Friday 7 September 2018

ஆண்டின் பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறு



இன்றைய வாசகங்கள்

எசாயா 35:4-7அ;
யாக்கோபு 2:1-5;
மாற்கு 7:31-37






உயிர் இல்லா உடல் பிணம், உயிர் இருந்தும் ஐம்புலன்கள் செயல்படாவிட்டால் அவர்கள் ஜடம், ஐம்புலன்களை அதன் நோக்கில் விடுபவர் மிருகம், ஐம்புலன்களைக் கட்டி, நேர்படுத்தி, செவ்வனே பயன்படுத்துபவர் மனிதர். கண்ணிருந்தும் பார்க்க இயலவில்லையே, காதிருந்தும் கேட்க இயலவில்லையே என ஏங்கும் மனிதர்கள் ஏராளம். கண்ணிருந்தும் பார்க்காமல், காதிருந்தும் கேட்காமல் இருப்போர் எண்ணிக்கை அதைவிட அதிகம். ஐம்புலன்களைக் கொடையாகத் தந்து அதன் வழியாக இறைத் தன்மையை அடைய அழைப்பு விடுப்பது இன்றைய வாசகங்கள்.

பார்வையற்ற தன்மையையும், கேட்க இயலாத நிலையையும், பேச முடியாத தன்மையையும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று பிறப்பினாலோ, விபத்தினாலே இக்குறைபாடு ஏற்படுதல், மற்றொன்று பேச , பார்க்க, கேட்க முடிந்தும் தனக்குத் தேவையானதையும், பிடித்ததையும் மட்டும் பேசுதலும், பார்த்தாலும், கேட்டலும் ஆகும்.

முதல் வகைக் குறைபாடு உடையோர் அதிலிருந்து விடுபட அதிக ஆர்வமுடையவர்களாயும், அதற்காக இறைவனிடம் மன்றாடுபவர்களாயும் இருப்பர். இப்படிப்பட்டவர்களின் வாழ்வில் இறைவனின் வல்லமை எளிதில் செயல்படும். இரண்டாம் வகையானவரோ அதிலிருந்து எந்த வகையிலாவது மாறி விடுவோமோ என்று அஞ்சி தங்களுக்குள்ளேயே பூட்டி வைத்திருப்பர். இவர்கள்தான் உள்ளத்தில் உறுதியற்றவர்கள்.

உள்ளத்தில் உறுதியற்ற இவர்கள் திருத்தூதர் கூறுவதுபோல இனம், மொழி, வசதி, அறிவு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரித்துப் பார்ப்பர். இத்தகைய தரம் பிரிப்பது என்பது அச்சத்தால், தன்னம்பிக்கை இன்மையால்,
தன்னிலை அறியாததால் நிகழ்வதாகும். இவ்வகையான உள்ளத்தினரை நோக்கி ஆண்டவர் தரும் கட்டளை 'திறக்கப்படு' என்பதாகும். அதாவது உள்ளம் திறக்கப்படட்டும் என்று கட்டளையிடுகிறார்.

ஆண்டவர் இயேசு இனம், மொழி, வசதி, அறிவு, பால் என்று எந்தவித வேறுபாடுகளும் பார்க்காமல் அனைவரையும் சமமாகப் பார்த்து, குணமளித்து, வாழ்வித்து, வழிகாட்டித் தன் இறைத்தன்மையை உலகறியக் காட்டுகிறார்.

வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும், மனித மனப் பிளவுகளும் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று. இயற்கையால் நாம் அனைவரும் மனித நேயத்தோடு படைக்கப்பட்டவர்கள். அந்நிலையை நாம் மீண்டும் அடைய இயற்கையான, செயற்கையான குறைபாடுகள் நீங்க நமக்குத் தேவையான அடிப்படை குணம் அன்பு ஆகும். அன்பு என்கின்ற உயரிய பண்பில் நாம் வளரும்போது பாலை நிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும், வறண்ட பாலை நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும், கனல் கக்கும் மணற்பரப்பு நீர் தடாகம் ஆகும், தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும். ஐம்புலன்களை ஒருங்கிணைப்போம். கொடையாகப் பெறப்பட்ட சக்திகளை இறை மகிமைக்காகப் பயன்படுத்துவோம். பாரினில் நாம் அனைவரும் இறைச்சாயல்கள் என்பதில் உறுதி பெற்று இறைவனின் பிள்ளைகளாகப் பாகுபாடும், குறைகளுமற்ற வாழ்வு வாழ்வோம்.








ஊனம் மறையட்டும்


இன்றைய நற்செய்தியிலே காது கேளாதவரும், திக்கிப் பேசுபவருமான ஒருவரைக் குணமாக்கும் இயேசுவை நாம் சந்திக்கின்றோம். புதுமை நடந்ததும் அவரைச் சுற்றியிருந்தவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகின்றார்! காது கேளாதோர் கேட்கவும், பேச்சற்றோர் பேசவும் செய்கின்றாரே! என்று பேசிக்கொண்டனர் (மாற் 7:37).

அன்று புதுமைகள் செய்த இயேசு, இன்றும் நம் நடுவே வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றார்; புதுமைகள் செய்து கொண்டுதானிருக்கின்றார்.

இதற்கு ஓர் உதாரணம். தஞ்சை மறைமாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்திலுள்ள ஒரு கிராமம். அக்கிராமத்திலே தாயொருத்திக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது! ஆண்டுகள் பத்து உருண்டோடியும் சிறுவன் பேசவில்லை! எத்தனையோ மருத்துவ முறைகள்; பேச்சுப் பயிற்சிகள் எத்தனையோ! தஞ்சை, சென்னை போன்ற இடங்களிலுள்ள மருத்துவக் கல்லூரிகள்! எத்தனையோ கோயில்கள்! பாவம் அந்தச் சிறுவன் ! ஓரிரு வார்த்தைகள் கூட அவனால் பேச முடியவில்லை !

கடைசியாக அந்தச் சிறுவனின் பெற்றோருடைய கண்கள் வேளாங்கண்ணியை நோக்கித் திரும்பின. வேளாங்கண்ணிக்குச் சென்றனர். அவர்கள், மாதாவே ! மாதர்குல மாணிக்கமே ! எங்கள் குழந்தை பேச வேண்டும். உலகின் ஒளியைக் கையிலேந்தி பாருக்கெல்லாம் அருள்புரியும் அன்பு அன்னையே, அருள்புரியும் தாயே! என மெழுகென உருகி மன்றாடினர். அன்று இரவு அனைவரும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த நேரம்! சிறுவன் திடீரென எழுந்து, அம்மா! அம்மா! என்று அலறிக்கொண்டு அறைக் கதவைத் திறந்து கொண்டு அன்னையின் பேராலயத்தை நோக்கி ஓடினான். பெற்றோர் வேளாங்கண்ணியில் ஒரு வாரம் தங்கி ஏழைகளுக்கு உணவளித்துச் சென்றனர்.

நம் ஆண்டவராம் இயேசு இன்றும் புதுமைகள் செய்துகொண்டிருக்கின்றார் என்ற உண்மை நம்மை திடப்படுத்தவேண்டும் (முதல் வாசகம்). உங்களில் ஊனம் மறைய வேண்டுமா? பாலை நிலம் சோலை நிலமாக வேண்டுமா ? மனிதம் புனிதமாக வேண்டுமா? நீங்கள் நம்பிக்கையில் செல்வராகுங்கள் (இரண்டாம் வாசகம்); அப்போது நீங்கள் தேடுவது உங்கள் வீடு தேடிவரும் என்கின்றார் இயேசு. 


மேலும் அறிவோம் :
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).

பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.



 

ஒரு சிறுவன், "எனது தாத்தாவுக்கு நான்கு கைகளும் மூன்று காதுகளும் உள்ளன என்றான். அவன் குறிப்பிட்ட நான்கு கைகள்: வலக்கை, இடக்கை, வழுக்கை, பொக்கை. அவன் குறிப்பிட்ட மூன்று காதுகள் : வலக்காது, இடக்காது. கேட்காது.

வயதானவர்களுக்குத் தலை வழுக்கையாகவும் வாய் பொக்கையாகவும் காது மந்தமாகவும் மாறுவது இயல்பு. ஆனால் ஒரு சிலருக்குக் காது இருந்தும் அவர்கள் கேளாதவர்களாக இருப்பதுதான் வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. கல்வி கேள்வியால், ஆன்றோர்களுடைய அருள்வாக்கால் துளைக்கப்படாத செவிகள் செவிட்டுத் தன்மையுடையன.

'கேட்பினும் கேளாத் தகையவே
கேள்வியால் தோக்கப்படாதசெவி" (குறள் 418)
கிறிஸ்து இம்மையில் வாழ்ந்தபோது விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பல்வேறு உவமைகள் வாயிலாகப் போதித்தார். ஆனால் அவருடைய போதனையை மக்கள் உணரவில்லை; உணர்ந்து மனம் மாறவில்லை. அவருடைய போதனை செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. எனவேதான் அவர் இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள்காட்டி அம்மக்களைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்: “இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது. காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டனர்." (மத் 13:15)

பாவங்களிலெல்லாம் கொடிய பாவம் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டாலும் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்வதாகும், எனவேதான், நீங்கள் இன்று கடவுளுடைய குரலைக் கேட்டால் உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கிறது. திருப்பாடல் 95:8.

கடவுளுடைய வார்த்தையைக் காதால் கேட்கவும் அவருடைய புகழை நாவால் அறிக்கையிடவும் இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது.

இன்றைய முதல் வாசகம் மெசியாவின் காலத்தில் பார்வையற்றோர் பார்ப்பர்; காது கேளாதவர் கேட்பர் என அறிவிக்கின்றது (எசா 35:4-7). இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள்காட்டி, தாமே வரவிருக்கும் மெசியா என்பதற்குச் சான்று அளித்தார் கிறிஸ்து; அதாவது, பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்: காது கேளாதோர் கேட்கின்றனர் (லூக் 7:22).

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து, காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைக் குணப்படுத்துகிறார், அவருக்குக் குணமளிக்கும் முன், அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைக்கிறார்; தம் விரல்களை அவர் காதுகளில் இடுகிறார்; உமிழ் நீரால் அவர் நாவைத் தொடுகிறார்; வானத்தை அண்ணாந்து பார்க்கிறார்; பெருமூச்சுவிடுகிறார். அதன் பிறகு, "எப்பத்தா" அதாவது "திறக்கப்படு' என்று கூறி அவரைக் கேட்கும்படியும் பேசும்படியும் செய்கிறார்,

கிறிஸ்துவின் இப்பல்வேறு செயல்கள் அருளடையாளத் தன்மை கொண்டவை, அருள் அடையாளங்கள் நம்பிக்கையின் அருள் அடையாளங்கள், அருள் அடையாளங்கள் பயனளிக்க வேண்டுமென்றால் அதற்கு நம்பிக்கை முன்னதாகவே தேவைப் படுகிறது. எனவேதான் இயேசு கிறிஸ்து பல்வேறு செயல்களின் மூலம் படிப்படியாக அம்மனிதரிடத்தில் நம்பிக்கையை வளர்த்து அதன்பிறகே அவரைக் குணப்படுத்துகிறார்,

கிறிஸ்துவின் அதே வழிமுறையைத்தான் திருச்சபையும் பின்பற்றுகிறது. ஒவ்வொரு அருளடையாளத்திலும் முதலில் அருள்வாக்கு மூலமாக நமது நம்பிக்கையை வளர்த்து அதன்பிறகே அருளடையாளச் சடங்குகளை நிறைவேற்றுகிறது. திருப்பலியிலும் அருள்வாக்கு வழிபாடு முடிந்தபின்னே நற்கருணை வழிபாடு தொடங்குகிறது.

திருமுழுக்குப் பெறுவோரின் காதையும் வாயையும் குரு தொட்டுப் பின்வருமாறு கூறுகிறார் ! *செவிடர் கேட்கவும் ஊமையர் பேசவும் ஆண்டவர் செய்தருளினார். நீர் விரைவில் அவரது வார்த்தையைக் காதால் கேட்கவும், அவ்விசுவாசத்தை நாவால் அறிக்கையிடவும் செய்தருள்வாராக."

நாம் கடவுளுடைய வார்த்தையைக் காதால் கேட்கவேண்டும், ஏனெனில் கேட்பதால்தான் நம்பிக்கை உண்டாகும், "அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்" (உரோ, 10:17), கேள்வியால் நாம் பெற்ற நம்பிக்கையை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். "நாங்கள் கடதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது" (திப 4:20) என்று துணிவுடன் கூறிய பேதுருவின் ஆர்வம் நம்மை ஆட்கொள்ள வேண்டும்.

கடவுளின் குரலைக் கேட்பவர்கள் மற்றவர்களின், குறிப்பாக, நலிவடைந்தவர்களின் குரலைக் கேட்பார்கள், மலையில் ஒருவர் பிறந்தநாள் 'கேக்' வெட்டுகிறார். அவரைச் சுற்றி இருப்பவர்கள் அவரிடம் என்ன திரைப்படப்பாடல் பாடுவார்கள் ? "மலையோரம் வீசும் காற்று, மனசோட பாடும்பாட்டு கேக்குதா, கேக்குதா!" 'கேக்குதா' என்ற சொல் காதால் 'கேக்கு தா' என்ற பொருளையும் நீங்கள் வெட்டுகிற கேக்கைத் தாருங்கள் 'கேக்குத் தா' என்ற பொருளையும் கொண்டுள்ளது ஏழைகளின் அபயக்குரல் நமக்குக் கேட்குதா?


"மாண்டவர்களுக்காக அழாதே
கூனிக் குறுகி ஏழ்மையில் இருக்கிறானே
அந்த மனிதனுக்காக இரங்கு
வாய்பேச இயலாத அந்தக் கொத்தடிமைகள்
உலகின் வேதனையைக் காண்கிறார்கள்;
தவறுகள் அவர்கள் கண்ணுக்குப் படுகிறது
ஆனால் அவர்கள் வாய் திறக்க முடியவில்லை
அந்தத் துணிச்சலும் அவர்களுக்கில்லை"
(திருமதி இந்திராகாந்தியைக் கவர்ந்த கவிதை)

துன்புறுவோரின் அபயக்குரலைக் கேட்டு ஆவன செய்யவில்லை என்றால், நாம் காது இருந்தும் கேளாத செவிடர்கள்!

நமது காதுகள் கூர்மையாக இருக்க வேண்டும். அவ்வாறே தமது பார்வையும் நேரிய பார்வையாக இருக்க வேண்டும். பணக்காரர்களை ஒருவிதமாகவும் ஏழைகளை வேறொருவிதமாகவும் பார்த்து. ஒருதலைச் சார்பாக நாம் நடக்காமல் இருக்கும்படி இன்றைய இரண்டாம் வாசகத்தில் நம்மை எச்சரிக்கிறார் புனித யாக்கோபு.

இன்றைய நற்செய்தியில், இயேசுவின் புதுமையைக் கண்ட மக்கள் "இவர் எத்துணை நன்றாய் யாவற்றையும் செய்து வருகிறார்" (மாற் 7:37) என்று வியப்படைந்தனர். கடவுள் உலகத்தைப் படைத்தபோது தாம் படைத்ததை உற்று நோக்கினார், அவர் படைத்தவை மிகவும் நன்றாக இருந்தன (தொநூ 1:31). இந்த முதல் படைப்பு பாவத்தால் சீரழிந்த நிலையில் கடவுள் தம் மகன் கிறிஸ்து வழியாக மீண்டும் உலகைப் படைக்கிறார். இப்புதுப்படைப்பு முதல் படைப்பை விடச் சிறந்ததாக உள்ளது என்ற ஆழமான இறையியல் உண்மையையும் இப்புதுமை உணர்த்துகிறது.


திருமுழுக்கினால் புதுப்படைப்பாக மாறியுள்ள நாம். கடவுளுடைய வார்த்தையைக் காதால் கேட்போம். அதன் எதிரொலியாக ஏழைகளின், ஒடுக்கப்பட்டவர்களின் குரலையும் கேட்டு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்.










அவரைப் போல பார்க்க


சில வாரங்களுக்கு முன் கட்செவியில் ஆங்கிலத்தில் வலம் வந்த ஒரு தகவல். அதை அப்படியே தமிழில் மொழிபெயர்க்கிறேன்: 'ஒருநாள் மாலை நான் என் காரில் பயணம் செய்துகொண்டிருந்தேன். எனக்கு முன் ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. நான் அந்தக் காரை முந்துவதற்கு முயன்று பாதை தருமாறு ஹார்ன் அடித்தேன். ஆனால், அந்தக் கார் விலகுவதாகவும் இல்லை. வேகமாகச் செல்வதாகவும் இல்லை. பொறுமை இழந்த நான் இன்னும் தொடர்ந்து ஹார்ன் அடித்துக்கொண்டே அந்தக் காருக்கு மிக அருகில் சென்றேன். அப்போதுதான் அந்தக் காரின் பின் கண்ணாடியில் இருந்த ஸ்டிக்கர் என் கண்களில் பட்டது. 'நான் ஒரு மாற்றுத்திறனாளி. தயவுசெய்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள்!' அந்த ஸ்டிக்கர் வாசகம் என் கன்னத்தில் அறைவது போல இருந்தது. 'நான் ஏன் இன்று இவ்வளவு பொறுமை இழந்தேன்?' என யோசித்து, என் காரின் வேகத்தைக் குறைத்தேன். என் வாழ்வில் பொறுமையைக் கற்றுக்கொடுத்த அந்த ஸ்டிக்கர் காரின் பின்னால் மெதுவாக நானும் நகர்ந்தேன். இவர் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார். ஆகையால் நான் பொறுமையைக் கற்றுக்கொண்டேன். என் முன்னால்  இப்படி ஸ்டிக்கர் ஒட்டாமல் எத்தனை பேர் நடந்துகொண்டிருக்கிறார்கள்: 'நான் ஒரு அநாதை. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்,' 'நான் சாப்பிட்டு நான்கு நாள்கள் ஆகின்றன. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்,' 'நான் அகதியாக இங்கு இருக்கிறேன். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்,' 'நான் விவாகரத்து பெற்றவள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்,' 'நான் ஒரு குழந்தை. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்,' 'நான் ஒரு சிறைக்கைதி. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்,' 'போன வாரம் என் வேலை போய்விட்டது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்' - இப்படி நிறையபேர் ஸ்டிக்கர் இல்லாமல் என் கண்முன்னால் வந்து போகிறார்கள். ஸ்டிக்கரைக் கண்டதால் நான் பொறுமையாக இருந்தேன். காணாத ஸ்டிக்கர் முன்னாலும் நான் இனிமேல் பொறுமையாக இருப்பேன்.'

நிற்க.

நாம் அடுத்தவர்களைப் பார்க்கிறோம். அடுத்தவர்களை நாம் நினைப்பதுபோல பார்க்கிறோம். சிலவற்றிற்கு நாம் பாராமுகமாக இருக்கிறோம். சிலவற்றை ரொம்ப விரும்பி ஆழமாகப் பார்க்கிறோம். சிலவற்றை ஏனோ தானோ என்று மேலோட்டமாகப் பார்க்கிறோம். இதைத்தான் தூய பவுலும், 'ஏனெனில், இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல மங்கலாய்க் காண்கிறோம். ஆனால், அப்போது நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன். அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல முழுமையாய் அறிவேன்' (1 கொரி 13:12). 'அன்பு' என்ற வார்த்தையை வைத்து மிக அழகான ஒரு பாடலை எழுதிவிட்டு, 'பார்த்தல்' அல்லது 'அறிதல்' பற்றி தூய பவுல் எழுதக் காரணம் என்ன? நாம் பார்க்கும் விதத்திலிருந்து கடவுள் பார்க்கும் விதத்திற்குக் கடந்து செல்ல விரும்புகிறார் பவுல். ஆக, நாம் குறைவாகப் பார்க்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.

இன்றைய இறைவாக்கு வழிபாடு கடவுள் பார்ப்பதுபோல நாம் மற்றவர்களைப் பார்க்க அழைக்கிறது. ஒன்றைப் பார்க்க வேண்டுமென்றால் நாம் அதைத் தெரிவு செய்ய வேண்டும். கூடை நிறைய கொய்யா பழங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. நான் எதைத் தெரிவு செய்து நான் கையில் எடுக்கிறேனோ, அதைத்தான் நான் பார்க்கிறேன். மற்ற பழங்கள் என் கண்முன் இருந்தாலும் நான் அவற்றைப் பார்ப்பதில்லை. இதுதான் நம் குறைவான பார்வை. ஆனால், கடவுள் எல்லாரையும், எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கிறார். இந்தப் பார்வை நமக்கு வரும்போது நம் தெரிதலும், புரிதலும் அகலமாகிறது.

இரண்டாம் வாசகத்திலிருந்து (காண். யாக் 2:1-5) நம் சிந்தனையைத் தொடங்குவோம்.

ரொம்ப ப்ராக்டிக்கலான ஒரு நிகழ்வைப் பதிவு செய்கிறார் திருத்தூதர் யாக்கோபு. தொடக்க கிறிஸ்தவர்களின் சபை கூட்டம் நடக்கிறது. கூட்டம் தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. அப்போது பணக்காரர் ஒருவர் குதிரை வண்டியில் வந்து இறங்குகிறார். பளபளப்பான ஆடை, கண்களைப் பறிக்கும் மோதிரம், காலில் அழகிய செருப்பு, நேர்த்தியான தலைசீவல், பத்து அடிக்கு முன்னால் பாய்ந்து வரும் பெர்ஃப்யூம் வாசனை என வாசலில் வந்து நிற்கிறார். எல்லாருடைய கண்களும் வாசலை நோக்கி திரும்புகின்றனர். கூட்டத்தில் உள்ள எல்லாரும், 'இங்க வாங்க, இங்க வாங்க, இங்க உட்காருங்க' என உபசரிக்கிறார்கள். உபசரிப்பு முடிந்து கூட்டம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்க, பாதி ஆடை, நகக்கண்களில் வேலை செய்த அழுக்கு, பிய்ந்து சணல் கயிறால் கட்டிய செருப்பு, சீவாத தலைமுடி, வியர்வை நாற்றம் என ஒருவர் வாசலில் வந்து நிற்கின்றார். அப்போதும் எல்லாருடைய கண்களும் வாசலை நோக்கித் திரும்புகின்றனர். ஆனால், இப்போது, 'அடேய். அங்கே நில்!' 'டே நீ வராத!' 'இங்க வா, கால்பக்கம் உட்கார்' என்று ஆளாளுக்குக் கத்துகிறார்கள். சிலர் அவரை விரட்டிவிடவும் நினைக்கின்றனர். இந்த நிகழ்வைப் பதிவு செய்கின்ற யாக்கோபு, 'நீங்கள் ஆள்பார்த்து செயல்படுகிறீர்கள்' என்று தன் திருச்சபையாரைக் கடிந்துகொள்கிறார். மேலும், இந்த வேறுபாட்டிற்குக் காரணம் அவர்களின் தீய எண்ணத்தோடு உள்ள மதிப்பிடுதல் என்றும் சொல்கிறார். அத்தோடு, 'உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும், உரிமைப்பேறு பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா?' எனவும் கேட்கின்றார். என்ன தீய எண்ணம்? எதற்காக பணக்காரர் கவனிக்கப்படுகிறார்? அவரை வைத்து ஆளுநரிடம் எதாவது சிபாரிசு பெறலாம் அல்லது அவர் சபைக்கு ஏதாவது செய்வார் அல்லது அவரிடம் நாம் 'நல்ல பிள்ளையாக' இருந்தால் நாளை அவரை வைத்து நாம் ஏதாவது காரியம் சாதித்துக் கொள்ளலாம் - இந்த மூன்றிலுமே நன்றாகக் கவனித்தால் பணக்காரரை மற்றவர்கள் பயன்படுத்துகிறார்களே தவிர அன்பு செய்வதில்லை. இது ஒரு தவறான அணுகுமுறை. இதை உற்சாகப்படுத்துவது இந்த பணக்காரருக்கும் ஆபத்தானது. ஏழையை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அவரே அடுத்தவர்களைச் சார்ந்துதான் இருக்கிறார். இதில் அவரிடம் என்ன கிடைக்கும்? ஆக, 'இவரிடம் எனக்கு என்ன கிடைக்கும்!' என்ற அடிப்படையில் உறவு கொள்வது தவறு என்பதும் இந்தப் பகுதியின் மறைமுகப்பாடம்.

உலகின் பார்வை வேறு. கடவுளின் பார்வை வேறு. உலகின் பார்வை கடவுளின் வெளித்தோற்றத்தை மையமாக வைத்து இருக்கிறது. அவர் எந்த நிறத்தில், எந்த உருவில், எந்த அளவில், எந்த உறுப்புக்கள் எப்படி, எந்த ஆடை, எந்த அணிகலன், எந்த சிகையழகு கொண்டிருக்கிறார் என்பதை மையமாக வைத்து இருக்கிறது. ஆனால், கடவுளின் பார்வை இந்த எதில்மேலும் இல்லாமல் அவரின் அகத்தை மையப்படுத்தியதாக இருக்கிறது. கடவுள் அப்படி உள்ளத்தைப் பார்ப்பதால்தான் அவரால் 'பாரபட்சம்' இன்றி எல்லாரையும் அன்பு செய்ய முடிகிறது. ஆக, 'ஆள்பார்த்து செயல்படாதீர்கள்!' அல்லது 'பாரபட்சம் காட்டாதீர்கள்!' 'முகத்தாட்சண்யம் பார்க்காதீர்கள்!' என்றால், ஒவ்வொரு நபரையும் ஒரே அளவுகோல் கொண்டு அளப்பது என்பதுதான் இதன் அர்த்தம். 'பாரபட்சம் பார்த்தல்' என்பது நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ளும் ஒரு ஊனம் அல்லது தடை. இதை வெற்றிகொள்ள இயேசுவிடம் இருக்கும் பார்வை நமக்கும் தேவை. 'ஏழை-பணக்காரர்' பேதம் நாமாக உருவாக்கி வைத்திருக்கும் ஒரு பிறழ்வு. இயற்கை சிலரை பணக்காரராகவும், மற்றவரை ஏழையராகவும் படைக்கவில்லைதானே! ஆக, இயற்கையில் நாம் ஏற்படுத்தியுள்ள காயத்தை நாம்தான் நம் பார்வையால் குணமாக்க வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 35:4-7) மெசியாவின் வருகையின்போது காணப்படும் சில அறிகுறிகளைப் பட்டியலிடுகின்றார் இறைவாக்கினர் எசாயா. எசாயா 34ல் கடவுள் பழிதீர்ப்பார் என்ற அழிவின் செய்தியையும், 38ல் அசீரியாவின் போர் அறிவிப்பையும் சொல்லி கலக்கம் மற்றும் பயம் உண்டாக்கும் எசாயா, 37ல் நம்பிக்கையின், புத்துணர்ச்சியின், மாற்றத்தின் செய்தியைச் சொல்கின்றார். கலக்கமும், நம்பிக்கையும் கலந்ததே வாழ்க்கை என்பதை இப்படிச் சொல்கிறார்போல!  மெசியாவின் அறிகுறிகளில் ஒன்று, 'பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்' என்பதாகும். மேலும், பார்வையுள்ளவர்கள் இன்னும் அதிகம் காண்பார்கள். எப்படி? 'பாலைநிலத்தில் நீரூற்றுகள் எழுவதையும், வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடுவதையும், கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆவதையும், தாகமுற்ற தரை நீரூற்றுக்களால் நிறைந்திருப்பதையும் காண்பார்கள்.' அதாவது, இதுவரை பார்க்காததை அவர்கள் பார்ப்பார்கள். இறைவன் அவர்கள் பார்வையை அகலமாக்குகிறார். இதுவே, மெசியா கொண்டுவரும் விடுதலையாகவும் இருக்கிறது.

மெசியாவின் வருகையில் முதலில் ஒரு உற்சாகம் தரப்படுகிறது - 'திடம் கொள்ளுங்கள்!' 'அச்சம் தவிருங்கள்!' தொடர்ந்து, மானிடமும், இயற்கையும் புத்துயிர் பெறுவதாக முன்னுரைக்கப்படுகிறது. 'பார்வையற்றோர் பார்வை பெறுவர், காதுகேளாதோர் கேட்பர், காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர், வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்' என்னும் இந்த வாக்கியத்தை மனித உடல்குறைபாடுகளில் இருந்து இறைவன் தரும் விடுதலை என நேரிடையாகவும் எடுத்துக்கொள்ளலாம், அல்லது இவைகள் யாவும் அடிமைத்தனத்தின் அடையாளங்கள் என உருவகமாகவும் எடுத்துக்கொள்ளலாம். பார்வை, செவித்திறன், இயக்கம், பேசும்திறன் - இந்த நான்கும்தான் முதல் ஏற்பாட்டு காலத்தில் மனித உணர்வுகள் என்று கருதப்பட்டவை. இந்த நான்கில் குறைபாடு உள்ளவர்கள் நிறைவு காண்பார்கள் என்கிறார் இறைவன். மேலும், இஸ்ராயேல் மக்கள் அசீரியாவிலும், பாபிலோனியாவிலும் அடிமைப்பட்டுக் கிடந்தபோது இந்த நான்கு திறன்களும் இழந்தவர்களாய் இருந்தனர். ஆக, இறைவன் தரும் விடுதலையை அனுபவிக்கும்போது இந்த நான்கு திறன்களும் அவர்களிடம் திரும்ப வரும்.

இந்த முதல் வாசகம் நமக்குத் தரும் செய்தி என்ன? மாற்றம் ஒன்றே மாறாதது. 'இந்த நிலையும் மாறிப்போகும்!' என்றால், 'நாம் இன்று பார்க்கும் நிலையும் மாறலாம்,' 'நாமும் நம் பார்வையை மாற்றிக்கொள்ளலாம்' என்ற வாழ்க்கைத் தத்துவத்தைப் போதிக்கிறது இது. அச்சம், ஊனம், வறட்சி இந்த மூன்றும் நம் உடலில் இருந்தாலும், உள்ளத்தில் இருந்தாலும், இவை நாம் பார்க்கும் பார்வையை மறைத்தாலும், நமக்குப் பார்வை மாற்றம் சாத்தியமே;.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற் 7:31-37). அப்பம் பலுகுதல் தொடங்கி (6:30-34), மாற்கு நற்செய்தியாளர் தொடர்ந்து இயேசு செய்த பல புதுமைகளை பதிவு செய்கிறார்: கடல்மீது நடத்தல் (6:45-52), கெனசரேத்தில் பலர் நலம்பெறுதல் (6:53-55), கானானியப் பெண்ணின் மகள் நலம் பெறுதல் (7:24-30), காதுகேளாதவர் நலம் பெறுதல் (7:31-37), பார்வையற்றவர் நலம் பெறுதல் (8:22-26) - இப்படியாகத் தொடரும் இயேசுவின் புதுமைகள் பேதுருவின் 'மெசியா அறிக்கை'யில் (8:29) முழுமை பெறுகின்றன. இந்தப் புதுமைகள் நடக்கும்போதெல்லாம் இயேசுவின் சீடர்கள் அவரை நம்ப இயலாமல் தவிக்கின்றனர். இவர்களின் மனப்போராட்டம்தான் காதுகேளாதவர், பார்வையற்றவர் என்ற உருவகங்களால் முன்வைக்கப்படுகிறது. 'இன்னுமா உணராமலும், புரிந்து கொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா?' (8:17-18) என்று தன் சீடர்களின் கடின உள்ளத்தைக் கடிந்து கொள்கின்றார்.

ஆக, இன்று நாம் நற்செய்தியில் வாசிக்கும் 'காதுகேளாதவர் நலம் பெறுதல்' முதலில் புதுமை என்றும், பின் உருவகம் என்றும் சிந்திப்போம்.

இன்றைய நற்செய்தியை புதுமை என்ற கோணத்தில் பார்த்தால், 'எங்கே?' 'என்ன?' 'எதற்காக?' என்ற மூன்று கேள்விகளை வைத்து மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

அ. எங்கே?

சீதோன் வட எல்லையில் இருக்கிறது. கலிலேயாக் கடல் தென்கிழக்கில் உள்ளது. இயேசு இதற்கு இடையே உள்ள தீர் பகுதியில் இருக்கிறார். தீர் பகுதியில் இருந்து கீழே வராமல் சீதோன் நோக்கி மேலே செல்கின்றார். இப்படி மேலும், கீழும் மாற்கு இயேசுவை அலைக்கழிக்கிறார். தெக்கப்போலி என்றால் 'பத்து நகரங்கள்' (டெக்கா, போலிஸ்) என்பது பொருள். இந்த நகரங்கள் யோர்தானை ஒட்டிய பகுதியிலிருந்து தமாஸ்கு வரை பரவிக்கிடந்தன. இது அதிகமாக புறவினத்தார்கள் வாழ்ந்த குடியேற்றப் பகுதி. 'தெக்கப்போலி' (7:31) என்று குறிப்பிட்டு மாற்கு எழுதுவது இயேசு புறவினத்தாரோடு தம்மை ஒன்றித்துக்கொண்டதையே காட்டுகிறது.

ஆ. என்ன?

காதுகேளாதவரும், வாய்திக்கிப் பேசுபவருமான ஒருவரை சிலர் இயேசுவிடம் கொண்டுவருகின்றனர். புதுமை காணப்போகிறவர் வழக்கமாக மற்றவர்களால் அழைத்து வரப்படுவது மாற்கு நற்செய்தியாளரின் ஸ்டைல் (காண். 2:1-12). அழைத்துவந்தவர்கள் யார் என்று நமக்குத் தெரியாது. ஆனால் அழைத்துவரப்பட்டவர் ஒரு யூதராக இருக்கலாம். ஏனெனில் புறவினத்தாராக இருந்தால் அவர் புறவினத்தார் என்று மாற்கு குறிப்பிட்டிருப்பார் (காண். 7:26). மேலும், 'கைவைத்துக் குணமாக்குமாறு' (7:32) இயேசுவை வேண்டுகின்றனர். 'கைவைத்து மன்றாடுதல்' யூத ஸ்டைல். ஆனால், இதில் யாரும் இயேசுவின்மேல் நம்பிக்கையை வெளிப்படையாக அறிக்கையிட்டதாக இன்னும் சொல்லப்படவில்லை.

காதுகேளாமையும், வாய்பேசாத அல்லது திக்கிப்பேசும் நிலையும் வழக்கமாக சேர்ந்தே இருக்கும் என்பது அறிவியல் மற்றும் மருத்துவ உண்மை. வார்த்தைகளை அவர்கள் கேட்க முடியாததால் அவைகளை உச்சரிக்கவும் அவர்களால் முடிவதில்லை. இந்த மனிதர் பிறவியிலேயே காதுகேளாதவர் அல்லர். அவர் முன்னால் கேட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆகையால்தான், அவர் திக்கிப்பேசுபவராக இருக்கிறார்.

கானானியப் பெண்ணின் மகளை தூரத்திலிருந்து குணமாக்கிய இயேசு இவரிடம் வித்தியாசமாக நடந்து கொள்கிறார். கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, அவரின் காதுகளில் விரலை இடவும், உமிழ்நீரால் அவரின் நாக்கைத் தொடவும் செய்கின்றார். தொடுதலும், உமிழ்நீர் பயன்படுத்துவதும் வழக்கமாக மருத்துவர்கள் பயன்படுத்தும் செயல்கள்தாம். இதே போன்ற செயலை இயேசு பார்வையற்றவருக்கு நலம் தரும்போதும் (8:22-26) செய்கின்றார். கானானியப் பெண்ணை நாய்க்குட்டி என்று சொன்னது எப்படி நம்மை முகம் சுளிக்க வைக்கிறதோ, அதுபோல இயேசுவின் இந்த உமிழ்நீர் செயலும் நம்மை முகம் சுளிக்க வைக்கிறது.

வானத்தை அன்னாந்து பார்க்கும் இயேசு, தன் தந்தையின் துணையை அழைத்தவராய், 'எப்பத்தா' என்று அரமேயத்தில் சொல்கிறார். அதை மாற்கு தன் இறைமக்களுக்கு 'திறக்கப்படு' என்று மொழிபெயர்க்கின்றார். உடனே, அவரின் நா கட்டவிழ்கின்றது.

இ. எதற்காக?

புதுமை முடிந்த அந்த மனிதரின் நா கட்டவிழ்ந்தவுடன் இயேசு செய்யும் வேடிக்கை என்னவென்றால், '(இதைப்பற்றி யாரிடமும்) நீ பேசக்கூடாது!' என்கிறார். அவரும் இயேசுவின் கட்டளைக்கு நேர்மாறாக எல்லாரிடமும் சொல்கின்றார்.

இயேசுவின் இந்தப் புதுமை மக்களிடம் ஒரு நம்பிக்கை அறிக்கையைத் தூண்டுகிறது: 'இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!' என்று பேசிக்கொள்கின்றனர். இயேசுவின் புதுமையின் நோக்கம் இதுதான். மக்களிடம் நம்பிக்கையைத் தூண்டி எழுப்புவது. இதில் விநோதம் அல்லது முரண்பாடு என்னவென்றால், இயேசுவின் அருகில் இருப்போர் அவரை நம்ப மறுக்கின்றனர். ஆனால், தூரத்தில் இருப்பவர்கள் நம்புகின்றனர்.

இப்போது இந்த நிகழ்வை ஒரு உருவகமாகப் பார்ப்போம்.

அ. சீதோன் என்னும் புறவினத்துப் பகுதி இயேசுவுக்குத் தூரமாக இருப்பவர்கள். இயேசுவை நம்பவும், ஏற்றுக்கொள்ளவும் தூரம் ஒரு தடை அல்ல. இது திருத்தூதர்களின் நற்செய்திப்பணிக்கு மிகவும் தேவையாக இருந்தது. தூரம் கூடினாலும் இயேசு அருகில் வர முடியும்.

ஆ. காதுகேளாத தன்மை சீடர்களின் கண்டுகொள்ளாத்தனத்தையும், திக்கிப்பேசும் குணம் அவர்களின் அரைகுறை நம்பிக்கையையும் குறிக்கின்றது.

இ. 'எப்பத்தா' - திறக்கப்படு. இயேசுவின் திருமுழுக்கின்போதும், உருமாற்றத்தின்போதும் வானம் திறக்கப்பட்டு, தந்தையின் குரலொலி இயேசுவே இறைமகன் என்று சான்றுபகர்கின்றது. அதுபோல, இப்போது திறக்கப்படும் இவரின் காதுகளும் சான்றுபகரும்.

ஈ. 'தனியே அழைத்துச் செல்லுதல்' - இயேசுவால் நலம்பெறும் நிகழ்வு ஒரு தனிப்பட்ட வாழ்க்கை அனுபவம். ஒவ்வொருவரும் இயேசுவைத் தனியாய்ச் சந்தித்தால் மட்டுமே நலம்பெற முடியும்.

உ. 'எத்துணை நன்றாகச் செய்கிறார்' என்னும் மக்களின் வாழ்த்தொலி இயேசுவை ஒரு புதிய படைப்பின் கடவுளாக முன்வைக்கின்றது. முதல் ஏற்பாட்டில் ஒவ்வொரு படைப்புச் செயலின் முடிவிலும் கடவுள் 'அனைத்தையும் நன்றாகக் காண்கிறார்!' (தொநூ 1:31). மேலும் மக்களின் இரண்டாம் வாழ்த்தொலி இயேசுவை எசாயா இறைவாக்குரைத்த (35:5-6) மெசியாவாக மக்களுக்கு அறிமுகம் செய்கிறது.

இன்றைய நற்செய்தியில் நான் அதிகம் வியப்பது இயேசு அந்த நபருக்காக எடுத்துக்கொள்ளும் நேரமும், காட்டும் பொறுமையும்தான். நாம் யார் காதுக்குள்ளேயாவது கையை விடுவோமா? நம் எச்சிலைத் தொட்டு இன்னொருவர் வாயின் எச்சிலில் தொடுவோமா? ஒருவேளை நாம் அன்புசெய்பவர்களிடம் இப்படிச் செய்வோம். ஆனால், முன்பின் தெரியாத, உடல்நலக்குறைவு உள்ள, அழுக்கான ஒருவரிடம் செய்ய நம்மால் இயலுமா? என்னால் இயலாது. இயேசு அவரை மற்றவர்களைப் பார்ப்பதுபோல பார்க்கிறார். இயேசுவின் பார்வையில் அவருடைய அம்மா, அப்பா, நண்பர், திருத்தூதர், தெரிந்தவர், தெரியாதவர், நல்லவர், கெட்டவர், உடல் நலம் உடையவர், உடல் நலமற்றவர், குறையில்லாதவர், குறையுள்ளவர் என எல்லாருமே ஒன்றுதான். மேலும், தான் பார்ப்பதுபோல மற்றவர்கள் பார்க்கமாட்டர்கள் என்று நினைக்கின்ற இயேசு அந்த மனிதரின் மதிப்பை மனத்தில்கொண்டு அவரை மற்றவர்களின் பார்வையிலிருந்து தனியே அழைத்துச் செல்கின்றார். இது இயேசுவின் பரிவின் அடையாளம். தனியே குறையுடன் அழைத்துச் சென்ற நபரை நிறைவாக்கி அனுப்புகின்றார் இயேசு. இதைக் கண்ட கூட்டத்தினர், 'இவர் அனைத்தையும் எத்துணை நன்றாகச் செய்கின்றார்!' என வியந்து மகிழ்கின்றனர். இதுதான் மக்கள் பெற்ற புதிய பார்வை. இதுவரை இயேசுவிடம் விண்ணப்பத்தோடு வந்தவர்கள் இப்போது வியப்போடு வருகிறார்கள். நம் வாழ்க்கையில் வியப்புக்கள் கூடினால் விண்ணப்பங்கள் குறைந்துவிடும். எடுத்துக்காட்டாக, 'எனக்கு உடல்நிலை சரியில்லை. நல்ல உடல்நலம்தா' என கடவுளிடம் விண்ணப்பம் செய்வதற்குப் பதிலாக, 'அடடே, எனக்கு உடல்நிலை சரியில்லையே!' என்று வியந்தால் விண்ணப்பத்திற்கான தேவை குறைந்துவிடுகிறதே.

இறுதியாக,

நாம் சந்திக்கும் அனைவரும் தங்கள் உள்ளத்தில் ஒரு லேபிள் அல்லது ஸ்டிக்கர் கொண்டிருக்கின்றனர். அந்த ஸ்டிக்கரை நாம் பார்க்க ஆரம்பித்தால், அவர்களிடம் பாரபட்சம் காட்ட மாட்டோம், குறைகளை நிறைவு செய்வோம், மற்றும் நலமற்றதை நலமாக்குவோம். அவரின் பார்வை அடையாளங்களைக் கடந்த பார்வை. அடையாளங்கள், நிறைகள், குறைகள், இருப்பு, இல்லாமை என அனைத்தும் நிலையற்றவை என உணர்ந்த அவர், நிலையானதை நிறைவாகப் பார்த்தார். அவரின் பார்வை நம் பார்வை ஆனால், நாமும் பொறுமை காட்ட முடியும்
.



No comments:

Post a Comment