யூதர்கள் இயேசுவைப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள் என்று.

இவ்வாறாக, 'எங்களுக்குத் தெரியும்' என்ற அவர்கள் நிலையிலிருந்து சற்று உயர்த்துகின்றார். 'கடவுள்தாமே கற்றுத்தருவார்' என்று அவர்கள் தெரிந்திருந்தும், கடவுளின் கற்றுத்தருதலுக்கு அவர்கள் திறந்த மனம் இல்லாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். எசாயா இறைவாக்கினரின் இறைவாக்கு (54:13) இங்கே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இந்தக் கற்றல் யாருக்குச் சாத்தியம்? 'தந்தையால் ஈர்க்கப்படுபவர்களுக்கே' அது சாத்தியம்.கடவுளை நம்புவதற்கும் கடவுள்தான் அருள்தர வேண்டும். தந்தை தன்னிடம் ஈர்ப்பது என்பது அவரது கற்றுக்கொடுத்தலில் நிறைவு பெறுகிறது (யோவா 6:45). இஸ்ரயேல் மக்களை தன் மகனாக, மகளாக நினைத்து தன்னிடம் அழைக்கின்றார் யாவே இறைவன். யூதர்களின் பொய்யைத் தோலுரித்துக் காட்டுகின்றார் இயேசு: 'உங்க கடவுள் உங்களை மகன் என்றார், ஆனால் அந்தக் கடவுளின் மகனை நீங்கள் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவர் யோசேப்பின் மகன் என்று சொல்லித் தப்பிக்கப்பார்க்கிறீர்கள்.' இவ்வாறாக, இயேசுவின் உடல் பற்றி தெரிந்தவர்களுக்கு, அவர்கள் அறியாத 'விண்ணிலிருந்த உணவு' என்ற சிந்தனையை அவர்களுக்குக் கற்றுத்தருகின்றார் இயேசு.

இன்றைய இறைவாக்கு வழிபாடு வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?

நாம் சிலவற்றைத் தெரிந்துவைத்துள்ளோம். சிலவற்றை மற்றவர்கள் கற்றுத்தருகிறார்கள். அப்படி அவர்கள் கற்றுக்கொடுக்கும்போது அந்தக் கற்றலை நாம் ஏற்றால்தான் நம் தெரிதல் வளரும்.

அ. மூன்று நிலைகள்

'சாகப்போகிறேன்,' 'தூங்கப் போகிறேன்,' 'நடக்கப் போகிறேன்' என்ற நிலையில்தான் கற்றல் நடக்கிறது. 'சாகப்போகிறேன் மனநிலையில்' கற்றலுக்கு இடமே இல்லை. 'தூங்கப் போகிறேன் மனநிலையில்' கற்றல் பாதி நடைபெறுகிறது. 'நடக்கப் போகிறேன் மனநிலையில்தான்' கற்றல் முழுமை அடைகிறது. ஆக, நான் என் வாழ்வில் இந்த மூன்றில் எந்த நிலையில் இருக்கிறேன்? எனக்குத் தெரிவதுதான் உலகம் என நான் நினைத்துவிடக்கூடாது. நாளை நான் புதியவற்றைத் தெரியலாம். எனக்குச் சிந்தனை மாற்றம் வரலாம். ஆக, ஒன்றை நாம் கேட்டவுடன், உணர்ந்தவுடன், 'இதுதான் எல்லாம்!' என்ற முடிவுக்கு வந்துவிடாமல், நம்பிக்கையோடும், துணிவோடும் காத்திருக்க வேண்டும்.

ஆ. தெரிதல் வாழ்வில் வெளிப்பட வேண்டும்

'தெ ப்ருஃப் ஆஃப் புட்டிங் இஸ் இன் தெ ஈட்டிங்' ('the proof of pudding is in the eating') என்பார்கள். புட்டு நன்றாக இருக்கிறது என்றால், அது சாப்பிடுபவருக்கு இனிக்க வேண்டும். ஆக, எனக்கு வாழ்வில் தெரிதல், அறிதல் இருக்கிறது என்றால், அந்தத் தெரிதல் என் வாழ்வில் செயல்களாக, என் பழக்கமாக வெளிப்பட வேண்டும்.

இ. எனக்குத் தெரியாதா?

கற்றுக்கொள்வதற்கு மிகவும் பெரிய தடையாக இருப்பது இதுதான். 'எனக்குத் தெரியாதா?' என்று நான் சொல்லும்போதே, கற்றுக்கொடுப்பவர் உள்ளே வந்துவிடாமல் நான் கதவுகளை அடைத்துவிடுகிறேன். மேலும் இந்த மனநிலை நம் முற்சார்பு எண்ணங்களே உண்மை என்ற கிட்டப்பார்வைக்கும் இட்டுச்செல்கின்றன.

இறுதியாக,

'எனக்குத் தெரியாது, பிறருக்கும் தெரியும்' ஜன்னலை நான் எனக்கும் எனக்கும், எனக்கும் பிறருக்கும், எனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவுநிலைகளில் சரி செய்ய, எனக்குத் தெரிவதிலிருந்து, அடுத்தவரின் கற்றுத்தருதலுக்கு என் மனம் திறக்க வேண்டும். அப்படி மனம் திறந்தால் என் வாழ்விலும் சோர்வு, துயரம், முற்சார்பு எண்ணம் மறையும். இவைகள் மறைந்தால் மகிழ்ச்சி பிறக்கும்.