Wednesday, 16 January 2019

ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு


எசாயா 62:1-5
1கொரி. 12:4-11
யோவா. 2:1-12

 

சில ஆண்டுகளுக்கு முன்னால் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் அருளால் நடந்த அற்புதம் இது. நான் குறிப்பிடும் அந்த தம்பதியர் பாளையங்கோட்டையிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இளம் தம்பதிகள் திருமணம் முடித்து ஐந்து ஆண்டுகளாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தவர்கள். எத்தனையோ மருத்துவத் துறையை நாடியும் பலன் கிடைக்கவில்லை. பெண்ணோ இந்து மதத்திலிருந்து கத்தோலிக்க திருமறைக்கு திருமணத்தின்போது மனம் மாறியவர். குழந்தை இல்லாத நிலையில் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்ததால்தான் இந்த அவல நிலை என்று நினைத்து பரம்பரை கிறிஸ்துவனாக இருந்த கணவரை வற்புறுத்தி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்று திருநீறு பூசி காணிக்கை செலுத்தியும் வந்தார்கள். ஆனால் பலன் இல்லை. இந்த சூழ்நிலையில் மனம் உடைந்த இந்தத் தம்பதியரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவர்களுக்கு ஆறுதல் கூறி, நீங்கள் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலம் சென்று செபித்து வாருங்கள். அன்னை மரியா, கானாவூர் திருமணத்தின் குறையை நீக்கியது போல, உங்கள் குறை நீங்க தன் மகன் இயேசுவிடம் பரிந்து பேசுவார்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். அங்கே, தினமும் ஈர உடையோடு தவம் செய்தும், அங்கே வைக்கப்பட்டுள்ள குணமானவர்களின் காணிக்கைப் பொருட்களைப் பார்வையிட்டும், செபித்தும் இரண்டு மாதங்கள் தங்கி இருந்தார்கள். என்ன ஆச்சரியம்! குழந்தைப் பாக்கியமே கிடைக்காது என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டும் அந்த இரண்டாவது மாதத்திலே வேளாங்கண்ணியிலே கருவுற்று வீடு திரும்பினார்கள் அந்த சகோதரி. அவரும் ஒரு மருத்துவர்! ஆம்! நான் கண்டதையும், கேட்டதையும் உங்களுக்கு அறிவிக்கிறேன். ஓர் ஆண் மகனைப் பெற்றார்கள். அவருக்கு சார்லஸ் பிரேம்குமார் என்று பெயரிட்டார்கள். அவரும் இப்போது ஒரு டாக்டர்.


ஆம்! இயேசு கானாவூரில் மட்டுமல்ல, இன்றும் அவரது தாயின் சொல்லிற்கிணங்க அற்புதங்கள் செய்து வருகிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இன்று நமக்கு எத்தனையோ வரங்கள் தேவைப்படுகின்றன. ஆண்டவரின் கையில் நாம் அழகிய மணி முடியாகவும், அரச மகுடமாகவும் விளங்க வேண்டும். மணமகனைப்போல, மணப்பெண்ணைப் போல மங்களம் நிறைந்தவளாக (எசாயா 62:1-5) நாம் திகழ வேண்டும் என விரும்புகிறோம். இந்த விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள அழகான வழி, அன்னை மரியாவின் பரிந்து பேசுதலுக்காக நாம் நம்பிக்கையோடு அவளை நோக்கி மன்றாடுவதாகும்.

அம்மா! அன்னை கன்னித் தாயே! இதோ உமது பிள்ளைகளாகிய நாங்கள் உம்மிடம் ஓடி வந்தோம். எங்கள் குறை தீரவும், உமது திருமகனின் புகழை நாங்கள் பாடவும், பரிந்து பேசம்மா என்று செபிப்போம்.



இயேசு நம்மோடு இருக்க, நமக்குக் குறையேது?

இயேசு ஒரு போதும் நமது குறையைப் பார்க்கமாட்டார்; நமது நிறையைத்தான் பார்ப்பார். இன்றைய நற்செய்தியிலே வரும் கதாப்பாத்திரங்களைப் பாருங்கள்.

மாதா - நிறைவுள்ளவர்.

சீடர்கள் - நிறைவுள்ளவர்கள்.

பணியாளர்கள் - நிறைவுள்ளவர்கள்.

பணியாளர்களின் தலைவனுக்குத் தெரியுமே திராட்சை இரசம் எங்கிருந்து வந்ததென்று! தெரிந்திருந்தும் அவன் நன்றி சொல்லவில்லை! அவன் நன்றி சொல்ல மறந்தவன்.

கணவனும் மனைவியும் - அவர்களும் நன்றி சொல்லவில்லை!

விருந்தினர்கள் - அவர்களும் நன்றி சொல்லவில்லை.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு என்பார் திருவள்ளுவர்.

திருமண வீட்டில் 3 பேர் நிறைவுள்ளவர்கள் ! 3 பேர் குறையுள்ளவர்கள்! ஆனால், இயேசு குறையைப் பார்க்காமல், நிறையைப் பார்த்து புதுமை செய்தார்.

இயேசு எப்பொழுதுமே நிறைவைப் பார்ப்பவர், நேர்மறையாகச் சிந்திப்பவர்.

மத் 9:9-13 முடிய உள்ள பகுதி :

எல்லாரும் புனித மத்தேயுவிடம் ஒரு பாவியைப் பார்த்தனர். ஆனால் இயேசுவோ அவருக்குள் ஒரு புனிதரை, ஒரு நற்செய்தியாளரைப் பார்த்தார்.

யோவா 4:1-42 முடிய உள்ள பகுதி :

எல்லாரும் அந்த சமாரியப் பெண்ணுக்குள் ஒரு பாவியைப் பார்த்தனர்! ஆனால் இயேசுவோ அவளுக்குள் ஒரு புனிதையை, இறைத் தூதரைப் பார்த்தார்.

எல்லாரும் சவுலிடம் ஒரு சமய விரோதியைக் கண்டார்கள். ஆனால் இயேசுவோ, அவரிடம் ஒரு திருத்தூதரை, மறைச்சாட்சியைக் கண்டார்.

நாம்தான் அடிக்கடி நமது குறைகளை நினைத்துக் கூனிக் குறுகிப் போகின்றோம். ஆனால் இயேசுவோ, நம்மிடம் உள்ள நல்ல குணங்களைப் பார்த்து நம்மை ஆசிர்வதிக்கக் காத்துக்கொண்டிருக்கின்றார்.

இந்த உண்மை , மன்னிப்பே உருவான , அன்பே உருவான, கருணையே உருவான, பரிவே உருவான, பாசமே உருவான இயேசுவின் பக்கம் நம்மை உந்தித் தள்ளட்டும்.

இயேசு நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார் (முதல் வாசகம்) ; தள்ளிவிடமாட்டார். அவரது மன்னிப்பில் தூய்மை பெற்று, அவரது வரங்களால் நிரப்பப்பட்டு (இரண்டாம் வாசகம்) புத்தாண்டில் நாம் புது வாழ்வைத் தொடங்குவோம்.
மேலும் அறிவோம் :
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் (குறள் : 104).

பொருள் : நன்றி பாராட்டும் பண்புடையவர், பிறர் தமக்குச் சிறிதளவே உதவினாலும் அதனைப் பெருமை பொருந்திய பனையளவாகக் கருதிப் போற்றுவர்.




இரண்டு சிறுவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் மற்றவனிடம், "வீட்டிலே யார் பெரியவங்க? அப்பாவா அல்லது அம்மாவா?" என்று கேட்டான். அதற்கு மற்றவன், "நிச்சயமாக அம்மா தான் பெரியவங்க. ஏனென்றால், எங்கள் அப்பா தனது தொழிற்சாலையிலே 100 பேரை அடக்கி ஆள்கிறார். ஆனால், வீட்டிலே அம்மா எங்க அப்பாவையே அடக்கி ஆளுகிறாங்க" என்றான். இச்சிறுவன் கூறியதைப் போலவே புனித ஜான் மரி வியான்னி பின்வருமாறு கூறியுள்ளார்: "கடவுளை விடச் சக்தி வாய்ந்த ஒருவரை எனக்குத் தெரியும். அவர் தான் செபிக்கத் தெரிந்த மனிதர். கடவுள் உலகையே ஆளுகிறார், ஆனால் செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளையே ஆளுகிறார். கடவுள் 'முடியாது' என்று சொன்ன பிறகும், செபிக்கத் தெரிந்தவர் கடவுளை 'முடியும்' என்று சொல்ல வைக்கிறார்”, புனித வியான்னியின் கூற்று முழுக்க முழுக்க உண்மை என்பது கானாவூர் திருமணத்தில் புலனாகிறது. மரியாவின் வேண்டுகோளுக்குக் கிறிஸ்து முதலில் முடியாது: எனது நேரம் இன்னும் வரவில்லை ' என்று சொல்லிவிட்டார். ஆனால், மரியா மனந்தளராது. பணியாளர்களிடம் 'இயேசு சொல்வதைச் செய்யுங்கள்' என்று கூறியபின், இயேசுவால் தம் தாயின் விண்ணப்பத்தை மறுக்க முடியவில்லை. தமது முதற் புதுமையைச் செய்கிறார். 'முடியாது' என்ற சொன்ன இயேசுவை 'முடியும்' என்று சொல்ல வைக்கிறார் மரியா.

நாம் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் (லூக் 18:1). நமக்குத் தேவையானது கிடைக்கும்வரை நாம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; தட்டிக் கொண்டே இருக்க வேண்டும்: தேடிக்கொண்டே இருக்க வேண்டும் (லூக் 11:9-10). புனித மோனிக்கா தமது மகன் அகுஸ்தினார் மனமாற்றத்திற்காக 16 ஆண்டுகள் தொடர்ந்து கண்ணீர் சிந்திச் செபித்தார். அவருடைய வேண்டுதல் கேட்கப்பட்டது. ஒரு திரு மணவிருந்தில் நான்கு பந்திகளிலும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து பந்தி பரிமாறியவர், "என்னப்பா நாலு பந்தியிலும் தொடர்ந்து சாப்பிடுற; எனக்கு ஞாபக சக்தி இல்லை என்றா நினைக்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு அந்தச் சாப்பாட்டு ராமன். "என்ன செய்கிறது? உங்களுக்கோ ஞாபக சக்தி அதிகம்; எனக்கோ ஜீரண சக்தி அதிகம்" என்றார்! பலருக்கு ஜீரண சக்தி அதிகம். சாப்பாட்டிலேயே அவர்கள் குறியாக இருக்கின்றனர். அடுத்தவர்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. ஆனால், மரியாவுக்கு ஞாபக சக்தி அதிகம். பிறருடைய தேவைகளைக் குறிப்பறிந்து உணர்ந்து அவற்றைப் போக்கத் தீவிரமாகச் செயல்படுகிறார். "பெண்கள் வல்லினமா? மெல்லினமா? இடையினமா?" என்று ஓர் அறிஞரைக் கேட்டதற்கு அவர், “பெண்கள் செலவினம்" என்றார். ஆனால், உண்மையில் பெண்கள்
"மரியினம்": மரியாவின் வாரிசுகள். மரியாவைப் போன்று மென்மையான தாய்மை உணர்வுடன், "உண்டி கொடுத்தார், உயிர் கொடுத்தார்" என்ற கொள்கைக்கேற்ப, பசித்தவர்களுக்கு உணவளித்து உயிர் கொடுப்பவர்கள் பெண்கள். பெண்ணாகப் பிறப்பது ஒரு சாபக்கேடு அல்ல, மாறாக அது ஒரு மாபெரும் பேறு; ஏனெனில் தாமரை போன்ற அவர்களது கைகளால் தான் உலகில் அறங்கள் வளரும்.

இளவரசன் உதய குமாரனை மயக்கிய மணிமேகலை அழகி. ஆனால் தன் தலையை மொட்டை அடித்து, காவி உடை அணிந்து, அமுத சுரபியைக் கொண்டு மக்களின் பசி போக்கிய மணிமேகலை பேரழகி, எப்பொழுதெல்லாம் பெண்கள் பிறரை வாழ வைக்கின்றார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் பேரழகிகளாகத் திகழ்கின்றனர். பெண்களிடம் தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. ஆண்களுடன் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் தனித்தன்மையை இழந்து விடக்கூடாது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுவதுபோல, கடவுள் எல்லாருக்கும் ஒரே விதமான கொடைகளைக் கொடுப்பதில்லை. மாறாக, வெவ்வேறு வரங்களைப் பொது நன்மைக்காகப் பகிர்ந்தளிக்கிறார் (1 கொரி 12:4- 11). பெண்ணிடத்தில் தாய்மைப் பண்பு மற்ற எல்லாப் பண்புகளைவிட விஞ்சி நிற்க வேண்டும். கானாவூர் திருமணத்தில் இயேசு செய்த புதுமையின் இறுதிப் பயன் என்ன என்பதை யோவான் அழுத்தமாகக் கூறியுள்ளார். "இதுவே இயேசு செய்த முதல் அரும்அடையாளம், இது கலிலேயாவிலுள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சிமையை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்" (யோவா 2:11).

ஒருதாய் தம் மகளுக்குப் பரத நாட்டியம் கற்றுக் கொடுத்து, கடைசியில் மகளின் பரத நாட்டியத்தை அரங்கேற்றம் செய்து பெருமிதம் அடைகிறார். அவ்வாறே மரியாவும் தம் மகன் கிறிஸ்துவினுடைய மீட்பின் நற்செய்தியைக் கானாவூரில் அரங்கேற்றம் செய்து எல்லையில்லா ஆனந்தம் அடைகிறார், கிறிஸ்துவின் மாட்சிமை வெளிப்படவும் அவருடைய சீடர்கள் அவரிடம் விசுவாசம் கொள்ளவும் மரியா மூலகாரணமாக இருக்கிறார். எனவே, மரியா கிறிஸ்துவின் மகிமையை மறைக்கிறவர் அல்ல, மாறாக அதை வெளிச்சத்துக்குக் கொண்டு வருபவர். மரியாவைப் பின்பற்றி, மரியாவின் திருத்தலங்கள் மக்களின் நம்பிக்கையை வியாபாரமாக மாற்றிக் காசு சம்பாதிக்காமல், கிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்தும் புனிதத் தலங்களாகத் திகழவேண்டும்,

ஒருவர் போலிப் போதகரா? அல்லது உண்மையான போதகரா? என்பதை அறிந்து கொள்ள உதவும் அமிலப் பரிசோதனை என்ன? போலிப்போதகர்கள் தங்களை மையமாக வைத்து தங்களுக்கு விளம்பரம் தேடுவார்கள். ஆனால், உண்மையான போதகர்கள் மரியாவைப் போன்று கடவுளை மையப்படுத்தி அவரை மகிமைப்படுத்துவார்கள். திருமுழுக்கு யோவானைப் போன்று உண்மையான போதகர்கள், "அவரது (கிறிஸ்துவின்) செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்" (யோவா 3:30) என்னும் மனநிலையைக் கொண்டிருப்பர். மரியாவின் இறுதிக் கட்டளை; "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவா 2:5).

மரியா கிறிஸ்துவின் தாய் என்பதைவிட கிறிஸ்துவின் தனி முதற் சீடர் ஆவார். கிறிஸ்துவின் சீடராகத் திகழ வேண்டுமென்றால், அவரின் வார்த்தையைக் கடைப்பிடிக்க வேண்டும். “என் வார்த்தையை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்தால், என் சீடராய் இருப்பீர்கள்" (யோவா 8:31). நாம் கிறிஸ்துவின் விசிறிகளா? அல்லது அவருடைய சீடர்களா? கடவுள் இஸ்ரயேல் மக்களோடு திருமண உடன்படிக்கை செய்து கொண்டார் (முதல் வாசகம், எசா 62:1-5). கிறிஸ்து புதிய உடன் படிக்கையின் மணமகன், அவர் கொண்டு வந்த இறையாட்சி ஒரு திருமண விருந்தாகும். அவர் தமது முதல் புதுமையை ஒரு திருமணத்தில் செய்தது மிகப் பொருத்தமானது. அவர் கொடுத்த முதல் தரமான இரசம் நற்கருணை என்னும் அன்பு விருந்துக்கு அடையாளம், அதில் பங்கு பெறும் நாம் பேறுபெற்றோர். சட்டமென்னும் பழைய சித்தையில் அன்பு என்னும் புதிய இரசத்தை ஊற்றாது. புதிய சித்தையில் புதிய இரசத்தை மாற்றுவோம். இனி நாம் சட்டத்திற்கு அடிமைகள் அல்ல, மாறாக அன்பின் அடிமைகள். அன்பே அனைத்திலும் சிறந்த நெறி (1 கொரி 12:31)



தூய ஆவியின் கொடைகள் பொது நன்மைக்காகவே!

அருள்பணி மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


அமெரிக்காவில் வாழ்ந்த மிகப்பெரிய செல்வந்தர் வில்லியம் ஆலன் ஒயிட். மிகுந்த தாராள உள்ளமும், இரக்க குணமும் உடையவர். ஒருமுறை அவர் தனக்கென்று  இருந்த 50 ஏக்கர் நிலத்தையும் தன்னுடைய ஊர் மக்களுக்காக எழுதி வைத்தார். இதை அறிந்த அவருடைய உறவுக்காரர் ஒருவர் அவரிடம், “எதற்காக இவ்வளவு நிலத்தையும் ஊர் மக்களுக்கு எழுதி வைக்கிறீர்கள்” என்று கேட்டார்.

அதற்கு அவர், “நான் என்னிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கிறபோது மூன்றாவது விதமான மகிழ்ச்சியை அனுபவிக்கிறேன்” என்றார். “அது என்ன மூன்றாவது விதமான மகிழ்ச்சி. அதைக் கொஞ்சம் எனக்குத் தெளிவாக விளக்குங்கள்” என்று கேட்க, வில்லியம் ஆலன் ஒயிட் மறுமொழியாக, “பணம் மூன்றுவிதமான மகிழ்ச்சிகளைத் தருகிறது. முதலாவது பணத்தைச் சேர்ப்பதில் மகிழ்ச்சி; இரண்டாவது கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை பாதுகாப்பதில் மகிழ்ச்சி; மூன்றாவது மற்ற எல்லாவற்றையும்விட சிறந்தது, அது நம்மிடம் இருப்பவற்றை பிறருக்குக் கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி.

பலர் தாங்கள் பெற்ற செல்வத்தை; திறமைகளை; கடவுள் கொடுத்த ஆசிர்வதங்களை தங்களுக்குள்ளே வைத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் மூன்றாவது விதமான மகிழ்ச்சியை அடைவதில்லை. ஆனால் நான், என்னிடம் இருப்பதை பிறருக்குக் கொடுப்பதால் அதை அனுபவிக்கிறேன்” என்றார்.

நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி மற்ற எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்பதை இந்நிகழ்வு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் அழைப்பு  “நமக்குக் கொடுக்கப்பட்ட கொடைகள் பிறரது நம்மைக்காகவே” என்பதே. கடவுள் கொடுத்த திறமைகள், கொடைகள், வாய்ப்பு வசதிகள் யாவற்றையும் நமது சொந்த தேவைக்காகவே பயன்படுத்தி வாழும் நமக்கு, இன்றைய வாசகங்கள் அவற்றைப் பொதுநலத்திற்காக பயன்படுத்த அழைப்புத் தருகிறது.

கொரிந்தியருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், ‘கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமையைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஒரு சிலருக்கு ஞானம் நிறைந்த சொல்வன்மை, அறிவுநிறைந்த சொல்வன்மை, நம்பிக்கை, வல்ல செயல்கள் புரியும் ஆற்றல், பரவசப் பேச்சுப் பேசும் ஆற்றல், இன்னும் ஒருசிலருக்கு அவற்றை விளக்கும் ஆற்றல் இவையெல்லாம் கொடுத்திருக்கலாம். ஆனால் நாம் அதனை பிறருக்காக, பொது நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றதொரு அழைப்பினை விடுக்கிறார் (1 கொரி 12:7).

ஆனால் நடைமுறையில் கடவுள்/ தூய ஆவியார்  கொடுத்த திறமைகளை, கொடைகளை பொது நன்மைகாகப் பயன்படுத்தாமல் தன்னுடைய சுயநலத்திற்காக, தன்னுடைய பெயர் விளங்கச் செய்வதற்குத்தான் மக்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. வெறுமனே பணம், பொருள் என்று மட்டுமல்லாமல் இறைவனின் பணி செய்ய கடவுள் கொடுத்திருக்கும் ஆற்றலையும், திறமையையும்கூட இன்றைக்கு மக்கள் தங்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.  இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

ஒருமுறை மராட்டிய மன்னர் சிவாஜி பகைவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு பெரிய கோட்டையைக் கட்டிக்கொண்டிருந்தார். அந்த கோட்டையைக் கட்டும் பணியில் ஏராளமான மக்கள் ஈடுபட்டிருந்தார்கள். அரசர் அவர்கள் எல்லாருக்கும் உணவு கொடுத்து, அவர்களை பராமாரித்துக் கொண்டும் வந்தார். இது அவருடைய உள்ளத்தில் ஒருவிதமான கர்வத்தை உண்டுபண்ணியது. ‘நான்தான் எல்லாருக்கும் உணவு கொடுக்கிறேன். நான் எவ்வளவு பெரிய மன்னர்’ என்ற கர்வம் அவருடைய பேச்சிலே அடிக்கடி தெறித்தது.

இதைக் கண்ணுற்ற அவருடைய குரு மன்னருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் அவர் மன்னரிடம், “மன்னர் மன்னா! எனக்காக அருகே இருக்கக்கூடிய பாறையை உடைத்து, அதை இங்கே கொண்டுவர முடியுமா?” கேட்டார். அதற்கு மன்னரும் தன்னுடைய வேலையாட்களிடம் பாறையை உடைத்துக்கொண்டு வரச்சொல்ல, அவர்களும் அதைக் கொண்டுவந்தார்கள்.

அப்போது அந்த பாறைக்குள் இருந்து ஒரு தேரை (தவளை) வெளியே ஓடியது. உடனே குரு மன்னரை பார்த்து, “மன்னா! எல்லாருக்கும் உணவிடுகிறீர்கள், இந்த பாறைக்குள் இருந்த தேரைக்கும் நீங்கள்தானே உணவிடுகிறீர்கள்” என்று சொன்னதும், மன்னருக்கு, குரு தன்னுடைய ஆணவத்தான் சுட்டிக் காட்டுகிறார் என்பதை உரைத்தது. அதன்பிறகு ஆணவம் இல்லாது செயல்படத் தொடங்கினார்.

கடவுள் கொடுத்திருக்கும் கொடைகள்/பொறுப்புகள் எல்லாம் கடவுளின் பேர் விளங்கப் பயன்படுத்த வேண்டுமே ஒழியே அதனை தன்னுடைய பெயர் விளங்கப் பயன்படுத்துவது தவறு என்பதை இந்த நிகழ்வானது அழகாக எடுத்துரைக்கிறது.

ஆக, நம்மிடம் இருக்கும் எல்லாமும் நாம் பிறருக்காக பயன்படுத்த, இறைவன் கொடுத்த கொடைகள் என்பதை நாம் உணரவேண்டும். இதற்கு நம்மிடம் இருக்கக்கூடிய அடிப்படையான மனநிலை, நாம் அனைவரும் ஒரே உடலின் உறுப்புகள்,  இந்த உடலின் உறுப்புகளுக்குத் தலையாக இருப்பவர் கிறிஸ்துவே என்பதை நாம் உணரவேண்டும். உடலில் காலோ அல்லது தலையோ அடிபட்டிரும்போது கை சும்மா இருக்காது. உடனே அது உதவி செய்ய விரைந்து வரும். அதுபோன்றுதான் கிறிஸ்து என்ற உடலில் உறுப்புகளாக இருக்கும் நாம் அனைவரும், நம்மோடு வாழக்கூடிய மக்களின் நிலை அறிந்து, உதவி  செய்ய விரைந்து வரவேண்டும்.

அந்த வகையில் கடவுள் கொடுத்த எல்லா ஆசிர்வாதங்களையும் பொது நன்மைகாகப் பயன்படுத்திய ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால் அது இயேசுவைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. இன்று படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம் அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.

கானாவூர் திருமணத்திற்கு தன்னுடைய தாய் மற்றும் சீடர்களுடன் செல்லும் இயேசுக் கிறிஸ்து, அங்கே திருமண விருந்தின்போது திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்பதை தன்னுடைய தாயின் வழியாகக் கேள்விப்படுகிறார். தாயின் வேண்டுதலின் பேரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றி, மணவீட்டாருக்கு நேரிட இருந்த அவப்பெயரைப் போக்குகிறார்.

இங்கே இயேசுக் கிறிஸ்து கடவுள் கொடுத்த அருளை தனது பெயர் விளங்கப் பயன்படுத்தவில்லை. மாறாக மணவீட்டாரின் அவல நிலை நீங்கவும், கடவுளின் பெயர் விளங்கவுமே அப்படிச் செய்கிறார். நற்செய்தியின் இந்த பகுதியில் மட்டுமல்லாது, எல்லா இடங்களிலும் இயேசு தன் அருளை பிறரது நலனுக்காகவே பயன்படுத்துகிறார். அதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது ‘எல்லா மக்களும் இறைவனின் பிள்ளைகள்’ என்ற எண்ணமே. நாமும் இப்படி கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கொடையை பிறருக்காகப் பயன்படுத்தும்போது அதைவிடச் சிறந்த பேறு வேறு எதுவும் இருக்க முடியாது.

“சமுதாயச் சேவையை சட்டையாக மாற்றாதீர்கள்; உங்கள் உடம்பின் சதையாக மாற்றுங்கள்” என்பார் கவிஞர் வைரமுத்து. நாம் சமுதாயத்திற்கு ஏதோ ஒருசில நன்மைகளை மட்டும் செய்து திருப்திப்பட்டுக் கொள்ளாமல், எப்போதுமே இயேசுவைப் போன்று இறைபணி/சமூகப்பணி செய்ய வேண்டும் என்பதுதான் அவர் சொல்ல விரும்பும் கருத்து.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில், பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் ஒரு காலைப் பொழுதில், காரில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர் பனிப்பொழிவில் மாட்டிக்கொண்டார். எவ்வளவுதான் அவர் சத்தம் போட்டாலும் யாருமே அவருக்கு உதவ முன்வரவில்லை.

அப்போது அங்கு வந்த ஓர் இளைஞர், தன்னுடைய கையில் இருந்த இரும்புக் கம்பியால் பனிக்கட்டிகளை எல்லாம் உடைத்து, அகற்றிவிட்டு, அவரை அதிலிருந்து காப்பாற்றினார். தனக்கு தக்க நேரத்தில் வந்து உதவியதற்காக, அன்பளிப்பாக ஏதாவது தரலாம் என்று நினைத்த அந்தக் கணவான், தன்னுடைய பையிலிருந்து கொஞ்சம் டாலரை எடுத்து அதை அவரிடம் நீட்டினார்.

ஆனால் அந்த இளைஞர் பணத்தை வாங்க மறுத்துவிட்டுச் சொன்னார், “நான் DO UNTO OTHERS” என்று மன்றத்தில் உறுப்பினராக இருக்கிறேன். இந்த மன்றத்தின் முக்கியமான நோக்கம் தேவையில் இருப்பவருக்கு ஓடோடிச் சென்று உதவுவதுதான் என்று சொன்னதும், காரில் வந்திரந்த அந்த கணவான் நன்றிப் பெருக்கோடு அவரைக் கைகூப்பி வணங்கிவிட்டு, அங்கிருந்து சென்றார்.

நாம் ஒவ்வொருவருமே தேவையில் இருப்பவருக்கு, அதுவும் யாராக இருந்தாலும் உதவவேண்டும்; கடவுள் கொடுத்த கொடைகளை பிறர் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

இப்படியெல்லாம் ஒரு மனிதர் வாழ்கிறபோது கடவுள் எத்தகைய ஆசிர்வாதத்தைத் என்று இன்றைய முதல் வாசகத்தில் (எசாயா புத்தகம் 62) படிக்கின்றோம்.

“அவர்களது வெற்றியையும், மேன்மையையும் புறவினத்தார் காண்பார்கள்; புதிய பெயரால் அழைக்கப்படுவார்கள்; இறைவனின் கையில் அழகிய மணிமுடி போன்றும், அரச மகுடம் போன்றும் இருப்பார்கள்” என்று இறைவாக்கினர் எசாயா கூறுகிறார். ஆம், இறைப்பணி நல்ல உள்ளத்தோடு செய்யும்போது இறைவனும் நம்மை ஆசிர்வதிப்பார் என்பதே உண்மை.

எனவே நாம், நமது ஆண்டவர் இயேசுவைப் போன்று கடவுள் நமக்குக் கொடுத்திர்க்கும் திறமைகளை/ கொடைகளை இறைவனின் பெயர் விளங்கவும், பொது நன்மைகாகவும் பயன்படுத்துவோம். அதன் வழியாக இறைவனின் அன்புப் பிள்ளைகள் ஆவோம். அவரது ஆசியை நிறைவாய் பெறுவோம்.

 
 
தலைவனின் தழுவல்

பழைய பொருட்கள் விற்கும் ஒரு கடையில் வயலின் ஒன்று பல நாட்களாக விற்காமல் கிடந்தது. அதை விலைகுறைத்தாலும் யாரும் வாங்குவதாகயில்லை. 'இதை வைத்து அடுப்பெரிக்கக்கூட முடியாது' என்று யாரும் வாங்காமல் ஒதுங்குகினர். அந்நேரம் அங்கே டிப்டாப்பாக ஒரு முதியவர் வந்தார். அந்த வயலினைத் தன் கையில் எடுத்து தான் வைத்திருந்த துணியால் மெதுவாகத் துடைத்தார். பின் அங்கேயே அமர்ந்து அதை வாசிக்கத் தொடங்குகினார். வயலினிலிருந்து புறப்பட்ட இசை கேட்டு கடை வீதியே ஸ்தம்பித்துத் திரும்பிப் பார்த்தது. வயலினை வாசித்து முடித்த முதியவர் அதை அதே இடத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டார். அவர் சென்ற சற்று நேரத்தில், 'அது எனக்கு, அது எனக்கு' என அந்த வயலினை வாங்கப் பலர் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்தனர். கேட்பாரற்றுக் கிடந்த அந்தப் பழைய வயலினுக்கு இப்போது ஏன் போட்டி? அந்த வயலினுக்கு மதிப்பைத் தந்தது எது? 'தலைவனின் தழுவல்' ('master's touch').

இசைத்தலைவன் தொட்டவுடன் வயலினின் மதிப்பு கூடுகிறது.

தலைவராம் இறைவன் தழுவும் பொருள்களும், நபர்களும் புதிய மதிப்பு பெறுகின்றனர் என்று நமக்கு முன்மொழியும் இன்றைய இறைவாக்கு வழிபாடு, அந்தத் தழுவலுக்கு நம்மை சரணாகதியாக்க அழைக்கின்றது.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 61:1-5) எசாயா நூலின் மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கி.மு. 539ஆம் ஆண்டு பாரசீக அரசன் சைரசு பாபிலோனியாவில் சிறைப்பட்டுக் கிடந்த மக்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பலாம் என்று கட்டளை பிறக்கின்றார். சிலர் பாபிலோனியாவியே தங்கிவிட, சிலர் மட்டும் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புகிறார்கள். திரும்பி வந்தவர்கள் தங்கள் நாடும், நகரும், ஆலயமும் சிதைந்து கிடந்ததைக் கண்டு மிகவும் துயருற்றனர். தரை மட்டமாகக் கிடந்த தங்கள் வீடுகள், ஆலயம், சாம்பலாகக் கிடந்த தங்கள் வயல்கள் என நிலம் வறண்டு கிடந்தது. 'எல்லாவற்றையும் சீக்கிரம் கட்டி எழுப்பிவிடலாம்' என்ற நம்பிக்கை சிறிது சிறிதாகக் கரைய ஆரம்பிக்கிறது. சோர்வும்,தோல்வியும், ஏமாற்றமும், சந்தேகமும் கவ்விக் கொள்கிறது. தங்கள் கடவுள் தங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யா? என்ற கேள்வியும் எழ ஆரம்பிக்கிறது. இந்தப் பின்புலத்தில்தான் இன்றைய எசாயாவின் இறைவாக்கு அங்கே உரைக்கப்படுகின்றது. முழு நம்பிக்கையாடும், தடுமாற்றமில்லா உறுதியோடும் எருசலேமின் புதிய மாட்சி பற்றி இறைவாக்குரைக்கின்றார் எசாயா.

'ஆண்டவரின் வாயிலிருந்து வரும் புதிய பெயர்' என்பதுதுதான் இறைவாக்கின் மையமாக இருக்கிறது. விவிலியத்தில் பெயர் மாற்றங்கள் இரண்டு பொருள்களைத் தருகின்றன: ஒன்று, பெயர் மாற்றம் பெறுகிற அந்த நபர் புதிய பணிக்கான அல்லது புதிய வாழ்க்கைமுறைக்கான அழைப்பைப் பெறுவார். இரண்டு, புதிய பெயரைத் தருவதன் வழியாகக் கடவுள் அந்த நபரின் மேல் புதிதாக உரிமை கொண்டாடுவார். இன்றைய முதல் வாசகத்தை, (அ) புதிய பெயர் (62:1-4), (ஆ) புதிய வாழ்க்கை நிலை (62:5), (இ) புதிய பாதுகாப்பு (62:6) என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். யூதர்களின் திருமணக் கொண்டாட்டம் மூன்று நிகழ்வுகளாக நடைபெறும். முதலில், வாக்குறுதி பத்திரம் எழுதப்படும். இரண்டு, மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையே உடன்படிக்கை செய்யப்படும். மூன்று, மணமகனும் மணமகளும் உடலால் இணைவர். இரண்டாவது நிகழ்வான உடன்படிக்கை அல்லது வாக்குறுதி பத்திரத்தில்தான் மனைவியின் பெயர் மாற்றப்படும். அதே போல, இங்கே ஆண்டவரும் இஸ்ரயேலை மணப்பதற்கு முன், தழுவிக்கொள்ளுமுன், அவளுக்கு பாபிலோனிய அடிமைத்தனத்தில் வழங்கப்பட்ட 'அசுவா' (கைவிடப்பட்டவள்), 'ஷெமமா' (பாழ்பட்டது) என்ற பெயர்களை மாற்றி, 'எப்சி-பா' (என் மகிழ்ச்சி அவளிடம்), 'பெயுலா' (மணமுடித்தவள்) என்ற புதிய பெயர்களை அளிக்கின்றார். நாடிழந்து நிற்கும், இழப்பை சரிசெய்ய முடியாமல் தவிக்கும் இஸ்ரயேல் மக்களை இறைவன் உரிமையாக்கிக் கொண்டு அவர்களுக்குப் புதிய வாழ்க்கை நிலையை வாக்களிக்கின்றார். மணமகளுக்கு பாதுகாப்பு தரும் மணமகன் போல இஸ்ரயேலுக்குப் பாதுகாப்பு தருவார் இறைவன். திருமணத்தில் மணமக்கள் ஒருவர் மற்றவருக்குத் தரும் உரிமை அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பது போல, இறைவன் இஸ்ரயேல் மக்கள் மேல் கொண்டாடும் உரிமை அவர்களின் பாதுகாப்பு அரணாக இருக்கின்றது.

ஆக, தவிடு பொடியாய்க் கிடந்த எருசலேம் நகரமும், அந்த நிலையில் கிடந்த நகரத்திற்குத் திரும்பிய மக்களும் தலைவனின் தழுவலால் புதிய பெயரும், புதிய வாழ்க்கை நிலையும், புதிய பாதுகாப்பும் பெறுகின்றனர்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 12:4-11) பவுல் கொரிந்த நகரத்திருச்சபையின் பிளவுகளில் ஒன்றான 'கொடைகள் பிளவு' பற்றியதாக இருக்கின்றது. கொரிந்த நகரத் திருச்சபை போட்டி, பொறாமை, பிளவு நிறைந்த சபையாக இருக்கிறது. அதன் பிளவுக்கான பல காரணங்களில் ஒன்று 'அருள்கொடையும்' அக்கொடையினால் வரும் 'திருத்தொண்டும்.' 'ஞானம் நிறைந்த சொல்வளம்,' 'அறிவுசெறிந்த சொல்வளம்,' 'நம்பிக்கை,' 'பிணிதீர்க்கும் அருள்கொடை,' 'வல்ல செயல் செய்யும் ஆற்றல்,' 'இறைவாக்குரைக்கும் ஆற்றல்,' 'ஆவிக்குரிய பகுத்தறியும் ஆற்றல்,' 'பரவசப் பேச்சு,' 'பேச்சை விளக்கும் ஆற்றல்' என கொரிந்து நகரத் திருச்சபை பெற்றிருந்த அருள்கொடைகளைப் பார்க்கும்போது நமக்மே ஆச்சர்யமாகவும் பொறாமையாகவும் இருக்கிறது. தொடக்கத் திருச்சபையில் துலங்கிய அருள்கொடைகள் இன்று நம்மிடையே இல்லாதது அல்லது குறைவாயிருப்பது ஏன்? ஆவியானவரின் செயல்பாடுகள் இன்று குறைந்துவிட்டனவா? அல்லது அவருடைய செயல்பாட்டிற்கு இன்றைய திருச்சபையின் இயல்பு தடையாக இருக்கின்றதா?

அருள்கொடைகள் இப்படிப் பலவாக இருந்தாலும், அவைகள் ஒரே புள்ளியில் சங்கமிக்கின்றன: அந்தப் புள்ளிக்கு இரண்டு முகங்கள் உண்டு: ஒன்று, 'ஆவியானவர்' என்னும் ஊற்று, இரண்டு, 'பொதுப்பயன்பாடு' என்னும் நோக்கம். ஆக, எல்லா அருள்கொடைகளும் ஒரே ஆண்டவரால் தழுவப்பட வேண்டும். அப்படி தழுவப்பட்டால்தாம் அவைகளால் பயன் உண்டு. அப்படிப் தழுவப்பட்ட கொடைகள் ஒட்டுமொத்த குழுமத்தின் வளர்ச்சிக்குப் பயனுள்ளவைகளாக அமைதல் அவசியம். பவுலின் மூவொரு இறைவன் தத்துவம் இங்கே காணக்கிடக்கிறது: 'அருள்கொடைகள் பல. தூய ஆவியார் ஒருவரே. தொண்டுகள் பல. ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பல. கடவுள் ஒருவரே' என, தூய ஆவி, மகன், தந்தை என தலைகீழாக மூவொரு இறைவனை புதிய கோணத்தில் தருகின்றார். அதாவது, கடவுளை மேலிருந்து கீழ் வருபவராகக் காட்டாமல், கீழிருந்து மேலேற்றுகிறார். இதை வைத்து பவுலை ஒரு மார்க்சிஸ்ட் என்று சொல்லலாம்! பவுலின் இரண்டாவது மார்க்கிய சிந்தனை இது: அருட்கொடைகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடைமை என்றாலும், அது பயன்படுத்தப்பட வேண்டியது பொது நன்மைக்காக. கொடைகளை முன்னிறுத்தும்போது நாம் நமக்குள் ஒருவர் மற்றவரை ஒப்பீடு செய்யத் தொடங்குகிறோம். ஆனால், ஊற்றையும், நோக்கத்தையும் பார்த்தால் ஒப்பீடுகள் மறைந்துவிடும்.

ஆக, தலைவனின் தழுவல் நம்பிக்கையாளர்களுக்கு நற்கொடைகளை வழங்குகிறது. இந்நற்கொடைகள் திருச்சபையின் பொதுநலத்திற்காகக் கையாளப்படுகின்றன.

'இயேசு கானாவூர் திருமண விழாவில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய நிகழ்வை' இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 2:1-11) காண்கிறோம். நமக்குப் பரிச்சயமான இவ்வாசகப் பகுதியை கொஞ்சம் நெருக்கமாகப் பார்ப்போம்:

அ. பழைய புரிதல்களும், புதிய கேள்விகளும்

1. யோவான் நற்செய்தியில் வரும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இரண்டு அடுக்கு அர்த்தங்கள் உண்டு: ஒன்று, மேலோட்டமானது. இரண்டு, ஆழமானது. உதாரணத்திற்கு, கானாவூர் திருமண விழாவில் மேலோட்டமான அர்த்தம் என்னவென்றால், இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியது. ஆனால், ஆழமான அர்த்தம் என்னவென்றால், இதன்வழியாக இயேசுவின் மாட்சிமை வெளிப்படுகிறது. இரண்டு அர்த்தங்களையும் நாம் அலசிப் பார்ப்பது அவசியம்.

2. மரியாள் பரிந்து பேசுபவரா? 'மரியாள் வழி இயேசுவிடம்' என்ற ஒரு சொல்லாடல் கேட்டிருப்போம். இந்த சொல்லாடல் உருவானதன் பின்புலம் கானாவூர் நிகழ்வுதான். மரியாள் கானாவூர் திருமண விழாவில் பரிந்து பேசுகிறார் என நாம் பல நேரங்களில் சொல்கிறோம். எனக்கு இந்த அர்த்தத்தில் உடன்பாடு இல்லை. மரியாள் இல்லையென்றாலும் இயேசுவின் முதல் அற்புதம் அன்று நடந்தேறியிருக்கும். இதற்காக, நான் மரியாளை தள்ளி வைக்கிறேன் என எண்ண வேண்டாம். தொழுநோயால் வருந்திய நாமானை இஸ்ரயேலுக்குச் சென்று நலம்பெறுமாறு அவரின் மன்னன் கடிதம் கொடுத்து அனுப்புகிறான். இதில் மன்னன் அனுப்புகிறான்தான். ஆனால், குணம் பெறக் காரணமாக இருந்தவர் எலிசா. மன்னன் கடிதம் கொடுத்ததால்தான் நாமான் நலம் பெற்றார் எனச் சொல்ல முடியுமா? இல்லை. கானாவூர் நிகழ்வை இலக்கிய அடிப்படையில் பார்த்தால் மரியாளின் வேலை, ஒரு ஏஜன்ட். அதாவது, ஒரு நிகழ்வு நடக்குமுன் நிகழ்ச்சி தொகுப்பாளர் தொகுத்து வழங்குவதுபோல. நிகழ்ச்சி தொகுப்பாளர் இல்லையென்றால் நிகழ்ச்சியே நடக்காது என்று நாம் சொல்ல முடியுமா?

3. திருமணம் என்று நிகழ்வு தொடங்குகிறது. ஆனால், மணமக்கள் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. பாரம்பரியத்தில் இந்த திருமணம் யூதா ததேயுவின் திருமணம் என்பது பலரின் கருத்து. நற்செய்தியாளரின் உள்ளார்ந்த பொருளின்படி இயேசுவே இங்கே மணமகனமாகவும், ஒட்டுமொத்த மானுடம் மணமகளாகவும் இங்கே உருவகிக்கப்படுகிறது.

4. 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்?' 'அம்மா' என்பது இங்கே பெண்களை மரியாதை நிமித்தம் அழைக்கும் வார்த்தையே அன்றி, 'தாய்' என்ற அர்த்தம் அல்ல. மேலும், தொடர்ந்து, 'உனக்கும், எனக்கும் என்ன?' என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பாக இருக்க முடியும். மேலும் முதல் ஏற்பாட்டில் இந்த சொல்லாடல் மிகுந்து கிடக்கிறது. ஒருவர் மற்றவரை தொந்தரவு செய்யும்போது, தொந்தரவு செய்யப்படுபவர், தொந்தரவு செய்பவரைப் பார்த்துக் கேட்பதாகவோ (நீத 11:12), அல்லது சம்பந்தப்படாத ஒருவரை ஒன்றில் வலுக்கட்டாயமாக சம்பந்தப்படுத்தும்போது, அவர் கழுவுற மீனுல நழுவுற மீனா ஓடும்போது சொல்வதாகவோ (2 அர 3:13) பயன்படுத்தப்பட்டுள்ளது.

5. 'நேரம்.' யோவான் நற்செய்தியில் இரண்டு வகை நேரம் குறிப்பிடப்படுகிறது. ஒன்று, 'க்ரோனோஸ்.' அதாவது, நாம் அன்றாடம் பயன்படுத்தும் நொடி, நிமிடம், மணி, நாள், வாரம் சம்பந்தப்பட்டது. இதன்படி, இந்த நிகழ்வு நடக்கும் நாள் 'மூன்றாம் நாள்.' இரண்டு, 'கைரோஸ்.' அதாவது, மீட்பு நேரம். இயேசு குறிப்பிடும் நேரம் இந்த இரண்டாம் நேரமே.

6. 'அறிகுறி.' யோவான், மற்ற நற்செய்தியாளர்கள் பயன்படுத்தும் 'அற்புதம்' (miracle) என்ற வார்த்தையை விடுத்து 'அறிகுறி' (sign) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்;. இயேசு எப்படிப்பட்டவர், அவர் எதற்காக வந்தார் என்பதற்கான அறிகுறியாக அவரின் செயல்கள் இருந்தன என்பதைச் சுட்டிக்காட்டத்தான் யோவான் இச்சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். அதாவது, அற்புதங்கள் செய்யப்பட்டதன் நோக்கம் அற்புதங்கள் அல்ல. மாறாக, அவற்றின் வழியாக என்ன வெளிப்பட்டது என்பதுதான் முக்கியம். இங்கே, சீடர்கள் இந்த அறிகுறியின் வழியாக இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்கின்றனர்.

ஆ. சமய, சமூக பின்புலம்

யூத மரபில் திருமணம் என்பது எட்டு நாள்கள் நடக்கின்ற ஒரு குடும்ப, சமூக நட்பு விழா. இதில் மையமாக இருப்பது 'திராட்சை இரசம்.' உணவுப் பொருட்களில் தயாரிப்பிற்கு அதிக நாட்கள் எடுக்கும் பொருள் திராட்சைரசம் தான். ஆகையால் ஒரு திருமணம் என்றால் குறைந்தது ஆறு மாதத்திற்கு முன்னே திட்டமிட்டு திராட்சை ரசம் செய்யத் தொடங்க வேண்டும். அதற்கு ஆறு மாதத்திற்கு முன் திராட்சை பயிரிடவும் வேண்டும். ஆகையால் கானாவூரின் இந்தக் குடும்பம் ஏறக்குறைய ஒரு வருடமாக இந்தத் திருமணத்திற்கான தயாரிப்பை நிகழ்த்தியிருக்கவேண்டும். ஏதோ ஒரு காரணத்தால் திராட்சைரசம் தீர்ந்துவிட்டது. விருந்தினர்களுக்கு 'இல்லை' என்று சொன்னால் நன்றாக இருக்காது. அதுவும் சொந்தங்களுக்கு 'இல்லை' என்று சொன்னால் என்ன நடக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். நமக்கு அறிமுகமாகாத மூன்றாம் நபரும், நம் நண்பர்களும் 'இல்லை' என்ற சொல்லை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் நம் சொந்தக்காரர்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நம்மைக் குறைத்துப் பேச மற்றொரு 'டாபிக்' கிடைத்ததாக எண்ணுவார்கள். இந்த இக்கட்டான சூழலில்தான் இயேசுவின் அறிகுறி நிகழ்கின்றது.

இ. வாழ்வும், வாக்கும்

'தன்னைப் படைத்தவரைக் கண்ட தண்ணீர் வெட்கத்தால் தன் முகம் சிவந்து இரசமாய் மாறியது' என்று கவிதையாகச் சொல்கின்றார் ஒரு ஆங்கிலக் கவிஞர்.இன்றைய நற்செய்திப்பகுதியில் வருகின்ற 'தூய்மைச்சடங்கிற்கென வைக்கப்பட்ட ஆறு கற்தொட்டிகள்' என்னும் சொல்லாடலில், இந்த ஆறு கற்தொட்டிகளுக்கு ஒரு பெயரெச்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. யூத, இசுலாமிய, அல்லது சில இந்து மரபு வழிபாட்டுத்தலங்களுக்குச் சென்றால் வெளியே தண்ணீர்த்தொட்டி இருப்பதை நாம் பார்க்கலாம். இப்போது நவீனமாக திருகு-குழாய்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தொட்டியில் சேமிக்கப்பட்டிருக்கும். உள்ளே செல்பவர்கள் தங்கள் காலணிகளைக் கழற்றிவிட்டு இத்தண்ணீரில் இறங்கி பின் வழிபாட்டிற்குள் செல்வார்கள். கீழைமரபில் உள்ள மற்றொரு பழக்கம் - இரண்டு வகையான தண்ணீரைப் பயன்படுத்துதல்: குடிக்க ஒன்று, சுத்தம் செய்ய மற்றொன்று. குடிக்க வைத்திருக்கும் தண்ணீர் பாதுகாப்பாக இருக்கும். சுத்தம் செய்ய வைக்கப்படும் தண்ணீர் கேட்பாரற்றுக் கிடக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நிலை எப்படியிருந்திருக்கும்? அதுவும் பாலஸ்தீனம் போன்ற வெப்பபூமியில் தண்ணீர் கிடைத்திருக்குமா? கிடைத்திருக்கும் தண்ணீரின் தரம் எப்படி இருந்திருக்கும்? தரம் தாழ்ந்த தண்ணீரைத் தலைவன் இயேசு தழுவியதால் அத்தண்ணீர் புதிய இயல்பு பெற்றது.

இன்றைய முதல் சிந்தனை: நாம் திராட்சை ரசமாக, இனிமையாக மாறுவதற்கு 'நீ இப்படி இருக்க வேண்டும், அப்படியிருக்க வேண்டும்' என்று இயேசு நம்மிடம் சொல்வதில்லை. நாம் எப்படி இருந்தாலும், எந்தப் பின்புலத்தில் வந்தாலும் அவர் தொட்டால் நாம் திராட்சை இரசமாக மாறமுடியும். இரண்டாவதாக, தண்ணீர் இரசமாக மாற வேண்டுமென்றால் தன் இயல்பை இழக்க முன்வர வேண்டும். 'இல்லை. நான் இப்படியே இருக்கிறேன். தூய்மைச் சடங்கிற்கு பயன்படும் தண்ணீராக மட்டும் இருக்கிறேன்' என்று தன்னையே சுருக்கிக் கொள்ளாமல், மற்றவர்கள் தங்கள் கைகளில் ஏந்தும் மதிப்பிற்குரிய பொருளாக மாறவேண்டுமானால் தன் இயல்பை இழக்க வேண்டும். நம் வாழ்விலும் நம் எண்ணங்கள் நிறைவேற வேண்டுமானால் நம் இயல்பை, தாழ்வு மனப்பான்மையை, குறுகிய எண்ணங்களை இழக்க வேண்டும். ஆன்மீகம் என்பது நம் இயல்பை மாற்றுவது. நம் கூட்டை உடைத்து வெளியேறுவது. மூன்றாவதாக, தலைவன் தழுவியவுடன் விளிம்பு மையமாகிவிடுகிறது. மையம் விளிம்பாகிவிடுகிறது. பணியாளன் திராட்சை இரசத்தின் ஊற்றை அறிகிறான். ஆனால், வீட்டுத் தலைவனுக்கு அது மறைபொருளாக இருக்கிறது.

ஆக, தலைவனின் தழுவல் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதோடல்லாமல், கடவுளின் ஆட்சி வெளிப்படவும், இதன் வழியாகச் சீடர்கள் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவும் காரணமாக அமைகிறது.

இவ்வாறாக, தலைவனின் தழுவல் முதல் வாசகத்தில் எருசலேமிற்கு புதிய பெயரையும் பாதுகாப்பையும், இரண்டாம் வாசகத்தில் நம்பிக்கையாளர்களுக்கு அருள்கொடைகளையும், நற்செய்தி வாசகத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாகவும் மாற்றுகிறது.

என் இன்றைய இயல்பும், இருப்பும் எப்படிப்பட்டதாக இருந்தாலும், என் தலைவன் என்னைத் தழுவும்போது என்னில் மகிழ்ச்சியும், வாழ்வும், நிறைவும் பொங்கி எழும். என் தலைவன் என்னைத் தழுவி மாற்றம் பெற்ற நான், என் தழுவலால் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியும், வாழ்வும், நிறைவும் தரும்போது நானும் அவரைப் போன்ற தலைவனே!

 


Monday, 7 January 2019

ஆண்டவரின் திருமுழுக்கு விழா

 

*ஆண்டவரின் திருமுழுக்கு விழா*



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்.*

எசாயா 40:1-5,9-11
தீத்து. 2:11-14,3:4-7
லூக்கா 3: 15-16,21-22


 இதோ என் ஊழியன்! இவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன் (எசா. 42:1) என்று எசாயா ஒலித்த குரல், இதோ என் அன்பார்ந்த மகன். இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் (மாற் 1:11) என்று இயேசுவைப் பார்த்து ஒலித்தது. இயேசுவின் திருமுழுக்கில் கடவுளின் குரலை இயேசு புரிந்து கொள்கிறார். இதனால் இறைவனின் வல்லமை, ஆற்றல், சக்தி இறங்கி வந்து இயேசுவைப் புதிய தலைவராக உலகிற்குப் பிரகடனப்படுத்தி உலகத்திற்குள் அவரை அனுப்பி வைத்தது. புதிய உலகம் படைக்க, அதாவது மக்களினங்களுக்கு நீதி வழங்க, அறத்தை நிலைநாட்ட, குருடர்களுக்குப் பார்வை அளிக்க, கட்டுண்டவர்களை விடுவிக்க, இருளில் வாழ்வோருக்கு ஒளியாகத் திகழ இயேசு புறப்படுகிறார்.
மனித வாழ்வில் இயேசு சில நேரங்களில் போதிக்கிறார். சில நேரங்களில் வாதாடுகிறார். சில நேரங்களில் அமைதி காக்கிறார். சில நேரங்களில் நழுவிச் சென்றுவிடுகிறார். இவை அனைத்திற்கும் காரணம் அவர் பெற்ற திருமுழுக்கும், மன உறுதியும்தான் காரணமாகிறது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அகதியாகச் சென்ற ஒருவர் கடினமாக உழைத்து ஓர் அழகிய வீட்டைக் கட்டினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு உள் நாட்டுக் கலவரத்தில் ஊரே சூறையாடப்பட்டது. ஊரோ யுத்த பூமியானது. அதில் இவரது வீடும் தரைமட்டமாக்கப்பட்டது. அப்போது இவரது மனைவி அழுகிறாள். பிள்ளைகள் கதறுகிறார்கள். இவர் மட்டும் அமைதியாக இருக்கிறார். இவரது நண்பர்கள் இவருக்கு ஆறுதல் சொன்னபோது அவர் சொன்னார்: இந்தியாவிலிருந்து நான் அகதியாக வந்தபோது எதையும் நான் கொண்டு வரவில்லை. அனைத்தையும் இங்கேயே மன உறுதியுடன் உழைத்துச் சம்பாதித்தேன். அதை இப்போது இழந்துவிட்டேன். என் வீட்டை மட்டும்தான் இழந்துள்ளேன். ஆனால் என் அறிவையோ, மன உறுதியையோ, திறமையையோ இழக்கவில்லை. என் மனைவி, மக்களை இழக்கவில்லை. நான் எதை இங்கு இழந்தேனோ அதை நிச்சயம் பெறுவேன் என்ற மன உறுதி எனக்குள்ளது என்றார். ஆம்! நம் ஆண்டவர் இயேசு தந்தையே! உமது கரங்களில் எனது ஆவியை ஒப்படைக்கிறேன் (லூக். 23:46) என்று சொல்லும்வரை மன உறுதியோடு மனித குல அநீத சக்திகளோடு போராடினார். சாதனை படைக்கும் சரித்திர நாயகனாக திகழ்ந்தார். மன உறுதியோடு பசித்தவர்க்கு உணவு கொடுக்கவும், வறுமையில் உள்ளவர் வளமை பெறவும், இருளில் இருப்பவனை ஒளிக்குக் கொண்டு வரவும், இருட்டடிப்பு செய்யப்பட்ட சமூகம் விடுதலை பெறவும் தம்மையே அர்ப்பணித்துக் கொண்டார்.

நாம் பெற்ற திருமுழுக்கு அனுபவம் நீதியை நிலைநாட்டவும், மன உறுதி பெறவும், சோதனைகளை வென்று சாதனை படைக்கவும், இறையரசுப் பணியில் ஈடுபடவும் நம்மை அழைக்கிறது. இயேசுவின் பணியில் நாம் தவறினால் நாம் பெற்ற திருமுழுக்கு வெறும் அர்த்தமற்ற சடங்காகிவிடும். அது தூய ஆவியை நமக்கு அளித்து, நம்மைப் புதுப்படைப்பாக மாற்றி நம்மை புதிய உலகம் படைக்க அழைக்கும் ஓர் இறை அழைப்பு.






என் அன்பு மகன் நீயே!


இறைத் தந்தைக்கு இயேசுவை மிகவும் பிடிக்கும் (முதல் வாசகம்). காரணம் அவரது அன்பை நூற்றுக்கு நூறு பிரதிபலித்தவர் இயேசு (இரண்டாம் வாசகம்).

நன்மையைத் தவிர வேறு எதையும் இயேசு செய்யவில்லை (இரண்டாம் வாசகம்). இதோ ஓர் அழகான கதை ! இது நூற்றுக்கு நூறு கட்டப்பட்ட கதை : ஒருமுறை புனித யோசேப்பு, மரியா, புனிதர்கள், புனிதைகள், வானதூதர்கள் எல்லாரும் இயேசுவிடம் போய், பூலோகத்திற்கு ஒருநாள் பிக்னிக் போயிட்டு வரலாம் அப்படின்னு சொன்னாங்க.

சரின்னு ஆண்டவர் டூருக்கு ஏற்பாடு செய்தாரு. மோட்சத்தை பார்த்துகிறணுமே! அதுக்கு புனித பேதுருவை காவலுக்கு வச்சிட்டுப் போயிட்டாங்க. போறதுக்கு முன்னாடி புனித பேதுருவுக்கு ஒரு கட்டளை கொடுத்திட்டு போனாரு இயேசு. நான் வரும்வரைக்கும் யாரையும் மோட்சத்துக்குள்ளே அனுமதிக்கக்கூடாது. இதுதான் கட்டளை. சரின்னாரு பேதுரு.

எல்லாரும் பூமிக்கு டூர் கிளம்பிட்டாங்க. அந்தச் சமயம் பார்த்து ஒரு டெய்லர் மோட்சத்துக்கு வந்திட்டார். தையல்காரர் மோட்சத்துக் கதவைத் தட்டினாரு. நீங்க இயேசு வரும்வரைக் காத்திருக்கணும் ! ஆண்டவரோடும், மாதாவோடும் எல்லாரும் டூர் போயிருக்காங்க, அவுங்க வந்தாத்தான் நீங்க உள்ளே போகமுடியும். ஆண்டவருடைய உத்தரவு இல்லாம யாரையும் நான் உள்ளே விடக்கூடாது. இது ஆண்டவரின் கட்டளை என்று சொன்னார் பேதுரு.

அதற்கு டெய்லர், என்னை உங்களுக்கு அடையாளம் தெரியலியா? நான் வருஷா வருஷம் குழந்தை இயேசுவுக்குச் சட்டை தச்சிக்கொடுக்கிற டெய்லர். என்னை உள்ளே விட்டிடுங்க. இயேசு ஒன்னும் சொல்லமாட்டாரு அப்படின்னாரு.

ஓ! அந்த டெய்லரா நீங்க? சரி எப்படியோ நான் இயேசுவை சமாளிச்சிக்கிறேன்; நீங்க யாருக்கும் தெரியாம இந்த மூளையிலே அமர்ந்திருங்க அப்படின்னாரு பேதுரு. மோட்சத்தின் கதவு சாத்தப்பட்டது. வழக்கம்போல பேதுருவும் தூங்கிட்டாரு. நம்ம டெய்லர் அந்த சமயம் பார்த்து மோட்சத்தைச் சுத்திப் பார்க்கலாம்னு கிளம்பிட்டாரு.

அவருக்கு ஓர் ஆசை! ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து பூமியைப் பார்த்தாரே! நாமும் ஒருமுறை இந்த மோட்சத்திலிருந்து பூலோகத்தைப் பார்ப்போமேன்னு சொல்லி எட்டிப்பார்த்தார்.

அங்கே ஒரு கடை. எதை எடுத்தாலும் பத்து ரூபா அப்படிங்கிற கடை. அந்தக் கடையிலேயிருந்து 10 ரூபா பொறுமான பொருள் ஒன்றை ஒரு பொடியன் எடுக்கிறதை டெய்லர் பார்த்திட்டார்.

டெய்லருக்கு கோபம் வந்திட்டு. அந்தச் சிறுவனைத் தண்டிக்க விரும்பினாரு. சுத்திப்பார்த்தாரு. அங்கே மேரி பிஸ்கட் பாக்கெட்டுகளை மாதா அடுக்கி வச்சிருந்தாங்க. இயேசுவுக்கு என்ன பிஸ்கட் பிடிக்கும்? மேரி பிஸ்கட் ! ஏன்னா அவுங்க அம்மா பேரு மேரிதானே . பாக்கெட்டுகளில் ஒன்றை எடுத்து திருடின பையனை அடிச்சாரு டெய்லரு. அந்த சமயம் பார்த்து நீர் போனவங்க எல்லாரும் திரும்பி வந்திட்டாங்க. இயேசுவுக்குச் சரியான பசி. மேரி பிஸ்கெட்டை எடுத்து சாப்பிடப் போனாரு. ஒரு பாக்கெட் கொறைஞ்சிருந்ததை இயேசு கண்டுபிடிச்சிட்டாரு. பேதுருவைக் கூப்பிட்டு என்ன நடந்திச்சுன்னு கேட்டார் இயேசு. பேதுரு உண்மையைச் சொல்லிட்டாரு. டெய்லர் போயி இயேசு கால்லே விழுந்து அவருக்கிட்ட தான் செஞ்சதைச் சொல்லிட்டாரு.

அப்போ ஜீஸஸ் சிரிச்சிக்கிட்டே டெய்லருகிட்டே, உலகத்திலே தப்பு செய்றவங்களையெல்லாம் தண்டிக்க நினைச்சீன்னா, இந்த மோட்சத்திலே உள்ள பொருள்கள் உனக்குப் பத்தாது அப்படின்னாரு. அந்த டெய்லர் கொஞ்சம் குறும்புக்காரரு. ஜீசஸைப் பார்த்து, தப்பு செய்றவங்களைப் பார்த்தா உங்களுக்குக் கோபமே வராதா? அப்படின்னாரு.

அதற்கு இயேசு, நான் கோபப்படுவேன். ஆனால் யாரையும் என் கோபம் காயப்படுத்தாது; நான் தண்டிக்கமாட்டேன், கண்டிப்பேன் அப்படின்னாரு. இயேசு- அவர் காயப்பட்டவர்களை நேசிப்பார் ; நேசிப்பவர்களைக் காயப்படுத்தமாட்டார்.

இதனால்தான் நேசமே உருவான , அன்பே உருவான (1 யோவா 4:8) இயேசுவை விண்ணகத் தந்தைக்கு மிகவும் பிடிக்கும் (நற்செய்தி).
அவரைப் போல விண்ணகத் தந்தையின் அன்பான மகள்களாக, மகன்களாக வாழ ஆண்டவர் இயேசு நமக்கு அருள்புரிவாராக.

மேலும் அறிவோம் :
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து (குறள் : 155).

பொருள் : அயலார் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளாமல் அவரைத் தண்டிப்போரைச் சான்றோர் ஒரு பொருளாகக் கருதி மதிக்கமாட்டார்கள். ஆனால் அயலார் செய்திடும் தீமையைப் பொறுத்தாற்றிக் கொள்வோரை அறவோர் அருமையும் அழகும் மதிப்பும் மிக்க பொன்னைப் போன்று போற்றிப் பேணிக்கொள்வர்.




இக்காலத்தில் பிள்ளைகள் பொதுவாகப் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிவதில்லை . ஓர் அம்மா தம் மகனிடம், "நான் உன்னைப் பெத்த அம்மாடா; என் பேச்சைக் கேளுடா" என்றதற்கு அவன், 'என்னைப் பெத்ததினால்தான் நீ 'அம்மா', இல்லேன்னா வெறும் 'சும்மா', பேசாம போமா' என்றான்,
ஒருவருக்கு ஐந்து ஆண்பிள்ளைகள் இருந்தும் அவரை யார் கேட்டாலும் அவர் தமக்கு ஒரே மகன்தான் என்று பதில் சொல்வார். ஏனெனில் அவருடைய ஐந்து மகன்களில் ஒருமகன் மட்டும்தான் அவருடைய பேச்சைக் கேட்டு நடந்தான்.

உலக மக்கள் அனைவருமே கடவுளுடைய பிள்ளைகள் என்றாலும், கடவுளால் சிறப்பாக அன்பு செய்யப்பட்டு அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட இஸ்ரயேல் "இறைமக்கள்" என்று அழைக்கப் பட்டனர். ஆனால், அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியா மல், அவருடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறி, திமிர் பிடித்தவர் களாகவும் வணங்காக் கழுத்துடையவர்களாகவும் வாழ்ந்தனர்.

இஸ்ரயேல் மக்களைப் பற்றி இறைவன் இறைவாக்கினர் எசாயா வாயிலாகக் கூறியுள்ளது நமது நெஞ்சத்தைக் கனக்கச் செய்கிறது. “விண்வெளியே கேள்; மண்ணுலகே செவிகொடு ... பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன். அவர்களே! எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள்.., கேடுகெட்ட மக்கள் இவர்கள், ஆண்டவரைப் புறக்கணித்து விட்டார்கள்” (எசா 1:2-4).

இந்நிலையில், "என் கடவுளே உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகிறேன்" (எபி 10:7) என்று கூறிக்கொண்டே இவ்வுலகுக்கு வந்த கிறிஸ்து ஒருவரே கடவுளுக்கு உகந்த மகன். எனவேதான் கிறிஸ்து திருமுழுக்குப் பெற்றபோது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (லூக் 3:21) என்று கடவுள் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்தார்.

கிறிஸ்து கடவுளுக்கு உகந்த மகன். ஏனெனில் அவர் 'கடவுளின் துன்புறும் ஊழியன்.' உண்மையில், கிறிஸ்து திருமுழுக்குப் பெற்றபோது, இறைவாக்கினர் எசாயா கடவுளின் துன்புறும் ஊழியன் குறித்து எழுதியுள்ள நான்கு கவிதைகளையும் நிறைவு செய்ய முன்வந்தார். அக்கவிதைகளில் ஒன்றுதான் இன்றைய முதல் வாசம். துன்புறும் ஊழியனின் சிறப்புப் பண்புகள் வருமாறு:
1. அவர்மீது கடவுளுடைய ஆவி தங்கும் (எசா 42:1).
2. நாள்தோறும் அவர் கடவுளுக்குச் செவிமடுப்பார் (எசா 50:4-5).
3, மனிதருடைய பாவங்களுக்குக் கழுவாயாக அவர் தம்மையே பலியாக ஒப்புக்கொடுப்பார், அதன் விளைவாகக் கடவுள் அவரை மகிமைப்படுத்துவார் (எசா 53:4-7). -

கிறிஸ்து யோர்தான் ஆற்றில் பெற்றத் திருமுழுக்கு அவர் கல்வாரியில் சிலுவையில் பெறவிருந்த திருமுழுக்குக்கு முன் அடையாளமாகத் திகழ்ந்தது. "நான் பெறவேண்டிய திருமுழுக்கு ஒன்று உண்டு. அது நிறைவேறும் அளவும் நான் மிகவும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்" (லூக் 12:50) என்று கிறிஸ்து கூறியது மேலே கூறப்பட்டுள்ள உண்மையை உறுதி செய்கிறது. | கிறிஸ்துவைப்பற்றி எபிரேயர் திருமுகம் கூறுவது நமது ஆழ்தியானத்துக்கு உரியது. "அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்; அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்” (எபி5:8-9).

நாம் கிறிஸ்துவின் மகிமையில் பங்குபெற வேண்டு மென்றால் அவருடன் துன்புறுவது இன்றியமையாத ஒன்றாகும். "நாம் கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும். அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்குபெறுவோம்" (உரோ 8:17).

திருமுழுக்கு வாயிலாக நாம் கடவுளின் பிள்ளைகளாகும் பேறுபெற்றுள்ளோம், கடவுள் நமக்கு அச்சத்தின் மனப்பான்மையை அருளாமல், கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனநிலையைக் கொடுத்துள்ளார். எனவே அவரை அப்பா, தந்தையே என அழைக்கிறோம் (உரோ 8:15). நாம் பெயரளவில் மட்டுமல்ல, உண்மையிலேயே கடவுளுடைய மக்கள் (1 யோவா 3:1), எனவே, நாம் எங்கும், எதற்கும் அஞ்சக்கூடாது. உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படக்கூடாது,
மனநோயாளி ஒருவர் தன்னை எலியென்று நினைத்து, பூனையைக் கண்டால் பயந்து ஓடுவார், மனநல மருத்துவர் அவரிடம், "நீ மனிதன், எலி அல்ல" என்றார், அதற்கு அவர், "டாக்டர்! நான் மனிதன். எலி அல்ல என்பது உங்களுக்குத் தெரியும்; எனக்குத் தெரியும்; ஆனால் அது அந்தப் பூனைக்குத் தெரியுமா?" என்று கேட்டு அழுதார்.

நாம் கடவுளின் மக்கள் என்பது பேய்க்குத் தெரியுமா? என்றுக் கேட்டு நம்மில் பலர் அஞ்சி அஞ்சி சாகிறோம். இது தேவையா? கிறிஸ்து அலகையை இவ்வுலகின் தலைவன் என்று குறிப்பிட்டு, "இவ்வுலகின் தலைவன் வந்து கொண்டிருக்கிறான், அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை " (யோவா 14:31) என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

எவ்வாறு அலகைக்குக் கிறிஸ்துவின்மேல் அதிகாரம் இல்லையோ, அவ்வாறே அதற்கு நம்மீதும் அதிகாரம் இல்லை. நாம் இடம் கொடுக்கவில்லையென்றால், அலகை நமக்குள் நழைய முடியாது. "அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்போது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும். கடவுளை அணுகிச் செல்லுங்கள். அவரும் உங்களை அணுகி வருவார்” (யாக்கோபு 4:7).

ஆண்டவரின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடும் இன்று நமது திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொள்வோம். ஒருமுறை திருமுழுக்குப் பெற்றவர்கள் மீண்டும் திருமுழுக்குப் பெறத் தேவையில்லை, திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொண்டால் போதும். தீமைக்குக் காரணமாகிய அலகையையும் அதன் செயல்பாடுகளையும் விட்டுவிடுவோம். குறிப்பாக, காமம், குடிவெறி, களியாட்டம், போட்டி, பொறாமை, கட்சிமனப்பான்மை, ஜாதிவெறி, மொழிவெறி ஆகியவற்றைத் தூக்கி எறிவோம். கடவுளையும் திருச்சபையையும் நம்பி, புதுப்பிறப்படைந்து புதுவாழ்வு வாழ்வோம். " நாம் நெஞ்சில் நிறுத்த வேண்டியது: “ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது, அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ ” (2 கொரி 5:17).



 
 
கரை சேர்க்கும், கரை சேரும் கடவுள்

ரொம்ப பரிச்சியமான ஒரு கதைதான். ஆனால், இன்றைய நாளுக்கு இது பொருந்துவதாக இருப்பதால், அக்கதையுடன் நம் சிந்தனையைத் தொடங்குவோம். ஒரு ஊரில் இருந்த 3 பேர் ஒரு நாள் மாலையில் குடிப்பதற்காக ஆற்றின் அக்கரையிலுள்ள ஓர் ஊருக்குச் செல்கின்றார்கள். பரிசல் ஒன்றை எடுத்து இவர்களே ஓட்டிக்கொண்டு போய் அக்கரையை அடைந்து வெகு நேரம் குடிக்கிறார்கள். நன்றாக இருட்டிவிட, அவர்கள் வீடு திரும்புவதற்காகத் தாங்கள் வந்த பரிசலில் மீண்டும் ஏறி ஊர் திரும்பும் முகத்தான் துடுப்புப் போடுகின்றனர். துடுப்புப் போட்டுக்கொண்டே இருக்க விடிந்து விடிகின்றது. ஆனால், அவர்கள் அக்கரையிலேயே இருக்கின்றனர். போதை தெளிந்த அவர்கள் சற்றே திரும்பிப் பார்க்கிறார்கள். மது மயக்கத்தில் தாங்கள் ஏறி அமர்ந்த பரிசலைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்க்காமலேயே விடிய விடிய தங்கள் ஆற்றலை வீணாக்கியிருப்பதை நினைத்து வருந்துகிறார்கள்.

அவர்களின் மது மயக்கம் அவர்களைக் கரை சேர்க்கவும், கரை சேரவும் விடாமல் தடுத்துவிட்டது. இல்லையா?

ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவோடு கிறிஸ்து பிறப்புக் காலம் நிறைவு பெறுகிறது. திருவருகைக்காலத்தில் 4 மெழுகு திரிகள் ஏற்றி, குடில் ஜோடித்து, நட்சத்திரங்கள் கட்டி, கேரல்ஸ் பாடி, கேக் உண்டு, கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு, திருக்காட்சி என விழாக்களைக் கொண்டாடிய நாம் இன்றோடு நாம் அவற்றை நிறைவு செய்கின்றோம். இவ்வளவு நாளாக நாம் கரையின் இந்தப் பக்கம் இருந்துவிட்டோம். கரையின் இந்தப் பக்கம் மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டமாகவும் இருந்தது. இப்போது கரையின் அடுத்த பக்கமான சாதாரண, பொதுக்காலத்திற்குக் கடந்து செல்கின்றோம். ஆனாலும், இப்போது நாம் செல்லும் கரையின் மகிழ்ச்சி கொஞ்சமும் சாதராணது அல்ல.

இன்றைய நாளின் இறைவாக்கும் வழிபாடு கரை சேர்க்கும் கடவுளாக ஆண்டவராகிய இறைவனையும், கரை சேரும் கடவுளின் மகனாக இயேசு கிறிஸ்துவையும் முன்வைக்கின்றன. திருமுழுக்கின் வழியாக பாவக் கரை-கறையிலிருந்து தூய்மைக்குக் கரைசேர்த்த கடவுளோடு இணைந்து நாம் தொடர்ந்து கரை சேர இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

கி.மு. 586ஆம் ஆண்டு யூதாவில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு அடிமைகளாக நாடுகடத்தப்படுகின்றனர். இறப்பும், இருளும், அழிவும் மேலோங்கி நின்ற அந்த நேரத்திலும் அவர்கள் அந்தப் புதிய நாட்டில் இயல்பான வாழ்க்கை நடத்தக் கற்றுக்கொண்டனர். வாழ்க்கை என்னதான் இயல்பாக இருந்தாலும் அந்நிய மண்ணில் அவர்கள் இருப்பது அவர்களுக்கே ஏற்புடையதாக இல்லை. அவர்கள் அன்பு செய்த யூதா நாடு மிகவும் அழிந்த நிலையில் இருந்தது. 'சொந்த நாட்டிற்கு இனி திரும்ப மாட்டோம்' என்ற நம்பிக்கையின்மையும் விரக்தியும் மேலோங்கி நின்ற நிலையில், இறைவாக்கினர் எசாயா ஆண்டவரின் வாக்கை அவர்களுக்கு அறிவிக்கின்றார்: 'ஆறுதல் கூறுங்கள். என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள்.' இதயத்தில் நம்பிக்கை இழந்த, சிதறுண்டு போன மக்களுக்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் கொண்டு செல்லுமாறு எசாயாவை அனுப்புகிறார் இறைவன். இந்த மிகப்பெரும் நாடுகடத்தப்படுதலுக்குக் காரணமான அவர்களின் பாவங்கள் மறக்கப்பட்டன என்பதையும், அவர்கள் நாடு திரும்பும் நேரம் வந்துவிட்டதையும் அறிவிக்குமாறு பணிக்கின்றார். ஆண்டவர் தாமே சிதறுண்ட மக்களைக் கூட்டிச் சேர்த்துத் திரும்பக் கூட்டிவரும் நிகழ்வில் இயற்கையும் கரம் கோர்க்கிறது: 'பாழ்நிலம் சீராகிறது. பள்ளத்தாக்கு நிரப்பப்படுகிறது. மலை, குன்று யாவும் தாழ்த்தப்படுகிறது, கோணலானது நேராக்கப்பட்டு, கரடுமுரடானது சமதளமாக்கப்படுகிறது.

மேலும், மானிடர் தங்கள் வார்த்தைகளில் தவறிப் போவர், ஆனால், 'நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்' என்று தன் வாக்குறுதியின் உறுதித்தன்மையை அறிக்கையிடும் இறைவன், 'ஆயனைப் போல அவர்களை மேய்ப்பதாக' உருவகம் செய்கிறார்.

இறைவன் இஸ்ரயேல் மக்களை பாபிலோனியாவிலிருந்து மீட்டு மீண்டு எருசலேமில் கரை சேர்க்கும் நிகழ்வு மூன்று நிலைகளில் நடந்தேறுகிறது: (அ) 'ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்' - ஆக, ஒவ்வொருவரின் மேலும் இறைவனின் கரம் படும். ஆயன் குச்சியைக் கொண்டு சேர்ப்பதுபோல அவர் சேர்க்க மாட்டார். ஏனெனில், குச்சி தண்டனையின் அடையாளமாகும். தன் கைகளால் சிதறுண்டு போய்க்கிடக்கின்ற அனைத்து ஆடுகளையும் ஒன்று சேர்ப்பார். (ஆ) 'அவற்றைத் தம் தோளில் சுமப்பார்' - அடிமைத்தனத்தால் தங்களின் உடல் மற்றும் உள்ளத்தில் வலுவிழந்தவர்களை, அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டவர்களைத் தம் தோளில் சுமப்பார். (இ) 'சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்' - அதாவது, முதுகில் தட்டி அழைத்துக் கொண்டு போவார். சினையாடுகள் எளிதில் சோர்ந்துவிடக் கூடியவை. அவைகளுக்கு தொடர் அரவணைப்பு அவசியம். அந்த அரவணைப்பை இறைவன் தருவார்.

இவ்வாறாக, சிதறுண்டவர்களை ஒன்று சேர்த்து, வலுவிழந்தவர்களைத் தோள் மேல் சுமந்து, வலுக்குறைந்தவர்களைத் தன் வலது கரத்தால் தாங்கி கரை சேர்க்கின்றார் கடவுள்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஆயர் தீத்து தன் குழுமத்தில் உள்ளவர்கள் எப்படி கண்காணிக்கப்பட வேண்டும் என எழுதுகிறார். 'நாமும் ஒரு காலத்தில் அறியாமையில் இருந்தோம். கீழ்ப்படியாமல் இருந்தோம். நெறிதவறிச் சென்றோம். தீய நாட்டங்களுக்கும் பல்வகைச் சிற்றின்பங்களுக்கும் அடிமைகளாய் இருந்தோம். தீமையிலும் பொறாமையிலும் உழன்றோம். காழ்ப்புணர்ச்சி கொண்டவராய் ஒருவர் மற்றவரை வெறுத்தோம்' (தீத் 3:3) தன் குழுமத்தின் வலுக்குறைந்த பின்புலத்தைச் சுட்டிக்காட்டும் தீத்து, இவ்வலுவின்மையிலிருந்து நாம் விடுபட்டது, 'நம் அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாக ஆண்டவரின் இரக்கத்தை முன்னிட்டே, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுளால் மீட்கப்பட்டோம்' என எழுதுகின்றார்.

ஆக, 'புதுப்பிறப்பு அளிக்கும் நீரும், புதுப்பிக்கும் தூய ஆவியும், இவை இரண்டின் ஊற்றாக இருக்கின்ற கடவுளின் இரக்கமும்' பாவ இயல்பிலிருந்து மனுக்குலத்தை மீட்பு என்னும் கரையில் கொண்டு போய்ச் சேர்ப்பவைகளாக இருக்கின்றன. இங்கே 'நீர்' மற்றும் 'தூய ஆவி' ஒருவர் பெறுகின்ற திருமுழுக்கு அருளடையாளத்தை நினைவுபடுத்துகின்றன.

இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வை, ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் என்று சொல்லப்படும் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் மட்டுமே பதிவு செய்கின்றனர். லூக்கா நற்செய்தியாளர் மற்ற நற்செய்தியாளர்களைவிட மூன்று விதங்களில் முரண்படுகின்றார்: (அ) இயேசுவின் திருமுழுக்கின்போது திருமுழுக்கு யோவான் சிறையில் இருப்பது போல பதிவு செய்கிறார் லூக்கா (காண். 3:20). 'மக்கள் எல்லாரும் திருமுழுக்கு பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்' என்று பதிவு செய்யும் லூக்கா, யார் இயேசுவுக்குத் திருமுழுக்கு கொடுத்தார்கள்? என்பதைப் பதியாமல் விடுகின்றார். (ஆ) மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில், இயேசு ஆற்றை விட்டு வெளியே வந்தவுடன் தந்தையின் குரல் கேட்கிறது. ஆனால், லூக்கா நற்செய்தியில், இயேசு திருமுழுக்குப் பெற்று இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது, 'தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்க' வானத்திலிருந்து ஒரு குரல் ஒலிக்கிறது. (இ) மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் இயேசு 'தண்ணீரால்' மட்டுமே திருமுழக்கு பெறுகின்றார். ஆனால், லூக்காவில், 'தண்ணீர்,' 'தூய ஆவி' என இரண்டு நிலைகளில் திருமுழுக்கு பெறுகிறார் இயேசு.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில் திருமுழுக்கு யோவானிடம் மக்கள் வருகிறார்கள். 'அவர்கள் மீட்பரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என அவர்கள் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.' 'மெசியா எதிர்பார்ப்பு' இயேசுவின் காலத்தில் மிகவும் உச்சநிலையில் இருந்தது. ஏனெனில், இயேசுவின் சமகாலத்து மக்கள் தாங்கள் உரோமையர்களால் அனுபவித்த அரசியல், சமூக, சமய, கலாச்சார துன்பங்களிலிருந்து தங்களை விடுவிக்க மெசியா வர வேண்டும் என மிகவும் எதிர்நோக்கியிருந்தனர். வரவிருக்கும் மெசியா முதலில் ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்துவார் என்பதும் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆகையால்தான், 'மனமாற்றத்தை' அறிவித்து, மனமாற்றத்திற்கான திருமுழுக்கு கொடுத்து வந்த திருமுழுக்கு யோவான் தங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக நினைக்கின்றனர். ஆனால், அதை மறுக்கிறார் யோவான்.

இயேசுவின் திருமுழுக்கு அனுபவம் இரண்டு நிலைகளில் இருக்கிறது: ஒன்று, அவர் திருமுழுக்கு யோவானின் திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றார். ஏன்? தன்னிடம் பாவம் இருப்பதால் அல்ல. மாறாக, 'மனமாற்றம்' என்பது 'கரைக்குத் திரும்புவது' என அறிந்திருந்தார் இயேசு. இதுவரை நாசரேத்தில் மறைந்து வாழ்வு வாழ்ந்த இயேசு, தண்ணீரில் மறைந்திருப்பது போல மறைந்து நின்ற இயேசு, இப்போது கரை சேர்கின்றார். முற்காலத்தில் இதே யோர்தானைக் கடந்துதான் யோசுவா தலைமையில் இஸ்ரயேல் மக்கள் பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குக் கரை ஏறினார்கள். இந்த 'கரை சேரும் நிகழ்வு' வழியாகத் தன் பொதுவாழ்வையும் பணிவாழ்வையும் தொடங்ககிறார் இயேசு. இரண்டு, இயேசு தூய ஆவியால் திருமுழுக்கு பெறுகிறார். இத்தூய ஆவியால்தான் இயேசுவின் பணி உந்தித் தள்ளப்படுகிறது. தன் உயிர்ப்புக்குப் பின் இதே தூய ஆவியைத் தம் திருத்தூதர்கள்மேல் பொழிகிறார் இயேசு.

தங்களைக் கரை சேர்க்க யாராவது வர மாட்டார்களா? என்று மெசியா எதிர்நோக்கில் மேலோங்கியிருந்தவர்கள் நடுவே, தூய ஆவியால் நிரப்பப்பட்டவராய்க் கரை சேருகிறார் இயேசு.
இவ்வாறாக, பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்தவர்களை எசாயா இறைவாக்கினர் வழியாக எருசலேம் என்னும் கரை சேர்க்கிறார் ஆண்டவராகிய கடவுள். பாவத்திலும் தீமையிலும் உழன்றவர்களை மீட்பு என்ற கரையில் சேர்க்கின்றார் கடவுள். 'மெசியா வந்து எங்களை மீட்பார்' எனக் காத்திருந்தவர்களில், 'நீ இறைவனின் அன்பார்ந்த மகன்-மகள்' என்று கடவுள் சாயலைத் தூண்டி எழுப்பி, பணிவாழ்வு என்னும் கரை சேர்ந்து மற்றவர்களைக் கரை சேர்க்க கரம் குவிக்கின்றார் இயேசு.

இப்படிப்பட்ட இறைச் செயலையே இன்றைய பதிலுரைப்பாடலில் திருப்பாடல் ஆசிரியர், 'ஆண்டவரே! நீர் எத்துனை மேன்மைமிக்கவர்! ... உமது ஆவியை நீர் அனுப்பி மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்' (திபா 104:1,30) எனப் பாடுகின்றார்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?

1. அக்கரைக்கும் இக்கரைக்குமான வாழ்க்கை

கிறிஸ்து பிறப்புக் காலம் என்னும் அக்கரையில் இருந்த நாம், பொதுக்காலம் என்னும் இக்கரைக்குள் வருகின்றோம். மகிழ்ச்சி, கொண்டாட்டம் விடுத்து வாழ்வைத் தொடங்குவது கொஞ்சம் கடினமாகவே இருக்கும். பழையவற்றின் நினைவுகள் நம்மை இழுக்கும். பழைய நினைவுகள் மகிழ்ச்சி தந்தால் பரவாயில்லை. சில நேரங்களி;ல் நாம் காயப்பட்ட நினைவுகள் நம்மைப் பின் நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கும். நாம் அனைவருமே காயப்பட்டிருக்கிறோம். காயப்படுத்தியிருக்கிறோம். வருத்தம் தரும் தவறுகள் செய்திருக்கின்றோம். ஆனால், நாம் எந்த நிலையில் இருந்தாலும் அவைகளிலிருந்து விடுபட்டு 'மகிழ்ச்சி' என்ற கரையை அடைவது சாத்தியம் எனச் சொல்கிறார் கடவுள். நாம் தயங்கி நிற்கும்போது அவரே முன்வந்து நம்மைக் கரைசேர்க்கத் தன் கரத்தை நீட்டுகின்றார்.

2. புதுப்பிறப்பு அளிக்கும் நீர், புதுப்பிக்கும் தூய ஆவி

திருமுழுக்கு பெற்ற நாம் ஒவ்வொருவரும் புதுப்பிறப்பளிக்கும் நீரினால் கழுவப்பட்டுள்ளோம், தூய ஆவியால் புதுப்பிக்கப்பட்டும் உள்ளோம். மேலும், கடவுளின் இரக்கத்தை முன்னிட்டு நாம் மீட்கப்பட்டுள்ளோம். அந்த இரக்கத்தின் துணையால் நாம் பழைய கட்டுக்களை அவிழ்த்துவிடவும், பழைய இயல்புகளைக் களைந்துவிடவும் முடியும். அக்கரைக்குப் பரிசலில் சென்றவர்கள் பரிசலின் கயிற்றை அறுக்காமல் விடிய விடிய துடுப்புப் போட்டதுபோல, நானும் சில நேரங்களில் என் கயிறுகளை அவிழ்த்துவிடாமல், அக்கரையிலேயே கட்டிவிட்டு நிற்கலாம். ஆனால், என் பழைய இயல்பு என்னும் கயிற்றை நான் அறுக்கும்போது, அவரின் அருள்துணையால் நான் அக்கரை அடைவேன்.

3. நீரே என் அன்பார்ந்த மகன்-மகள்

இயேசுவின் வாழ்வில் திருமுழுக்கு ஓர் அடித்தள அனுபவம். இந்த அனுபவம் அவருடைய ஒட்டுமொத்த வாழ்வை அப்படியே முழுவதுமாகப் புரட்டிப் போட்டுவிடுகிறது. 'நீரே என் அன்பார்ந்த மகன்' எனத் தன் தந்தையாகிய கடவுளால் அழைக்கப்பட்டதால், ஒருவர் மற்றவரை, 'நீர் என் சகோதரர், சகோதரி' என அழைக்கிறார் இயேசு. இப்படி அவர் மற்றவர்களை அழைப்பதற்காக வெட்கப்படவில்லை. ஆகையால் தான் அவரின் பார்வையில் அனைவரும் - யூதர்கள், சமாரியர்கள், புறவினத்தார்கள், பெண்கள், குழந்தைகள், தொழுநோயாளர்கள், கண்பார்வையற்றோர், முடக்குவாதமுற்றோர், இறந்தோர் – சமமாகத் தெரிகின்றனர். அனைவரோடும் அவரால் பழக முடிகின்றது. இறைவனின் அரசு அனைவருக்கும் சொந்தம் எனவும் அது சமத்துவத்திலும், சகோதரத்திலும், சுதந்திரத்திலும் அடங்கியுள்ளது எனவும் கற்பிக்கின்றார். 'நான் இறைவனின் மகன்' என்ற அனுபவம் அவரின் முழு ஆளுமையையும் ஆட்கொள்கின்றது. இறப்பு வரை அவருக்கு இருந்த ஒரே அடையாளமும் இதுதான். ஆகையால் தான், 'இவன் தன்னையே இறைமகனாக்கிக் கொண்டான்' என குற்றம் சுமத்தப்படுகின்றார். நாம் பெற்ற திருமுழுக்கின்போதும் நமக்கு இதே அனுபவம் கிடைக்கிறது. ஆனால், அதை நாம் உள்வாங்கியிருக்கிறோமா? திருமுழுக்கில் நாம் பாவம் என்னும் கரையைக் கடந்து தூய வாழ்வு என்னும் கரை சேர்கிறோம். அப்பயணத்தில் நாம் தாங்கியிருக்கும் இறையியல்பு நம்மில் புதுப்பிக்கப்படுகிறது. திருமுழுக்கில் நாமும் நம் இறைத்தன்மையை மீட்டெடுப்பு செய்வதால், நாமே கடவுளாக கரை சேர்கிறோம்.

இறுதியாக, நம்மைக் கரை சேர்க்கும் கடவுள் நமக்கு ஆறுதலும், கனிமொழியும் கூற, அவரின் இரக்கம் அன்றாடம் நம்மைப் புதுப்பிக்கிறது. இயேசுவோடு இணைந்து நாமும் கரை சேர்ந்தால் நாமும் இறைவனின் அன்பார்ந்த பிள்ளைகளே.

இந்த அனுபவத்திற்கு நாம் மற்றவர்களை அழைத்துச் செல்லும்போது நாமும் கரை சேர்க்கும், கரை சேர்க்கும் கடவுள்களே!


நம்பிக்கைக்கு செயல்வடிவம் கொடுப்போம்


 

நிகழ்வு         
         சீனாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் எட்டு வயது சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் ஒருநாள்கூடத் தவறாமல் ஆலயத்திற்குச் சென்றுவிடுவாள். ஆலயத்தில், குருவானவர் (Missionary) ஜெபிப்பதையும், மறையுரை ஆற்றுவதையும் மிக நுணுக்கமாகக் கவனித்து வந்தாள். இது மட்டுமல்லாமல், குருவானவர் ஊரில் இருக்கக்கூடிய நோயாளிகளைச் சந்திப்பதையும், அவர்களிடத்தில் ஆறுதலான வார்த்தைகளைப் பேசுவதையும், ஏழை எளிய மக்களுக்கு உதவுவதையும், பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லாரிடத்திலும் அன்புடன் பழகுவதையும் அவள் தொடர்ந்து கவனித்து வந்தாள்.  

இதற்கிடையில் அவளுக்கு பள்ளியில் விடுமுறை நாட்கள் வந்தன. எனவே அவள் விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காக தூரத்தில் இருந்த தனது பாட்டி வீட்டுக்குச் சென்றாள். ஒரு ஞாயிற்றுக்கிழமையின்போது அவளுடைய பாட்டி அவளை அந்த ஊரில் இருந்த ஆலயத்திற்குக் கூட்டிக் கொண்டுபோனாள். ஆலயத்தில் குருவானவர் இல்லாததால், ஒரு அருட்சகோதரி எல்லாருக்கும் மறைக்கல்வி சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். எனவே பாட்டி சிறுமியை மறைக்கல்வி வகுப்பில் விட்டுவிட்டு, மறைக்கல்வி வகுப்பு முடியும் மட்டும் வெளியே அவளுக்காகக் காத்திருந்தார்.  

அந்த நாளில் அருட்சகோதரி ஒரு கதையோடு மறைக்கல்வி வகுப்பைத் தொடங்கினார். ஓர் ஊரில் ஒரு மனிதர் இருந்தார். அவர் இறைவனிடத்தில் நம்பிக்கையோடு ஜெபிக்கக்கூடியவர். அதே நேரத்தில் மக்களையும் அவர் அளவுகடந்த விதமாய் அன்பு செய்யக்கூடியவர். நோயாளிகள், ஏழைகள், பெரியவர், சிறியவர் என எந்தவொரு வித்தாசமில்லாமல் எல்லாரிடத்திலும் அன்பாய் பழகக்கூடியவர்... இயேசுவின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப வாழக்கூடிய இப்படிப்பட்ட ஒரு மனிதரை யாராவது, எங்காவது பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.  உடனே விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு வந்திருந்த அந்த சிறுமி, “சிஸ்டர், நீங்கள் சொன்னது போன்று நான் ஒரு மனிதரைப் பார்த்திருக்கிறேன். அவர் வேறு யாருமல்ல, எங்கள் ஊரில் இருக்கின்ற குருவானவர்” என்றார்.  

“அருமை” என்று சொல்லி அந்தச் சிறுமியைப் பாராட்டிய அருட்சகோதரி, திருமுழுக்குப் பெற்றிருக்கின்ற நீங்கள் ஒவ்வொருவரும் அந்த குருவானவரைப் போன்று இயேசுவின் மதிப்பீடுகளின்படி வாழவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை சொன்னார்.  

வாட்ச்மேன் நீ (Watchman Nee) என்ற பிரபல எழுத்தாளர் சொல்வார், “நம்பிக்கைக்கு செயல்வடிவம் கொடுப்பதே திருமுழுக்கு”  (Baptism is Faith in Action) என்று. எவ்வளவு அர்த்தம் நிறைந்த வார்த்தைகள் இவை.

  பாவிகளுக்காகக் கொடுக்கப்பட்ட திருமுழுக்கை, பாவமற்ற இயேசு ஏன் பெறவேண்டும்?
 
         இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழாவை அல்லது ஆண்டவர் இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றதை நினைவுகூர்ந்து பார்க்கின்றோம்.  ‘மக்கள் யாவரும் பாவமன்னிப்புப் பெற்று, மனம்மாறவேண்டும்’ (லூக் 3:3) என்பதற்காக யோவான் திருமுழுக்குக் கொடுத்து வந்துகொண்டிருந்த வேளையில், ஒரு பாவமும் அறியாத இயேசு திருமுழுக்குப் பெறுவது முறையா? என நாம் கேள்வி எழுப்பலாம். இது ஒருபக்கம் இருந்தாலும், இயேசு பெற்ற திருமுழுக்கு எந்தெந்த விதத்திலெல்லாம் முக்கியத்துவம் பெறுகின்றது? அது என்னென்ன செய்திகளை நமக்கு எடுத்துச் சொல்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு பெற்ற திருமுழுக்கு நமக்கு மூன்று முதன்மையான செய்திகளை எடுத்துச் சொல்கின்றது. ஒன்று, அவர் மக்களில் ஒருவராகத் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வதற்காகத் திருமுழுக்குப் பெறுகின்றார் என்பதாகும். முன்னமே பார்த்ததுபோல, பாவிகள் யாவரும் மனம்மாறி, ஆண்டவரிடத்தில் திரும்பிவர வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்ட திருமுழுக்கில், இயேசு பங்கு பெறுவதன் வழியாக மனிதர்களில் ஒருவராகி, அவர்களுடைய சுய துக்கங்கள், கஷ்ட, நஷ்டங்களில் கலந்துகொள்ளத் தயாராகின்றார்.

இரண்டு, இயேசு பெற்ற திருமுழுக்கு, அவர் தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கியதன் அடையாளமாக இருக்கின்றது. எப்படியென்றால், இயேசு யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெற்றபிறகு பாலைவனத்திற்குச் சென்று, நாற்பது நாட்கள் நோன்பிருக்கின்றார். அதற்குப் பின்பு அவர் ‘மனம்மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ என்று நற்செய்தியைப் பறைசாற்றத் தொடங்கிவிடுகின்றார் (மத் 4:17). ஆகையால், இயேசு பெற்ற திருமுழுக்கு அவர் தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்குவதற்கான ஓர் அடையாளம் என உறுதியாகச் சொல்லலாம். மூன்றாவதாக, இயேசு பெற்ற திருமுழுக்கு, அவர் கல்வாரி மலையில் மானிடர் யாவருடைய மீட்புக்காக, தன்னை பலியாகத் தருவதன் ஒரு வெளிப்பாடாக இருக்கின்றது (மத் 20:22). இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வாழ்வினைக் கொடுக்க வந்தார். அந்த வாழ்வினை அவர் உறுதியாகத் தரப்போகிறார் என்பதை எடுத்துக் காட்டுவதன் அடையாளமாக இருப்பதுதான் அவர் யோர்தானில் பெற்ற திருமுழுக்கு ஆகும்.
 

இயேசுவின் திருமுழுக்கு நமக்குக் கொடுக்கும் அழைப்பு என்ன?  
 யோர்தான் ஆற்றில் இயேசு திருமுழுக்குப் பெறும்போது, தூய ஆவியார் அவர்மீது புறவடிவில் இறங்கி வருவதையும், தந்தைக் கடவுள், “இவரே என்னுடைய அன்பார்ந்த மைந்தர், இவர் பொருட்டு நான் பூரிப்படைபடைகிறேன்” என்று சொல்வதையும், பின்னர் இயேசு நற்செய்தி அறிவிக்கத் தொடங்குவதையும் நாம் நற்செய்தியில் வாசிக்கின்றோம். திருமுழுக்கின் வழியாக பாவங்கள் கழுவப்பட்டு, ஆண்டவரின் அன்பு மக்களாக மாறுகின்ற நாம் ஒவ்வொருவரும், இயேசுவின் – இறையாட்சியின் - மதிப்பீடுகளின்படி வாழவேண்டும் என்பதுதான் இந்த நாள் நமக்குத் தருகின்ற மேலான அழைப்பாக இருக்கின்றது.

 

இதைக் குறித்துக் காட்டும் விதமாகத்தான் திருமுழுக்கு அருளடையாளக் கொண்டாட்டத்தின்போது குருவானவர், ‘சாத்தானை விட்டுவிடுகிறீர்களா?’ என்று கேட்டுவிட்டு,  ‘இவை இவையெல்லாம் நம்புகிறீர்களா?’ என்று கேட்பார். ஆம், நாம் ஒவ்வொருவரும் பாவத்திற்கு மரித்து, கிறிஸ்துவால் உயிர்பெற்று, கிறிஸ்துவின் மதிப்பீடுகளான அன்பு, இரக்கம், பரிவு, பாசம், மன்னிப்பு போன்றவற்றின்படி நடக்கவேண்டும். அப்போதுதான் நாம் பெற்ற திருமுழுக்கு முழுமை பெறும்.
 
சிந்தனை
 
         ரேய்மென்ட் ப்ரவுன் என்ற அறிஞர் சொல்வர், “ஒருவர் குருவாகவோ அல்லது ஆயராகவோ அருட்பொழிவு செய்யப்பட்ட நாளைவிடவும், அவர் திருமுழுக்குப் பெற்ற நாள் மிகவும் முக்கியமானது” என்று. இவ்வார்த்தைகளை நாம் ஆழமாக சிந்தித்துப் பார்த்தோம் எனில், திருமுழுக்கின் முக்கியத்துவம் நமக்குப் புரிந்துவிடும். ஏனெனில், திருமுழுக்கின்போது ஒருவர் மறுபிறப்பு அடைகிறார். எனவே அத்தகைய மறுபிறப்பினை நாம் அர்த்தமுள்ளதாக மாற்ற, இயேசுவின் மதிப்பீடுகளின்படி நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். 
  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Thursday, 3 January 2019

ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா


ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா

இன்றைய வாசகங்கள்.
I. எசாயா 60:1-6  II. எபேசியர் 3:2-3, 5-6  III. மத்தேயு 2:1-12

இயேசு ஒரு குறிப்பிட்ட இனத்தார்க்கு மட்டும் சொந்தமல்ல. அவர் எல்லார்க்கும் சொந்தமானவர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது இன்றையப் பெருவிழா.

எட்டுத் திக்கு மக்களும் இறைவனின் மக்களே என்பதைச் சுட்டிக்காட்டவே கிழக்கிலிருந்து (மத். 2:1) மூன்று ஞானிகள் புறப்பட்டு இயேசுவைக் காணச் சென்றார்கள் என்று திருவிவிலியம் கூறுகிறது.

இயேசு எல்லார்க்கும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கொண்டு வந்தவர். இதனால்தான் அவர் பிறந்தபோது விண்ணகத் தூதர் பேரணி, உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! (லூக். 2:13-14) எனக் கடவுளைப் புகழ்ந்த து! ஆம். இயேசு நன்மனம் படைத்த அனைவருக்கும் சொந்தமானவர்.

அவர் வாழ்ந்தபோது எந்த இனத்தாரையும் அவர் புறக்கணிக்க வில்லை! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத். 11:28) என்றார்.

அவர் சாகும்போது, தந்தையே இவர்களை மன்னியும் (லூக். 23:34) எனச் சொல்லி பாவிகள் எல்லாருக்காகவும் செபித்தார்.

இன்றும் கேட்பவர்கள் அனைவருக்கும் தூய ஆவியைத் தந்து (லூக். 11:9-13) அருங்கொடைகள் அனைத்திற்கும் ஆதி காரணமாக விளங்கி வருகிறார்.

நமது ஆண்டவர் அனைவரையும் அன்பு செய்யும் ஆண்டவராக விளங்குவதால், நாம் எந்த வேற்றுமையும் பாராட்டாது அனைவருக்கும் அன்பு நண்பர்களாக விளங்க வேண்டும். பிற இனத்தாரும் நமது பங்காளிகளே என்கிறார் புனித பவுல் (எபே. 3:6).

ஒளிவீசும் ஞாயிறைப் பார்க்கிறோம். அது வேற்றுமை பாராட்டுவதில்லை !

குளிர் சிந்தும் திங்களைப் பார்க்கிறோம். அது வேற்றுமை பாராட்டுவதில்லை!

ஆடி வரும் தென்றலைப் பார்க்கிறோம். அது வேற்றுமை பாராட்டுவதில்லை.

ஓடி வரும் அருவியைப் பார்க்கிறோம். அது வேற்றுமை பாராட்டுவதில்லை.

மலர், மணம், தேன், சுவை, கடல், கரை இவை யாவும் வேற்றுமை பாராட்டுவதில்லை! நாம் மட்டும் ஏன் வேற்றுமை பாராட்ட வேண்டும்? நாம் இயற்கையின் மணி மகுடமல்லவா?

அன்று ஒளியாய்ப் பிறந்து (எசா. 6:1) ஞான ஒளி வீசி பிற இனத்தாரை தம்மை நோக்கி ஈர்த்தார் இயேசு! வந்தவர் அனைவரும் அவரைக் கண்டு அவரிடமிருந்து அமைதியும், மகிழ்ச்சியும், நம்பிக்கையும் பெற்று வீடு திரும்பினர். அதேபோல கிறிஸ்தவர்களாகிய நாம் மற்றவர்களை நம்பால் ஈர்க்கும், வாழ்வளிக்கும் ஒளி விளக்காகத் திகழ வேண்டும்.






இயேசு நமக்குக் காட்சி தருவாரா?

கடவுள் யாருக்குக் காட்சி கொடுப்பார் என்பதை இன்றைய விழா நமக்குக் கற்பிக்கின்றது!

இயேசு பிறந்தபோது அவரை இடையர்கள் தேடிச் சென்றனர்; ஞானிகள் தேடிச் சென்றார்கள்; ஏரோது மன்னன் தேடினான்; அவனுடைய ஆள்கள் தேடினார்கள்.

ஆனால் முதல் இரண்டு பிரிவினருக்கு மட்டும்தான் இயேசு காட்சித் தந்தார். ஏரோதிற்கும், அவனுடைய ஆள்களுக்கும் இயேசு காட்சி தரவில்லை ! காரணம், இடையர்களும் ஞானிகளும் தங்களிடமுள்ளதை இயேசுவுக்கு கொடுக்கச் சென்றார்கள். ஆனால் நரரோதும் அவனுடைய ஆள்களும் இயேசுவின் உயிரை எடுக்க அவரைத் தேடினார்கள் (மத் 2:16-18).

இடையர்கள் தங்களது பாராட்டையும், மகிழ்ச்சியையும், பாடலையும் இயேசுவுக்குக் காணிக்கையாகக் கொடுக்க அவரைத் தேடினார்கள் (லூக் 2:20).

ஞானிகள் தங்கள் வணக்கத்தையும் (மத் 2:2) பொன்னையும் சாம்பிராணியையும் வெள்ளைப் போளத்தையும் காணிக்கையாகக் கொடுக்க இயேசுவைத் தேடினார்கள் (மத் 2:11).

எடுக்க நினைத்தவர்களுக்குக் குழந்தை இயேசு காட்சிக் கொடுக்கவில்லை; கொடுக்க நினைத்தவர்களுக்கே அவர் காட்சி கொடுத்தார்!

கடவுள் நமக்குக் காட்சி தர வேண்டுமானால், அவரது ஆசியை நாம் பெற விரும்பினால், நாம் நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும்!

கொடுப்பவர்களுக்கு இறைவனின் ஆசி கிட்டும் என்பதற்கு விவிலியத்திலிருந்து இதோ இரண்டு உதாரணங்கள்.

ஆபிரகாமுக்கு வயது தொண்ணூற்றொன்பது (தொநூ 17:1). ஆனால் அவருக்குக் குழந்தை இல்லை! அவரது மனைவி ஒரு கிழவி (தொநூ 18:12). ஆபிரகாம் கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து வாழ்ந்தவர்! ஆனால் அவர் கேட்ட பிள்ளை வரம் அவருக்குக் கிடைக்கவில்லை. உயர்ந்த,
உன்னதமான இறை நம்பிக்கையாளருக்குக் கடவுளுடைய ஆசி கிடைக்கவில்லை!

எப்போது அவருக்கு ஆசி கிடைத்தது தெரியுமா? அவர் முன்பின் தெரியாத மூன்று மனிதர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து உபசரித்தபோதுதான் அவருக்குக் குழந்தை வரம் கிடைத்தது (தொநூ 18:1-15).

புதிய ஏற்பாட்டில் பெரும்பாவியான சக்கேயு இயேசுவைப் பார்த்து, ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகின்றேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகின்றேன் (லூக் 19:8) என்று கூறியபோதுதான் சக்கேயுவுக்கு இயேசு மீட்பராகக் காட்சியளிக்கின்றார்.

இயேசுவுக்கு ஒருவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை. ஞானிகள் கிழக்கிலிருந்து எருசலேமுக்கு வந்தார்கள். இயேசுவுக்கு ஒருவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதும் முக்கியமல்ல (முதல், இரண்டாம் வாசகங்கள்). ஞானிகள் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.


இயேசுவுக்கு வேண்டியதெல்லாம் அவர்களுக்குக் கொடுக்கும் மனம் உள்ளதா என்பதுதான். நாம் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும். ஆனால் அதே நேரத்தில் புனித யாக்கோபு சொல்வதையும் நம் நினைவில் கொள்ளவேண்டும். கடவுள் ஒருவரே என்பதை நீங்கள் நம்புகின்றீர்கள்; நல்லதுதான். பேய்களும்கூட அவ்வாறு நம்பி அச்சத்தால் நடுங்குகின்றன (யாக் 2:19). நம்மிடம் நம்பிக்கை உண்டு என்றால் அதைச் செயலில் காட்ட வேண்டும் (யாக் 2:14) என்கின்றார் புனித யாக்கோபு.

செயல்களிலெல்லாம் சிறந்த செயல் நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்குக் கொடுத்தலாகும் (1 கொரி 13:13).

ஞானிகளிடமிருந்தது போல, நம்மிடம் பொருளிருந்தால் பெட்டியைத் திறந்து மற்றவர்க்குப் பொருளைக் கொடுப்போம்; அது இல்லையென்றால் இடையர்களைப் போன்று நமது அர்த்தமுள்ள வார்த்தைகளை சிறப்பாக வறியோருக்கு வாரி வழங்குவோம்!

அப்போது எந்தக் குழந்தை இயேசு ஞானிகளுக்கு காட்சியளித்தாரோ அதே குழந்தை இயேசு நமக்கும் காட்சியளித்து நமக்கு ஆசியளிப்பார்.

மேலும் அறிவோம்:
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் (குறள் : 229).

பொருள் : பெரிதும் தேடித் திரட்டிய பொருள் அனைத்தையும் பிறருக்குக் கொடுத்தால் குறையுமோ என்று தாமே சுவைப்பது, பிறரிடம் கையேந்திக் கெஞ்சிக் கேட்பதைக் காட்டிலும் கொடிய செயலாகும்.





நான்காவது ஞானி - திருக்காட்சிப் பெருவிழா 


ஒருநாள் வான்வெளியில் சூரியன், சந்திரன், விண்மீன்களுக்கு இடையே காரசாரமாக விவாதம் நடந்தது. “நானே பெரியவன். நான் இல்லாமல் ஒளியேது? உயிரேது? நிலவு கூட என்னிடமிருந்துதான் ஒளியைப் பெறுகிறாய்" என்றது சூரியன். “அழகு என்றாலே நான் தானே. கவிஞனின் கண்ணில் படுகிறேன். கனவாக என்னை நினைத்த மனிதனே தேடிவந்து என்னில் கால் பதித்து விட்டான்” என்றது சந்திரன். மௌனமாக இருந்த விண்மீன் வாய்திறந்து சொன்னது: “இறைவன் குழந்தையாகப் பிறந்த போது என் ஒளிதானே அவரது பிறப்பை அறிவித்தது. கீழ்த்திசை ஞானிகளை வழிநடத்தி அவரைக் கண்டடையச் செய்தது. இன்று கூட அவருடைய பிறப்பு விழாவுக்குக் கிறிஸ்மஸ் நட்சத்திரமாக எவ்வளவு சிறப்புச் சேர்க்கிறேன்..." அதற்கு மேல் சூரியனால், சந்திரனால் எதுவும் பேச முடியவில்லையாம்!

அந்த விண்மீன் “யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும். இஸ்ரயேலிலிருந்து செங்கோல் என்று எழும்பும்" எனத் தூய ஆவியால் ஏவப்பட்டு பிலயாம் உரைத்த யாக்கோபின் குலக்கொழுந்தாக இருக்கலாம் (எண்.2417). இறைவாக்கினர் எசாயா குறிப்பிட்டது போல் “எழு! ஒளி வீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன் மேல் உதித்துள்ளது. பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்” (எசா. 60:1-3). இஸ்ரயேல் மக்கள் மேல் பெருமளவில் தோன்றிய இறைமாட்சிமையாக இருக்கலாம். கீழ்த்திசை ஞானிகள் கண்டது அந்த மாட்சிமையின் வெளிப்பாடு.

கிறிஸ்துதான் உலகை மீட்கும் உன்னத ஒளி என்ற இறைவெளிப்பாட்டினைத் தொடக்ககாலத் திருச்சபையில் பவுல் எபேசியரோடு எப்படியெல்லாம் பகிர்ந்து கொள்கிறார்! “நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்” (எபே.3:6)

ஒளியானது பாவ இருளைச் சுட்டெரிக்கும் தீப்பிழம்பாகும். இருளைப் புறங்காணச் செய்யும். இருண்ட இதயத்தில் நம்பிக்கைத் தீபத்தை ஏற்றும். பகைமையை நீக்கும். பாசத்தைப் பெருக்கும். அப்படிப் பட்ட ஒளியாய் இயேசுவைக் கண்டு வணங்கி மகிழ்ந்தனர். பிற இனத்து ஞானிகள். ஆனால் இயேசுவின் பிறப்பைக் கேட்டதும் "ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று'' (மத்.2:3) பிறருடைய அரசை வீழ்த்தவா இயேசு வந்தார்? எல்லா மக்களும் வாழ்வு பெற வேண்டும் என்றுதானே அவர் பிறப்பெடுத்தார்!

திறந்த மனம், தேடும் ஏக்கம் இருந்தால் எந்த நிலையிலும் அந்தத் தெய்வத்தைக் காணலாம்.

"நான்காவது ஞானி” (The fourth magi) என்பது ஒரு கற்பனைக் கதை. அருத்தாபன் என்ற நான்காவது ஞானி மற்ற மூவருடன் தொடர்பு கொண்டு மெசியாவைத் தரிசிக்கச் செல்ல ஏற்பாடாகி இருந்தது. குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அறிவிக்கப் பட்டிருந்தார். ஆனால் இவர் தாமதமாகிவிடவே, மற்ற மூவரும் மூன்று திசைகளிலிருந்து புறப்பட்டு விண்மீன் வழியே நடக்க ஆரம்பித்து விட்டனர். அருத்தாபன் வந்த போது ஞானிகளைக் காணவில்லை. அவர் கையில் விலையுயர்ந்த மூன்று முத்துக்கள். அவர்கள் சென்ற பாதையைக் கேட்டறிந்தார். அதுவோ மிகப் பெரிய பாலைவனம். தன் குதிரையால் கடக்க முடியாது. ஆனால் மெசியாவைத் தரிசிக்க வேண்டும். என்ன செய்வது? மெசியாவுக்கென வைத்திருந்த மூன்று முத்துக்களில் ஒன்றை விற்று ஒட்டகம் வாங்கினார். பாலைவனம் கடந்தார். பல ஆண்டுகளாயின. மெசியாவை மட்டும் பார்க்க முடியவில்லை. அங்கு விசாரித்தார். ஒருவருக்கும் தெரியவில்லை. தான் இருப்பது பாலஸ்தீன் நாடு என்பது மட்டும் தெரிந்தது. இரண்டு முத்துக்களைப் பொக்கிஷம் போல் பாதுகாத்து மெசியாவுக்கென வைத்திருந்தார்.
அதோ, தொலைவில் ஒரு பெண் தலைவிரி கோலமாக ஒடி வருகிறாள். பின்னால் ஒரு பெரிய யூதக் கூட்டமே அவளைத் துரத்தி வருகிறது. அந்தப் பெண் ஓடிவந்து இவர் காலில் விழுந்து கதறுகிறாள். விபச்சாரத்தில் பிடிபட்டவளாம், கல்லால் எறிந்து கொல்லப் போகிறார்களாம். புரிந்தது அருத்தாபனுக்கு. அவளைப் பின்னுக்குத் தள்ளி, தலைமைக் குருவைத் தனியே அழைத்துப் பேசி அவர் கையில் இரண்டாவது முத்தை அழுத்தினார். கற்கள் எல்லாம் கீழே விழுந்தன. கண்ணீரோடு நன்றி சொன்னாள் அந்தப் பெண்.

சில ஆண்டுகள் கழிந்தன. அருத்தாபனுக்கு வயதாகிவிட்டது. சாவதற்கு முன்பாவது மெசியாவை நான் பார்க்க முடியுமா? என்ற கேள்வியை நெஞ்சத்திலும் எஞ்சிய ஒரு முத்தைக் கையிலும் வைத்துக் கொண்டு கூனிக்கூனிச் சென்ற அர்த்தாபனுக்கு அந்தக்கூட்டம் புரிபடவில்லை. கேட்டார். யாரோ மெசியாவாம். தெய்வ நிபந்தனைக்காக அந்த மனிதனைக் கொல்லப் போகிறார்களாம். ஒடினார். எங்கும் கூட்டம் காவலர்கள் தடுத்தனர். வீட்டின் தாழ்வாரத்தில் நின்று மெசியாவைப் பார்க்க கடைசி முத்தையும் கொடுத்து விட்டு ஏறி நின்றார். மெசியாவின் பின்புறம் மட்டும் அவர் கண்ணில் பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் கூரை சரிய ஒடுகள் அருத்தாபனின் தலையைத் தாக்க, ரத்தம் வழியக் கீழே விழுகிறார். அருத்தாபன் சாகும் தறுவாயில் நினைவற்று அவர் முனகுவதை அருகிலிருந்த காவலர்கள் கேட்கின்றனர்: “எப்போது ஆண்டவரே நான் உம்மைப் பார்த்தேன்? எப்போது ஆண்டவரே நான் உமக்கு உதவி செய்தேன்?..

இறைவன் ஏதோ ஒரு விதத்தில் தன்னை வெளிப்படுத்தத்தான் செய்கிறார். மிகச்சிறியவற்றிலும் மிக எளியவற்றிலும் தன் முகத்தைக் காட்டக் கூடும். அதைக் கண்டுபிடிக்கும், உணர்ந்து அறியும் ஞானம் நமக்கு வேண்டும். கனவுகள், நிகழ்வுகள், உள்மன எச்சரிப்புகள், அனுபவ உணர்வுகள் இவை எல்லாவற்றையும் புரிந்து வாழ்க்கையில் உண்மையையும் நன்மையையும் தேடிக் கண்டுபிடிப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். அப்போது நாமும் ஞானிகளே!


கத்தோலிக்கர் ஒருவர் விண்ணகம் சென்றார். விண்ணகத்தின் நடுவே ஒரு பெரிய குறுக்குச் சுவரைக் கண்டு பேதுருவிடம், “இந்தக் குறுக்குச் சுவருக்கு மறுபுறம் யாராவது இருக்கின்றார்களா?" என்று அவர் கேட்டதற்கு, பேதுரு அவரிடம், "நீங்கள் விண்ணகத்துக்கு வரமாட்டார்கள் என்று நினைத்த மற்ற மதத்தைச் சார்ந்தவர்களெல்லாம் மறுபுறத்தில் இருக்கின்றனர்” என்றார்! கிறிஸ்தவர்கள் மட்டும்தான் மீட்படைவார்கள், மற்ற மதத்தினர் எல்லாம் நரகத்துக்குச் செல்வார்கள் என்று ஒரு சிலர் நினைக்கின்றனர். அவ்வாறே யூதர்களும் நினைத்தனர், யூதர்கள் தான் மீட்படைவர்; பிற இனத்தவர் நரகத்தை எரியூட்டும் மரக்கட்டைகளாகக் கடவுளால் பயன்படுத்தப்படுவர் என்று அவர்கள் தப்பாக நினைத்தனர். ஆனால், கடவுள் எல்லா மனிதரும் மீட்படைய விரும்புகிறார் (1 திமொ 2:4). எந்த இனத்தவரும் கடவுளுக்கு அஞ்சி, அவருக்கு ஏற்புடையதைச் செய்தால் அவர்களும் மீட்படைவர் (திப் 10:35). மீட்பு என்பது யூதர்களுக்கு மட்டும் உரிய தனியுடைமையன்று, மாறாக அது எல்லா இனத்தாருக்கும் உரிய பொதுவுடைமை என்பதை இன்றைய பெருவிழாவும், இன்றைய அருள்வாக்கு வழிபாடும் தெளிவாக உணர்த்துகின்றன. மக்களினத்தார் அனைவரும் உன் ஒளியை நோக்கி வருவர் (முதல் வாசகம்). மக்களினத்தார் அனைவரும் அவரை வணங்குவர். அவருக்கு ஊழியம் புரிவர் (பதிலுரைப் பாடல்), நற்செய்தியின் வழியாகப் பிற இனத்தவரும் சுவாக்குறுதியின் உடன்பங்காளிகள் (இரண்டாம் வாசகம்). பிற இலாத்தைச் சார்ந்த ஞானிகள் கீழ்த்திசையிலிருந்து பெத்லகேம் வந்து  குழந்தை இயேசுவை ஆராதித்துக் காணிக்கை செலுத்தினர் (நற்செய்தி).

இன்றைய விழா பிற இனத்தைச் சார்ந்த நம்முடைய விழா. பிற இனத்தவராகிய நம்மையும் கடவுள் இருளிலிருந்து தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளார். நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம்; அரச | குருக்களின் திருக்கூட்டம்: தூய மரபினர்; கடவுளின் உரிமைச் சொத்தான மக்கள் (1 பேது 2:9), எனவே, நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். பொன்னையும், தூபத்தையும், வெள்ளைப் போளத்தையுமல்ல, நம்மையே கடவுளுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுப்போம். மற்றவர்களை நமது ஒளிமயமான அன்பு வாழ்வால் கிறிஸ்துவிடம் கொண்டு வரும் விண்மீனாகச் செயல்படுவோம், கீழ்த்திசை ஞானிகள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம் என்ன ? எத்தகைய தடைகள் வந்தாலும் நமது குறிக்கோளை அடைய வேண்டும். நாம் எண்ணுவது திண்ணமாக இருந்தால் நாம் எண்ணுவதைக் கட்டாயம் அடைவோம் என்பதில் ஐயமில்லை .

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)

எந்த விண்மீனை நம்பி ஞானிகள் தங்கள் பயணத்தைத் தொடங்கினரோ அந்த விண்மீன் மறைந்துவிட்டது. ஆனால் அவர்கள் அதனால் மனமுடைந்து போகவில்லை, முன்வைத்த காலைப் பின்வைக்கவில்லை. மன்னன் ஏரோது ஒரு கொடுங்கோலன் என்பதை அவர்கள் அறிந்திருந்தும் அவர்கள் அவனிடம் சென்று தேவையான தடயங்களைப் பெற்று, தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். மறைந்த விண்மீன் மீண்டும் தோன்றியது. அதன் துணையுடன் பெத்லகேம் சென்று குழந்தை இயேசுவை அதன் தாய் மரியாவுடன் கண்டு ஆராதித்து, காணிக்கை செலுத்தினர். "கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" (லூக் 9:62) என்று ஆண்டவர் கூறிய அருள்வாக்கிற்கு அவர்கள் சிறந்ததோர் இலக்கணமாகத் திகழ்கின்றனர்.

நமது வாழ்க்கையில் நமக்கென்று ஓர் இலட்சியம் வேண்டும். ஒரு மாணவன் ஒரு பாடப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். ஒரு பெரியவர் அவனிடம், "படித்து முடித்தவுடன் என்ன செய்வாய்?” என்று கேட்டதற்கு, "புத்தகத்தை மூடிவிடுவேன்” என்றான். இன்று எத்தனையோ இளைஞர்கள் தங்கள் வாழ்வில் எத்தகைய கொள்கைப் பிடிப்போ இலட்சியமோயின்றித் தங்கள் பொன்னான வாழ்வை வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர், அவர்களைப் பார்த்துக் குடியரசுத் தலைவர் "கனவு காணுங்கள்" என்று அறிவுறுத்துகிறார். ஆனால், அவர்களோ "தாவணிக் கனவுகள்” காண்கின்றனர். "ஆடிக்குப் பின் ஆவணி, தாடிக்குப் பின் தாவணி” என்ற புதிய பழமொழி உருவாகியுள்ளது; வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. ஒரு சிலர் வாழ்வில் ஏற்பட்ட தோல்விகளைத் தாங்கிக் கொள்ள இயலாது. தற்கொலை முயற்சியில் இறங்குகின்றனர். தற்கொலை செய்ய முடிவு கட்டிய ஓர் இளைஞன் ஒருவருடைய, ஒரு மணி நேரச் சொற்பொழிவைக் கேட்ட பின்பு அவரிடம், "உங்களின் சொற்பொழிவு எனது தற்கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்தி விட்டது" என்றான். சொற்பொழிவாளர் அவனிடம், "எவ்வாறு?" என்று கேட்டார். அவன் அவரிடம், "இவ்வளவு மோசமான சொற்பொழிவு ஆற்றுகிறவர்கள் எல்லாம் உயிரோடு இருக்கும் போது, நான் ஏன் தற்கொலை செய்யவேண்டும்?" என்று பதில் சொன்னான்.
.
நமது வாழ்வில் நமக்குப் பெரிய எதிரி தாழ்வு மனப்பான்மை, நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மைக் குறைவாக எடைபோடக் கூடாது. தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்கள் இங்கிலாந்து பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சர் கூறியுள்ளதை நினைவில் நிறுத்த வேண்டும், "காலையில் கூவுவது சேவலாக இருக்கலாம், ஆனால் முட்டையிடுவது, பெட்டைக் கோழி மட்டும்தான்”. வாழ்க்கை என்பது ஒரு தொடர் தேடல். 'தேடல் உள்ளவர்களுக்கே வாழ்க்கையில் பசி இருக்கும், தேடல் உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்", ஞானிகள் தேடினர்; தாங்கள் தேடியதைக் கண்டடைந்தனர், நாமும் தேட வேண்டும்; நல்லவற்றைத் தேடவேண்டும். "தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்” (லூக் 11:9) என்று கிறிஸ்து நமக்கு உறுதி மொழி அளித்துள்ளார். வாழ்க்கை என்பது ஒரு கடல், கொந்தளிக்காத கடல் உண்டா? வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். காயமில்லாத போர்க்களம் உண்டா? வாழ்க்கை என்பது ஒரு வேள்வி. தீ இல்லாத வேள்வி உண்டா? வாழ்க்கை என்றால் என்ன என்று ஒரு மலையைக் கேட்டதற்கு, "ஏறிப் பார் என்றது". வாழ்க்கை என்றால் என்ன என்று ஒரு ஆற்றைக் கேட்டதற்கு, "குதித்துப் பார்” என்றது. ஒருவர் ஓர் எறும்பைப் பார்த்து, "நீ எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாய் இருக்கின்றாய்?" என்று கேட்டதற்கு அந்த எறும்பு, "உன்னைப்போல் வீண்பேச்சுப் பேச எனக்கு நேரமில்லை. வாழ்வில் முன்னேற வேண்டுமென்றால், என்னோடு தரையில் ஊர்ந்து வா" என்றது. புலர்ந்துள்ள புத்தாண்டில், ஞானிகளைக் கண்முன் கொண்டு, புத்தொளி பெறுவோம், தடைக்கற்களைப் படிக்கற்களாகக் கொண்டு புதிய சாதனை படைப்போம்.

வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சுப் போல சுவாசிப்போம்.- திரைப்படப்பாடல்

அமெரிக்காவில் மூலதனம் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் மூளைதனம் இருக்கிறது. சிந்திப்போம்! செயல்படுவோம்!




இரண்டாம் முறை விண்மீன்

'நம் அனைவருக்கும் இரண்டு வாழ்க்கை உண்டு. இரண்டாம் வாழ்க்கை எப்போது தொடங்குகிறது என்றால், 'இருப்பது ஒரு வாழ்க்கைதான்' என்ற புரிதல் வரும்போது' என்பது டுவிட்டர் வாக்கு. 'வாழ்வில் இரண்டாம் வாய்ப்பு வருவதில்லை' என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், வாழ்வில் இரண்டாம் வாய்ப்புக்கள் வரவே செய்கின்றன. எப்படி?

சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய, 'எ கிறிஸ்மஸ் கேரல்' (ஒரு கிறிஸ்துபிறப்பு பாடல்) பிரபலமான நாவல். அந்த நாவலின் கதாநாயகன் எபநேசர் ஸ்க்ரூகே கிறிஸ்துமசுக்கு முந்திய மாலை தன் அலுவலகத்தில் அமர்ந்திருப்பார். இங்கிலாந்தின் குளிரின் நடுக்கத்தில் அவருடைய அலுவலக கிளார்க் கூனிக்குறுகி அமர்ந்திருப்பார். ஏனெனில், எபரேசர் தன் அலுவலகத்தை வெதுவெதுப்பாக்க பணத்தைச் செலவிட மாட்டார். எபநேசரின் உறவினர் ஒருவர் அவரை கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு வருமாறு அழைப்பார். அந்த நேரத்தில் இன்னும் இருவர் கிறிஸ்துமஸ் நன்கொடை கேட்டு வருவார்கள். 'கிறிஸ்துமஸ் ... ஒரு ஹம்பக்!' என்று விரட்டி விடுவார். இரவில் தன் வீடு திரும்பிய அவருக்கு இறந்து போன தன் பிஸினஸ் பார்ட்னர் ஜேக்கப் மார்லியின் ஆவி காட்சிதரும். மார்லி தன்னுடைய பழைய தன்னலமான வாழ்விற்குத் தண்டனையாக பெரிய சங்கிலியைக் கட்டி அவர் இழுத்துக்கொண்டு செல்வதுபோல காட்சியில் இருக்கும். 'இந்த தண்டனையிலிருந்து நீ தப்பித்துக்கொள்' என மார்லியின் ஆவி எபநேசரை எச்சரிக்கும். 'இன்னும் சில இரவுகளில் மூன்று ஆவிகள் உனக்குத் தோன்றும்' என்றும் சொல்வார் மார்லி. அப்படியே தூங்கிப்போவார் எபநேசர். 'நேற்றைய கிறிஸ்துமஸ்' என்ற முதல் ஆவி வந்து எபநேசரை அவருடைய குழந்தைப் பருவத்திற்கு அழைத்துப்போய்க் காட்டும். தன் குழந்தைப் பருவ, இளமைப்பருவ நிகழ்வுகளை நினைத்து மகிழ்வார் எபநேசர். 'இன்றைய கிறிஸ்துமஸ்' என்ற இரண்டாம் ஆவி எபநேசரை லண்டன் தெருக்கள் வழியாக அழைத்துச் செல்லும். அந்த நேரத்தில் தன் மேலாடைக்குள் 'அறியாமை,' 'தேவை' என்று இரண்டு குழந்தைகள் ஒளிந்திருப்பதைக் காண்பார் எபநேசர். 'நாளைய கிறிஸ்துமஸ்' என்ற மூன்றாம் ஆவி இறந்துபோன ஒருவர் படும் துன்பத்தைக் காட்டும். அந்த இறந்துபோன நபரின் கல்லறையில் 'எபநேசர்' என எழுதியிருக்க, நம் கதாநாயகர் உடனே, தன் தவற்றை உணர்ந்து, 'என் 'அறியாமை,' மற்றும் என் 'தேவை' இவற்றுக்காக நான் வருந்துகிறேன்' என்று சொல்லி, வருவோர் போவோர், தேவையில் இருப்போர் அனைவருக்கும் தன் பணத்தைக் கொடுத்துவிட்டு, தன் உறவினரின் கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு மகிழ்வுடன் செல்வார். இதுபோல அவர் தொடர்ந்து கருணை, தாராள உள்ளம், அன்பு, பரிவு கொண்டவராக விளங்குவதாக நாவல் முடிவுறும்.

எபநேசர் ஸ்க்ரூகேயைப் பொறுத்தவரையில் தான் கண்ட காட்சி அவருடைய இரண்டாம் வாழ்க்கையின் தொடக்கமாக இருக்கிறது. இவரைப் போலவே, புனித பவுல், அண்ணல் அம்பேத்கர், மகாத்மா காந்தி, அன்னை தெரசா என்று எல்லாருமே தங்கள் வாழ்வில் இறையனுபவம் பெற்றவுடன் தங்களின் இரண்டாம் வாழ்க்கையை புதிய பொலிவுடன் மாற்றி எல்லாருக்கும் எல்லாம் என ஆகின்றனர்.

இன்றைய நாளில் 'இரண்டாம் கிறிஸ்துமஸ்' என்று கிராமங்களில் சொல்லப்படுகின்ற 'ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவைக்' கொண்டாடுகிறோம். கீழைத்திருச்சபைகள் இன்றைய நாளைத்தான் கிறிஸ்து பிறப்பு நாளாகக் கொண்டாடுகின்றனர்.

'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று ஏரோதிடம் வருகின்ற கீழ்த்திசை ஞானியர், 'முன்பு எழுந்த விண்மீன் மீண்டும் தோன்றுவதை - இரண்டாம் முறை தோன்றுவதை - கண்டுகொள்கின்றனர்.' ஆக, இவர்கள் முதல் முறை பார்த்த விண்மீன் இவர்களை ஏரோதின் அரண்மனைக்குத்தான் அழைத்துச் சென்றது. இரண்டாம் முறை பார்த்த விண்மீன்தான் இவர்களை பெத்லகேமிற்கு அழைத்துச் செல்கிறது. இவ்வாறாக, வாழ்வின் ஆச்சர்யங்கள் இரண்டாம் முறைகளிலும் சாத்தியம் என்பதை உணர்த்துகின்றன இன்றைய வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 60:1-6) எசாயா இறைவாக்கினர் நூலின் மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் திரும்பி வர அனுமதி பெற்ற காலகட்டத்தில் எழுதப்பட்டது இப்பகுதி. இன்றைய வாசகப் பகுதியில், 'எழு! உலகிற்கு ஒளி வீசு!' என்று எருசலேமைத் தூண்டி எழுப்புகிறார் எசாயா. ஏனெனில், 'உன் ஒளி தோன்றியுள்ளது,' 'ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.' ஒளியும் மாட்சியும் ஆண்டவரின் காணக்கூடிய வெளிப்பாடுகள் (காண். எசே 1:4, விப 24:15-17). இவ்வாறாக, இருளடைந்து பாழடைந்து கேட்பாரற்றுக் கிடந்த நகரம் கடவுள் இரண்டாம் முறை வந்ததால் ஒளிர்கிறது. இவர்கள் அடிமைகளாக்கப்படும் முன் இருந்த ஒளி அடிமைத்தனத்தால் இருண்டு போனது. இரண்டாம் முறை இப்போது நகரம் ஒளிருமாறு மக்களைக் கவ்வியிருந்த இருளை அகற்றுகிறார் கடவுள். கடவுள் இரண்டாம் முறை வந்ததை ஒரு பெரிய ஒருங்கிணைவாக முன்வைக்கிறார் எசாயா: (அ) பிற இனத்தார் எருசலேம் நோக்கி வருவர், (ஆ) நாடுகடத்தப்பட்ட, இழுத்துச் செல்லப்பட்ட புதல்வர், புதல்வியர் தோளில் தூக்கிவரப்படுவர், (இ) கடலின் திரள் செல்வம், சொத்துக்கள், ஒட்டகத்தின் பெருந்திரள் எருசலேம் வரும், (உ) 'பொன்' (அரசனுக்கு), 'நறுமணப்பொருள்' (கடவுளுக்கு) ஏந்தி வருவர் மக்கள். இவ்வாறாக, கடவுளே அரசனாகவும் இருப்பார் என்பது குறிக்கப்படுகிறது. இக்கடவுள் எருசலேமிற்கு மட்டும் கடவுள் அல்ல. மாறாக, அனைத்து நாடுகளுக்கும் கடவுளாகவும் அரசனாகவும் இருப்பார்.

ஆக, எருசலேம் புத்துயிர் பெற்றதை அகில உலக புத்துயிர்ப்புக்குமான இரண்டாம் வாய்ப்பாகப் பார்க்கிறார் எசாயா. நாடுகடத்தப்பட்ட எருசலேம் மக்கள் தங்கள் நாடு திரும்புகின்றனர். அவர்களின் வருகை அனைத்துலக நாடுகளையும் சேர்த்துக் கொண்டு வருவதாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் பெற்ற இரண்டாம் ஒளி அவர்களுக்கு மட்டுமல்லாமல், உலக மக்களுக்கும் வெளிச்சமாகவும், மாட்சியாகவும் இருக்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 3:2-3, 5-6), 'நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்னும் மறைபொருள்' தூய ஆவி வழியாகத் தனக்கும், திருத்தூதருக்கும், இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாக முன்வைக்கின்றார். யூதராக இருந்தால்தான் ஒருவர் கிறிஸ்தவராகவும், கிறிஸ்தவ சபையின் உறுப்பினராகவும் இருக்க முடியும் என்ற புரிதலில் இருந்த எபேசு நகரத் திருச்சபைக்கு, யூதரல்லாத புறவினத்தாரும் நம்பிக்கையின் வழியாக மறைபொருளில் பங்கெற்க முடியும் என அறிவுறுத்துகின்றார். பவுலின் இந்த வார்த்தைகள் இன்று நமக்கு மிகச் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், அன்றைய காலகட்டத்தில் இது ஒரு பெரிய மறுமலர்ச்சியை உண்டாக்கியது. ஏனெனில், பவுலின் இதே உறுதிப்பாட்டால்தான் இன்று நீங்களும், நானும் கிறிஸ்தவராக இருக்கிறோம்.

ஆக, பிற இனத்தாருக்கு நம்பிக்கையின் வழியாக வழங்கப்படும் இரண்டாம் வாய்ப்பாக இருக்கிறது கிறிஸ்துவின் மறையுடலாகிய திருச்சபை.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 2:1-2) 'ஞானிகள் வருகை' பற்றிப் பேசுகின்றது. நமக்கு மிகவும் தெரிந்த வாசகப் பகுதிதான். இவர்கள் ஏன் வர வேண்டும்? இவர்கள் இறையியல் தேவையையும், இலக்கியத் தேவையையும் நிறைவு செய்ய வருகின்றனர். 'இயேசுவை புதிய மோசே' என்ற இறையியலாக்கம் செய்ய விரும்புகிறார் மத்தேயு. ஆக, பாலன் இயேசுவை எகிப்திற்கு அனுப்பினால்தான் அவரை அங்கிருந்து அழைத்து வர முடியும். இப்போது திருக்குடும்பம் இருப்பது பெத்லகேமில். பெத்லகேமில் நடக்கும் இலக்கிய நிகழ்வு எகிப்துக்கு நகர்ந்தால்தான் இறையியல் சாத்தியமாகும். எனவே, குழந்தையை எகிப்திற்கு அனுப்ப வேண்டியதன் இறையியல் மற்றும் இலக்கியத் தேவையை நிறைவு செய்ய வருகின்றனர் 'ஞானிகள்.'

இவர்கள் யார்? இவர்கள் 'ஞானியரோ,' 'அரசர்களோ' அல்லர். இவர்களை பிரிவினை சபை விவிலியம் 'சாஸ்திரிகள்' என சரியாக மொழிபெயர்க்கிறது. இவர்கள் வானியல் பண்டிதர்கள். நட்சத்திரங்களையும், அவற்றின் நகர்வுகளையும், பறவைகள் மற்றும் விலங்குக் கூட்டங்களின் இடம் பெயர்தலையும் வைத்த வருங்காலத்தைக் கணிக்கத் தெரிந்தவர்கள். அவ்வளவுதான்! ஏனெனில், இவர்கள் அரசர்களாக இருந்திருந்தால், 'நீங்கள் போய்ப் பாருங்கள்' என்று ஏரோது அரசன் இவர்களை அனுப்பியிருக்க மாட்டான். 'நீங்கள் இங்கே தங்கி இளைப்பாறுங்கள். நான் காவலாளிகளை அனுப்பி விசாரிக்கிறேன்' என்று இவர்களை அரண்மனையில் அமர்;த்தியிருப்பான். மேலும், இவர்கள் மூன்று பேர் அல்லர். இவர்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருள்களை வைத்து நாம் 'மூன்று நபர்கள்' வந்ததாகச் சொல்கிறோம். மேலும், இவர்கள் 'ஞானியர்' என அழைக்கப்படுகின்றனர். ஆனால், 'யூதர்களின் அரசனாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று யூதர்களின் அரசன் ஏரோதிடம் போய்க் கேட்பது ஞானம் அன்று. ஏரோது தன் அரியணையைத் தக்க வைக்க தன் குடும்பம் முழுவதின் இரத்தத்தையும் குடித்தவன். இத்தகைய அரசனிடம் போய் மற்றொரு அரசனைப் பற்றி விசாரிப்பது 'கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிவதற்குச் சமமாக' இருந்திருக்கும். ஆனாலும், நம் நிகழ்வின்படி அவர்கள் அரண்மனைக்குத்தான் செல்கிறார்கள். ஏனெனில், இத்தகையோரின் சேவை அரசர்கள் எதிர்காலத்தைக் கணிப்பதற்கு அவர்களுக்கு உதவியாக இருந்தது. ஆகவேதான், இவர்கள் அரசனிடம் செல்கிறார்கள். மேலும், இவர்கள் எதையும் மூடி மறைக்காத, அதே நேரத்தில், துணிச்சல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

'அவரது விண்மீன் எழக் கண்டோம்' - இதுதான் அவர்கள் பெற்றிருந்த அடையாளம்.

ஏரோது தன் குள்ளநரித்தனத்தால், 'நீங்கள் சென்று குழந்தையைக் குறித்து திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று குழந்தையை வணங்குவேன்' என்று சொல்லி அவர்களை அனுப்பிவைக்கின்றான்.

அந்த நேரத்தில்தான் இரண்டாம் முறை அந்த விண்மீன் தோன்றுகின்றது. அரண்மனையின் உயரமான சுவர்கள் அதை மறைத்ததா? அல்லது ஏரோதின்முன் இவர்கள் மண்டியிட்டதால் விண்மீன் இவர்களுக்கு மறைவாயிருந்ததா? - தெரியவில்லை நமக்கு. ஆனால், 'அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள்.' மத்தேயு முதல் முறையாக அவர்களின் மகிழ்ச்சி என்ற உணர்வைப் பதிவு செய்கின்றார். வீட்டிற்குள் செல்லும் அவர்கள் குழந்தைக்கு தங்கம் (அரச நிலையின் அடையாளம்), தூபம் (இறை நிலையின் அடையாளம்), வெள்ளைப் போளம் (மனித நிலையின் அடையாளம்) பரிசளிக்கின்றனர். கனவில் எச்சரிக்கப்பட்டு வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்புகிறார்கள்.

இந்நிகழ்வில் இவர்கள் ஏரோதின் அரண்மனைக்கு வந்தது ஒருமுறைதான். வந்த வழி ஒருமுறைதான். இயேசுவைக் கண்டதும் ஒருமுறைதான். திரும்பும் வழியும் ஒருமுறைதான். ஆனால், விண்மீனைக் கண்டது மட்டும்தான் இரண்டுமுறை. அதுவும் இரண்டாம் முறை அவர்கள் கண்ட விண்மீன் அவர்களின் பாதையை முழுவதுமாக மாற்றிப் போடுகின்றது.

இவ்வாறாக, முதல் வாசகத்தில் எருசலேம் இரண்டாம் முறை ஒளி பெற்று, கடவுளின் மாட்சியால் துலங்குகிறது. இரண்டாம் வாசகத்தில் புற இனத்தார் நம்பிக்கையின் வழி இரண்டாம் வாழ்வைப் பெறுகின்றனர். நற்செய்தி வாசகத்தில் இரண்டாம் முறை கண்ட விண்மீன் சாஸ்திரிகளுக்கு யூதர்களின் அரசனை அடையாளம் காட்டுகிறது.

வாழ்வின் இனிமைகள் இரண்டாம் முறையிலும் சாத்தியம் என்கிறது இன்றைய வழிபாடு. ஞானம் என்பது முதல் முறை எழுந்து நிற்பது அல்ல. மாறாக, முதல் முறை விழுந்து இரண்டாம் முறை எழுந்து நிற்பது.

இன்றைய நம் உலகம் முதல் முறைகளையே பெரிதும் கொண்டாடுகிறது. முதல் முறையில் வெல்லாதவர்களைத் தேவையற்றவர்கள் என முத்திரை குத்திவிடுகிறது. புனித அகுஸ்தினரின் வாழ்வை எடுத்துக்கொள்வோம். தன் மனமாற்றத்திற்கு முன் அவருடைய முதல் வாழ்வு அமைதியில்லாமல் இருக்கிறது. ஆனால், அதை அவர் விரக்தியாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டாம் வாழ்விற்குள் அடியெடுத்து வைக்கின்றார். மிகப்பெரிய இறையியலாராக மாறுகின்றார். மானிக்கேய சிந்தனையால் முதல் வாழ்வைக் கழித்த அவர், இறைவனில் தன் இரண்டாம் வாழ்வைக் கழிக்கிறார்.

2019ஆம் ஆண்டு தொடங்கி சில நாள்கள் கடந்திருக்கின்றன. 'இனி குடிக்க மாட்டேன்,' 'இனி கோபப் பட மாட்டேன்,' 'இனி உடல்நலம் கவனிப்பேன்,' 'இனி வாக்கிங் போவேன்,' 'இனி என் நேரம் வீணாக்க மாட்டேன்' என்று கடந்த ஆண்டு வாக்குறுதிகள் எடுத்து, நிறைவேற்ற முடியாமல் போயிருப்போம். அல்லது எடுத்த ஆறு நாள்களுக்குள் மீறியிருப்போம். ஆனால், அதற்காக நம்மை நாமே சபித்து குற்ற உணர்வு கொள்ள வேண்டாம். மீண்டும் ஒருமுறை வாழப் பழகுவோம். வாழ்வில் எல்லாமே ஒருமுறைதான் இந்த உலகம் பல இனியவர்களையும், இனியவைகளையும் இழந்திருக்கும்.

'தொடங்கியது எல்லாம் இனியதாக முடியும். அப்படி இனியதாக இல்லை என்றால் அது இன்னும் முடியவில்லை' என்பார் ஆஸ்கார் வைல்ட். எருசலேம் மக்களின் பயணம் பாபிலோனியாவின் அடிமை இருளில் முடியவில்லை. புறவினத்தாரின் பயணம் தங்கள் பாவ வாழ்க்கையோடு முடியவில்லை. சாஸ்திரிகளின் பயணம் ஏரோதின் அரண்மனையோடு முடியவில்லை. இரண்டாம் முறை ஒளி வந்தது. இரண்டாம் முறை வாழ்க்கை வந்தது. இரண்டாம் முறை விண்மீன் வந்தது.

இரண்டாம் முறை வரும் விண்மீனைக் காண மூன்று படிகள் அவசியம்: (அ) இதுதான் விண்மீன் எனத் தெரிய வேண்டும், (ஆ) பழைய விண்மீனோடு அதைப் பொருத்திப் பார்க்க வேண்டும், (இ) 'இதுவே அது' என்று முடிவு எடுத்து பயணம் தொடர வேண்டும்.

நாம் சந்தித்த பாபிலோனியாவும், ஏரோதுகளும் போதும். கொஞ்சம் அண்ணாந்து பார்ப்போம். வாழ்க்கை மீண்டும் விண்மீனாக ஒளிரும். ஏனெனில், முதல் முறை பார்த்ததும், பார்த்ததை மறந்ததும் நம் தவறாக, சந்தர்ப்ப சூழலாக இருக்கலாம். ஆனால், இரண்டாம் முறை பார்ப்பதும், விண்மீனைத் தொடர்வதும் நம் தெரிவாக இருக்க வேண்டும். தெரிவு பிறக்க தெளிவு பிறக்கும்.

அந்தத் தெளிவில் பெத்லகேம் குழந்தை நம்மில் ஒளிரும். ஏனெனில், முதல் மட்டுமல்ல. இரண்டாவதும் வெற்றியே!

திருக்காட்சிப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!


எல்லாருக்குமான இறைவன் 

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளை மறைமாவட்டம்.


  நிகழ்வு
 
         டோனி டி மெல்லோவின் கதை இது. ஓர் ஊரில் இறையடியார் ஒருவர் இருந்தார். அவர் இறைவனைத் தொழாத நாளில்லை. அப்படிப்பட்டவர் ஒருநாள் இறைவனிடம் மிக உருக்கமாக வேண்டிக்கொண்டிருக்கும்போது, இறைவன் அவருக்கு முன்பாகத் தோன்றினார். இறைவனின் தரிசனத்தை சிறிதும் எதிர்பார்த்திராத இறையடியார், அவருக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

  பின்னர் அவர் இறைவனைப் பார்த்து, “இறைவா! உன் கருணையோ கருணை. எளியவன் என்னைப் பார்க்க வந்திருக்கின்றாயே... சொல்லும் உமக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்கிறேன்” என்றார். உடனே இறைவன் அவரைப் பார்த்து, “எனக்கு ஃபுட்பால் ஆட்டம் பார்க்கவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. பக்கத்தில் எங்காவது ஃபுட்பால் ஆட்டம் நடந்துகொண்டிருந்தால் என்னை அங்கு கூட்டிக்கொண்டு போவாயா?” என்று கேட்டார். “இதோ உடனே கூட்டிக்கொண்டு போகிறேன் சாமி” என்று இறையடியார் இறைவனை ஃபுட்பால் ஆட்டம் நடைபெற இருந்த ஒரு மைதானத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்.
 
அவர்கள் மைதானத்திற்குள் சென்ற சிறிது நேரத்தில் போட்டி ஆரம்பமானது. அன்றைய நாளில் போட்டியானது கிறிஸ்தவர்கள் அணிக்கும் சீக்கியர்கள் அணிக்கும் இடையே நடைபெற்றது. போட்டி தொடங்கிய சிறுதுநேரத்திலே கிறிஸ்தவர்களின் அணியைச் சேர்ந்தவர்கள் முதல் கோலைப் போட்டார்கள். இதைப் பார்த்துவிட்டு இறைவன் மிகவும் உற்சாகமாகக் கத்தினார். தன்னுடைய தலையில் அணிந்திருந்த தொப்பியை மேலும் கீழும் தூக்கிப் போட்டுப் பிடித்தார். இதைப் பார்த்த இறையடியாருக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ‘இறைவன் ஃபுட்பால் ஆட்டத்தை நன்றாக இரசிக்கிறார் போலும், இரசிக்கட்டும்’ என்று நினைத்துவிட்டு, எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்தார்.

  நேரம் ஆக ஆக, போட்டி இன்னும் சூடுபிடித்தது. யாரும் எதிர்பாராத தருணத்தில் சீக்கியர்களின் அணியைச் சேர்ந்தவர்கள் ஒரு கோலைப் போட்டார்கள். இதைப் பார்த்துவிட்டு இறைவன் முன்புபோல் உற்சாகத்தில் கத்தினார், தன்னுடைய தொப்பியைக் கழற்றி மேலும் கீழும் தூக்கப் போட்டுப் பிடித்தார். இது இறையடியாருக்கு இன்னும் ஆச்சரியத்தைத் தந்தது. உடனே அவர் இறைவனை அழைத்து, “இறைவா! நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்? கிறிஸ்தவ மதமா? சீக்கிய மதமா?” என்று கேட்டார். அதற்கு இறைவன், “நான் எந்த மதத்தைச் சார்ந்தவன் என்பதைவிட எல்லாருக்கும் சொந்தமானவன், எல்லாரும் என்னுடைய மக்கள். அதனால்தான் நான் இரு தரப்பினரும் கோல்போட்ட போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்” என்றார்.

  இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர். அவரை ஒரு குறிப்பிட்ட பிரிவிற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட குலத்திற்கோ மட்டும் சொந்தமாக்குவது அர்த்தமற்ற செயல்.

  குழந்தை இயேசுவைத் தேடிவந்த ஞானிகள்

  இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர் என்ற உண்மையினை உணர்த்தும் திருக்காட்சி பெருவிழாவை அல்லது மூன்று ஞானிகளுடைய பெருவிழாவை இன்று நாம்  கொண்டாடி மகிழ்கின்றோம். வானவியல் அறிஞர்களான இந்த மூன்று பேருமே வானத்தில் தோன்றிய விண்மீனைப் பார்த்துவிட்டு, யூதர்களின் அரசர் தோன்றியிருக்கின்றார் என்று உறுதிசெய்துகொண்டு, அவரைப் பார்க்க காணிக்கைப் பொருட்களோடு எருசலேமை நோக்கி வருகிறார்கள். வந்து குழந்தை இயேசுவைச் தரிசிகிறார்கள். பின்னர் தங்களுடைய இல்லத்திற்கு மாற்றுப் பாதையில் திரும்பிச் செல்கிறார்கள்.
 
இன்று இம்மூன்று ஞானிகளின் விழாவைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில், இவ்விழா நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
 

  1. இறைவன் வாக்கு மாறாதவர்
விண்மீன் வழிகாட்டுதலின் பேரில் எருசலேமிற்கு வந்த மூன்று ஞானிகளும், அங்கிருந்த ஏரோது மன்னனிடம் சென்று, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரை வணங்க வந்திருக்கிறோம்?” என்கிறார்கள். இதைக் கேட்டு ஏரோது கலங்கினாலும் தலைமைக் குருக்களையும் மறைநூல்கள் அறிஞர்களையும் கூப்பிட்டு, “மெசியா எங்கே பிறப்பார்?” என்று கேட்க, அவர்கள் பெத்லகேம் என்று சொல்கிறார்கள். இங்கேதான் நாம் ஒன்றை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். மெசியா பெத்லகேமில்தான் பிறப்பார் என்ற செய்தி மறைநூல் அறிஞர்களுக்கும் தலைமைக்குருக்களும் தெரிந்தபோதும், அவர்கள் மூன்று ஞானிகள் சொன்னதைக் கேட்டு இயேசுவை/மெசியாவைப் பார்க்கச் செல்லவில்லை. மாறாக மூன்று ஞானிகள்தான் இறைவார்த்தையை நம்பி, இயேசுவைக் காணச் செல்கின்றார்கள். கடைசியில் கண்டுகொள்ளவும் செய்கிறார்கள்.

 இறைவன் சொன்ன சொல் மாறாதவர் (13:8), அப்படிப்பட்டவருடைய வார்த்தைகளை நம்பிச் செயல்பட்ட மூன்று ஞானிகளைப் போன்று நாமும் செயல்பட்டால், இறைவனின் ஆசிரைப் பெறுவது உறுதி. 
  1. இயேசு – இறைவன் – எல்லாருக்கும் பொதுவானவர்

  இயேசுவைக் காணவந்த மூன்று ஞானிகளுமே யூதர்கள் அல்ல, அவர்கள் புறவினத்தார். அப்படியிருந்தபோதும் ‘யூதர்களின் அரசர்’ (?) என்று அறியப்பட்ட இயேசு, அவர்களுக்கும் தன்னை வெளிப்படுத்துகின்றார். இது ஆண்டவராகிய இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவர் என்ற உண்மையை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர் என்றால், இறைவன் என் குலத்திற்கு, என் இனத்திற்கு மட்டும்தான் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம்? அது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத் தக்க ஒன்று.

  இறைவன் எல்லாருக்கும் பொது என்றால், யாவரும் ஓர் குலம், ஒரு தாயின் மக்கள் என்பதுதான் நிஜம்
  1. நேர்மையான உள்ளத்தோடு ஆண்டவரைத் தேடுவோர், அவரைக் கண்டுகொள்வர்
திருக்காட்சிப் பெருவிழா நமக்குக் கொடுக்கும் மிக முக்கியமான செய்தி, நாம் நேர்மையான உள்ளத்தோடு ஆண்டவரைத் தேடினோம் என்றால், அவரை நிச்சயமாக கண்டுகொள்வோம் என்பதாகும். மூன்று ஞானிகளும் இயேசுவை முழு மனதாக, அதே நேரத்தில் நேர்மையான உள்ளத்தோடு தேடினார்கள். இடையில் அவர்கள் ஏராளமான பிரச்சினைகளைச் சந்தித்திருக்கக்கூடும். அவற்றைக் கண்டெல்லாம் அவர்கள் மனந்தளராமல் ஆண்டவரைத் தேடினார்கள். இறுதியில் கண்டுகொள்ளவும் செய்தார்கள். நாமும் அவர்களைப் போன்று ஆண்டவரைத் தேடினால், நிச்சயம் கண்டுகொள்வோம் என்பது உறுதி.

  சிந்தனை
      

இன்றைக்கு கடவுளின் பெயராலே பிளவுபட்டுக் கிடக்கின்றோம். இந்தக் கோவில் எங்களுக்குத்தான் சொந்தம், அவர்கள் இதில் வழிபட உரிமை என்று வேற்றுமை பாராட்டுகின்றோம். ஆனால், இறைவன் ஒருவர்தான், அவர் எல்லாருக்கும் பொதுவானவர். அப்படிப்பட்டவரை நாம் நம்மிடம் இருக்கின்ற வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமை உணர்வோடு வழிபடுவோம். அவரை முழு உள்ளத்தோடு தேடி, அவருக்கு உகந்த மக்களாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.