Saturday 22 July 2017

பொதுக்காலம் 16ஆம் ஞாயிறுமறையுரை 23-07-2017

23 ஜூன் 2017: ஆண்டின் பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு



I. சாலமோனின் ஞானம் 12:13,16-19
II. உரோமையர் 8:26-27
III. மத்தேயு 13:24-43

மறையுரை-வழங்குபவர் :
அருள்பணி ஏசு கருணாநிதி-மதுரை மறைமாவட்டம்



அவசியம், அவசரமில்லை - அவருக்கு!


ஸ்டீஃபன் கோவே என்ற மேலாண்மையியல் எழுத்தாளர் ஆங்கிலத்தில் எழுதி மிகவும் பிரபலமான நூல், தெ ஸெவன் ஹேபிட்ஸ் ஆஃப் ஹைலி இஃபக்டிவ் பீப்ள். இந்த நூலை 'அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்' என்று தமிழாக்கம் செய்துள்ளனர். இந்த நூலில் 3ஆவது ஹேபிட்டாக - பழக்கமாக, 'முதன்மையானதை முதன்மையானதாக வையுங்கள்' ('Put First Things First) என பதிவு செய்கிறார். இந்த கருதுகோளை விரிவாக்க அவர் 'அவசியம்' (important), 'அவசரம்' (urgent) என்ற இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்தி நான்கு கட்டங்களை வரைகின்றார்: (1) 'அவசியம் - அவசரம்,' (2) 'அவசியம் - அவசரமில்லை,' (3) 'அவசியமில்லை - அவசரம்,' மற்றும் (4) 'அவசியமில்லை - அவசரமில்லை.' இந்த நான்கு கட்டங்களில் எந்தக் கட்டத்திற்கு நம் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? இரண்டாவது கட்டத்திற்கு - 'அவசியம் - அவசரமில்லை.' இந்தக் கட்டங்களை வைத்து இவர் நேர மேலாண்மையை விளக்கிச் சொன்னாலும், இந்தக் கட்டங்கள் வாழ்க்கை மேலாண்மைக்கும், ஏன் விண்ணரசு மேலாண்மைக்கும் மிகவே பொருந்துகின்றன. (இந்த நேரத்தில் இன்னொரு கருத்தையும் பதிவு செய்ய வேண்டும். அமெரிக்க நாட்டு ஸ்டீஃபன் கோவே சொல்வதற்கு முன்பே, நம்ம ஊர் அறிஞர் அண்ணாதுரை அவர்கள் இதைச் சொல்லியிருக்கிறார். அவர் தரும் விளக்கக் காணொளி யூடியுபில் இருக்கிறது.)


இன்றைய நற்செய்தியில் இயேசு விண்ணரசு பற்றிய மூன்று உவமைகளைத் தருகின்றார். கடந்த வாரம் நாம் வாசிக்கக் கேட்ட மத்தேயு நற்செய்தியாளரின் 'உவமைப் பொழிவு' பகுதியிலிருந்துதான் இது எடுக்கப்பட்டுள்ளது. இன்று நாம் வாசிக்கும் மூன்று உவமைகளில் இரண்டு விவசாய பின்புலத்திலும், மூன்றாவது ஒரு குடும்பத்தின் அடுப்பங்கரையில் நடக்கும் பின்புலத்திலும் உள்ளது.


'களைகள் உவமை,' 'கடுகுவிதை உவமை,' 'புளிப்புமாவு உவமை' என்று மூன்றும் வேறு வேறான ஒப்புமைப் பொருள்களைக் கொண்டிருந்தாலும் இந்த மூன்றிற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன:


1. இந்த மூன்று உவமைகளும் 'விண்ணரசு' என்னும் மறைபொருளின் விளக்கமாக பயன்படுத்தப்படுகின்றன.
2. விதையை விதைப்பவரும், கடுகை விதைப்பவரும், புளிப்பை கரைப்பவரும் ஆள்கள் - 'ஒருவர்,' 'ஒருவர்,' 'பெண் ஒருவர்' என பதிவு செய்கிறார் மத்தேயு.
3. இந்த மூன்றும் மிகப்பெரிய இடத்தில் வளர்கின்றன. நல்ல விதை பெரிய இடத்தில் களைகள் நடுவில் வளர்கின்றது. கடுகுவிதை பெரிய வயலில் தனித்து வளர்கிறது. புளிப்பு மாவு ஆறு மரக்கால் மாவின் நடுவில் வளர்ந்து அனைத்து மாவையும் புளிப்பாக்குகிறது - 'ஆறு மரக்கால்' என்பது 'இரண்டு ஏஃபா'. ஒரு 'ஏஃபா' என்றால் 45 லிட்டர் அல்லது 22 படி.ஆக, இந்தப் பெண் ஆட்டி வைத்த மாவு ஏறக்குறைய 90 லிட்டர் (44 படி). ஆக, இவர் இல்லத்தலைவி அல்ல, மாறாக, ஊருக்கே ரொட்டி சுடும் அடுமனைக்காரி.
4. இவை மூன்றும் தாங்கள் இருப்பதை விட அதிக செயலாற்றுகின்றன. நல்லவிதை நிலத்தை நிறைத்துவிடுகிறது. கடுகுவிதை மரமாகிவிடுகிறது. புளிப்பு அனைத்து மாவையும் புளிப்பாக்கிவிடுகிறது.
5. இவை செயலாற்றும் விதம் மனிதக் கண்களுக்கு மறைவாயுள்ளன.
6. இவைகளின் வளர்ச்சி மற்றவர்களுக்குப் பயன்தருகிறது. 'கோதுமை களஞ்சியத்தில் சேர்க்கப்படுகிறது,' 'கடுகு வானத்துப் பறவைகள் தங்கப் பயன்படுகிறது,' 'புளித்த மாவு அப்பம் சுடப் பயன்படுகிறது.'
7. இவைகளின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. களைகளைக் களைவது நல்ல செடிகளையும் களைந்துவிடலாம். கடுகுவிதையின் வளர்ச்சியையும் தடுக்க முடியாது. மாவில் புளிப்பைக் கொட்டியவுடன் அதை பிரித்து எடுக்கவோ, அதன் வேகத்தைக் குறைக்கவோ முடியாது.


இந்த ஏழு ஒற்றுமைகளைப் பார்த்தோம் என்றால், 1 நீங்கலாக, மற்ற ஆறு ஒற்றுமைகளும் விண்ணரசைப் பற்றிப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன:
2. விண்ணரசின் தொடக்கம் இறைவன் ஒருவரே.
3. விண்ணரசு வளரும் இடம் இவ்வுலகம்.
4. பார்ப்பதற்கு சிறிய அளவில், யாரும் கண்டுகொள்ளாத அளவில் இருந்தாலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
5. விண்ணரசு செயலாற்றும் விதம் மற்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.
6. விண்ணரசின் வளர்ச்சி எல்லாருக்கும் பலன் தருகிறது.
7. விண்ணரசின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.


இவை எல்லாவற்றையும் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், விண்ணரசின் இருப்பும், வளர்ச்சியும் 'அவசரமில்லை - அவசியம்' என்ற நிலையில் இருக்கிறது.


இதை நாம் எப்படி புரிந்து கொள்வது?


நற்செய்தி வாசகத்திலிருந்து (காண். மத் 13:24-43)  தொடங்குவோம். நல்ல விதைகளை விதைக்கின்ற தலைவர் விதைகளை விதைத்துவிட்டு தூங்குகிறார். அந்த நேரத்தில் பகைவன் களைகளை விதைத்துவிடுகிறான். விவசாய சமூகத்தில் இது அன்றிலிருந்து இன்றுவரை நடக்கும் ஒரு நிகழ்வ. ஒருவரின் நிலத்தில் நல்ல விளைச்சல் இருப்பதைக் கண்டு பொறாமைப்படுகின்ற பக்கத்து நிலத்தின் விவசாயி, களை விதைகளை விதைப்பதும், நச்சு மருந்துகளைத் தெளித்துவிடுவதும், தண்ணீரை பிடுங்கிவிடுவதும், ஆடுமாடுகளை விட்டு மேயச் செய்வதும், காலால் மிதித்து அழிப்பதும், நெருப்பிடுவதும், உப்பைத் தூவுவதும் இன்றும் நடக்கின்ற நிகழ்வுகளே. நம் கதையில் வரும் பகைவன் வெறும் களைகளை மட்டும் விதைக்கிறான். களைகள் வளர்வது முதலில் வேலைக்காரர்களின் கண்களுக்குத் தெரிகிறது. அவர்கள் போய் தங்கள் தலைவரிடம் முறையிடுகின்றனர். அவர்கள் முறையிடும்போது தலைவரின் நல்ல குணத்தையும், நல்ல செயலையும் அடிக்கோடிட்டு பேசுகின்றனர்: 'நீர் நல்ல விதைகளை விதைத்தீர்!' ரொம்பவும் புத்திசாலியான, விவேகமான, எதை யாரிடம் எப்படி சொல்ல வேண்டும் என்று தெரிந்த வேலைக்காரர்கள் இவர்கள். இவர்களுக்கே தெரியும் இது பகைவனின் வேலை என்று. இருந்தாலும் தன் தலைவரின் பேச்சே இறுதியாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர் இவர்கள். 'இது பகைவனுடைய வேலை' என்று தலைவர் சொன்னவுடன், தன் தலைவருக்கு பிரமாணிக்கமாக இருக்க விரும்பும் இவர்கள், 'நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?' எனக் கேட்கின்றனர். நம்ம தலைவர் அவர்களைவிட புத்திசாலி. புத்திசாலி மட்டுமல்ல. தாராள உள்ளம் கொண்டவர். அவசரப்படாதவர். ஆகையால்தான் அவர்களைப் பொறுமையோடு இருக்கச் சொல்கின்றார். வேலைக்காரர்களின் அவசரம் நல்ல பயிரையும் அழித்துவிடும். களைகள் கோதுமைக்குப் பாய்ச்சப்படும் தண்ணீர் மற்றும் உரத்தில் பங்குபோட்டாலும், கதிர் வரும்போது, கோதுமை எது, களை எது என்பது தெளிவாகிவிடுகிறது. ஆக, ஒரு கோதுமைச் செடியும் அழியாமல் காத்து, களைகளைக் களைந்து நெருப்பிடுகின்றார் தலைவர். தலைவரின் நோக்கம் எது? களஞ்சியத்தில் கோதுமை. இந்த நோக்கத்தை அடைவது 'அவசியம் - ஆனால், அவசரமில்லை.'


அதே போல, கடுகுவிதையின் வளர்ச்சி ஒரே இரவில் வருவதில்லை. எல்லா விதைகளையும் விட சிறிய விதை பெரிய மரமாக மாற வேண்டுமானால், அது அதற்கான நேரத்தையும், இடத்தையும் எடுக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று சமரசம் செய்யப்பட்டாலும், அதன் வளர்ச்சி தடைபட்டுவிடும். அவ்வாறே, புளிப்புமாவின் பரவல் ஓரிரவு முழுவதும் நடந்தால்தான் அதன் வேலை நிறைவுறம். அதே நேரத்தில் சரியான நேரத்தில், சரியான இடத்தில் வைக்கப்படும் மாவுதான் புளிப்பு ஏறும் - குளிர்பிரதேசங்களில் அல்லது குளிர்காலத்தில் மாவு எளிதாகப் புளிப்பதில்லை. ஆக, கடுகின் பலும், மாவின் பலனும் வெளிப்படுவது 'அவசியம் - ஆனால் அவசரமில்லை.'


இந்த மூன்றின் வழியாக முன்னிறுத்தப்படுவது விண்ணரசு என்றாலும், அந்த விண்ணரசின் ஆதிமூலமாக இருப்பவர் இறைவன். எனவே, இந்த இறைவனின் இயல்பு எப்படிப்பட்டது என்பதை எடுத்துரைக்கிறது இன்றைய முதல் வாசகம் (காண். சாஞா 12:13, 16-19). ஆண்டவராகிய கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை என அறுதியிட்டுக் கூறும் ஆசிரியர், இந்த ஆசிரியர் ஆண்டவரின் குணங்களாக ஆறு குணங்களை முன்வைக்கின்றார்: (1) எல்லாவற்றின் மேலும் கருத்தாய் இருக்கிறார், (2) அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டிருக்கின்றார், (3) செருக்கை அடக்குகின்றார், (4) கனிவோடு நீதியை நிலைநாட்டுகின்றார், (5) பொறுமையோடு மனிதர்களை ஆளுகின்றார், மற்றும் (6) மனிதநேயம் கொண்டிருக்கக் கற்றுக்கொடுக்கின்றார்.


இவற்றில் (5) மற்றும் (6) ஆம் குணங்கள் மிக முக்கியமானவை. தான் விரும்பியபோதெல்லாம் விரும்பியதைச் செய்ய கடவுளுக்கு ஆற்றல் இருந்தாலும் அவர் பொறுமையோடு இருக்கின்றார். மேலும், இந்தப் பொறுமையே நீதிமான்களுக்கு மனித நேயத்தைக் கற்றுக்கொடுக்கிறது. ஆக, மனிதநேயம் என்றால் என்ன என்பதற்கான புதிய வரையறையும் இங்கே கிடைக்கிறது. மனித நேயம் என்றால் பொறுமை. மனித நேயம் உள்ளவர் மனிதர்கள் செய்யும் அனைத்துப் பொல்லாப்புக்களையும் பொறுத்துக்கொள்வார். அவரின் முகத்தில் புன்முறுவல் இருக்கும். இந்த மனிதநேயத்தோடு இணைந்து வருவது நன்னம்பிக்கை. ஆக, பொறுமை என்னும் தாய்க்கு 'மனித நேயம்,' 'நன்னம்பிக்கை' என்ற இரண்டு குழந்தைகள்.


இறைவனின் குணம், 'அவசியமானதில்' அக்கறை கொள்கிறது. 'அவசரமில்லாமல்' செயலாற்றுகிறது. ஆக, 'அவசியம் - அவசரமில்லை.'


இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 8:26-27), 'தூய ஆவி தரும் வாழ்வு,' 'வரப்போகும் மாட்சி' என அறிவுறுத்துகின்ற பவுலடியார், மனித மனநிலையை இரண்டு வார்த்தைகளால் பதிவு செய்கின்றார்: (1) வலுவற்ற நிலை, (2) பெருமூச்சு. நாம் வலுவில்லாதபோதுதான் அதிக பொறுமை இழக்கிறோம். இல்லையா? நம் பொறுமையின்மையின் வெளிப்புற அடையாளம் பெருமூச்சு. 'இது எப்போ முடியுமா?' என்று ஒன்றைப்பற்றி நாம் கவலைப்படும்போது, பொறுமை இழக்கும்போது, நம்மை அறியாமல் பெருமூச்சு விடுகிறோம். ஆனால், இந்த பெருமூச்சை அப்படியே டிரான்ஸ்க்ரைப் செய்து அதை செபமாக கடவுளிடம் தருகின்றார் தூய ஆவி. நம்மில் இருக்கும் இந்தப் பொறுமையின் ஆவி நம் உடலின் வலுவின்மையை, பெருமூச்சை நெறிப்படுத்தி சரி செய்கிறது. 'அவசியத்தை' (கடவுளை) நோக்கி நம் உள்ளங்களை எழுப்புகிறது. 'அவசரத்திலிருந்து' நமக்கு விடுதலை தருகிறது. ஆக, நம்மில் இருக்கும் தூய ஆவியானவர் வழியாக நாமும் கடவுளைப் போல இருக்க முடியும் - 'அவசியம் - அவசரமில்லை' என்று.


இன்றைய வாசகங்களிலிருந்து நாம் பெறும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?


1. பொறுமை, மனித நேயம், நன்னம்பிக்கை
காஃபி, டீ, சப்பாத்தி என எல்லாவற்றையும் இன்ஸ்டன்டாக மாற்றி உண்ண ஆரம்பித்த நாம் கொஞ்சம் கொஞ்சமாக - இல்லை, வேக வேகமாக - பொறுமை இழந்துகொண்டே வருகிறோம். ஒரு நிமிட வீடியோவைப் பார்க்கக் கூட நேரமில்லாமல் அது முடிவதற்கு முன் மற்றொரு வேலையைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். அந்தக் காலத்து டிவிகளில் சேனல் மாற்றுவதற்கு திருகு பட்டன் இருந்தது. கொஞ்சநாள் கழித்து அது அமுக்கு பட்டனாக மாறியது. திருகும்போது அருகில் சென்றோம். அமுக்கும்போது குச்சியைப் பயன்படுத்தினோம். இன்று அமர்ந்துகொண்டே ரிமோட் கன்ட்ரோலில் இஷ்டத்துக்கு மாற்றிக்கொண்டே இருக்கிறோம். 30 நிமிடங்களில் 60 சேனல்களை மேய்ந்துவிடத் துடிக்கின்றன நம் கண்கள். நாம் எப்போது பொறுமை இழந்தோம்? இந்த பொறுமையின்மை நம் மனிதநேயத்தையும் பாதிக்கிறது. ரோட்டில் அடிபட்டுக்கிடந்த ஒருவரைக் காப்பாற்றி உயிர் கொடுக்கும் பொறுமை நமக்கு இல்லை. மிஞ்சிப்போனால் அடிபட்டவர் துடிப்பதையும், கூடியிருக்கும் கூட்டத்தையும் நாம் நம் செல்ஃபோன்களில் படம் எடுக்கிறோம். அவ்வளவுதான். அதை நம் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதோடு நம் மனிதநேயம் நின்றுவிடுகிறது. நம் பொறுமை இழப்பால் நாம் மற்றவர்கள்மேல் கொண்டிருக்கின்ற நன்னம்பிக்கையையும் இழந்து வருகின்றோம். எல்லாரையும், எல்லாவற்றையும் எதிர்மறையாகவே, விரக்தியாகவே பார்க்கத் தொடங்கியுள்ளோம். ஆனால் வாழ்க்கையின் இனிமை அவசரத்தில் இல்லை என்பதை இன்று உணர்ந்து கொள்வோம். அவசரம் நம் வேலையின், வாழ்க்கையின் வெற்றியைக் கெடுத்துவிடுகிறது.


2. கடவுளே தலைவர் - நடப்பதுதான் நடக்கும்
நல்ல விதை, கடுகு விதை, புளிப்பு மாவு - இவற்றின் செயல்களைத் தொடங்கி வைப்பவர் ஒருவர். அந்த ஒருவர்தான் கடவுள். அவர்தான் நம் வாழ்வின் இயக்கத்தைத் தொடங்கி வைப்பவர். அப்படி இருக்க, எல்லாம் நம் கைகளில் இருந்துதான் வருகிறது என நாம் நினைக்கக்கூடாது. மேலும், எது எது எப்போ எப்போ நடக்கனுமோ, அது அது அப்போ அப்போ நடந்தே தீரும். புளிப்பு மாவு மற்ற மாவுமேல் பரவுவதை எவ்வளவு பெரிய சமையல்காரனாலும் தடுக்க முடியாது. விண்ணரசும் அப்படித்தான். வாழ்க்கையும் அப்படித்தான். ஒவ்வொரு நாளும் இப்படித்தான் நமக்கு விடியும் என்று ஏற்கனவே மாவு கரைத்தாயிற்று. ஆக, அன்றன்று வாழ்க்கை நமக்கு எப்படி திரையை விலக்குகிறதோ, அன்றன்று, நல்வாழ்வை வாழ்ந்து கொண்டு நகர்வதே சால்பு. கரைத்த மாவை அள்ளி வெளியே கொட்டவும் முடியாது. நீர்த்துப் போகச் செய்யவும் முடியாது. ஆக, அவர்மேல் பாரத்தைப் போட்டு அவசியமானதை மட்டும் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நிமிடமாக அடி எடுத்து வைப்பது நலம்.


3. கனி தருவது
களைக்கும், கோதுமைக்கும் உள்ள வித்தியாசத்தை தலைவர் பணியாளருக்கு எப்படி உணர்த்துகின்றார்? கதிர்களை வைத்தே. ஆக, கதிர் கொடுத்தால் அது கோதுமை. கதிர் கொடுக்காவிட்டால் அது களை. அவ்வாறே, கனி கொடுத்தால் நாம் மனிதர்கள். கனி கொடுக்காவிட்டால் நாம் களைகள். களைகள் இடத்தை அடைத்துக்கொண்டு, கோதுமைக்குச் சேர வேண்டிய தண்ணீர் மற்றும் உரத்தை அபகரித்துக்கொண்டு வாழ்கின்றன. அவை மற்றவர்களின் கண்களுக்குப் பசுமையாகத் தெரியாலும். ஆனால் அவைகளால் தலைவருக்கு எந்தப் பயனும் இல்லை. என்னதான் ஒரே தண்ணீர், ஒரே உரம் என வளர்ந்தாலும் களைகள் சேரும் இடம் நெருப்பே. களஞ்சியம் அல்ல. இந்த இடத்தில் பவுல் திமொத்தேயுவுக்குச் சொல்லும் அறிவுரையை நினைவுகூறுகிறேன்: 'ஒரு பெரிய வீட்டில் பொன், வெள்ளிக் கலன்கள் மட்டுமல்ல, மண் மற்றும் மரத்தாலான கலன்களும் உள்ளன. அவற்றுள் சில மதிப்புடையவை. சில மதிப்பற்றவை. ஒருவர் மதிப்பற்றவற்றிலிருந்து தம்மைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் அவர் மதிப்புக்குரிய கலனாகக் கருதப்படுவார். அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார். தம் தலைவருக்கும் பயனுள்ளவராயிருப்பார்' (2 திமொ 2:20). ஆக, என் வாழ்வால் நான் நற்செயல் செய்ய ஆயத்தமாக இருக்க வேண்டும். என் தலைவருக்கு பயனுள்ளவராக இருக்க வேண்டும்.


4. வலுவின்மை, பெருமூச்சு
நம்மை அறியாமல் நம்மைச் சுற்றிக்கொள்ளும் வேகம் நம் வலுவைக் குறைத்து நமக்கு பெருமூச்சைத் தந்துவிடுகிறது. நம் ஊனியல்பில் இவை நடந்தாலும், நமக்குள் இருக்கும் தூய ஆவியானவர் இவற்றை செபங்களாக மாற்றி இறைவன் முன் எடுத்துச் செல்கிறார். ஆக, எல்லாம் நாம் அவரிடமிருந்து பெற்ற கொடைகள் என்ற நிலையில் எல்லாவற்றையும் அவரிடமே திரும்பக் கொடுத்துவிடுவோம்.


5. அவசியம், அவசரமில்லை
மேற்சொன்ன நான்கு கட்டங்களை வரைவோம். நாம் செய்யும் எல்லா செயல்களையும் - டிவி பார்ப்பது, ஃபோன் பேசுவது, நண்பரைப் பார்ப்பது, நல்ல மதிப்பெண்கள் வாங்குவது, திருமணம் செய்வது, மகிழ்ச்சியாக இருப்பது, சினிமாவுக்கு போவது, சண்டை பிடிப்பது, பொறாமை படுவது - என எல்லாவற்றையும் எழுதி இந்த நான்கு கட்டங்களுக்குள் எங்கே பொருந்துகிறது எனப் பார்ப்போம். பின், இரண்டாவது கட்டத்தை மட்டும் தெரிவு செய்து, அந்தக் கட்டத்தில் உள்ளதை மட்டும் வாழ்வோம். 'ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி' என கண்ணதாசன் சொல்வது இந்தக் கட்டம் பற்றிறே. இந்த 'ஒன்று' அவசியம். ஆனால், இதற்கு அவசரம் தேவையில்லை. நம் வாழ்வின் இலக்கு, கனவு எல்லாம் இந்தக் கட்டத்தில்தான் இருக்கிறது. வாழ்வின் முக்கியமானவைகளின் இடத்தை முக்கியமில்லாதவைகள் பிடித்துவிட வேண்டாம். அப்படி பிடித்துவிட்டால் நாம் இந்தக் கட்டத்தோடு சமரசம் செய்துகொள்ளத் தொடங்கிவிடுவோம்.


இறுதியாக, இத்தாலியன் மொழியில் 'போக்கே கோஸே, போனே கோஸே' ('poche cose buone cose') என்ற பழமொழி உண்டு. 'கொஞ்சம், ஆனால் நல்ல' என்பது இதன்பொருள். அந்தக் கொஞ்சம், அந்த நல்லதுதான் விண்ணரசு. இது நம்மைச் சுற்றி இருக்கிறது. இதைக் கண்டுகொள்வது 'அவசியம் - ஆனால், அவசரமில்லை!'


'அவசியம் - அவசரமில்லை' - அவருக்கு, உங்களுக்கு, எனக்கு!


 

மறையுரை-வழங்குபவர்:

அருள்பணி அரிய அந்தோணிராஜ்
பாளை மறைமாவட்டம்



இறைவனே நீதியுள்ள நடுவர்

ஒரு கிராமத்தில் ஓர் ஏழை விவசாயி வாழ்ந்து வந்தார். அவரிடம் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்தன. அவரது பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். அவன் வேட்டைக்குப் பயன்படுத்திய சில வேட்டைநாய்களும் வைத்திருந்தான். இந்த நாய்கள் அடிக்கடி அருகில் உள்ள விவசாயி வீட்டு ஆட்டுக்குட்டிகளைத் துரத்துவதும் கடித்துக் குதறுவதுமாக இருந்தன. இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டை வீட்டுக்காரனான வேட்டைக்காரனைச் சந்தித்து, "உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளைக் கடித்து காயப்படுத்துகின்றன' என்றான்.
ஆனால் அந்த வேட்டைக்காரன் அதை காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. அதேபோல் நாய்கள் வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து ஆட்டுக்குட்டிகளைக் கடித்துக் குதறின. இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி. வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன் "இதோ பார் ஆட்டை துரத்துவது கடிப்பது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்றும் செய்ய முடியாது. உன்னால் முடிஞ்சதைப் பார்த்துக்கோ” என்று சொல்லி அனுப்பிவிட்டான்.
இதனால் மனமுடைந்த விவசாயி, அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவரைச் சந்தித்து, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக் கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். பஞ்சாயத்துத் தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு. ஏனென்றால் விவசாயி நல்லவன். எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து வருபவன். விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டார் பஞ்சாயத்துத் தலைவர். "என்னால் பஞ்சாயத்தைக் கூட்டி அந்த வேட்டைக்காரனைத் தண்டித்து அபராதம் விதித்து, அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும். ஆனால் நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியைச் சம்பாதிக்க நேரிடும். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்க வேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்து வீட்டுக்காரன் உனக்கு நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா? அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?' என்று விவசாயியைப் பார்த்துக் கேட்டார். அவர் சொன்னதைப் புரிந்துகொண்ட விவசாயி "அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில்தான் தனக்கு விருப்பம்” என்றான்.
"சரி, உன் ஆட்டுக்குட்டிகள் பத்திரமாக இருக்கவும், அந்த வேட்டைக்காரனும் நண்பனாக இருக்கவும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன்'' என்று சொல்லி பஞ்சாயத்துத் தலைவர் சில விஷயங்களை விவசாயியிடம் சொன்னார். வீட்டுக்கு வந்த விவசாயி, பஞ்சாயத்துத் தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான். தனது பட்டியில் இருக்கும் தனது ஆட்டுக்குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் பரிசளித்தான். ஆட்டுக்குட்டிகளைப் பெற்றுக்கொண்ட அந்தக் குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்தக் குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள். தன் குழந்தைகளின் புதிய தோழர்களைப் பாதுகாக்க தற்போது வேட்டைக்காரன் நாய்களை சங்கிலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது.
யாரும் சொல்லாமலே நாய்களை சங்கிலியால் பிணைத்தான். தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததைத் தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, சில அரிய பொருட்களைப் பரிசளித்தான் வேட்டைக்காரன். ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகி விட்டனர்.
ஒரு நல்ல – நேர்மையான – நீதியுள்ள நீதிபதி எப்படி இருக்கவேண்டும் என்பதற்காக கிராமப்புறங்களில் சொல்லப்படும் கதை இது. ஒரு நேர்மையான நீதிபதி என்பவர் எத்தகைய சூழ்நிலையிலும் நேர்மை தவறாமல், அதேநேரத்தில் தன்னலத்தை நாடாமல், சரியான தீர்ப்பை வழங்கவேண்டும்” என்பார் பேரறிஞரான சிசரோ. பொதுக்காலத்தின் பதினாறாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் ‘இறைவனே நீதியுள்ள நடுவர்’ என்ற சிந்தனையை வழங்குகின்றது. நாம் அதனைக் குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.
சாலமோனின் ஞான நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் எப்படி நல்ல நடுவராக இருக்கின்றார் என்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அப்படி வாசிக்கின்றபோது நாம் அறிந்துகொள்ளும் முதன்மையான செய்தி : இறைவன் ஒருபோதும் முறைகேடான தீர்ப்பை வழங்குவதில்லை” என்பதாகும். ஆம், இறைவனின் தீர்ப்பில் ஒருபோதும் முறைகேடுக்கு வழியில்லை. மனிதர்களாகிய நாம்தான் பணத்தைக் கொடுத்து நீதிபதியை – ஏன் நீதியைக்கூட - விலைக்கு வாங்குகின்றோம். இன்றைய காலகட்டத்தில் வழங்கப்படும் எத்தனையோ தீர்ப்புகள் எவ்வளவு முறைகேடான தீர்ப்புகளாக இருக்கின்றன என்று நாம் அறிகின்றபோது அது நமக்கு வேதனையும், மன வருத்தத்தையும் தருவனவாக இருக்கின்றன.
இத்தகைய பின்னணியில் இறைவன் நீதியான தீர்ப்பை வழங்குகின்றார் என்னும் செய்தி நமக்கு ஆறுதலைத் தருவதாக இருக்கின்றது. திருப்பாடல் 96: 13 ல் வாசிக்கின்றோம், “ஏனெனில், அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார்” என்று. ஆகையில் இறைவன் முறைகேடாக அல்லாமல், நீதியோடு தீர்ப்பு வழங்குகின்றார் என்பதை உணரும் தருணத்தில் நாம் நீதியோடும், நேர்மையோடும் வாழ்வதற்கு முயற்சி எடுப்போம்.
அடுத்ததாக இறைவன் நீதியுள்ள – நேர்மையான - நடுவர் என்று சொல்கிறபோது அவருடைய தீர்ப்பில் கனிவு அதிகமாக வெளிப்படுகிறது என்பதையும் நாம் படித்தறிகின்றோம். முதல் வாசகத்தில் ‘நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு வழங்குகின்றீர்” என்று படிக்கின்றோம். இறைவன் நேர்மையுள்ள நடுவர் என்ற சிந்தித்த நாம், இப்போது இறைவன் கனிவோடு தீர்ப்பு வழங்குபவர் என்று படிக்கின்றோமே அப்படியானால் நீதிக்கும், கனிவு அல்லது இரக்கத்திற்கும் ஒத்துப் போகுமா என்று நாம் நினைத்துப் பார்க்கலாம். ஆனால் விவிலியம் முழுமைக்கும் நாம் படித்துப் பார்க்கின்றபோது இறைவன் கனிவோடு தீர்ப்பு வழங்குகின்றவர் என்ற உண்மையை உணர்ந்துகொள்ளலாம்.
இதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம்தான் விபசாரித்தில் பிடிபட்ட பெண்மணி. யூத சட்டத்தின்படி விபச்சாரத்தில் பிடிபட்ட அந்தப் பெண்மணி கல்லால் எறிந்துகொல்வதற்கு இயேசு உத்தரவிட்டிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக ‘உங்களில் பாவம்செய்யாதவர் இப்பெண்ணின்மீது கல்லை எறியட்டும்’ என்று சொல்லி அவளை யூதர்களின் கையிலிருந்து விடுவிக்கிறார். அவளுக்கு கனிவான தீர்ப்பை வழங்குகின்றார். குடும்பமாக, பல்வேறு குழுக்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் நம்மோடு வாழக்கூடிய மனிதர்களுக்கு எத்தகைய தீர்ப்பை வழங்கிக்கொண்டிருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நம்முடைய தீர்ப்புகள் அனைத்தும் பழிவாங்குதலில், அடக்கு முறையின் உச்சக்கட்டமாகவே இருக்கின்றது. ஆகவே நாம் நமது தீர்ப்புகள் கனிவும், இரக்கமும் உள்ளதாக இருக்குமாறு பார்த்துக்கொள்வோம்.
நிறைவாக இறைவன் நேர்மையும் நீதியும் உள்ள நடுவர் என்று சிந்தித்துப் பார்க்கும்போது அவர் பொறுமையுள்ள நடுவர் – நாம் மனம் திரும்பவேண்டும் என்பதற்காக பொறுமையோடு காத்திருக்கும் - ஒரு நல்ல நடுவர் என்ற உண்மையையும் இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்துக்கூறுகிறது. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கூறக்கூடிய ‘வயலில் தோன்றிய களைகள்’ உவமையில், களைகளை தலைவர் உடனே அழித்துவிடவில்லை. மாறாக அறுவடைக்காலம்வரை அவர் பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கிறார். அதைப் போன்றுதான் மனிதர்களாகிய நாம் தவறு செய்கிறபோது அவர் உடனடியாகத் தண்டித்துவிடுவதில்லை, மாறாக நாம் மனம் திரும்பவேண்டும் என்பதற்காகப் பொறுமையோடு காத்திருக்கிறார். அவர் பொறுமையோடு இருக்கிறார் என்பதற்காக நீதி வழங்கக் காலம்தாழ்த்துகிறார் என்றும் நாம் நினைக்கக்கூடாது. பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம் 3:9 ல் வாசிக்கின்றோம், “ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால், அவர் அவ்வாறு காலந்ததாழ்த்தவில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிருக்கிறார்” என்று. ஆகவே, கடவுள் நமக்கு இத்தனைக் காலம் அவகாசம் தந்திருக்கிறார் என்றால் அவர் நாம் அனைவரும் மனமாறவேண்டுமென்றே விரும்புகிறார் எனப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நாம் வாழவேண்டும்.
ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கடைநிலைப் பணியாளர் ஒருவர் இலட்சக் கணக்கான ரூபாயைக் கையாடல் செய்துவிட்டார். இந்தச் செய்தி எப்படியோ மேலதிகாரியின் காதுகளை எட்டியது. ஒருநாள் மேலதிகாரி அந்த கடைநிலைப் பணியாளரை அழைத்தார். அவர் அழைக்கிறார் என்று தெரிந்தததும் கடைநிலை பணியாளருக்கு வேர்த்துக்கொட்டியது. நிச்சயமாக நாம் வேலையிலிருந்து தூக்கி வீசப்படுவோம் என்று பயந்துகொண்டே சென்றார்.
மேலதிகாரி கடைநிலைப் பணியாளரைப் பார்த்ததும், “நமது நிறுவனத்திலிருந்து இலட்சக்கணக்கான பணத்தை நீ கையாடல் செய்ததாக ஒரு செய்தியைக் கேள்விப்படுகின்றேனே அது உண்மையா? என்று கேட்டார். அதற்கு அவர், “நான் அந்த தவற்றினைச் செய்தது உண்மைதான். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” என்றார். அதற்கு மேலதிகாரி, “நான் உனக்கு மீண்டுமாக ஒரு வாய்ப்புத் தந்து, நீ அந்தப் பணியை தொடர்ந்து செய்ய அனுமதித்தால் நீ அதில் உண்மையாக இருப்பாயா? என்று கேட்டார். அதற்கு அவர், “ஆம், நான் உண்மையாக இருப்பேன். இனிமேல் எந்தத் தவறும் செய்யமாட்டேன்” என்று வாக்குறுதி தந்தார். அப்போது அந்த அதிகாரி சொன்னார், “நான் உன்னை மன்னித்து, உன்னை மீண்டுமாக பணியில் சேர்ப்பதற்குக் காரணமே நானும் உன்னைப் போன்று தவறு செய்து மன்னிக்கப்பட்டேன் என்பதனால்தான். நான் தவற்றிற்காக மன்னிக்கப்பட்ட பிறகு, எனது கடமையில், பணியில் உண்மையுள்ளவனாக இருந்தேன். அதனால்தான் இந்தளவுக்கு பதவியுயர்வு பெற்றிருக்கிறேன். நீயும் உனக்குக் கொடுக்கப்பட்ட பணியில் இனிமேல் உண்மையுள்ளவனாய் இரு. மேலும் மேலும் உயர்வாய்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
ஆம், நாம் நமது தவற்றிற்காக மன்னிக்கப்படுவதே நாம் நமது தவறை உணர்ந்து உணர்ந்து திருந்தி நடக்கத்தான்.
ஆகவே இறைவன் நேர்மையான நடுவர் என்று சிந்தித்துப் பார்த்த நாம், அவரைப் போன்று முறைகேடாக அல்லாமல், கனிவோடும் பொறுமையோடும் தீர்ப்பிடுவோம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

மறையுரை-வழங்குபவர்: மெரிக்காவிலிருந்து

Fr. Freddy is a Redemptorist priest belonging to the Province of Bangalore. Currently he is attached to the Archdiocese of St. Louis, Missouri state, U.S.A.

முன்னுரை:
அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு மறைபணியாற்ற நான் வந்தபோது, நான் இந்தியாவிலிருந்து வருகிறேன் என்பது அங்கிருந்த எல்லோருக்கும் தெரியும். கிறிஸ்து பிறப்பு விழாவுக்கான நிகழ்ச்சிகளை தயாரித்துக் கொண்டிருந்த சமயத்தில், ஒரு பெண்மணி, "உலகத்திலேயே நாகரீகத்தில் முன்னேறியுள்ள இந்த பகுதியில், கிறிஸ்துமஸ் திருப்பலியை டிசம்பர் 24-ஆம் நாள் நள்ளிரவில் தான் நாங்கள் கொண்டாடுவோம். உங்கள் நாட்டில் இது போன்று ஏதும் நடக்குமா?" என்று கேட்டார். நான் அவரிடம், "அம்மா, கத்தோலிக்கத் திருச்சபை உலகளாவியது. இந்தியாவில் பின்பற்றப்படுவதும் இதே கத்தோலிக்கத் திருச்சபைதான். உலகெங்கும் கிறிஸ்து பிறப்பு விழாவை டிசம்பர் 24-ஆம் நாளன்றுதான் கத்தோலிக்கத் திருச்சபை கொண்டாடுகிறது" என்று கூறினேன்.

நான் ஒரு "நாகரீகமற்ற பிற்போக்கான ஆள்", "கத்தோலிக்க திருச்சபைக்கு புதியவன்", "எனது குடும்பத்திலேயே நான் மட்டுமே கத்தோலிக்கர்" என்பதாக அவர் ஏற்கனவே என்னைப் பற்றி தீர்ப்பெழுதிவிட்டார். எனது குடும்பத்தைப் பற்றியோ அல்லது நான் பிறந்து வளர்ந்த சூழ்நிலைப் பற்றியோ அவருக்கு ஒன்றுமே தெரியாது. ஆயினும் என்னைக் குறித்து தீர்ப்பிடுவதில் மிக வேகமாக முடிவெடுத்துவிட்டார்.
ஆனால், கடவுள் தம்முடைய தீர்ப்பை நிதானமாகவே செய்கிறார். காலம் தாழ்த்தி வருவதே கடவுளின் தீர்ப்பு.

இறைவார்த்தை:
இயேசுவின் உரையாடலின் முக்கிய அம்சமாகிய "தீர்ப்பிடுவதில் தாமதம்" என்ற கருத்தை, இன்றைய நற்செய்தி வாசகத்திலுள்ள உவமை விவரிக்கிறது. இயேசு போதித்த இறையரசைக் குறித்த கோட்பாடுகளில், "தீர்ப்பிடுவதில் தாமதம்" என்ற இந்தக் கருத்து புதுமையானதும், கடினமானதும் ஆகும். அன்றைய வரலாற்றுப் பின்னணியில், நற்செய்தியாளர் மத்தேயுவின் சமூகத்தைச் சார்ந்த சிலர், தங்களை உத்தமர்கள் என்றுக் காட்டிக்கொண்டு, "மிகவும் பரிசுத்தமான ஒரு சமுதாயத்தை உருவாக்க" முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய எண்ணங்களை முறியடிப்பதற்காக தனது நற்செய்தியின் இந்தப் பகுதியை புனித மத்தேயு எழுதுகிறார். பரிசுத்தமான சமுதாயத்திற்கு ஏதுவான வரைமுறைகளையும், தீர்ப்புகளையும் உருவாக்குவதற்கு எதிரான ஒரு அறிவிப்பாகவே இந்த நற்செய்தி பகுதி உள்ளது. ஏனெனில் "பரிசுத்த சமுதாயத்தை உருவாக்குதல்" என்பது இறுதித் தீர்வை நாளில் கடவுளால் முடிவுசெய்யப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த நற்செய்தி பகுதியில் இரண்டு முக்கிய அம்சங்களைக் காண்கிறோம்.
1. பணியாளர்களின் தீர்ப்பு: தலைவர் நல்ல விதைகளை விதைத்தார். பகைவனோ களைகளை விதைத்தான். களைகள் வளர்ந்துள்ளன என்று பணியாளர்களுக்குத் தெரிந்தவுடன், அவர்கள் ஒரு தீர்ப்பை முடிவு செய்துவிட்டார்கள். “வளர்ந்திருக்கும் களைகள் பறிக்கப்பட்டு, அப்புறப்படுத்தப்படவேண்டும்” என்பதே அந்தப் பணியாளர்களின் தீர்ப்பு. ஆனால், நிலம் தலைவருக்கு உரிமையானது. அதில் விளையும் பயிரும் தலைவருக்கு உரியதே. எனவே, "நிலத்தையும், அதில் விளைவனவற்றையும் என்ன செய்வது" என தீர்மானிப்பது தலைவருடைய தனிப்பட்ட முடிவுக்குட்பட்டது. பணியாளர்கள் இதில் முடிவு செய்ய முடியாது.
2. தலைவரின் தீர்ப்பு: இந்த உவமையில் குறிப்பிடப்படுகின்ற 'Zizania' என்னும் களையைப் பற்றி நாம் அறிந்துகொள்ளுவது நன்றாயிருக்கும். விளைச்சலின் ஆரம்பக் கட்டத்தில் இந்த வகை களைகள் கோதுமைச் நாற்றுகளை போலவே காணப்படுவதால், கோதுமை நாற்றுகளுக்கும், களைகளுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாமல், பார்ப்போரை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. களைகளின் வேர்கள் உறுதியாகவும், ஆழமாக செல்வனவாகவும் இருப்பதால், அவற்றை அப்புறப்படுத்தும்போது, கோதுமைச் செடிகளையும் பறித்துவிடக் கூடிய நிலைமை ஏற்படலாம். ஆரம்ப நிலையில், கோதுமைச் நாற்றுகள் எவை, களைகள் எவை என யாருக்கும் தெரியாது. எனவே, முடிவெடுத்து தீர்ப்பிடுவதற்கான நேரம் இதுவல்ல. களைகளை விதைக்கின்ற "பகைவன்" யார் என்பதை நற்செய்தியின் இந்தப் பகுதி அடையாளம் காட்டவில்லை. இந்தப் "பகைவன்" யார்? "பகைவன்" யாரெனெத் தெரிந்து கொள்வதற்கு, நாம் கடைசிவரை காத்திருக்கவேண்டும். கடவுள் மட்டுமே விடை சொல்லக் கூடிய வினா இது. காலம் தாழ்த்தி வருகின்ற இந்த தீர்ப்பு, கோதுமைக்கும், களைகளுக்கும் சமமான வாய்ப்பைக் கொடுத்தாலும், முடிவில் கோதுமைப் பயிரைக் காப்பாற்றுகிறது.

"தாமதித்து வருகின்ற தீர்ப்பு" என்பது இறையரசின் சிறப்பியல்புகளில் ஒன்று. இதுவே தலைவரையும், பணியாளரையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.      

பயன்பாடு:
தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை ரபீந்திரநாத் தாகூர் தனது கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தார்: "காலைப்பொழுது விடிந்திருந்தது. ஆனால் என் பணியாள் வரவில்லை. கதவுகள் திறந்திருந்தன. கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவரப்படவில்லை. இரவு முழுவதும் என் பணியாள் வெளியே சென்றிருந்தான். எனது காலை உணவு தயாரிக்கப்படவில்லை. எனது ஆடைகள் எல்லாம் மடிக்கப்படாமல் கலைந்துக் கிடந்தன. நேரம் ஆக ஆக, எனது கோபமும் அதிகமானது. அவனுக்கு கடுமையான தண்டனை கொடுப்பதற்கான வழிகளை ஆராய்ந்து கொண்டிருந்தேன். வெகுநேரம் கழித்து கடைசியாக அவன் வந்தான். என் முன்னே தலைகுனிந்து, பணிவோடு நின்றான். நான், "என் முன்னே நில்லாதே, போய்விடு; இனி ஒருபோதும் என் முகத்தில் விழிக்காதே" என்று கோபத்தோடு சொன்னேன். என்னை நிமிர்ந்து பார்த்த அவன், சற்று நேரம் மௌனமாக நின்றிருந்தான். பிறகு மிகவும் தாழ்ந்த குரலில் கூறினான்: "என்னுடைய பெண்குழந்தை நேற்று இரவு இறந்துவிட்டது". இதற்கு மேல் எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டகன்ற பணியாள், தனது அன்றாட வேலைகளைச் செய்வதற்கு சென்றுவிட்டான்”. (The Book of Gentle wisdom, Easy Road comfort edition, By Allan Kellehear, 2008, page 46)

அழக்கூட முடியாத அதிர்ச்சியில் உறைந்துபோனார், தாகூர். தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து வெகுநேரம் அவர் எழுந்திருக்கவில்லை. தாகூர் மிக அவசரத்தில் வேகமாக ஒரு முடிவை எடுத்திருந்தார். அந்த முடிவை எடுப்பதில் அவர் சற்று தாமதித்திருந்தால், அது தாகூருக்கு இறையரசின் அனுபவமாக இருந்திருக்கும்.

ஆக, "எரிக்கப்படுவதற்காக பறிக்கப்படும் களைகளை போன்ற தீயோர் யார்?" என்று நாம் எவ்வாறு அறிந்துகொள்வது? "நம்மால் அறிந்து கொள்ள இயலாது" என்று நற்செய்தி வாசகம் கூறுகிறது. இப்போதைக்கு நம்மால் இதனை அறிந்து கொள்ள முடியாது. ஆயினும், வேறு சிலவற்றை நாம் அறிந்து கொள்ள முடியும். கோதுமைக் கதிர்களை ஒன்று சேர்த்து விண்ணக களஞ்சியத்தில் சேர்ப்பதற்காக இறுதிநாளில் வானதூதர்கள் வரும்பொழுது, ஆலயத்தில் நமக்கு சமீபத்தில் மிக சாதாரணமாக அமர்ந்திருந்த, "முரட்டுத்தனமானவர்", "தற்பெருமைக்காரர்" என்று நாம் எண்ணியிருந்த ஒருவர், அந்தக் கட்டுகளில் ஒரு கோதுமையாக இருக்கலாம். இழிவான பாவியாக நாம் நினைத்திருந்தவர் கூட அந்த கோதுமைக் கட்டுகளில் காணப்படலாம். ஆகவே, இறுதிநாளில் வானதூதர்கள் வந்து பிரித்தெடுக்கும் நேரம் வரை, களைகளை நாம் இனம் காண இயலாது.

இதே போல, ஆலயத்தில் அடக்க ஒடுக்கமாகவும், பக்திமானாகவும், நமக்கு அருகிலே பணிவாக அமர்ந்திருந்த மற்றொருவர், களைகளோடு சேர்க்கப்பட்டிருப்பதை காணலாம். மிகவும் போற்றத்தக்கவராக, புனிதராக நாம் எண்ணியிருந்த நபர் கூட இறுதிநாளில் களைகளின் கட்டுகளில் காணப்படலாம். களைகளை எவ்வாறு நம்மால் இப்போதைக்கு அடையாளம் காண முடியாதோ, அது போலவே கோதுமைகளையும் நம்மால் கண்டுகொள்ள முடியாது.

நமது பணி ஒரு நீதிபதியின் பணியல்ல; ஏனெனில் நாம் அதற்காக குறிக்கப்படவில்லை. தொடக்கத்தில் மிக சிறியதாக இருக்கின்ற ஒரு கடுகு விதையைப் போன்றதே நமது பணி. நாம் ஆற்றுகின்ற சிறு அன்புச்செயலும், கருணை காட்டுகின்ற ஒரு கணமும், துணிவுடன் செயலாற்றிய தருணமும், கண்ணுக்குப் புலப்படாத விதையின் வளர்ச்சியைப் போன்றதே. மிகச் சிறியதாயிருக்கிற கடுகு விதை, பெரிய புதராக வளர்ச்சியடைந்து, வானத்துப் பறவைகள் பலவற்றிற்கு வீடாகும் வண்ணம் பெரிதாகிறது.

முடிவுரை:
நற்செய்தியில் இயேசு குறிப்பிடுகின்ற இறையரசு என்பது, தாமதித்து தீர்ப்பிடுவதை பற்றியதே. "தீர்ப்பிடுதல்" என்ற செயலை நாம் நிறுத்திவிட்டு, அந்தப் பணியை கடவுளிடம் விட்டுவிடுவோமா? ஏனெனில்,
நல்லவை - தீயவை,
தூயது - தூய்மையற்றது,
ஒழுக்கம் - ஒழுக்கக்கேடு,
புனிதமானது - புனிதமற்றது -- இவற்றையெல்லாம் கடவுளே தீர்ப்பிட்டுக் கொள்வார்.


மறையுரை-வழங்குபவர்:
ஆப்பிரிக்காவிலிருந்து
Sahaya G Selvam <selvamsdb@gmail.com>

Believe in the principle of ‘graduality’!

I realise how I have been sucked into the world of “fast-food”!  I have become increasingly impatient.  When I go for breakfast I want instant coffee.  When I have a headache I want instant relief.  When I email people I want instant replies.  When I fall in love I want instant pleasure.  When I have problems I want instant solutions.  When I pray I want instant miracles!

The Kingdom of God is not a Fast-Food Joint: In the gospel text of today, Jesus reminds me that in the Kingdom of God problems will be solved at their own time.  Evil may grow together with good; evil will not be uprooted instantly.  I need to wait patiently until the end of time (Mt 13:24-30).  The Kingdom of God grows like a mustard seed – it is not a finished product.  It may seem tiny, it might grow slowly, but there will come a time when it will be big enough to attract the birds of the air (Mt 13:31-32).  The Kingdom of God affects its environment like the yeast – it will not seem dramatic.  The process may be hidden, it might take time, but there will come a time when the entire dough will be leavened (Mt 13:33). Don’t judge things by their appearance.  Be patient.  Believe in the law of graduality. God is in control.

The Kingdom of God is a process, and you too are! 

You can’t be today what time will make you tomorrow:  Teilhard de Chardin, the Jesuit scientist, once wrote to his sister:
Above all, trust in the slow work of God. We are all, quite naturally, impatient in everything to reach the end without delay. We should like to skip the intermediate stages. We are impatient of being on the way to something unknown, something new, and yet it is the law of all progress that is made by passing through some stages of instability- and that it may take a very long time.

And so I think it is with you. Your ideas mature gradually – let them grow, let them shape themselves, without undue haste. Don't try to force them on, as though you could be today what time (that is to say, grace and circumstances acting on your own good will) will make you tomorrow.

Only God could say what this new spirit gradually forming within you will be. Give our Lord the benefit of believing that his hand is leading you and accept the anxiety of feeling yourself in suspense and incomplete.




No comments:

Post a Comment